What's new

உதயேந்திர வர்மன் - அத்தியாயம் 17

JLine

Moderator
Staff member
1568939765902.png

உதயேந்திர வர்மன்

அத்தியாயம் 17

இலங்கைக்கு அருகில் ஏறக்குறைய நீளச் சதுர வடிவில் இயற்கை அன்னையால் படைக்கப்பட்டிருக்கும் தங்கேதி தேசத்தின் கிழக்கு புற எல்லை முழுவதையும் இந்தியப் பெருங்கடல் அடைத்துக் கொண்டிருக்க, அதன் மேற்கு புறத்தின் எல்லையில் பற்பல தீவுகளும் சின்னஞ்சிறு தேசங்களும் நெருங்கியவாறு இருக்க, தங்கேதியின் வடக்குப்புறமும் தெற்குப்புறமுமே அந்நிய நாட்டுப் படையினரின் இலக்காக இருந்தன.

தேசத்தின் வடக்கு எல்லையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் ஷாஸ்ரஸாத் மாயி வைத்திருந்தான் என்றால், தேசத்தின் தெற்கு எல்லைப் பகுதி சிம்ம ராஜ்யத்தின் அரசனான விக்கிரம்ம சிம்மனின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்தது.

இச்சூழ்நிலையில், ஷாஸ்ரஸாத் மாயியின் உதவியோடு வடக்கு எல்லைப் பகுதி வழியாகத் தங்கேதிக்குள் நுழையும் பகை நாட்டினரை தடுக்க முடியாவிட்டாலும், அவர்களை நேருக்கு நேராக யுத்தக்களத்தில் சந்திக்கலாம்...

ஆனால் அதே பகை நாட்டினர் அவர்களின் படைகளின் ஒரு பகுதியை தெற்கு எல்லையின் வழியாகக் கள்ளத்தனமாகத் தேசத்திற்குள் ஊடுருவவிட்டால்?

அவர்களைத் தடுப்பதற்கு அதி நிச்சயமாக விக்கிரம்ம சிம்மனின் உதவி உதயேந்திரனுக்குத் தேவை..

ஆக, அப்பகுதியில் இருக்கும் சிம்ம அரசன் உதயேந்திரனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தால் ஒழிய, வர்ம இளவரசனால் அவர்களைத் தடுக்க இயலாது..

ஆனால் செருக்கும் ஆணவமும் மிக்க ஒரு அரசன், வர்ம இளவரசனின் கீர்த்திகளைக் கேள்விப்பட்டதில் இருந்து அவன் மீது பொறாமையும் அழுக்காறும் கொண்டிருக்கும் ஒரு கொடியவன், எங்கனம் அவனுக்கு அடி பணிய சம்மதிப்பான்?

**********************************************

ஆதி நல்லூர்..

விஜயேந்திர வர்மரின் அரசியல் அறை...

"அரசே! ஷாஸ்ரஸாத் மாயியின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட விரும்பாத மற்ற அனைத்து சிற்றரசுகளையும் நமது திட்டத்திற்கு அடி பணிய செய்துவிட்டேன்.. ஏறக்குறைய தங்கேதி தேசம் முழுவதிலுமே இப்பொழுது இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கின்றது.. ஒன்று மாயி ராஜ்யத்திற்கு ஆதரவு அளிக்கும் சிற்றரசுகள், மற்றொன்று நமக்குப் பக்கபலமாக இருக்க முன் வந்திருக்கும் மற்ற ராஜ்யங்கள்.. ஆனால் எவருக்குமே அடி பணிய மாட்டேன் என்று செருக்குடன் திமிராகத் தனித்து நிற்பவன், சிம்ம ராஜ்யத்தின் அரசன் விக்கிரம்ம சிம்மனே.. இந்நாள் வரை அந்நிய நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்க நம்முடன் இணைந்து பணியாற்ற வைப்பதற்கென்று பல அரசர்களைச் சந்தித்துவிட்ட என்னால், விக்கிரம்ம சிம்மனை மட்டும் சந்திக்க இயலவில்லை.."

"என்னுடனான சந்திப்பை அவன் சாதுரியமாக மறுத்துக் கொண்டிருக்கின்றான்.. ஆயினும் அவனை இவ்வாறு விட்டுவிடுவது நல்லதல்ல.. நம் தேசத்தின் பெரும் பங்கு நமக்கு உறுதுணையாக இருந்தால் தான், நம்மால் வேற்று நாட்டவரை எதிர்த்து போரிட்டு வெல்ல முடியும்.. போர் மூண்டிருக்கும் நேரமல்லாது வேறு ஒரு சூழ்நிலையாக இருப்பின் அவனது கோட்டையை நானே நமது சைன்னியத்தை மட்டுமே கொண்டு முற்றுகையிட்டு அவனை எனக்குக் கீழ் அடிபணியச் செய்திருப்பேன்.. ஆனால் பெருமளவிலான படைப் பலத்தை வைத்திருக்கும் அவனது சேணைகளும், முக்கியமாக எண்ணிக்கையில் மிக அதிகமான யானைப் படைகளை வைத்திருக்கும் அவனது சைன்னியமும், இப்போரில் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது..."

"அதுமட்டுமல்லாது, நமது தேசத்தின் தெற்கு பகுதியின் எல்லையில் இருக்கின்றது அவனது சிம்ம கோட்டை.. இலங்கைப் படையினர் எந்த இடத்தில் இருந்து நம்மைத் தாக்க துவங்குவார்கள் என்று தெரியாது.. ஒரு வேளை அவர்களது படைகள் தெற்கு எல்லையை முற்றுகையிட்டால், நிச்சயமாகத் தனி ஒரு ராஜ்யமாகச் சிம்ம சைன்னியத்தால் அவர்களை எதிர்த்துப் போரிட முடியாது.. வெகு எளிதாக வேணி மாநகரக் கோட்டையை எதிரிகள் கைப் பற்றிவிடுவார்கள்.. ஆனால் விக்கிரம்ம சிம்மன் நம்முடன் இணைந்துவிட்டால், தெற்கு எல்லையில் அவனுடைய படையினருக்கு பதிலாக நமது படையினரில் ஒரு பகுதியை அங்கு நிறுத்திவிடலாம்.. அப்பொழுது தான் எந்த இடங்களில் இருந்து எவ்வழியாக நுழைந்து எதிரி வீரர்கள் நம்மைத் தாக்குகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக நாம் அறிய முடியும்.."

"அத்துடன் நமது தற்போதைய சூழ்நிலையில் நம்முடன் இணையும் ஒவ்வொரு வீரனும் நமக்கு முக்கியமானவன், நமது படைக்குப் பலம் சேர்ப்பவன்... ஆகையால், விக்கிரம்ம சிம்மனை எதிர்ப்பதை விட, அவனை நமது திட்டத்திற்கு இணங்க வைப்பதே அறிவுக்கூர்மையானது.. ஆக அவன் என்னைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் நான் அவனைச் சந்தித்தே ஆக வேண்டும்.."

நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்த்துக் கொண்டிருந்தாலும், எந்நேரமும் பெரும் போர் மூளவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறு ஒரு தேசம் இரண்டாகப் பிளந்திருப்பது நல்லதல்ல என்ற சீற்றத்தில் அவனது இளம் உள்ளம் தகித்திருக்கின்றது என்பதை உதயேந்திரனது ஆழ்ந்த விழிகளிலும், கடின முகத்தையும் வைத்தே கண்டு கொண்ட விஜயேந்திர வர்மர் அது வரை அமைதியாக இருந்தவர், புதல்வனது இறுதி வாக்கியத்தில் சட்டெனக் குழம்பிப் போனார்..

"உதயேந்திரா! சூழ்நிலை அபாயகரமாக இருந்தாலும் தற்போது நிலவி கொண்டிருக்கும் நெருக்கடியான நிலைமையில் நீ அவனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பது எனக்குப் புரிகின்றது.. ஆனால் எங்கு எப்பொழுது எவ்வாறு அவனைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கின்றாய்?"

விநாடிகள் சில சொற்கள் எதனையும் உதிர்க்காது அமைதியாக இருந்த உதயேந்திரன், அடுத்துக் கூறிய வார்த்தைகளில் விஜயேந்திர வர்மரின் உள்ளமே ஒரு கணம் அதிர்ந்து போனது..

"சிம்மத்தை அவனது குகையிலேயே சந்திப்பதாக நான் முடிவெடுத்துவிட்டேன் அரசே.."

"உதயேந்திரா!"

"ஆம் அரசே! சிம்ம ராஜ்யத்தின் தலைநகரமான வேணி மாநகரத்திற்கு நான் செல்ல வேண்டும்.. எனது பயணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்.. நான் சமரசம் பேச வருவதாக விக்கிரம்ம சிம்மனுக்கு ஓலையும் அனுப்பிவிடுங்கள்.."

"வேணி மாநகரத்திற்கா?"

"ஆம் அரசே.. வேறு வழியில்லை, நாம் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு பொழுதும் பெரும் ஆபத்துக்கள் புகை மண்டலமாய் நமது தேசத்தை மறைக்கத் துவங்கிவிடும்.. அவை நமது வெற்றிக்கு தடைக்கற்களாக மாறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.."

