What's new

உதயேந்திர வர்மன் அத்தியாயம் 3

JLine

Moderator
Staff member
78உதயேந்திர வர்மன்!


அத்தியாயம் 3


கோட்டையின் வாயிலினுள் நுழைந்த சேனாதிபதியைக் கண்டு, "அசகாயசூரர் விக்கிரம்ம சிம்மரின் வீராதி வீர சேனாதிபதி அழகுவேல் வாழ்க! வாழ்க!" என்றவாறே தாள் பணிந்து வணங்கிய உட்புறக் காவலர்கள், தங்களைக் கடந்து செல்பவன் பெயருக்கு கூடத் தலையசைப்பிலோ அல்லது இளநகையிலோ தங்களின் வரவேற்பை அங்கீகரிக்காததைக் கண்டு, உள்ளுக்குள் பொருமியவர்களின் முகத்திலும் எரிச்சல் படரவே செய்தது.

மானசீகமாக அவனை ஏசிக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை லேசாகச் சுழித்தவாறே திரும்பிப் பார்த்துக் கொண்டு நிற்க, அழகுவேலைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த மகிழ்வதனியின் விழிகளின் வட்டத்திற்குள் காவலர்களின் வெறுப்பும் கோபமும் தெள்ளத்தெளிவாக விழவே, தனது கீழுதட்டைக் கடித்தவாறே யோசனையுடன் அழகுவேலைப் பின் தொடர்ந்தவளின் குறுக்கே, தங்களின் வாட்களை நீட்டி வழி மறித்தார்கள் காவலர்கள்.

மகிழ்வதனியின் வரவிற்கான காரணத்தைப் பற்றி அவர்கள் விசாரிக்கத் துவங்கவும், சில அடிகள் முன்னால் சென்று கொண்டிருந்த அழகுவேல் தனக்குப் பின்னால் கேட்டுக் கொண்டிருக்கும் சலசலப்பைக் கண்டு புரவியின் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தி விருட்டென்று அரை வட்டம் அடித்துத் திரும்பியவன், காவலர்களைப் பார்த்து, 'அவளைப் போகவிடு' என்பது போல் தலையை லேசாக அசைத்துச் சைகை செய்தான்.

சேனாதிபதியைப் பற்றியும், அவனுக்கும் அரசனுக்கும் இடையேயான அரசியலையும் மீறிய நட்பைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த காவலர்கள் அவனது உத்தரவை ஆமோதிப்பதைப் போல் மீண்டும் தலை வணங்கியவர்கள் மகிழ்வதனியை திரும்பிப் பார்க்க,

மேற்கு திசையில் நன்றாகவே புதையுண்டு மறைந்து போயிருந்த கதிரவன் வானத்தில் சிறிதே தனது செந்நிறத்தை மிச்சமீதியாய் பரவவிட்டுச் சென்றிருக்க, இருள் மெல்ல கவிழத் துவங்கியிருந்த அந்தி நேரத்தில் நகரம் முழுவதிலும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த தீவர்த்திகளின் ஒளியில் தேவதைகளையும் தோற்கடித்துவிடும் எழிலுடன் நின்றிருந்த காரிகையைக் கண்டவர்கள் தங்களையும் அறியாது ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சித்திரைத் திங்களின் முழுமதியைப் போன்ற பேரெழில் மிகும் வதனமும், பொன்னை உருக்கி அளவோடு வடிவமைத்தது போன்று பேரின்பம் அளிக்கும் கவர்ச்சிகரமான உருவ வடிவமும், கண்முன் விரிந்துக் கிடக்கும் இளமங்கையின் வனப்பும் மேலெழுந்து கீழிறங்கியிருக்கும் அவளது அங்க லாவண்யங்களும் காவலர்களின் இதயங்களை ஒட்டுமொத்தமாக வீழித்திவிட,

மையலூட்டும் மதுரவிழிகளுக்குள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் கருமணிகளைச் சாவதானமாக அனைவரின் மீதும் ஒரு முறை சுழலவிடச் செய்தவள், உள்ளர்த்தங்கள் பல பொதிந்திருக்கும் நகைப்புடனும், தீர்க்கமான சிந்தனையில் உழன்று கொண்டிருக்கும் புத்தியின் வெளிப்பாட்டை அழகிய முகத்தில் வடியும் தீட்சண்யத்துடனும் அழகுவேலைத் தொடர்ந்து சென்றாள்.

அவளின் வேகத்திற்கு ஏற்ப தனது புரவியை நிதானமாகச் செலுத்திக் கொண்டிருந்த அழகுவேல், அவ்வப்பொழுது மகிழ்வதனியைத் திரும்பிப் பார்ப்பதும், அவளின் அழகிய பூவுடலை மனதிற்குள்ளாகவே இரசித்தவாறே ஏக்கப் பெருமூச்சுவிடுவதாகவும் சென்று கொண்டிருக்க, ஏறக்குறைய அரை நாழிகை நேரம் பயணித்தவர்கள் அவ்வீதியின் ஒரு வளைவில் தென்கிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்த இரு தளங்கள் கொண்ட அவ்வீட்டை அடைந்தனர்.

ஒரு முறை உப்பரிகையை நோக்கி வீட்டின் மேல் தளத்தை நிமிர்ந்துப் பார்த்த அழகுவேல் புரவியை நிறுத்தியவன் சரட்டென்று குதித்துக் கீழே இறங்க, அதற்குள் அவ்வீட்டை அடைந்திருந்த மகிழ்வதனியும் சில அடிகள் உயரத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டின் கீழ் படிகளில் நின்றவள் அங்குலம் அங்குலமாக அவ்வீதியையும், வீட்டினையும் அளவெடுத்தாள், தனது ஆழ்ந்த பார்வையில்.

ஏனோ தீவிரமாகக் கணக்கிட்டுக் கொண்டிருப்பவள் போல் அவளது சிந்தனைகளுக்கேற்ப, அவளது கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் துணி மூட்டையும் கசங்கி சுருங்கிக் கொண்டிருந்தது.

மகிழ்வதனியின் மீதே பார்வையைச் செலுத்தியிருந்த அழகுவேல் அவளின் அலைப்பாய்ந்து கொண்டிருக்கும் விழிகளைக் கண்டவன், அது அறிந்திராத ஒரு நகரத்தினுள் முதன் முறையாக நுழையும் இளம்பெண்ணின் அச்சம் நிறைந்த பார்வையே என்று தவறாகப் புரிந்து கொண்டான்.

'உன்னைப் பார்த்துக் கொள்வது தானே இனி எனது தலையாயக் கடமை பெண்ணே, பிறகு ஏன் இந்த அச்சம்?' என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவனாக மெல்லிய புன்முறுவலுடன் படிகளில் ஏறியவன் இல்லத்தின் கதவை தட்ட, ஒரு சில மணித்துளிகள் நிதானித்துத் திறக்கப்பட்ட கதவையும், கதவிற்கு அருகில் ஏறக்குறைய முழு உடலும் மறைந்தவாக்கில் தலையை மட்டும் சிறிதே வெளியே நீட்டியவாறே நின்றிருக்கும் இளம்பெண்ணையும் கண்டவனின் இதழ்கள் வேட்கையுடன் விரிந்தன.