உதயேந்திரனின் தொனியிலும், தன்னைக் கூர்ந்துப் பார்த்து பேசும் அவனின் கூரிய விழிப் பார்வையிலுமே அவனது உறுதியும் திடமும் புரிந்ததினால் அவனது பயணத்திற்கு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்துவதற்கு விஜயேந்திர வர்மர் வாய் திறக்கும் முன், அதுவரை அமைதியாக இருவரின் விவாதங்களையும் பார்த்திருந்த, யுத்த காலங்களில் அரசருடன் இணைந்து திட்டங்களைத் தீட்டிடும் போர் மந்திரி, அரசரின் புறம் திரும்பியவர்,

"அரசே! விக்கிரம்ம சிம்மனைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை.. அவனைப் பற்றிக் கடந்த பதினேழு வருடங்களாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்.. பதினேழு வருடங்களுக்கு முன் சிம்ம ராஜ்யம் எப்படி இருந்தது, ராஜ்யசிம்மனின் அகால மரணத்திற்குப் பிறகு விக்கிரம்ம சிம்மன் அரியாசனத்தில் ஏறி அமர்ந்ததைத் தொடர்ந்து அந்த ராஜ்யம் எவ்வாறு மாறிப் போனது என்பதை நாம் அறிவோம்.. அங்குப் பொதுமக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் நீங்கள் அறியாததும் அல்ல.. அதே போன்று விக்கிரம்ம சிம்மன் நமது இளவரசருக்கு ஒத்துப் போகாது முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது எதனால் என்றும் உங்களது அரசியல் அனுபவ அறிவு இந்நேரம் உங்களுக்கு விளக்கியிருக்கும்... அப்படி இருக்க, இச்சூழ்நிலையில் நம் இளவரசர் தனியாக அவனைச் சந்திக்கச் செல்வது நல்லதல்ல என்றே எனக்குத் தோன்றுகின்றது.." என்றார் சஞ்சலத்தையும் அதிருப்தியையும் ஒருங்கே இணைத்த குரலில்.

அவரது கூற்றிற்குப் பின் இருக்கும் நிதர்சனம் விஜயேந்திர வர்மருக்கும் புரியாமல் இல்லை..

ஆயினும் இத்தகைய தருணத்தில் உதயேந்திரன் எடுக்கும் துணிவான முடிவுகளே தங்கேதியை காக்கும் என்பதையும் உணர்ந்துக் கொண்டவராக யுத்த மந்திரிக்கு பதிலளிக்கும் வண்ணம் அமர்ந்திருந்த அரியாசனத்தில் இருந்து எழ எத்தனிக்க, அரசர் என்றும் பாராது மெள்ள தனது இடது கரத்தை உயர்த்தி அவரை எழவொட்டாது இளவரசன் தடுத்ததிலேயே, யுத்த மந்திரியின் ஈரக் குலைகள் நடு நடுங்கத் துவங்கியன.

"இளவரசே! என்னைத் தவறாக எடுத்துக் கொ.." என்று துவங்கியவர் தன் பேச்சினை முடிக்க இயலாது தொண்டைக்குள் அடைத்த எச்சிலை விழுங்க முயற்சிக்க, அரசரின் அரியாசனத்திற்கு அருகில் நின்றிருந்த உதயேந்திரன், நிதானமாகவும் தனது முழு உயரத்தினையும் வெளிக்காட்டுவது போல் அகன்ற மார்பை மேலும் அகல விரித்தவாறே நடந்து வந்தவன் மந்திரியை நெருங்கியதுமே,

"ஏன் மந்திரியாரே? எனது வீரத்தில் உங்களுக்கு அதற்குள் நம்பிக்கைக் குறைந்துவிட்டதா, என்ன?" என்றதில், அவனது தணிவான குரலில், ஆனால் தன் நெஞ்சு உலர்ந்துப் போகும் அளவிற்கான ஆழ்ந்த விழிகளுடன் கூறியதில் தொண்டையில் அடைத்துக் கொண்டிருக்கும் எச்சிலை விழுங்கியவாறே சட்டென இரு அடிகள் எடுத்து பின்னோக்கி நகர்ந்தார்.

"உதயேந்திரா! என்ன இது? அவர் நமது யுத்த மந்திரி.. யுத்த காலங்களில் நடக்கவிருக்கும் ஆபத்தான நிகழ்வுகளை முன் கூட்டியே யூகித்து அதற்கேற்றார் போன்று திட்டமைப்புகளை வகுப்பதும் அவரது பணி தானே..அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை முழுமையாகக் கேட்போம்.. சற்றுப் பொறுமையாக இரு.."

அரசரின் கூற்றில் சற்றே தைரியம் பெற்றவராக, தொடர்ந்தார் மந்திரி.

"இளவரசே! தற்போது இந்தத் தங்கேதி தேசம் முழுவதுமே உங்கள் ஒருவரைத் தான் ஆபத்பாந்தவனாக நம்பியிருக்கின்றது.. இத்தேசம் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகாது தடுக்க ஒருவரால் முடியுமென்றால், அது உங்களால் மட்டுமே என்று நம் பிரஜைகள் அனைவருமே நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்... அந்தக் கொடுங்கோலன் ஷாஸ்ரஸாத் மாயியிடம் இருந்து தங்களது ராஜ்யங்களைக் காத்துக் கொள்வதற்கு, சிற்றரசுகளின் அரசர்களும் குறுநில மன்னர்களும் உங்களுக்கு அடி பணிய தயாராக இருக்கின்றனர்... பெரும் போர் மூளவிருக்கும் வெகு ஆபத்தான இச்சூழ்நிலையில் நீங்கள் விக்கிரம்ம சிம்மனின் கோட்டைக்குத் தனித்துச் செல்வது நல்லதல்ல என்பதே எனது கருத்து... அதற்காக உங்களது வீரத்தை குறைவாக மதிப்பிடுகின்றேன் என்று துளியளவும் தவறாக எண்ண வேண்டாம் இளவரசே.. கூர்மையான தார்பரியங்கள் நிறைந்த அரசியல் சிக்கல்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் ஒரு யுத்த மந்திரியாக எனது கருத்தையும் இங்குக் கூறுவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதால் தான், எனது அச்சத்தை உங்கள் முன் வைத்தேன்.. விக்கிரம்ம சிம்மன் எந்த நேரத்திலும் எவ்வகையிலும் தீண்டி விஷத்தை கக்கும் ஒரு சர்ப்பத்தைப் போன்றானவன்.. ஆகையால் தான் உங்களை எச்சரிக்க வேண்டியதாக இருக்கின்றது.."

நீளமாகப் பேசி முடித்த மந்திரி அது வரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிடுவதற்கு முன் உதயேந்திரன் தொடர்ந்து கூறிய வார்த்தைகளில் இறுதியாகக் கூறிய விஷயம் மந்திரியை பெரும் திகிலிற்குள்ளாக்கியதில், இழுத்த மூச்சை அப்படியே நிறுத்தியவர் அரசரை சரேலெனத் திரும்பிப் பார்க்க, அதுவரை மைந்தனின் மீதே பார்வையைப் பதித்திருந்த விஜயேந்திர வர்மர், உதயேந்திரன் கடைசியாகக் கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சியின் எல்லையை, திகைப்பின் உச்சத்தைக் கடந்ததில் தன்னையும் அறியாது வெடுக்கென்று தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றார்.

"உங்களது வாயேலேயே அவனை நச்சுப்பாம்பு என்று கூறிவிட்டீர்கள் மந்திரி.. அந்த நச்சுப்பாம்பின் விஷத்தை கக்க வைக்க வேண்டும், இல்லையேல் அதனைக் கொன்று போட வேண்டும்.. ஆனால் இவை இரண்டையும் இப்பொழுது செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.. அது மட்டுமல்ல.. எந்தச் சக்தி நம்மை அதன் கீழ் அடக்கி ஆள வருகின்றதோ, அந்தச் சக்தியை நாம் வென்று, அதனை நம் சக்தியோடு இணைத்துவிட்டால், பின்னர் நமக்கு எதிரான மற்ற ஆதிக்க சக்திகளை எதிர்கொள்வது கடினமல்ல.. விக்கிரம்ம சிம்மனை நம்முடன் இணைய வைத்து, ஷாஸ்ரஸாத் மாயியின் படையினரையும் இலங்கையின் சைன்னியத்தையும் அழிப்போம்.. அவர்களுள் மிஞ்சும் படை வீரர்களை நமது சேனைக்குள் இணைந்துவிடுவோம், பின்னர் விக்கிரம்ம சிம்மன் என்ற விஷ சர்ப்பத்தின் நஞ்சை கக்க வைத்து அவனை உருத்தெரியாது அழித்துவிடுவோம்.."

"உதயேந்திரா!"

"இளவரசே!"

இருவரும் ஒருமித்த குரலில் அலறியதைக் கண்டு கீற்றுப் போலான சிறு முறுவலை தனது வலிய உதடுகளின் இடது கோடியில் கொணர்ந்த உதயேந்திரன், நான் கூறுவதே இறுதியானது என்பது போல் அரசரின் அரசியல் அறையை விட்டு வெளியேற, வேறுவழியின்றி அவனது கட்டளையை மீற முடியாத யுத்த மந்திரி அரசரிடம் எழுதிப் பெற்ற ஓலையைத் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினார்.

*********************************************************************************

சிம்ம ராஜ்யம்...

வேணி மாநகரம்...

விக்கிரம்ம சிம்மனின் மாளிகை..

விஜயேந்திர வர்மர் அனுப்பித்திருந்த ஓலையை ஒரு முறைக்கு இரு முறை படித்த விக்கிரம்ம சிம்மனின் முகம், எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார் போல் கடுங்கோபத்தில் தெறித்துக் கொண்டிருந்தது.

"விஜயேந்திர வர்மன் என்ன, என்னைக் கிள்ளுக்கீறை என்று எண்ணிவிட்டானா? அல்லது எனது கைகள் இரண்டையும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் காட்டு வித்தைக்காரனாக அவனை நினைத்துக் கொண்டானா? எனது அனுமதியின்றி அவனது மைந்தனை எனது கோட்டைக்கே அனுப்புவதற்கு அவன் யார்? இதில் நான் அனுமதித்தேனா இல்லையா என்பதை அறியும் அவகாசம் கூட அவனுக்கு இல்லையென்றும், நான் அனுமதிக்காவிடினும் சிம்ம கோட்டைக்கு எப்படியும் உதயேந்திர வர்மன் வந்தே தீருவான் என்றும் எழுதியிருக்கின்றான்.. எழுதவில்லை, உத்தரவிட்டு இருக்கின்றான்.." என்று சீறும் பாம்பை ஒத்த ஆங்காரத்தில் சீறினான்.

"ஓலை எழுதியிருப்பதோ விஜயேந்திர வர்மன் தான், ஆனால் எழுத வைத்திருப்பது வர்ம இளவரசன் போல் தான் எனக்குத் தோன்றுகின்றது.."

பேரமைச்சரின் கூற்றிற்கு ஆமோதிப்பது போல் தலையை அசைத்தவன்,

"உதயேந்திர வர்மனின் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்குத் தெரியும் பேரமைச்சரே.. ஆகவே தான் அவனைச் சந்திக்கும் சந்தர்பங்கள் அமைந்தும் நான் அதனைத் தடுத்து வந்தேன்.. இப்பொழுது என்னையும் கேட்காது எனது அனுமதியும் பெறாது அவனே இங்கு வந்து கொண்டிருக்கின்றான்.." என்றான் எரிச்சலுடன் வெறுப்பை உமிழும் குரலில்.

அரசனின் கரங்களில் ஏறக்குறைய கிழிந்துவிடும் அளவிற்கு நசுங்கிப் போயிருக்கும் ஓலையைத் தன்னிடம் கொடுக்குமாறு அரசனுக்கு அருகில் நின்றிருந்த அவனது சேனாதிபதி அழகுவேல் தன் கரத்தினை நீட்ட, அரசனின் புத்தியை மலுங்கச் செய்து கொண்டிருக்கும் விஷயங்களில் தலையாய ஒன்று, அரசனுக்கும் இவனுக்கும் இடையில் இருக்கும் இந்தக் கூடாத நட்பே என்று உள்ளுக்குள் பேரமைச்சர் புகைந்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஓலையைப் படித்து முடித்திருந்தான் சிம்ம சேனாதிபதி.

"அரசே! ஓலையில் எழுதியிருக்கிற படி பார்த்தால் உதயேந்திர வர்மன் தனியாகத் தான் வந்து கொண்டிருக்கின்றான் என்று தெரிகின்றது.. அவன் திரும்பி அவனது கோட்டைக்கே செல்லாதளவுக்கு அவனைக் கொன்றுவிட்டால் என்ன?"

அழகுவேலின் மூடத்தனத்தையும் அறிவின்மையையும் கண்ட பேரமைச்சர் 'வீரம் மட்டும் இருந்தால் பற்றாது விவேகமும் வேண்டும் என்பதை இவன் சிறுவயதிலேயே மறந்துவிட்டான் போல் இருக்கின்றது.. ராட்ஷசன் போன்று உருவமும் காண்டாமிருகத்தைப் போன்ற துணிவும் மட்டும் ஒரு சேனாதிபதிக்கு போதுமா?' என்று மனத்திற்குள் நினைத்தவாறே மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவராக,

"இந்த இரு மாதங்களுக்கு உள்ளாகவே மாயி அரசையும், சில சிற்றரசுகளையும் தவிர ஏறக்குறைய முழுத் தேசத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்திருக்கின்றான் உதயேந்திர வர்மன்.. மாயியையும், இலங்கைப் படையினரையும் மட்டும் அல்ல, இந்தியா மற்றும் பிற தேசங்களில் இருந்தும் படையினர் வந்தாலும், தற்போது அவன் திரட்டியிருக்கும் பெரும் சைன்னியத்தைக் கொண்டு சில முகூர்த்தங்களுக்கு உள்ளாகவே எதிரிகளைக் கதிகலங்க செய்து புறமுதுகிட்டு ஓடச் செய்துவிடும் வல்லமையும் வர்ம இளவரசனுக்கு இருக்கின்றது என்பதையும் நாம் தெள்ளென அறிவோம்... உதயேந்திர வர்மனின் திறமைகளையும், போர் முறைகளையும், யுத்த தந்திரங்களையும், போர் வியூகங்களையும், அவனது அசாத்திய ஆக்ரோஷ சக்தியினையும் தங்கேதி தேசம் முழுவதிலும் போற்றிப் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர்.. இரண்டு மாதங்களுக்கு முன்னர் உஜ்வாலா அரசன் ஹர்யன்காவை போரில் தலை வேறு உடல் வேறாக அவன் ஒரே வீச்சில் துண்டித்துப் போட்டது மட்டுமல்லாது, பாண்டிய படையினரையும் கலங்கடித்து விரட்டியிருக்கின்றேன்.. அது மட்டும் அல்லாது, கஜவீர பாண்டியனின் சகோதரன் செண்பக பாண்டியனே நேரில் வந்து, உதயேந்திர வர்மனுக்கு உதவும்கரம் நீட்டியதாகவும், அவன் அதனை விநாடி நேரம் கூட யோசிக்காது மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் இத்தேசம் முழுக்கப் பரவியிருக்கின்றது.. இப்பேற்பட்ட ஒருவன், நமது கோட்டைக்கு வருகின்றான் என்றால், அவன் நமது எதிரியாகவே இருந்தாலும் அவனது பாதுகாப்பிற்கு நமது ராஜ்யம் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.. இல்லையெனில் இந்தத் தேசம் முழுவதையும் நாம் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதைச் சேனாதிபதி மறந்துவிட்டார் போல் இருக்கின்றது அரசே.." என்றார், சற்றே குரலை உயர்த்தியும் சேனாதிபதி மற்றும் அரசனின் மீதும் பார்வைகளை மாற்றி மாற்றிப் பதித்தும்.

அவர் கூறக் கூற எரிச்சலும் கோபமும் கொந்தளிக்கத் துவங்க,

"நீங்கள் உதயேந்திர வர்மனுக்கு எதுவும் பாராட்டுப்பட்டம் கொடுக்கப் போகிறீர்களா பேரமைச்சரே? நமது எதிரியை புகழ்ந்து தள்ளுகிறீர்கள்.. " என்றான் அழகுவேல் கடித்த பற்களுக்கு இடையில் தெறிக்கும் வார்த்தைகளை விட்டு.

"பாராட்டவில்லை சேனாதிபதி! நமது எதிரியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவன் எதிரியே ஆனாலும் தற்போது அவனுக்கு இருக்கும் புகழும் பெயரும் கீர்த்தியும், நமது கோட்டையை விட்டு அவன் வெளியேறும் வரை அவன் மீது ஒரு துரும்பு பட்டாலும் நமது கோட்டையை இருக்கும் இடம் தெரியாது அழித்துவிடும் வாய்ப்பும் இருக்கின்றது என்பதையும் விளக்கினேன்.."

"பேரமைச்சர், உதயேந்திர வர்மனுக்குப் பாராட்டுப்பட்டம் கொடுக்கவில்லை அழகுவேல்.. கோட்டை வாயிலிற்கே சென்று அவனுக்கு மரியாதை செய்து பொன்னால் ஆன இரதத்தில் அமர வைத்து பேரமைச்சரே அவனை அரண்மனைக்கு அழைத்து வந்தாலும் வந்துவிடுவார் என்பது போன்றே எனக்குத் தோன்றுகிறது.."

இருக்கும் சூழ்நிலையில் இது என்ன அசூசை நிறைந்த சிரிப்பு என்று பேரமைச்சர் திகைக்கும் வகையில் சப்தமாக உரத்தக் குரலில் சிரித்தவாறே கூறும் அரசனைக் கண்டு உள்ளுக்குள் வெறுப்பும் எரிச்சலும் பொங்கி வழிந்தாலும், அதனை இவன் முன் காட்டும் துணிவு எவருக்கு இருந்திருக்கின்றது இதுவரை என்று உணர்ந்தவராக,

"அரசே! தற்போது இருக்கும் சூழலில் உதயேந்திர வர்மனை நான் அல்ல, நீங்களே சென்று வரவேற்றாலும் தகும்.." என்று கூறியதில் விக்கிரம்ம சிம்மனின் அகங்காரமும் செறுக்கும் அரண்மனை விதானத்தை உடைத்துக் கொண்டு வெளியேறியதில் தன்னைக் கட்டுக்குள் கொணர வெகு சிரமப்பட்டவனாக, முகம் சிவக்க வார்த்தைகளை உதிர்க்காது இறுக்கிய உதடுகளுடன் அமைதியாகி விட, விநாடிகள் சில அங்கு நிலவி கொண்டிருந்த மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது ஊது கொம்பின் சத்தம்..