திடுமென அந்நேரத்தில் சேனாதிபதியை கண்ட அப்பெண் அதிர்ந்து அரண்டுப் போனவள், கதவிற்குப் பின்னர் மேலும் தன்னை மறைத்துக் கொண்டவளாக,

"மான்புமிகு சேனாதிபதியார் இந்த ஏழையின் வீட்டைத் தேடி வந்திருக்கின்றீர்களே.. எனது தந்தை வெளியூருக்குச் சென்றிருப்பதும், நாளை காலை தான் திரும்புவார் என்பதும் உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கின்றேன்.." என்றாள், மேனி வெளியே தெரியாவிட்டாலும் வெளிப்போந்து கொண்டிருக்கும் பெண்ணவளின் வதனத்தைத் துளைத்தெடுக்கும் பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்கும் அழகுவேலை, அந்நிமிடமே கொன்றுவிடும் நோக்கில் ஏகத்துக்கும் வெறுத்து.

ஆங்கிங்கு காரைப் படிந்திருக்கும் பற்களையும், போரில் அல்லாது மது போதையின் விளைவாக ஏற்பட்ட வம்புச் சண்டை ஒன்றில் முகத்தில் பட்ட அடியினால் முன் பற்களில் இரண்டை இழந்து, அருவருக்கும் தோரணையுடன் தனது முரட்டு உதடுகளை அளவுக்கதிகமாகவே விரித்துச் சிரித்த அழகுவேல் அவ்விளம்பெண்ணின் முகத்தை நோக்கி வெகுவாகக் குனிந்தவன்,

"நான் சந்திக்க வந்திருப்பது உனது தந்தையை என்று யார் சொன்னது திலகா?" என்றான் கரகரத்த குரலில்.

தன்னை நோக்கி அளவுக்கதிகமாகவே குனிந்தவனைக் கண்டு திடுக்கிட்ட திலகவதி விசுக்கென்று தனது தலையைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டவள்,

"பின் யாரை சந்திக்க இந்த அந்தி நேரத்தில் வந்திருக்கின்றீர்கள்? யார் வேண்டும் உங்களுக்கு?" என்றாள் படபடக்கும் உள்ளத்துடன், அவனின் காமம் வழியும் பார்வையிலேயே தனது வினாவிற்கு விடையும் இருப்பதையும், இருந்தும் முட்டாள்தனமாக அவனிடம் இப்படி ஒரு கேள்வி தொடுத்ததையும் சடுதியில் உணர்ந்து எரிச்சலுடன்.

"நீ தான் வேண்டும் என்று கூறினால் உன்னை எனக்கு உடனடியாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிடுவாரோ உன் தந்தை? இல்லை நீ தான் உடனே என்னுடன் வந்துவிடப் போகிறாயா திலகா?"

திலகவதி எதிர்பார்த்தது போலவே முகமுழுவதிலும் வேட்கையின் சாயலிலும், தாபம் வழியும் சாரீரத்திலும் அசிங்கமான வார்த்தைகளை உதிர்த்தான், சேனாதிபதி என்ற போர்வைக்குப் பின் மறைந்திருக்கும் அந்தக் காமுகன்.

அவனது பதிலில் வெகுண்டெழுந்து வெடுக்கென்று கதவை மூடப்போன திலகவதியின் செய்கையைத் தடை செய்தது, கதவிற்கு இடையில் சட்டென நீண்டு கதவு மூடப்படுவதைத் தடுத்த அழகுவேலின் தடித்த கால்.

"இப்பொழுது நான் என்ன கூறிவிட்டேன் என்று இவ்வாறு கோபப்படுகிறாய் திலகா? இன்னும் சொல்லப்போனால் என்னைக் கண்டு இவ்வேணி மாநகரமே நடுங்குகிறது, உன்னைத் தவிர.. ஆனால் உன்னுடைய கோபமும், கோபத்தினால் செந்நிறமாய் மாறத் துவங்கும் உனது முகமும், குயில் போன்ற மெல்லிய குரலில் தோன்றும் கடுமையும், முகத்தில் அறைந்தார் போன்று வெடுக்கென்று கதவை மூடும் உனது மெல்லிய கரங்களின் பின் மறைந்திருக்கும் திடமும், எனக்கு மிகவும் பிடிக்கத்தான் செய்கிறது திலகா.."

மேற்கொண்டு இளித்துக் கொண்டே பேசியவன் தனது வலது கரத்தை இடுப்பில் சொருகியிருந்த வாளின் மீது பதித்தவாறே, மறுகரத்தால் கதவை தள்ளியவன் ஒரே நொடியில் திலகவதியின் போராட்டங்கள் அனைத்தையும் முறியடித்து வீட்டினுள் நுழைந்தான், அதிரடியாக.

இவை அனைத்தையும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உள்ளத்துடனும், கொதித்துப் புழுங்கிக் கொண்டிருக்கும் இதயத்துடனும், ஆனால் முகத்தில் எந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது அமைதியாக நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகிழ்வதனியைத் திரும்பிப் பார்த்தவன் 'வா' என்பது போல் தனது இடது கையை அசைத்துச் சைகை செய்ய, அவனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவள், வீட்டினுள் அரண்டு அதிர்ந்துப் போய் நின்றிருக்கும் திலகவதியைக் கண்டு நட்பான இளநகையைச் சிந்தினாள்.

அந்நேரத்தில் அழகுவேலையே எதிர்பார்த்திராத திலகவதி, அவனைத் தொடர்ந்து இளம்பெண் ஒருத்தி வரவும், அதிலும் பேரழகிலும் பேரழகியாக நின்றிருக்கும் அவளின் தோற்றத்தைக் கண்டு பிரம்மையின் எல்லையைக் கடந்தவள் இப்பேற்பட்ட கொடியவன், காமுகனுடன் ஒரு பெண், அதுவும் இளம் வயதுடையவள் இந்நேரத்தில் வருகின்றாள் என்றால், அவள் எத்தகைய கண்ணியம் கெட்டவளாக இருக்க வேண்டும் என்ற எரிச்சலில் மகிழ்வதனியின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பாதது போல், மீண்டும் அழகுவேலின் புறம் தன் பார்வையைத் திருப்பினாள்.

"திலகா.. இவள் பெயர் வஞ்சிக்கொடி.. வெளியூரில் இருந்து நம் அரசரைக் காண வந்திருக்கின்றாள்.. இன்று இரவு இவள் உனது இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்.. நாளை காலை இவளை அரண்மனைக்கு அழைத்து வா.. உன்னைக் காணும் ஆவலுடன் நானும் காத்திருப்பேன்..." என்றான் மீண்டும் காரைப் படிந்த பற்கள் அனைத்தும் தெரியுமளவிற்குச் சிரித்துக் கொண்டே.

"ஏன், இந்தக் கோட்டை முழுவதுமே சேனாதிபதியாருக்கு சொந்தமானது போல் தானே, அங்கனம் இருக்க, சேனாதிபதியாருக்கு இந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதற்கு இடமா இல்லை? இல்லை, உங்களது மாளிகைக்கு இதுவரை நீங்கள் பெண்களை அழைத்துச் சென்றதே இல்லையா, இன்று மட்டும் என்ன வந்தது?"