"என்ன இது? இந்நேரத்தில்?"

அரசனின் கேள்விக்குச் சப்தம் வரும் திசையைத் திரும்பிப் பார்த்தவாறே,

"நமது எதிரியை நீங்கள் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது அரசே.." என்று பேரமைச்சர் கூறிய அதே நேரம் வாயுவேகத்தில் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தான், தனது வெண்ணிற புரவியில் வர்ம இளவரசன்..

"அதற்குள்ளாகவே வந்துவிட்டானா? இன்று தானே தூதுவன் வந்திருந்தான்.."

"அவனைத் தொடர்ந்து உதயேந்திர வர்மன் கிளம்பியிருப்பான் அரசே.. இதைத் தான் எதிரியின் பலம் அறிய வேண்டும் என்று கூறினேன்.. சிம்மத்தின் கோட்டைக்குள் தன்னந்தனியாக நுழைபவன், அவனது உயிருக்கு இங்கு எத்தகைய ஆபத்துகள் காத்துக் கொண்டிருக்கும் என்பதை அறியாமலா வந்திருப்பான்? அனைத்தையும் யூகித்துத் தான் இப்பயணத்தையே அவன் துவங்கியிருப்பான், அதுவும் அவனது வருகையை நமக்கு முன்னறிவித்துவிட்டு.. இப்பொழுது எண்ணிப் பாருங்கள், நமது சேனாதிபதி கூறியது போல் வர்ம இளவரசனை கொன்றுப் போடுவது அத்தனை எளிதா, என்ன?"

பேரமைச்சரின் வார்த்தைகள் ஆயிரமாயிரம் பய அணுக்களை விக்கிரம்ம சிம்மனின் உடல் முழுவதும் ஊடுருவச் செய்ததில் அவனையும் அறியாது அவனது மேனியில் மெல்லிய நடுக்கம் ஒன்று பரவத் துவங்கியது..

'இத்தனை தைரியமும் அஞ்சா நெஞ்சமும் படைத்த ஒருவனை நம்மால் எதிர்க்க முடியுமா? இவனை எதிர்த்தால் சிம்ம ராஜ்யத்தை ஒரே நாளில் அழித்துவிட மாட்டானா? அதுவும் தற்போது அவனுக்குப் பின் திரண்டிருக்கும் மகாப்பெரிய சைன்னியத்தையும், தனது சேனைகளுக்கு முன் நின்று அவன் வார்த்தைகள் எதுவும் உதிர்க்காமலேயே வெறும் வாளை மட்டும் உயர்த்திக் காட்டினாலே போதும், உங்களது உத்தரவுப் படியே ஆகட்டும் என்று உறுதிப் பூண்டிருக்கும் தங்கேதி வீரர்களையும் பார்த்தால், நம் கோட்டையைத் தகர்த்தெறிவதற்கு அவனுக்கு ஒரு சில நாழிகைகளே போதும் போல் தெரிகின்றதே.. அப்படி என்றால் இவனுடன் இணைவது தவிர வேறு வழியில்லையா? அப்படி இணைந்தால், நாளை தங்கேதி தேசத்திற்கே இவன் பேரரசன் ஆனால், இவனது ஆதிக்கத்தின் கீழ் அல்லவா நானும், எனது சிம்ம ராஜ்யமும் இருக்க வேண்டும்.. முடியாது, இவன் என்ன கூறினாலும் இவனது திட்டத்திற்கு நான் உடன்பட முடியாது.. என் கோட்டையை அவன் முற்றுகையிட்டால் அவன் எண்ணமிட்டு முடிப்பதற்கு முன்பே நான் வர்ம கோட்டையை அழித்திருப்பேன்.."

உள்ளுக்குள் மூடத்தனமாகச் சூழுறைத்துக் கொண்டவனுக்குத் தெரியாது, வந்து கொண்டிருப்பவன் தனது சம்மதத்தை எதிர்பார்த்துச் சமரசம் செய்து கொள்ள வரவில்லை என்றும், நாம் வாய் திறந்து மறுக்கும் முன்னரே நம்மை அவன் காலடியில் வீழ்த்திவிடும் தீரமிக்கப் பராக்கிரமாசாலி என்றும்.

***********************************

விக்கிரம்ம சிம்மனின் மனம் எண்ணி முடிக்கவும், காவலன் ஒருவன் அரசனின் அரசியல் அறைக்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.

"வர்ம இளவரசர் உதயேந்திர வர்மர் வந்திருக்கின்றார் அரசே!

"அவனை இங்கு வர வழைக்காதே, எனது ஆஸ்தானா மண்டபத்துக்கு அழைத்து வா.."

காவலன் சென்றவுடன் பேரமைச்சரையும் சேனாதிபதி அழுகுவேலையும் தன்னுடன் வரப்பணித்த விக்கிரம்ம சிம்மன், அக்கணம் வரை தனக்கும் மற்ற இருவருக்கும் இடையேயான விவாதங்களுக்கு வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த உப சேனாதிபதியையும் தளபதிகளையும் வர வேண்டாம் என்று தடுத்துவிட்டான்.

அடுத்தச் சில மணித்துளிகளில் சிம்ம அரசின் தலை நகரமான வேணிமா நகரத்துக்குள் வாயுவேகத்தில் அதிரடியாய் பிரவேசித்தான் உதயேந்திரன்..

*********************************************************

சூரியஸ்தமன சமயமாதலால் மெள்ள மெள்ள மறைந்து கொண்டிருந்த கதிரவனின் சூடான சிரம் ஒட்டு மொத்தமாக ஆழ்கடலில் புதையுண்டு போயிருக்கும் அந்தி வேளையிலே இருள் கவ்வத் துவங்கியிருக்க, வேணி மாநகரத்தின் அகலமான சாலைகளின் இரு புறங்களும் பந்தங்கள் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தன.

உடலின் ஒவ்வொரு பகுதியும் எவ்வித சேதமுமடையாமல் பாதுகாப்பதற்குச் சிறிய உலோக வளையங்களை ஒரே தோரணையில் பிண்ணப்பட்ட வலை போன்ற கவசத்தைக் கால்சராயாகப் புணைந்தும், இரும்பிலான உடைக் கவசத்தை மார்புப்பகுதி தலைப்பகுதி ஆகியவற்றைப் பாதுக்காப்பதற்காக அணிந்தும்,

நூற்றுக்கணக்கில் குறுக்கும் நெடுக்குமாக அம்மாநகரம் முழுவதிலும் நடந்து கொண்டிருந்த காவலர்களின் மீதும் வீரர்களின் மேனியிலும், எரி பந்தங்களின் சுடரொளி பளபளப்பாகப் பட்டு பிரகாசித்ததில், வர்ம இளவரசனின் கண்ணையே கூசுவது போன்று தோற்றமளித்தது அவ்வேணி மாநகரம்.

கறுத்த மேகங்கள் தங்கேதி தேசம் முழுவதுமே சூழ்ந்திருக்க, போரின் அறிகுறிப் போன்று இருண்ட முகில்கள் கருகிக் கனிந்து ஒன்றோடு ஒன்றாக மோதி எந்த நிமிடமும் பேரிடிகள் விழலாம் என்பது போல், இயற்கையன்னை பெரும் அச்சத்தைப் பொதுமக்களுக்கு விளைவித்திருக்க, தங்கேதி தேசத்தின் தெற்கு எல்லையில் இருந்து யோசனைகள் சில (1 யோசனை = 12 மைல்) தொலவில் இருக்கும் சிம்ம அரசின் கோட்டை முழுவதிலும் போர் தயாரிப்புகள் பெரும் வேகத்துடன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை, அந்நகரத்துக்குள் புகுந்த விநாடியே புரிந்து கொண்டான் வர்ம இளவரசன்.

'இந்நேரத்திலும் போர் கவசங்களுடனும் ஆயுதங்களுடனும் வீதிகளில் வீரர்கள் வலம் வருகின்றார்கள் என்றால், யுத்தத்திற்குத் தானுமே தயாராக இருக்கின்றான் விக்கிரம்ம சிம்மன் என்று தானே அர்த்தம்..'

சிறிதே உரத்தக் குரலில் முணகிக் கொண்டவாறே புரவியின் வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செலுத்திக் கொண்டிருந்தவனின் ஊடுருவும் விழிகள் அங்குலம் அங்குலமாக அந்நகரம் முழுவதையுமே துளைத்தெடுத்துக் கொண்டிருக்க,

வழி நெடுக்கிலும் வாள்களையும் வேல்களையும் ஈட்டிகளையும் பிடித்தவாறே நடந்து கொண்டிருந்த வீரர்களில் சிலருடைய பார்வைகள் தன் மீதே படிந்திருப்பதில், தன்னைப் பற்றி நிச்சயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்பதையும் யூகித்துக் கொண்டவனாக அரண்மனைக்குச் செல்லும் பாதையை விசாரித்தவாறே செல்ல, ஏறக்குறைய அரை நாழிகை ஊருக்குள் பயணம் செய்தவனை எதிர்கொண்டனர் அரண்மனைக் காவலர்கள் இருவர்..

"எங்களது வேணி மாநகரத்திற்கு விஜயம் செய்திருக்கும் வர்ம இளவரசரை வரவேற்கிறோம்.. உங்களை ஆஸ்தானா மண்டபத்திற்கு அழைத்து வருமாறு அரசர் விக்கிரம்ம சிம்மரின் உத்தரவு.. எங்களைத் தொடர்ந்து வந்தால் நாங்களே உங்களை அரசரின் மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.."

ஆமோதிப்பது போல் மெள்ள தலையசைத்தவன்,

"பல நாட்கள் பிரயாணம் செய்ததில் எனது புரவி மிகுந்த களைப்படைந்திருக்கின்றது.. ஆகையால் நீங்கள் மெதுவாகச் சென்றால் உங்களைப் பின் தொடர்ந்து வருவதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.." என்றான்.

இவன் கூறும் வார்த்தைகளில் ஒன்று கூட உண்மையில்லை என்பதை உணர்த்தும் வகையில், பல யோசனைத் தூரங்கள் என்னைச் செலுத்தினாலும் நான் களைப்புக்கொள்ளேன் என்பது போல் மூக்கு விடைக்கத் தன் நண்பனை கழுத்தை மட்டும் சரேலென வளைத்து திரும்பிப் பார்த்த பைரவனைக் கண்டு விஷமப் புன்னகைப் புரிந்தவனாக, மீண்டும் ஒரு முறை தனது விழிகளை அவ்வீதியைச் சுற்றிலும் சுழற்றவிட்டான்.

வர்ம இளவரசனின் வேண்டுகோளை ஆமோதிப்பது போல் காவலர்கள் இருவரும் தங்களின் புரவிகளில் முன் செல்ல, அவர்களை வெகு நிதானமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் உதயேந்திரனின் பார்வை ஒரு இடம் விடாது வேணி மாநகரத்தை அலசி ஆராய்ந்துக் கொண்டிருப்பதையும், பிரதான சாலைகளும் பெரிய வீதிகளும் ஒன்று கூடும் இடங்களை நெருங்கும் பொழுது ஒரு சில விநாடிகள் நின்று அவன் கூர்ந்துப் பார்ப்பதையும், சாலைகளுக்கு இரு புறங்களும் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகைகளை ஏறிட்டுப் பார்த்தவாறே சிந்தனைகளில் ஆழ்வதைப் போல் புருவங்களை இடுக்கியதையும் கவனித்த காவலர்கள் இருவரும், அர்த்தத்துடன் ஒருவொருக்கொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்..

இவர் கூறியது போல் பல நாட்கள் பயணித்த புரவிப் போலவா இருக்கின்றது இது?

பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெண்மை நிறத்தில் பளபளவென்று அப்புரவி இருப்பதையும், நண்பனின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவாறு அவன் நிறுத்த நினைக்கும் இடங்களில் தானாகவே நின்றும், மெதுவாகச் செல்ல வேண்டிய இடங்களில் அவன் கூறாமலேயே தனது நடையின் வேகத்தைக் குறைத்தும் வெகு ஒயிலாக நடந்து வரும் அதன் அழகைப் பார்த்தாலே, தெரிகின்றதே..

ஆங்காங்கு அதற்குத் தேவையான ஓய்வுக் கொடுத்து, நீராட்டத்தையும் முடித்து அதற்கான உணவினையும் வழங்கி வழி நெடுக்கிலும் அதனை நன்றாகப் பராமரித்து வந்திருக்கின்றார் வர்ம இளவரசர் என்று..

நகரத்தின் நீளம் அகலம் தெருக்கள் சந்துக்கள் சாலைகள் வீதிகள் கட்டிட அமைப்புகள் என்று அனைத்தையும் கணக்கெடுப்பதெற்கு தான், எதிரி ராஜ்யத்தின் கோட்டை என்றும் அஞ்சாது இவர் இவ்வளவு மெதுவாக வந்து கொண்டிருக்கின்றார் என்று புரிந்துக் கொண்டவர்களுக்கு, வர்ம இளவரசரை வெல்வது அத்தனை எளிதல்ல என்றே தோன்றியது.

ஆயினும் இத்தகைய ஒரு மாவீரனை கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசர் விக்கிரம்ம சிம்மர் எதிர்க்கின்றார் என்றால், ஒன்று அவருக்கு அளாதியான துணிவைக் கொணரும் வகையில் வேறு ராஜ்யங்களின் ஆதரவு இருக்க வேண்டும் அல்லது புத்தி பேதலித்துப் போய்ச் சுயமாக முடிவெடுக்கும் ஞானம் அவருக்கு அடியோடு அழிந்து போயிருக்க வேண்டும்.

வெவ்வேறு சொற்களைக் கொண்டு ஆனால் ஒரே பொருள் பட மனத்திற்குள் எண்ணமிட்டுக் கொண்டிருந்த காவலர்கள் உதயேந்திரனின் வேகத்திற்கு இணையாக அவன் நிற்கும் பொழுது தாங்களும் நின்று, அவன் பயணிக்கும் பொழுது தாங்களும் தங்களின் புரவியைச் செலுத்த, ஏறக்குறை இரு நாழிகைகளைக் கடந்த அம்மூவரின் பயணமும் ஒரு வழியாக நிறைவு பெற, அரண்மனையை அடைந்த உதயேந்திரனை நேராக ஆஸ்தானா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் காவலர்கள்.

****************************

விக்கிரம்ம சிம்மனின் மாளிகை..

அவனது ஆஸ்தானா மண்டபம்..

உதயேந்திரனுக்காகக் காத்திருந்த விக்கிரம்ம சிம்மன் ஒவ்வொரு விநாடியையும் எரியும் நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போல் அடங்காத எரிச்சலுடனும் சீற்றத்துடனும் அமர்ந்திருக்க, காவலனின் அறிவிப்பைத் தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த உதயேந்திரனை தன் வாழ்நாளில் முதன் முறையாகக் கண்டிருந்த விக்கிரம்ம சிம்மன், அவனின் கம்பீர உருவத்தையும், எதிரியின் கோட்டைக்குள் நுழையும் எத்தகைய மனிதனின் முகத்திலும் தோன்றும் சிறு கலக்கமோ சஞ்சலமோ இல்லாது நிர்மலம் தவழும் அமைதி சூழ்ந்திருக்கும் தோற்றத்தையும் கண்டதில் தன்னையும் அறியாது உள்ளுக்குள் அதிர்ந்து அரண்டு போனான்.

இவனா உதயேந்திர வர்மன்?

இந்த இளைஞனா?

பார்த்த மாத்திரத்திலேயே மாவீரனுக்குரிய அனைத்து இலட்சணங்களையும் கொண்ட நெடுநெடுவென்ற உயரத்துடன் உறுதியான உடலும் கொண்டிருப்பவனுக்கு இவ்வடர்ந்த மீசை மட்டும் இல்லாதிருந்தால், இவன் விடலைப் பருவத்தைக் கூடத் தாண்டியிருக்க மாட்டான் என்று காண்பவர் எண்ணும் அளவிற்கு அழகிய முகம் கொண்ட இவனா, தங்கேதி தேச மக்கள் முழுவதுமே தங்களை அந்நிய நாட்டினரிடம் இருந்து காக்கப் போகும் விடிவெள்ளி என்று எண்ணிக் கொண்டிருக்கும் வர்ம இளவரசன்?

ஆனால் அந்த அழகிய முகத்தில் பளபளப்புடன் பளிச்சிடும் கண்களில் தெரிவது என்ன?

கொடூரமா தீட்சண்யமா விஷமமா குரோதமா இல்லை இராட்ஷச வேகத்துடன் மூர்க்கத்தனத்தையும் இணைத்து சாஸ்திரிய வழியிலும், தேவைகள் ஏற்பட்டால் அசாஸ்திரிய வழியிலும் போர் செய்யக் கூடிய என்னிடமே மோதத் துணிகின்றாயே என்ற பொருள் படும் இகழ்ச்சியா?

இளவரசனின் நேர் கொண்ட பார்வையில் இருந்து எப்பொருளையும் கண்டு கொள்ள இயலாது மனத்திற்குள் தடுமாறிக் கொண்டிருந்த அரசனின் முகத்தையும், தங்களை அழுத்தமான காலடிகளுடன் நெருங்கிக் கொண்டிருக்கும் உதயேந்திரனையும் பார்த்த பேரமைச்சருக்கு,

அவன் அரசன் அமர்ந்திருக்கும் ஆசனத்தை நெருங்க நெருங்க அதுவரை ஆவேசத்தையும் கோபத்தையும் மட்டுமே கொண்டிருந்த அரசனின் முகத்தில் இப்பொழுது திடுமெனத் தோன்றியிருக்கும் தடுமாற்றத்தையும் திகைப்பையும் கண்டதில், வயதில் மூத்தவரான அவரது உள்ளத்திலும் சஞ்சலம் ஏற்படத் துவங்கியது..