அழகுவேலின் மீதே தன் பார்வையை வீசியிருந்த திலகவதி, அசூசை நிறைந்த பார்வை ஒன்றை ஒரு முறை மகிழ்வதனியின் மீது செலுத்தியவள் மீண்டும் அழகுவேலை நோக்கித் திரும்ப, சேனாதிபதியாரின் லட்சணம் இந்தக் கோட்டை முழுவதுமே பிரபலம் போலும் என்று நினைத்துக் கொண்ட மகிழ்வதனி சிறிதும் முகத்தைச் சுருக்காது திலகவதியின் மீது பார்வையைப் பதித்தவாறே நின்றிருந்தாள்.

மகிழ்வதனியின் முன் தன்னை அவமானப்படுத்தும் ஒரே நோக்கில் பேசும் திலகவதியை எரித்துவிடுவது போல் ஒரு முறை புருவங்களுக்கு இடையில் முடிச்சிடப் பார்த்த அழகுவேல் மறு கணமே தனது தோரணையை மாற்றியவன் மேலும் திலகவதியை நெருங்க, விருட்டென்று தானும் பின்னோக்கி இரண்டடிகள் எடுத்து வைத்து நகர்ந்தவளைக் கண்டு,

"எனது மாளிகைக்கு வஞ்சிக்கொடியை அழைத்துச் செல்வது நடக்கவியலாத காரியம் அல்ல திலகா, ஆயினும் உன் வீட்டில் இன்று இவளை தங்க வைக்க வேண்டும் என்பது தான் நம் அரசரின் உத்தரவு.." என்றான் வெகுவாக அடக்கப்பட்டிருக்கும் சீற்றத்துடன்.

"அரசரின் உத்தரவை சாதாரணப் பிரஜையான என்னால் மீற இயலுமா? ஆனால் நான் எதற்கு அரண்மனைக்கு இவர்களை அழைத்து வரவேண்டும்? நாளை என் தந்தை அரண்மனைக்கு வரும் பொழுது அவருடன் இவர்களை அனுப்பி வைக்கின்றேன்.."

"இல்லையில்லை.. நீ தான் இவளை அழைத்து வரவேண்டும்.. உனக்கு அரண்மனைக்கு வழி தெரியாதா என்ன? ஒரு வேளை உனக்கு வழி தெரியாதென்றால் நானே இங்கு வந்து இவளை அழைத்துச் செல்கிறேன்.. ஆனால் நீயும் இவளுடன் வரவேண்டும்.. அதுவும் அரசரின் உத்தரவு.."

வேணி மாநகரத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கும் பெண்ணிற்கு, அதுவும் அவளது தந்தை பண்டகசாலை மேலாளராகப் பணி செய்யும் அரண்மனைக்கு வழி தெரியாதா என்ன?

ஆனால் இது நிச்சயம் அரசரின் கட்டளையாக இருக்காது.. இந்தக் கயவனின் கேடு கெட்ட விருப்பமாகத் தான் இருக்கும்.. இல்லையேல் இவனே இவளை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறும் பொழுது துணையாக நான் எதற்கு?

பொய்யுரைத்தவனின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாவிடினும், ஒரு வேளை தான் இவளை அழைத்துச் செல்லாவிட்டால் இவன் மீண்டும் தன்னைத் தேடி வரக்கூடும் என்று மனதிற்குள் கலங்கிப் போனவளாக,

"இல்லையில்லை.. நானே இவர்களை அழைத்து வருகின்றேன்.." என்று கூறினாள் நாசி விடைக்க, கோபத்தில் உதடுகள் படபடக்க.

சரி என்பது போல் தலையசைத்த அழகுவேல் மகிழ்வதனியை நோக்கி உள்ளே செல் என்பது போல் கையை நீட்டி வழிக்காட்டியவன், "நாளை சந்திப்போம்.." என்ற அடுத்த விநாடியே விடுவிடுவென்று படிகளில் இறங்கியவன் புரவியில் ஏறிய மறு கணமே மறைந்தும் போனான்.

*********************************************


யார் இவன்? எனக்கு எதற்காக உதவ வேண்டும்? அதிலும் அரசரின் பார்வை என்மீது படிந்திருந்தது வெகு சில விநாடிகளே, அதற்குள் என்னை அரண்மனைக்கு அழைத்து வர சொல்லும் அளவிற்கு என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் அரசர்?

யோசனையுடன் அழகுவேல் சென்ற பாதையையே கூர்ந்து பார்த்திருந்த மகிழ்வதனியை திலகவதியின் குரல் திசை திருப்பியது.

"நீங்கள் அவருக்கு உறவோ?"

"எவருக்கு?"

ஒன்றும் புரியாதது போல் பதிலளிக்கும் மகிழ்வதனியை மேலும் நெருங்கிய திலகவதி, "இப்பொழுது சென்றாரே, சேனாதிபதி அழகுவேல்.. அவருக்கு.." என்றாள் புருவங்களின் நடுவில் முடிச்சிட குழப்பமும், சஞ்சலமும், அதே சமயமும் இகழ்ச்சியும் சூழ்ந்த முகத்துடன்.

"இல்லை.."

"அப்பொழுது அரசருக்கு உறவோ?"

"இல்லை, அரசர் விக்கிரம்ம சிம்மருக்கும் நான் உறவினள் அல்ல, அரசரின் மனதிற்கு உகந்த அவரது சேனாதிபதி அழகுவேலுக்கும் நான் உறவினள் அல்ல?"

"உங்களுக்கு முன்பின் தெரியாத எங்களது வீட்டில் நீங்கள் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றார்கள் என்றால், உங்களுக்கு உறவினர் என்று இவ்வூரில் ஒருவரும் இல்லை என்பது புரிகின்றது.. அப்படி என்றால் எதற்கு இந்தத் திடீர் விஜயம்? தன்னந்தனியாக, அதுவும் இந்நேரத்தில்?"

திலகவதியின் ஒவ்வொரு கேள்வியும், அதற்கேற்றார் போல் அவளின் வதனத்தில் தோன்றி மறையும் உணர்ச்சிகளும், தனது பதிலிற்கு அவளின் இதழ்களில் படர்ந்த இகழ்ச்சியும், அரசரின் மீதும் சேனாதிபதியின் மேலும் அவளுக்கு இருந்த வெறுப்பைத் தெள்ளென மகிழ்வதனிக்கு விளங்கச் செய்து கொண்டிருந்தது.

தனக்கு வெகு அருகில் நிற்பவளின் தோளின் மீது மென்மையாகக் கரம் பதித்த மகிழ்வதனி,

"திலகா.. அப்படித்தானே சேனாதிபதியார் உங்களை அழைத்தார்... உங்களுக்கு மறுப்பில்லை என்றால் நானும் அப்படியே உங்களை அழைக்கிறேன்.. நீங்கள் நினைப்பது போல் எனக்கு உங்கள் அரசரையும் தெரியாது, சேனாதிபதியையும் தெரியாது.. நான் அசலூரில் இருந்து பிழைப்பைத் தேடி இங்கு வந்தேன்.. கோட்டையின் மதில்சுவரின் அருகில் உங்கள் அரசர் என்னைக் கண்டார்.. அவர் தான் என்னை அழைத்து வர சேனாதிபதிக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.. ஏற்கனவே இரவு ஏறிவிட்டதாலும், போரில் இருந்து இப்பொழுது தான் அவர் திரும்பியிருந்ததாலும் என்னை நாளை சந்திக்கப் போவதாகக் கூறியிருப்பார்.. ஆகையால் தான் என்னை இங்கு உங்கள் இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு சேனாதிபதி சென்றிருக்கிறார்.. இதில் இருந்தே தெரிகின்றது, அரசரின் நம்பிக்கைக்குப் பார்த்திரமானவர் உங்களது தந்தை என்று, இல்லையெனில் இந்த நகரில் என்னைத் தங்கச் செய்வதற்கு வேறு இடமா இல்லை? ஆனால் நான் இங்குத் தங்குவதில் உங்களுக்குப் பிடித்தம் இல்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.. கவலைக் கொள்ள வேண்டாம்.. நான் எங்காவது சத்திரம் சாவடி இருந்தால் அங்குத் தங்கிக் கொள்கிறேன்.. என்னால் உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம்.." என்றவாறே வாயிலை நோக்கி நடந்தவளை சட்டென்று தடை செய்தது திலகவதியின் குரல்.

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.."

மெல்ல திரும்பிப் பார்த்த மகிழ்வதனியின் அருகில் நெருங்கிய திலகவதி, அவளின் தாடையைப் பற்றியவளாக, "உங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளாது தவறாக எண்ணியதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன்.." என்றாள் தனது விழிகளை யாசிக்கும் வகையில் சுருக்கியவாறே.

"இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு திலகா? திடுமென ஒரு ஆடவனுடன், அவர் சேனாதிபதியாகவே இருந்தாலும் இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத வீட்டிற்கு வரும் பெண்களைத் தவறாக எண்ணுவதில் பெருந்தவறு ஒன்றுமில்லையே..."

"இருந்தும் உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாது நான் பேசியிருக்கக் கூடாது.. நீங்கள் இங்குத் தங்குவதில் எனக்கு எந்த வித தொல்லையும் இல்லை.. எனது தந்தை வெளியூருக்குச் சென்றிருக்கிறார்.. அன்னை மட்டும் தான் இருக்கின்றார், அவரை அழைத்து வருகின்றேன்.. அதுவரை நீங்கள் இவ்விருக்கையில் அமர்ந்திருங்கள்.."

வீட்டின் முன்னறையில் போடப்பட்டிருக்கும் இருக்கையில் மகிழ்வதனியை அமரச் செய்தவள் வீட்டிற்குள் நுழைய, மணித்துளிகள் சில கடந்தும் அரவமற்று இருக்கும் இல்லத்திற்குள் அமைதியாக அமர்ந்திருந்த மகிழ்வதனியின் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகளும், சந்தேகங்களும், குழப்பங்களும் தோன்றியவண்ணமே இருந்தன.

திலகவதி திரும்பி வரும்வரை வீட்டின் அமைப்பையும், அங்கு அழகுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலங்கார கலை பொருட்களையும் விழிகளால் அளந்து கொண்டிருந்த மகிழ்வதனி சிறிது நேரத்தில் தன்னருகே கேட்ட குரலில் சட்டென எழுந்தவளின் தோள் பற்றியது, பாசமே உருவான முகத்துடன் அமைதியின் சுயரூபமாக நின்றிருந்த திலகவதியின் அன்னை வடிவம்மையின் முகம்.

"நான் தான் திலகாவின் அன்னை.. உள்ளே வாம்மா.."

ஏற்கனவே மகளின் மூலம் மகிழ்வதனியைப் பற்றி அறிந்திருந்தவர், தன் மகளை ஒத்த வயதில் தன்னந்தனியே இவ்வாறு பிழைப்புத் தேடி இந்நகரத்தில் அகால வேளையில் வந்திருப்பவளைக் கண்டு பரிதாப்பட்டவர், அவளிடம் வேறு ஒன்றும் கேளாது இரவு உணவிற்கு ஏற்பாடுகள் செய்ய, முதலில் மறுத்த மகிழ்வதனி வடிவம்மையின் பாசத்தில் கரைந்து உருகியவளாக மகிழ்வுடன் இராவுணவை உண்டு முடித்தாள்.

மகளின் அறையினிலேயே மகிழ்வதனி உறங்குவதற்கும் ஏற்பாடுகளை வடிவம்மை செய்ய, மகிழ்வதனி எத்தனையோ மறுத்தும் தனதருகே பஞ்சணையில் அவளைப் படுக்க வைத்துக் கொண்டாள் திலகவதி.

கணங்கள் சில கடந்தும் அசையாது, வார்த்தைகள் ஒன்றையும் உதிர்க்காது வீட்டின் கூரையின் மீதே பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த மகிழ்வதனியின் நீண்டு நீடித்த அமைதி திலகவதியின் மௌனத்தைக் கலைக்க, தன்னருகே படுத்திருந்தவளை திரும்பிப் பார்த்தவள், இளம் கீற்று நகையுடன் கூறினாள்.

"வஞ்சிக்கொடி.. எத்தனை அழகான பெயர்.. பெயருக்கேற்றது போன்று கொடியைப் போன்று தான் இருக்கின்றீர்கள்?"

"உங்கள் சேனாதிபதியும் இவ்வாறு தான் கூறினார்.."

திலகவதியின் முகத்தைத் திரும்பியும் பாராது வீட்டின் விட்டத்தின் மீது படிந்திருந்த பார்வையையும் அகற்றாது கூறிய மகிழ்வதனியை விசித்திரமாகப் பார்த்திருந்த திலகவதி,

"கூறியிருப்பார், அதை மட்டுமா கூறியிருப்பார்? இன்னும் என்னென்னவோ கூறியிருப்பார், ஆனால் அரசரின் கட்டளையினால் தனது நீண்ட நாக்கை வெகு சிரமப்பட்டுச் சுருட்டிக் கொண்டிருப்பார்." என்றாள் ஏளனத்தை அதிகமாகச் சுமந்த தொனியில்.

அவளின் கிண்டலில் சட்டெனத் திலகவதியின் புறம் திரும்பிய மகிழ்வதனி,

"எனக்குக் குழப்பமாக இருக்கின்றது திலகா.." என்றாள்.

"ஏன்?"

"தெரியவில்லை.. நான் இந்தக் கோட்டைக்குள் நுழைந்து ஒரு இரவு கூட முடியவில்லை, ஆயினும் என் மனம் முழுவதும் கேள்விகள் நிறைந்துள்ளன.. சேனாதிபதியின் பார்வையும் போக்கும் ஓரளவிற்கு அவரின் இயற்கை குணத்தை எனக்குப் பறைசாற்றியிருந்தாலும், அதற்குள் அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு நான் வரக் கூடாது.. ஏனெனில் பிழைப்புத் தேடி வந்திருப்பவள் நான்.."