நாற்பது வயதுகளில் இருக்கும் இவ்வரசன் எத்தனை போர்களங்களைச் சந்தித்து இருக்கின்றான், ஆனால் இன்று இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் இந்த இளைஞனைக் கண்டு இவனுக்குள் ஏன் இந்தத் தவிப்பு?

நிமிர்ந்த முதுகுடன் விரிந்த தோள்களுடன் துணிவாக அமர்ந்திருப்பது போல் அரியாசனத்தில் வீற்றிருக்கும் விக்கிரம்ம சிம்மனின் உள்ளத்தைத் தெள்ளத் தெளிவாகக் கணித்திருந்த பேரமைச்சருக்கு, சிறு பிள்ளைப் போல் வர்ம இளவரசனிடம் சண்டைப்பிடித்து இந்த முட்டாள் அரசன் காரியத்தைக் கெடுத்துவிடுவானோ என்ற பெரும் அச்சம் உள்ளத்தில் எழத் துவங்கியது.

ஏனெனில் இக்கணம் விக்கிரம்ம சிம்மன் எடுத்திருக்கும் முடிவு, தங்களது இராஜ்யத்தை மட்டுமல்லாது தேசம் முழுமையையும் எத்தகைய ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பதை நன்கு புரிந்திருந்தவராயிற்றே அவர்.

பல்லாயிரம் பரப்பளவு கொண்ட அந்த ஆஸ்தானா மண்டபத்தினுள் நுழைந்த அவ்விநாடியில் இருந்தே பல அடிகள் தூரத்திலேயே அங்குக் கூடியிருந்த பேரமைச்சர், சேனாதிபதி மற்றும் அரசனின் மீது தனது கூரிய விழிகளைச் செலுத்தியவாறே நடந்து வந்து கொண்டிருந்த உதயேந்திரனுக்கு, ஒவ்வொருவரின் முகத்திலும் தோன்றி மறையும் மாற்றங்களின் மூலமாகவே அவர்களின் உள்ளத்தில் எழுந்து கொண்டிருக்கும் சிந்தனைகளைத் துல்லியமாய்க் கணிக்க வெகுவாய் இயன்றது.

பேரமைச்சரைப் பார்த்ததுமே அவருடைய வயதும், அமைதி ததும்பும் முகமும் அவரது தெளிவான சிந்தனைகளை எடுத்துக் காட்ட, நிச்சயமாக எனது திட்டத்திற்கு இவரைச் சம்மதிக்க வைப்பது கடினமல்ல என்றே தோன்றியது வர்ம இளவரசனுக்கு.

ஆனால் அவருக்கு அருகில் அமர்ந்து தன்னையே ஊடுருவுவதைப் போல் பார்த்திருக்கும் அழகுவேலின் முகத்தில் விரவிக் கிடந்த கபடமும் சூழ்ச்சியும் அவனின் கவடுள்ள மனத்தைத் தெளிவாக எடுத்துக்காட்ட, அவனுக்கு மறு பக்கம் அமர்ந்திருந்த விக்கிரம்ம சிம்மனைக் கண்ட மாத்திரத்திலேயே உதயேந்திரனுக்குப் புரிந்து போனது..

இவனது கண்களில் தெரியும் நச்சுத்தன்மையே இவனை எதிர்ப்பவர்களுக்குக் கொடூரங்களையும் கேடுகளையும் வரவழைத்துக் கொடுக்கும் துர்க்குறிக்குச் சாட்சி என்று.

அரியாசனத்தை நெருங்கியவன் இலேசாகச் சிரம் தாழ்த்தி, "சிம்ம ராஜ்யத்தின் அரசர் விக்கிரம்ம சிம்மருக்கு எனது வணக்கங்கள்.." என்றான் இறுகிய முகத்துடன், புன்னகை என்பது மருந்துக்கும் கூட உதடுகளைத் தழுவாது.

எஃகைப் போன்ற அவனது கடினமான முகத்திற்கும், தன் இதயத்தை ஆழ்ந்து ஆராயும் நோக்குடன் தன்னைக் குத்திக் கிழிக்கும் அவனது பருந்துப் பார்வைக்கும் இடையில் இருக்கும் சம்பந்தங்கள், நிச்சயமாக அவனது தலை தாழ்த்தலிற்கும் வணக்கத்தை உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் இடையில் இல்லவே இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள இயலாத சிறு பிள்ளை அல்லவே விக்கிரம்ம சிம்மன்.

உள்ளுக்குள் இருக்கும் திகிலை வெளியில் காட்ட விரும்பாதவனாக, வலுக்கட்டயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையைத் தனது உதடுகளில் படரவிட்டவனாக,

"வந்தார் அனைவரையும் விருந்தோம்பும் பழக்கம் எனது சிம்ம ராஜ்யத்திற்கு இருக்கவே செய்தாலும், மிகப்பரிய ராஜ்யத்தின் இளவரசர் ஒருவர் அந்நிய ராஜ்யத்திற்கு விஜயம் செய்ய விரும்பும் பொழுது, அந்த ராஜ்யத்தின் அரசரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் அவர்களது கோட்டைக்குள் நுழைய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றான்.

தனது வரவின் மீதான வெறுப்பையே வார்த்தைகளாக உமிழ்ந்து கொண்டிருக்கின்றான் விக்கிரம்ம சிம்மன் என்று உணர்ந்ததில் உள்ளத்திற்குள் அகங்காரம் சீற்றமுமே வெடித்தாலும், அதனை எனது முகத்தில் நான் கொணர மாட்டேன் என்பது போல் நிதானமாகப் பேசத் துவங்கினான் உதயேந்திரன்.

"அதற்கு நிச்சயம் நான் மன்னிப்புக் கோரமாட்டேன் அரசே! உங்களை மட்டும் அல்ல இன்னும் பிற ராஜ்யங்களின் அரசர்களை நான் சந்திக்க விரும்புவதாக ஏற்கனவே தகவல் அனுப்பியிருந்தேன்.. அவர்கள் அனைவருமே என்னைச் சந்தித்தும் விட்டார்கள், உங்கள் ஒருவரைத் தவிர.. இனியும் உங்களைச் சந்திக்க நீங்கள் அனுமதி அளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்திருந்தால், இலங்கை படையினர் நமது தங்கேதி தேசத்திற்குள் எளிதாக ஊடுருவி சப்தமில்லாது போரைத் துவங்கி விடுவர்.. ஆகையால் தான் உங்களது அனுமதியின்றியே உங்களது கோட்டைக்குள் நான் நுழைய வேண்டியதாகிவிட்டது.."

மன்னிப்புக் கோரமாட்டேன் என்று அவன் கூறிய விநாடிகளிலேயே அழகுவேலின் ஆத்திரம் எகிறத் துவங்கியிருக்க, அரசனின் எதிரில் நின்று பேசுகிறோம் என்ற அச்சமென்பது சிறிதும் அல்லாது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தைரியத்துடன் பேசும் உதயேந்திரனின் வார்த்தைகளில், அவனது பேச்சின் இறுதியில் துலங்கிய ஏளனம், சிம்ம சேனாதிபதியின் சீற்றத்தை உச்சத்தை அடையச் செய்தது.

இடையில் இருந்த வாளை சரேலென உறுவியவன் ஒரே தாவில் மேல் படியில் இருந்து கீழே குதித்து உதயேந்திரனின் முகத்தை நோக்கி வாள் பிடித்த தன் கரத்தை உயர்த்த, தனது இடது புறமாக நின்றிருந்த சேனாதிபதியையோ அல்லது தனது முகத்திற்கு வெகு அருகில் தோன்றிக் கொண்டிருக்கும் அவனது வாளையோ வழக்கம் போல் சிறிதும் அசட்டை செய்தான் இல்லை, வர்ம இளவரசன்.

மெல்லிய சிரிப்பை உதடுகளில் படரச் செய்தவாறே தனது இடது கரத்தின் ஆட்காட்டி மற்றும் நடுவிரலைக் கொண்டு அவனது வாளை லேசாகப் புறந்தள்ளியவன்,

"நீங்கள் தான் சேனாதிபதி அழகுவேல் என்று நினைக்கின்றேன்.. ஏனேனில் எனக்குத் தெரிந்தவரை சிம்ம அரசருக்கு முன் இவ்வாறு தைரியமாகச் செயல் பட உங்களுக்கு மட்டும் தான் உரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.. நீங்கள் தான் சேனாதிபதி என்றால், நான் கூறுவதைச் சற்று நிதானமாகக் கேளுங்கள்..உங்களது வாள் எனது கண்களுக்கும் அரசரின் முகத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பதால், எனக்கு அரசரை சரிவரப் பார்க்க இயலவில்லை.. தயவு செய்து நீங்கள் உங்கள் வாளை இடையில் சொருகுங்கள், அல்லது சிறிது நகர்ந்து நில்லுங்கள்.." என்று வெகு இகழ்ச்சியாகக் கூறியவனின் பதிலில் தனது அரியாசனமே கிடுகிடுக்கும் வகையில் விருட்டென்று எழுந்தான் விக்கிரம்ம சிம்மன்..

"உதயேந்திர வர்மா! எனது அனுமதியில்லாமலேயே எனது கோட்டைக்குள் நுழைந்து, சிம்ம ராஜ்யத்தின் அரசனான என்னையே அவமானப் படுத்துக்கின்றாய்.. அது மட்டும் இல்லாது பல போர்களைக் கண்டிருக்கும் எனது சேனாதிபதியின் வாளை துச்சமெனத் தள்ளுகிறாய்.. எனது கண்களுக்கெதிரேயே அவரை இகழவும் செய்கின்றாய்.. இவற்றில் ஒரு தவறுக்கே உனக்கு மரணத் தண்டனை விதிக்க என்னால் இயலும் என்பதை மறந்துவிடாதே!!!"

அகங்காரத்துடனும், சீறும் பாம்பின் ஆவேசத்துடனும் உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருக்கும் விக்கிரம்ம சிம்மனை, அதுவும் திடுமெனத் தன்னை ஒருமையில் அழைத்தவனை அதுவரை மெல்லியதாகத் தவழ்ந்திருந்த முறுவலை சுத்தமாகத் துடைத்தெறிந்தவாறெ நெருங்கிய உதயேந்திரன்,

"அரசே! நான் இங்கு வந்திருப்பது சண்டையிடுவதற்கு அல்ல, சமரசம் பேசுவதற்கு.. இல்லையேல் எனக்கு முன் வாளை உயர்த்தியிருக்கும் உங்களது சேனாதிபதிக்கு மரணம் என்றால் என்னவென்று, இந்நேரம் நான் காட்டியிருப்பேன்.." என்றான் கணீரென்ற கம்பீரமான வேங்கையின் குரலில், அம்மண்டபமே எதிரொலிக்கும் வகையில்.

"உதயேந்திர வர்மாஆஆஆஆஅ..." என்றவாறே அரியாசனத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் தனது வாளை உருவிய விக்கிரம்ம சிம்மன் உதயேந்திரனின் மீது பாய எத்தனிக்க, சடாரென்று இருவருக்கும் நடுவில் புகுந்தார் பேரமைச்சர்.

"அரசே! உதயேந்திர வர்மரின் வருகையைத் தடை செய்ய நீங்கள் உத்தரவிடாததால் தான் அவரால் கோட்டைக்குள் நுழைய முடிந்தது.. உங்கள் அரண்மனை வரையிலும் வர இயன்றது.. உங்களது ஆஸ்தான மண்டபத்திற்கு அவரை வரவழைக்கும் படி காவலர்களைப் பணித்ததும் நீங்கள் தானே.. அப்படி இருக்க, இப்பொழுது எதற்கு இந்த வீண் சண்டைகள், தேவையற்ற விவாதங்கள்.. அவர் கூறுவது என்னவென்று தான் முதலில் கேட்போமே.." என்றவராக அழகுவேலையும் திரும்பிப் பார்த்து தலையசைக்க, எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடனும், அந்நேரமே உதயேந்திரனை வெட்டி சாய்க்கும் ஆவேசத்துடனும் தனது இருக்கையை நோக்கி நடந்தான் அழகுவேல்.

"நீங்கள் தான் பேரமைச்சர் இளநாகனாராக இருக்க வேண்டும்.. உங்களுக்கும் எனது வணக்கங்கள்.."

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமைதியாகத் தலைத் தாழ்த்தி வணங்கும் உதயேந்திரனைக் கண்டு மிதமிஞ்சிய வியப்பில் ஆழ்ந்த பேரமைச்சர், அரசரை அரியாசனத்தில் அமருமாறு சைகை செய்து, பின் தனக்கு அருகில் இருக்கும் ஆசனத்தில் உதயேந்திரனை அமரப் பணிக்க, அவரின் உபசரிப்பை மெல்லிய தலையசைப்புடன் மறுத்துவிட்டான் இளவரசன்..

"எப்படி இருந்தாலும் இன்று நீங்கள் எங்களது விருந்தினர்.. அமர்ந்தவாறே பேசலாமே.."

"உங்களது உபசரிப்பை மறுப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் இளநாகனார் அவர்களே.. நான் வந்த வேலையை முடித்துவிட்டு இப்பொழுதே எங்களது கோட்டைக்குத் திரும்ப வேண்டும்.."

இவனைச் சம்மதிக்க வைப்பது எளிதல்ல என்பதை உணர்ந்தவராக,

"உங்களது விருப்பம், இனி உங்களை வற்புறுத்த என்னால் இயலாது, சரி தங்களது வருகைக்கான காரணம்?" என்றார் சிறிய புன்னகையுடன்.

அவன் வந்திருப்பது எதற்கு என்று தெரிந்திருந்தாலும், அவனது வாயாலேயே அதனைக் கூறட்டும் என்று முடிவு செய்தவராகக் கூறும் பேரமைச்சரை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்த உதயேந்திரன் அரசனின் புறம் திரும்பியவன்,

"இலங்கைப் படையினரின் ஊடுருவலைத் தடுக்க வேண்டும்.. அதற்கு ஒரே வழி உங்களது எல்லையில் எனது வீரர்களை நான் அமர்த்த வேண்டும்.. அதற்கு உங்களது அனுமதி எனக்கு வேண்டும்.." என்றான் நிதானமான குரலில் மிகவும் தெளிவாக..

"ஹ.. எனது எல்லையில் உனது வீரர்களா?"

அரசனின் கேலிப் புரிந்தாலும், 'ஆமாம்' என்று மட்டும் தலையசைத்தான் வர்ம இளவரசன்..

"அதற்கு நான் சம்மதிக்கவில்லை என்றால்?"

விக்கிரம்ம சிம்மனின் சின்னஞ்சிறிய விழிகளில் படர்ந்திருந்த வஞ்சினமும், அதன் வீரியத்தை எடுத்துக் காட்டும் ஒளியும் நாகச் சர்ப்பத்தின் நச்சுத்தன்மையைக் கொண்ட கூரிய விழிகளை ஒத்தே பிரகாசிக்க, இவனது உடலும் உள்ளமும் எண்ணங்களும் நஞ்சைத் தவிர வேறொன்றையும் சுமந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை உதயேந்திரனுக்குத் தெளிவாகவே உணர்த்தினாலும், உனக்குச் சளைத்தவன் நான் இல்லை என்பது போல்,

"அரசே! அந்நியர்கள் எனது நாட்டைப் பட்சிக்க நான் ஒருக்காலும் விடமாட்டேன்... நான் பிறந்திருக்கும் இந்தத் தங்கேதி தேசம் அவர்களால் சூறையாடப்பட்ட பாழுந்தேசமாக மாற நான் விடமாட்டேன்... இதற்குத் தடையாக எவர் வந்தாலும் அவரது ஆயுளை முடிவு செய்பவனும் நானாகத் தான் இருப்பேன்.." என்றான் கடினமும் திடமும் ஒருங்கே தொனிக்கும் இரும்புக் குரலில்.

அகங்காரத்துடன் மீண்டும் எழப்போன அரசனை சட்டென்று கரம் நீட்டித் தடுத்த பேரமைச்சர்,

"இளவரசே! உங்களது நோக்கம் நம் தேசத்தைக் காக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமாக இருப்பினும், இவர் எங்களது சிம்ம ராஜ்யத்தின் அரசர், எங்களது அரசரை இழிவாக நீங்கள் பேசுவதை நான் அனுமதிக்க முடியாது.." என்றார் உதயேந்திரனை எச்சரிக்கும் தொனியை சாரீரத்தில் கொணர்ந்து.

"பேரமைச்சரே! எந்நேரமும் அந்நியரின் படை நமது நாட்டை முற்றுகையிடும் சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.. இச்சூழ்நிலையில் தனித்தனி ராஜ்யங்களாகவோ, அவைகளை ஆட்சி செய்யும் அரசர்கள் பலராகவோ நாம் பிரிந்துக் கிடந்தால், நாமே வேற்று நாட்டவருக்கு நம்மை ஆதிக்கம் செய்ய வழி அமைத்துக் கொடுப்பது போல் இராதா? அப்படி என்றால், ஷாஸ்ரஸாத் மாயியையும் இலங்கை அரசன் நெடுமாவளவனையும் எதிர்த்து போரிட ஆயத்தமாக இருக்கும் நமது சைன்னியம், ஒரே பிரிவாக ஒரே அரசாக இல்லாவிடின் நமது நிலையென்ன? ஆகவே தான் கூறுகின்றேன்.. இனி நாம் அனைவரும் வெவ்வேறு ராஜ்யத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.. ஒரே ராஜ்யம் தான்.. அப்படி என்றால் சிம்ம ராஜ்யமும் இல்லை வர்ம அரசும் இல்லை.. உங்கள் அரசரும் அரசர் அல்ல, நானும் இளவரசன் அல்ல.. நாம் அனைவருமே நமது தேசத்தைக் காப்பாற்ற போராடும் வீரர்கள்.. ஒரு படைவீரன் தனது நாட்டைக் காப்பாற்ற முனையாது, அது எதிரியின் கரங்களில் சிக்குவதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றான் என்றால் , தேசத் துரோகியான அவனுக்கு எவ்விதமான தண்டனையும் வழங்கலாம் என்பது பேரமைச்சரான நீங்கள் அறியாதது அல்ல.. ஆக, இப்பொழுது தங்கேதி தேசத்தைக் காப்பாற்றுவதே எனது ஒரே குறிக்கோள், அதற்குத் தடையாக எவர் இருப்பினும், அது உங்களது அரசர் விக்கிரம்ம சிம்மரே ஆனாலும் நான் தாண்டியாது விடமாட்டேன் என்பதைத் தான் இப்பொழுது கூறினேன்.."