"புரிகின்றது, விரைவில் அவரைப் பற்றி நன்றாகவே தெரிந்துக் கொள்வீர்கள், ஏனெனில் எங்கள் சேனாதிபதியின் சகல திறமைகளையும், அதாவது அவர் பெண்களிடம் வெளிப்படுத்தும் அனைத்து திறன்களையும் பற்றித் தான் ஊருக்கே தெரியுமே.." என்றாள், அந்நிமிடம் மட்டும் தனக்கு அதிகாரமும் சக்தியும் இருந்தால் அழகுவேலை வெட்டி வீழ்த்திவிடும் எரிப்பார்வையுடன்.

"அவர் அவ்வளவு மோசமானவர் என்றால் ஏன் உங்கள் அரசர் அவருக்குத் தண்டனை அளிக்காது உலாவ விட்டுருக்கின்றார்?"

மகிழ்வதனியின் கேள்வியில் ஏளனமும், வேதனையும் சுமந்த நகையைச் சிந்தியவாறே அவளின் ஆராயும் பார்வையுடன் தன் வேதனை கலந்த விழிகளைக் கலக்கவிட்ட திலகவதி,
"நீசபங்க இராஜயோகம் வஞ்சிக்கொடி?" என்றாள் சோகம் வழியும் குரலில்.

"கொஞ்சம் புரியுமாறு தான் கூறுங்களேன் திலகா.."

"வாழ்வில் ஒளி இழந்து கீழ்நிலையில் இருக்கும் ஒருவன் இழந்த ஒளியை வேறுவிதமாகப் பெரும் பொழுதோ, மீண்டும் தன் சுய வலுவை அடையும் பொழுதோ நீசபங்கம் என்று கூறுகின்றனர்... அதே போன்று தான் இழந்த ஒளியை விட அதிகமான சுப ஒளியை அவன் பெரும் பொழுதோ அல்லது இராஜயோகத்தைத் தரக்கூடிய அளவிற்கு அதி உச்ச நிலையை அடையும் பொழுதோ, நீசபங்கஈராஜயோகம் அடைகிறான் என்றும் கூறுகின்றனர்.. அவ்வாறு இராஜயோகத்தைப் பெறுவதற்கு உச்சத்தில் இருக்கும் ஒருவனின் இணைவு தேவைப்படுகின்றது.."

"சரி, அதற்கும் சேனாதிபதிக்கும் என்ன சம்பந்தம்?

"கூறுகிறேன் கேள். ஒருக்காலத்தில் அப்பேற்பட்ட ஒரு இழி நிலையில் இப்பொழுது சேனாதிபதியாக இருக்கும் இந்த அழகுவேல் இருந்ததாகவும், உச்சத்தில் இருக்கும் நீசனாகிய அரசர் விக்கிரம்ம சிம்மரின் நட்பு எதிர்பாராதவிதமாக இவனுக்குக் கிடைத்ததால் ராஜயோகம் இவனுக்கு அடித்ததாகவும், அரண்மனையில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் தெரிவித்ததாக என் தந்தை ஒரு முறைக் கூறியிருக்கின்றார்.. அதே போன்று இனம் இனத்துடன் தான் சேரும் என்பது போல், அழகுவேலையே மிஞ்சிவிடும் தீயக் குணங்களும், கீழ்தரமான பழக்க வழக்கங்களும், கொடும் மோசமான பெண்பித்தும் எங்கள் அரசருக்கும் இருப்பதாலேயே, அழகுவேல் செய்யும் அனைத்து தவறுகளையும் கண்டு கொள்ளாது விட்டிருக்கிறார் விக்கிரம்ம சிம்மர்.." என்று முடித்தாள்.

"அவ்வளவு மோசமானவரா உங்களது அரசர்?"

"ஆம்.. அவரது விழிகளில் சிக்கிய பெண்கள் எவ்வாறு சீரழிந்திருக்கின்றார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.. இன்று அவரது பார்வையில் நீங்கள் விழுந்திருக்கின்றீர்கள்.. இன்று இரவு மட்டுமே அவர் உங்களை இங்குத் தங்குவதற்கு அனுமதித்து இருப்பார்... ஒரு வேளை நாளை நான் உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால், நாளை விடிந்தும் விடியாததுமாகவே அரசரது தூதுவனோ அல்லது இந்த அழகுவேலோ எங்கள் இல்லக் கதவை தட்டுவர்.. உங்களை இனி அவர்களின் பார்வையில் இருந்து விலகி செல்ல விடமாட்டார்கள்.. இப்பொழுது அதனை நினைத்தால் தான் எனக்கு மிகவும் கலக்கமாக இருக்கின்றது.. என்ன செய்யப் போகிறீர்கள் வஞ்சிக்கொடி? பிழைப்புத் தேடி இவ்வாறு தனியாக வரும் பெண், தான் செல்லும் ஊரைப் பற்றித் தெளிவாக விசாரிக்காது வருவார்களா? எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பதாக உத்தேசம்?"

வாழ்நாளில் முதன் முறையாக இன்று தான் சந்தித்திருக்கும் ஒரு பெண்ணிடம், திலகவதிக் காட்டிக் கொண்டிருக்கும் பாசத்தில் தானும் உருகியவளாக, தனது கரத்தைப் பற்றியிருப்பவளின் கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிறு உதறலை உணர்ந்தவாறே, அவளை நோக்கித் திரும்பிப் படுத்த மகிழ்வதனி, அவளது கையை இறுக்கப் பற்றிக் கொண்டு,

"திலகா.. என்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாதீர்கள்.. எத்தகைய கொடியவர்களாக இருந்தாலும் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய இயலாது.. என்னால் என்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்.." என்று அவள் முடிக்கவில்லை..

"நானும் நீங்களும் ஏறக்குறைய ஒரு வயதுடையவர்கள் தான் என்று நினைக்கின்றேன்.. ஆகையால் என்னைப் பன்மையில் அழைக்க வேண்டாம் வஞ்சிக்கொடி.." என்று முடித்தாள் திலகவதி.

இளங்கீற்றுப் போன்று முறுவலை தன் அழகிய செவ்வதரங்களில் கொணர்ந்த மகிழ்வதனி,

"நீயும் அப்படியே என்னை அழைக்க வேண்டும் திலகா.. சரி, இப்பொழுது விஷயத்திற்கு வருகின்றேன்.. நாளை நீ என்னுடன் அரண்மனைக்கு வர வேண்டாம்.. நாம் இருவருமே செல்லவில்லை என்றால் நீ கூறுவது போல் சேனாதிபதியின் தூதுவன் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்ல வருவான்.. எனது புத்திக்கு உரைத்தவரை சேனாதிபதி நிச்சயம் என்னை அழைத்துப் போக வரமாட்டார்.. ஏனெனில் உனது அஞ்சிய முகத்தை வைத்தே நீ எப்படியும் என்னுடன் வந்துவிடுவாய் என்று அவர் தவறாக ஊகித்து இருப்பார்.. ஆகையால் தூதுவனுடன் நான் மட்டுமே அரண்மனைக்குச் செல்கிறேன்.. ஏனெனில் அவர் உன்னிடம் பேசிய விதத்தில் அளவுக்கு மீறிய குழைதலே தெரிந்தது.. அவரின் பார்வையிலும் அத்தனை விரசமே வழிந்தது.. ஆகையால் என்னால் உனக்குச் சிரமம் வேண்டாம்.." என்றாள், தணிந்த குரலில் கனிவான தோரணையுடன்.