'அரசரே ஆனாலும் நான் தாண்டியாது விடமாட்டேன்..' என்ற வார்த்தைகள் சிம்ம அரசனின் செவிப்பறைகளை அடைந்து எதிரொலித்ததில், அக்கணமே வர்ம இளவரசனை கொன்றுப் போட்டுவிடும் அதீத ஆக்ரோஷம் எழ, ஆசனத்தின் கைப்பிடியை இறுக்கப் பற்றியிருந்தவனின் கை முஷ்டி உதிரத்தின் போக்கு நின்றது போல் வெளிரிக் கொண்டிருந்தது.

ஆயினும் பேரமைச்சரின் பதில் இதற்கு என்னவாக இருக்கும் என்பது போல் அவரின் புறம் தன் முகத்தைத் திருப்பியவன் வார்த்தைகளை வெளியிடாது சிரமப்பட்டு விழுங்கியவாறே பார்த்திருக்க, வர்ம இளவரசன் கொடுத்துக் கொண்டிருந்த பதிலில் வியப்புற்றது போல் ஆழ்ந்து அவனையே கூர்ந்துப் பார்த்த பேரமைச்சர் ஆழப் பெரு மூச்செறிந்தவாறே, "சரி, நீங்கள் கூற வந்ததைத் தெளிவாகக் கூறுங்கள்.." என்றார்.

"நான் ஏற்கனவே கூறியது தான், தங்கேதியின் தெற்கு பகுதி முழுவதிலும் எனது கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்.."

அது வரை அமைச்சரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு வெகு சிரமத்துடன் பொறுமையைக் கடைப்பிடித்து வந்த அழகுவேலின் சீற்றம் பொங்கி எழத் துவங்கியது.

"நீ பேசுவதைக் கேட்கும் பொழுது எனது செவிகளே மந்தப்பட்டது போல் உணர்கிறேன் உதயேந்திரா.."

சேனாதிபதியின் இகழ்ச்சியிலும், தன்னை ஒருமையில் அழைத்தது மட்டுமல்லாது பெயர் சொல்லிக் கூப்பிட்டதையும் கண்டு உள்ளுக்குள் வெகுண்டெழுந்தாலும், விழிகளில் மட்டுமே தனது வெறுப்பைக் கொணர்ந்த உதயேந்திரன்,

"அடைப்பட்டிருக்கும் செவிகளை நன்றாகத் திறந்து கேளுங்கள் சேனாதிபதி.. இப்பொழுது கேட்கவில்லை என்றால் பிறகு நீங்கள் எப்பொழுதுமே கேட்காத அளவிற்கு, இலங்கைப் படையினர் செய்து விடக் கூடும்.."

இளவரசனின் பதிலில் துடித்துக் கொண்டிருந்த சின நரம்புகள் அழகுவேலின் முகத்திலும் பிரதிபலிப்பது போல் அவனின் கறுத்த முகம் மேலும் இருண்டுப் போனதில் முகம் அகோரத்தை தத்தெடுத்திருக்க, உதயேந்திரனின் உதடுகளின் கடையோரம் ஏளனத்தில் வழிந்துக் கொண்டிருப்பதைக் கண்ட அரசன், தனது அரியாசனத்தில் மேலும் சாய்ந்து அமர்ந்தவாறே,

"சிறு பிள்ளை நீ என்பதை நன்றாகவே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாய் உதயேந்திரா.. ஏனெனில் நீ எதிர்பார்ப்பதும் சிறு பிள்ளை ஒன்று, என்ன கேட்பது என்பதை அறியாது கேட்பது போல் தான் இருக்கின்றது.." என்றான்.

"அரசே! வயதை வைத்து எவருடைய திறமைகளையும் எடைப் போடுவது அறிவுச்சார்ந்த செயல் அல்ல என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா?"

"அப்படி என்றால் நான் அறிவுக்கெட்டவன் என்று கூறுகின்றாயா உதயேந்திரா?"

"நான் கூறவில்லை.. நீங்கள் தான் சற்று முன் அவ்வாறு பொருள்படப் பேசினீர்கள்.."

இப்பிரஞ்சத்தில் உள்ள திமிர் அனைத்தையும் என் ஒருவனின் உருவத்திற்குள் ஒட்டுமொத்தமாய் அடக்கி வைத்திருக்கின்றேன் என்பது போல் பேசுபவனின் வார்த்தைகளில், ஒரு அரசன் என்றும் பாராமல் தன்னை அறிவற்றவன் என்ற பொருள்படப் பேசும் இளைஞனை கண்டு அடக்கமாட்டாத ஆத்திரத்தில் நரம்புகள் புடைக்கப் புஜங்கள் துடிக்க, மீண்டும் விருட்டென்று தனது அரியாசனத்தில் இருந்து எழுந்தான் விக்கிரம்ம சிம்மன்..

இங்குத் தனக்கெதிரே நிர்மலமான முகத்துடன் சலனமற்ற தொனியில், அச்சமும் கலக்கமும் என்னை அண்டுவதற்கு அஞ்சும் உணர்வுகள் என்ற தோரணையில் நின்றிருப்பவன் உதிர்த்த, 'விக்கிரம்ம சிம்மரே ஆனாலும் நான் தாண்டியாது விடமாட்டேன்..' என்ற வார்த்தைகள், ஒரு நாள் நிஜத்திலும் நிகழும் என்பதை அறியாத அறிவிலியாக!

தொடரும்...
References:
ஆண்களின் பருவங்கள்:
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்டவன்.
மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்டவன்.
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவன்
திறலோன், 15 வயது
விடலை,16 வயது
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவன்.

ராஜ்யங்கள் - நகரங்கள் - கதாப்பாத்திரங்கள்:
சிம்ம ராஜ்யம் - வேணி மாநகரம் - விக்கிரம்ம சிம்மன், அழகுவேல், மகிழ்வதனி-வஞ்சிக்கொடி
மாயி ராஜ்யம் - ஷாஸ்ரஸாத் மாயி
உஜ்வாலா ராஜ்யம் - ஆயாத்யா நகரம் - ஹர்யன்கா உஜ்வாலா
வர்ம ராஜ்யம் - ஆதிநல்லூர் மாநகரம் - விஜயேந்திர வர்மன், உதயேந்திர வர்மன், நீலவல்லி
நந்த ராஜ்யம் - விஜய நகரம் - சந்திர நந்தன், பூபால நந்தன்

Time:
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம் [ஒரு முகூர்த்தம் என்பது 1 1/2 மணி நேரம்]
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

Distance:
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
ஒரு காதம் என்பது 4 x 56 x 4 x 18 = 16128 அடிகளாகும், அதாவது கிட்டதட்ட 3 மைல் (16128/5280= 3.054)

ஒரு யோசனை தூரம் என்பது 12 மைல் (3X4) அல்லது 19.2 கி மீ
 
Author: JLine
Article Title: உதயேந்திர வர்மன் - அத்தியாயம் 17
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Super Super Super mam.... Semma semma episode.... Vikrama simhan udhay ah paakka othukkave maatengiraan but ivan vidratha illa... அவன் othukalana எதிரி நாட்டு easy ah thangethi தேசம் ah avanga kattupaadula கொண்டு வந்துடும்.... But Vikrama simhan othukka maatengiraane udhay நேர்ல வந்து kuda avanum... அழகு வேல் yum avana மதிச்சி பேசுற மாறியே theriyala... Avanodaya படை ஆட்கள் நிக்கணும் nu solrathu ஒதுக்க maatengiraanga enna ஆக pooguthoo... Super Super Super mam.. Udhay semma என்ன ghats pa avanuku thani aala வந்து semma.. Eagerly waiting for next episode
 
mibrulz

New member
beautiful mam..what guts this guy has...wow wow....what guts and what self confidence... pavam manthiri ....avara koooda vida matengarane UV :-D
 
Suhana

Member
View attachment 141

Ka..... Semma epi ❤❤❤❤❤UV... Pintran... அதுவும் அழகுவேல் கிட்ட நடுவுல வாள்களை வச்சுட்டு நிக்காத... மறைகிறது solrathu எல்லாம் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣...avan look antha smile எல்லாம் நீங்க narrate panni irukrathu juppppppeerrr ka ❤😍❤😘❤😍😍❤😍❤😍

KaniRamesh

New member
Hey super ka...udhaya chanceless evlo gambeeram ...bairava so sweet apadiye udhaya va resemble panuthu ka ...Udhaya bairavanuku rest venumni sonathum patunu thirumbi pathuchi parunga apadiye udhaya than ...magizh n udhaya nalla paira enavo ana Udhaya n bairava sema pair....vikrama dei lusu una pakka thaniya varum pothe theriya venam en athu va pathi summa kathikite ithula intha azhaguvel vera....magane nee magizh kita jollu vita story therinjithu nee margaiya than....Udhaya oda alatchiyam,antha thimir kalantha pechi ellame super ka....rasichikite iruken😍😍😍😘😘😘.....
 
Praveen

New member
சிங்கத்தை அதன் குகையிலேயே எதிர்து விட்டான் வீரன் உதய்
சுப்பர்
 
Top