"இல்லை வஞ்சிக்கொடி.. அது சரியல்ல.. உன்னைத் தனித்து அவர்களிடம் செல்ல அனுமதிப்பதைப் போன்ற ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் கிடையாது.. எனது அன்னையும் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.. நாம் இருவருமே செல்வோம்.. ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் அவர்களால் அத்தனை எளிதாக நமக்குக் கேடு விளைவிக்க இயலாது.."

திலகவதியின் கூற்றில் ஆழந்த பெருமூச்சை வெளியேற்றிய மகிழ்வதனி 'சரி' என்பது போல் தலையசைத்தவள் அவளை உறங்கச் சொல்ல, கணங்கள் பல கடந்தும் பல் வேறு சிந்தனைகளினால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததினால், பெண்கள் இருவருக்குமே நித்திரை என்பது அன்றைய இரவு அடைய முடியாத சொப்பனமாகவே போனது.

இலவம் பஞ்சடைத்த இன்ப பஞ்சணையும், முற்புறங்களில் கிடந்த அணைகளும், தலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கும் தலை அணைகளும் அளவுக்கதிகமாகவே மென்மையாக இருந்ததில், வாழ்க்கையில் முதன் முறை இப்பேற்பட்ட சுகத்தைப் பேதையவளின் மலர் மேனி உணர்ந்து கொண்டிருந்தாலும், அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த அலங்கார தீபத்தின் மிதமான ஒளியும் மிகுதியான இன்பத்தை அளிக்கும் வண்ணமாகத் தோன்றினாலும்,

அத்தனை இன்பத்தையும் அனுபவிக்க முடியாத அளவிற்கு மகிழ்வதனியின் இதயத்தைப் பெரும் வேதனை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

கானகத்தினுள் காலடி எடுத்து வைத்ததில் இருந்து மதில்சுவரில் மூத்த காவலர் தன்னைப் பாதுகாக்க நினைத்து அறிவுரைக் கூறியது.... விக்கிரம்ம சிம்மனின் பார்வையில் விழுந்த விநாடியே அவனது விழிகளில் தோன்றி மறைந்த உணர்வுகள் கூறிய அர்த்தங்கள்.... மாபெரும் போரில் வெற்றி பெற்று தனது ராஜ்யத்திற்குத் திரும்பும் வேளையில் கூடப் பெண்ணிச்சையில் மதிமயங்கியிருக்கும் அரசன் தனது சேனாதிபதியிடம் இரகசியம் பேசியது... பின் திலகவதியின் வீட்டிற்குச் சேனாதிபதியால் அழைத்து வரப்பட்டது...

இதோ சில கனங்களுக்கு முன் தனக்கும் திலகவதிக்கும் இடையில் எழுந்த விவாதங்கள் என்று, ஏறக்குறைய இரண்டு முகூர்த்தங்களுக்குள் நடந்தேறியிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த மகிழ்வதனியின் புத்தி சடாரென்று ஒன்றில் நிலைத்து நின்றது.

'கீழ்நிலையில் இருந்த ஒருவன் உச்சஸ்தானத்தில் இருக்கும் நீசனுடன் இணைந்ததாலே நீசபங்க இராஜயோகம் பெற்றான் என்று அழகுவேலைப் பற்றி முதியவர் ஒருவர் அரண்மனையில் கூறியிருக்கின்றார் என்றால், யார் அந்த முதியவர்? எங்கு இருக்கின்றார்? அவரை எங்கனம் சந்திப்பது? எத்தனை விரைவாக அம்முதியவரை சந்திக்க இயலுமோ அத்தனை விரைவில் அவரைக் காண வேண்டும்..'

உள்ளூர பேசிக் கொண்டவளாகக் கண்களை மூட, ஆழ்கடலில் மூச்சடைக்க ஸ்வாசத்திற்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சிறு மரத்துண்டானது கரங்களில் அகப்பட்டது போல் உணர்ந்தவள், நெடு மூச்சுவிட்டவளாக விழிகளை மூட, மேனியில் களைப்போ உள்ளத்தின் தவிப்போ எதனையும் நிவர்த்திக்கும் அசதியானது மகிழ்வதனியையும் ஆட்கொண்டது.


************************************************
மகிழ்வதனி கண்விழித்த பொழுது, பொழுது புலரத் துவங்கியிருப்பதைப் பறைசாற்றுவது போல், சூரியனின் இளம் கிரணங்கள் தனது செந்நிறக் கரங்களை நீட்டி இலேசாக ஒளி வீச ஆரம்பித்திருந்ததில், கீழ்திசையில் கருமையைச் சுமந்திருக்கும் இருள் குறைந்து கொண்டிருந்தது.

மெள்ள இமைகளைத் தட்டி திறந்தவள் தன்னருகே இன்னமும் சிறு குழந்தையென முழங்கால்களை ஏறக்குறைய மார்பிற்கருகில் வைத்தவாறே உடலை குறுக்காக வளைத்து ஒருக்கணித்து, கையை மடித்துக் கன்னத்தில் ஊன்றிக் கொண்டு படுத்திருக்கும் திலகவதியைக் கண்டு புன்னகைத்தவாறே எழுந்தவள், அறையின் கிழக்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்த பலகனிக்கு வர, அங்கிருந்து பார்த்தால், முதல் நாள் மாலை விக்கிரம்ம சிம்மனின் ஊர்வலம் நடந்த, வேணி மாநகரத்தின் பிராதான வீதித் துல்லியமாகத் தெரிந்தது.

பலகனியின் இரண்டு முனைகளிலும் விட்டத்தைத் தாங்குவதற்கென்று மரத்திலான பெருந்தூண்கள் அமைக்கப்பட்டிருக்க, தூணின் மீது சாய்ந்தவாறே விழிகளுக்கு எட்டும் தூரம் வரையிலும் தெரியும் வேணி மாநாகரத்தின் வீதிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தை, தோப்பு மரங்களை மூழ்கடித்திருந்த மலர்களின் நறுமனத்தைத் தாங்கி வந்ததால் சில்லென்று வீசிய தென்றலானது தழுவ, ஏதோ புது உணர்வு ஒன்றை தருவிப்பது போல் தன்னைத் தழுவிச் சென்ற காற்றின் திசை நோக்கித் திரும்பினாள் மகிழ்வதனி..

அங்குத் தன்னையே பார்த்தவாறே வீதியில் நின்றிருந்த மூத்த காவலர் முத்தையாவைக் கண்டவள் புருவங்கள் முடிச்சிட தீவிர யோசனையில் ஆழ, அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்ததும் பெருமூச்சுவிட்டவர் வீதியை கடந்து மறுபுறம் செல்ல, குழப்பத்திலும் சிந்தனைகளிலும் ஆழ்ந்தவளின் எண்ணங்களைத் திசை திருப்பியது வெகு அருகில் கேட்ட திலகவதியின் குரல்.

"எங்கள் வீட்டுத் தோப்பில் பலவித மலர்கள் இருக்கின்றன வஞ்சிக்கொடி.. அவற்றில் இருந்து பலவகையான நறுமணங்களும் வீசும்.. இவ்வாறு அதிகாலையில் இத்தூணிற்கருகில் நின்று கொண்டு, மெள்ள மெள்ள வெளியே தலை நீட்டும் கதிரவனையும், அவனது இளம் கதிர்கள் எனது விழிகளில் பட்டு அளிக்கும் கூச்சம் கலந்த சுகத்தையும், அத்துடன் வாசனை மிகுந்த தென்றல் காற்றின் இன்பத்தையும் அனுபவிப்பது எனது மனதிற்கினிய ஒன்றாகும்... இன்று அச்சுகத்தை எனக்கு முன்பே நீ அனுபவித்துவிட்டாய்.."

மழைக்காலப் பகலவனின் கிரணங்கள் நீர்த் திவாலைகளை ஊடுருவி கொண்டு ஒளி வீசுவது போல், தன் முத்துப் பற்கள் தெரிய புன்னகையுடன் பேசும் தனது புத்தம் புதுத் தோழியைக் கண்ட மகிழ்வதனியின் உள்ளமும் குளிர அவளை நோக்கி நடந்தவளின் பாதங்களைச் சட்டென நிறுத்தியது, அறைக்கு வெளியே கேட்டுக்கொண்டிருந்த சப்தமும், அதற்கு அடுத்து மெல்லிய குரலில் இறைஞ்சிக் கொண்டிருந்த வடிவம்மையில் கெஞ்சல் தொனியும்.

"எனது தந்தை வந்துவிட்டார் போல் இருக்கின்றது வஞ்சிக்கொடி.. நீ உன் நீராட்டத்தை முடித்துவிட்டு கீழே வா.. நான் உன்னை என் தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்.."

கூறியவாறே ஓட்டமும் நடையுமாக அறையைவிட்டு சென்ற திலகவதியைப் பார்த்தவாறே அறைக்குள் நுழைந்த மகிழ்வதனி தன் துணி மூட்டையைப் பிரித்தவள், அதனுள் இருந்த துணி வகைகளிலேயே சிறிதே உயர்தரமான உடையையும், அவற்றின் நிறத்திற்குத் துணைப் போகும் வகையில் எளிமையான அணிகலன்களையும் வெளியில் எடுத்து வைத்தவள், அறையை விட்டு வெளிவர, அவளை எதிர்பார்த்தது போல் படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார் வடிவம்மை..

"நீ நீராட ஏற்பாடு செய்திருக்கிறேன்.."

சரி என்று தலையசைத்தவள் தனது உடைகளையும் எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர, வெகு சுத்தமாயிருந்த நீராட்ட அறையில், அவள் உடுத்தி நீராடச் சிற்றாடையொன்று கதவில் தொங்கிக் கொண்டிருப்பதையும், கிண்ணத்தில் மஞ்சளும், தகழியில் எழுமிச்சை தைலமும் ஈசோப்பும் இலவங்கப்பத்திரியும் கலந்து தயாரித்திருந்த தைலைமும் தனிப்பட வைக்கப்பட்டிருக்க, அண்டாக்களில் நீரும் நிரப்பப்பட்டிருக்க,

தான் இப்பூலவுகில் அவதரித்த நாளிலேயே அன்னையை இழந்திருந்தவளுக்கு, அன்னையின் பாசத்தையும் அரவணைப்பையும் ஏக்கத்துடனும், பரிதாபத்துடனும் எதிர்ப்பார்த்திருந்தவளுக்கு, வடிவம்மையின் நேசம் பெற்றவளின் அன்பை உணர்த்த, பெண்ணவளின் இதயம் கரைந்து உருகத் துவங்கியது.

விழிகளில் நீர் திரையிட சட்டெனக் குனிந்தவள் நீர் மணிகளை வடிவம்மைக்குத் தெரியாது துடைத்தெறிந்தவள் அவர் தன்னை நோக்கித் திரும்பியதும் மெல்லிய முறுவலை சிந்தியவாறே நீராட்ட அறைக்கதவை மூட, மூடிய அறைக்குள் அதுவரை தடுத்திருந்த நீர் துளிகள் தாரை தாரையாக உதிரத் துவங்கியன.

"சகோதரியைப் போன்ற ஒரு பெண்ணையும், பெற்றவளையே பார்த்திராத எனக்குப் பாசத்தைக் காட்ட அன்னையைப் போன்ற ஒருவரையும் எதிர்பாராத வகையில் சந்திக்க வைத்திருக்கும் இந்த விதி, நான் யார் என்று இவர்கள் தெரிந்து கொண்டால், என்னால் இந்நகரத்திற்கோ அல்லது ராஜ்யத்திற்கோ விளையப் போகும் விணைகளை அறிந்து கொண்டால், இன்றைப் போன்றே என் மீது இவர்களின் அன்பு நிலைத்திருக்குமா?"

மென்பஞ்சு உதடுகளை மெல்லத் திறந்து முனகிக் கொண்டவள் நீராட்டத்தை முடிக்க, அங்குக் கீழ் தளத்தில் இன்னமும் அடங்காது கேட்டுக் கொண்டிருந்த திலகவதியின் தந்தையின் சப்தத்தைக் கண்டு குழம்பியவளாக வெளியே வரவும், நீராட்ட அறைக்குத் திலகவதி வரவும் நேரம் சரியாக இருந்தது.

"என்ன திலகா? உன் தந்தை மிகுந்த கோபத்தில் இருக்கின்றாரா? நான் இங்கு வந்து தங்கியிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையா?"

"தவறாக எடுத்துக்கொள்ளாதே வஞ்சிக்கொடி.. அவர் கோபத்தின் காரணம் நீயோ அல்லது நீ இங்குத் தங்கியிருப்பதோ அல்ல.. நேற்று சேனாதிபதி இங்கு வந்து சென்றதும், உன்னுடன் சேர்த்து என்னையும் அரண்மனைக்கு வரச் சொன்னதும் தான் அவருடைய இந்த அதீத சீற்றத்திற்குக் காரணம்."

"அதற்குத் தானே நான் மட்டுமே அரண்மனைக்குச் செல்கிறேன் என்று கூறினேன்.. சேனாதிபதியின் தூதுவன் எவரும் வரவில்லை என்றால் நானே வழியில் தென்படுவோரிடம் விசாரித்துக் கொண்டு சென்றுவிடுகின்றேன்.."

"இல்லையில்லை.. நீ அவ்வாறு தனித்துச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை.. எனது அன்னையும் உன்னைத் தனியாக அந்தப் பெண்பித்தர்களிடம் நிச்சயம் அனுப்ப மாட்டார்.. முதலில் நீ உடை மாற்றி வா.. பிறகு நாம் பேசலாம்.."

கூறி முடித்த திலகவதி மீண்டும் வீட்டின் கீழ் தளத்திற்குச் செல்ல, அறைக்குள் நுழைந்த மகிழ்வதனி தனது நீண்ட கருங்கூந்தலை சீவி அழகாய் பின்னலிட்டு முடித்தவள் எளிமையான அலங்காரத்துடன் திலகமிட்டு உடை புனைந்தவள், முன்னரே எடுத்து வைத்திருந்த அணிகலன்களையும் அணிந்து கீழே இறங்கி வரவும், பல மணித்துளிகளாகச் சப்தமிட்டும் ஏசிக் கொண்டும் இருந்த திலகவதியின் தந்தை செங்கோடனின் குரல் மட்டும் ஓயாயதைக் கண்டு சற்றே திகைத்துப் போனாள்.

'ஊருக்குத் தெரிந்திருக்கும் அழகுவேலின் அட்டூழியங்களும், அரசரின் பெண் பித்தும், அரண்மனையிலேயே வேலைப் பார்க்கும் திலகவதியின் தந்தைக்குத் தெரியாமலா இருக்கும்? இச்சூழ்நிலையில் தன் மகளை அவரது கரங்களுக்குள் அடைகாக்க வேண்டிய தந்தையே, அவளை நேற்றுதான் அறிமுகமான ஒரு இளம்பெண்ணுடன் தனித்து அரசனைக் காண அனுப்புவாரா?'

மனதிற்குள் சிந்தித்துக் கொண்டவளாக மெல்ல முன்னறைக்குச் செல்ல, அதற்குள் மகிழ்வதனியின் அரவத்தில் சட்டென்று தனது பேச்சை நிறுத்திய செங்கோடன் சப்தம் வந்த திசையை நோக்கி பாத அடிகளை எடுத்து வைக்க, முன்னறையில் தனக்கு முதுகுக் காட்டியவாறே நின்றிருந்த இளம்பெண்ணைக் கண்டவர்,

"நீ தான் வஞ்சிக்கொடியா?" என்றார் சற்றே தடித்த கடுமையான குரலில்.


தீவிர யோசனையுடனும், சுருக்கிய புருவங்களுடனும் நின்றிருந்த மகிழ்வதனி குரல் வந்த திசையை நோக்கி சரேலெனத் திரும்பிப் பார்க்க, அவளை நோக்கி மேலும் அடி எடுத்து வந்து கொண்டிருந்தவரின் பாதங்கள் விசையை அழுத்தியது போல் சட்டென்று நின்றுப்போயின.

'இந்தப் பெண்? இவளை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றதே? யார் இவள்?'

செங்கோடனின் மனதிற்குள் சடசடவெனப் பற்பல எண்ணங்களும் சிந்தனைகளும் வினாக்களும் குழப்பங்களும் மாலை போல் சரம் சரமாகக் கோர்க்கத் துவங்க, மகிழ்வதனியின் முகத்தை மீண்டும் கூர்ந்துப் பார்த்தவர் தனக்குத் தானே முணகிக் கொண்டவராக, மெல்ல தலையை அசைத்தார்..

'இருக்கவே இருக்காது.. அக்கோர சம்பவம் நடந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.. நடந்து முடிந்த அச்சம்பவத்திற்கும் இந்தச் சிறுபெண்ணிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? "அவருக்கும்" இவளுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்க வாய்ப்பே இல்லை..

மீண்டும் மீண்டும் அதே கேள்வி செங்கோடனின் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது..

ஆனால் செங்கோடனிற்குத் தெரியாது, அவரின் புத்தி தொடுத்த வினாக்களுக்கு அவரது மனம் தெள்ளத் தெளிவாகத் தவறான விடைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்று..

வஞ்சிக்கொடி என்ற பெயரில் தன் கண்ணெதிரே நின்று கொண்டிருக்கும் இந்தப் பெண் யாரென்று அவருக்குத் தெரிய வரும் பொழுது?

அவர் முதலில் நினைத்தது போன்றே "அந்த அவருக்கும்" இவளுக்கும் சம்பந்தம் இருந்தால்?

இவளது காலடிப்பட்டிருக்கும் இந்தச் சிம்ம ராஜ்யத்திற்கு, இவ்விளம்பெண்ணால் விளையப் போகும் விணை என்பதை அவர் இக்கணமே அறிந்திருந்தால்?

தொடரும்...
Reference:

பண்டக சாலை/களஞ்சியம் - repository
 

Author: JLine
Article Title: உதயேந்திர வர்மன் அத்தியாயம் 3
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

உதயேந்திர வர்மன் அத்தியாயம் 3 பதிவு செய்திருக்கிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..

எனது மூன்று புத்தகங்களும் கிடைக்கும் இணைப்புகள்:


உங்கள்

ஜேபி
 

Suhana

New member
Hi jb sis...

Nan dan first 🙂🙂🙂🙂... Innaiku epi juppppppeerrr... Vadani... Ethoo periya plan oda dan vanthrukka... Ana athu yen dan puriyala 🤔 🤔
Thilaga appa ku... Yetho therinchruku... Yennava irukkum ...🤔🤔.... Vadani yetho mosama paathika patrukka.... Oru vellai simma rajiathukum.... Ivalukum.... Yetho link irukumo 🤔 🤔.... Ama yaru antha avaru 🤔🤔🤔🤔.... Ippadi neraya que... En thalaika oduthu...... Waiting for next ud 😍 😍

Analum innaiku neenga udhai ya kamikkavae.... Illa 😢😢😢😢.. Nan kovama Poren 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️
 

Chitra Balaji

New member
Super Super Super mam.... Semma semma episode.... திலகவதி அவங்க வீடு la தான் vathani ah thanga veikka poraan ah... Enna பார்வை paakaran pa ava ச்சே.... But thilaga semma பேசுன கொஞ்சம் kuda பயம் இல்லமால் first avan kuda vanthathunaala avala thappaa nenaichita.... அவல vera ethuku ava kuda vara solran....ava ethuku வந்து irukaanu therinja odane sorry ketutaa... Appo அழகுவேல் romba சாதாரணமாணவன் அவன் kita ஏன் விக்ரம simanan நட்பு vechikanum.... எதோ இருக்கு.... Thilaga oda amma so sweet.... அழகுவேல் pathi சொன்னா பெரியவர vathani kandupidikanum nenaikira... Evanga rendu perum ah evvallu kodiyavanuga nu therinji ah வந்து இருக்கா எப்படி சமாளிக்க போற... அவல அந்த நாட்டுக்கு என்ன கேடு வர போகுது.... Thilaga oda அப்பா vuku அரண்மனை ku அவரு பொண்ணு ah anupurathula இஷ்டம் இல்ல... Vathani ah பாத்து ஏன் engayo பாத்தா maari irukunu nenaikiraaru எதோ மோசமான சம்பவம் நடந்து இருக்கு what is that..... யாரு அந்த அவர்.???அவருக்கும்.. மதிவதனி kum enna சம்மந்தம்... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

KaniRamesh

New member
Ipathan padichen...adei azhaguvel una pathale pathikitu varuthu...thilaga romba innocent so cute.... sengodan yara pathi yosikuraru...vathani oda appa va oruvelai theriyumo... ethukaga vathani inha vanthruka? Sengodan ninaikum antha avar yaru? Suspense started ka...super
 
Top