What's new

உதயேந்திர வர்மன். அத்தியாயம் 4

JLine

Moderator
Staff member
1565738853106.png

உதயேந்திர வர்மன்

அத்தியாயம் - 4

செங்கோடனின் இல்லம்...

"நீ தான் வஞ்சிக்கொடியா?"

இளம் காரிகையின் பேரழகில் பிரம்மையில் மூழ்கிப் போனார் செங்கோடன்.

'ஆஹா என்ன அழகு இது! பேராபத்துக்களை இழுத்துக் கொண்டு வரும் பேரழகு!'

மனதிற்குள் சட்டெனக் கணிக்கத் துவங்கியவருக்கு, ஏன் அரசரின் பார்வையில் இவள் பட்ட நாளிலேயே முன் பின் அறியாத பெண்ணாக இருந்தாலும் இவளுக்கு அனைத்து உபகாரங்களையும் செய்வதற்கு உத்தரவிட்டு இருக்கின்றார் என்றும், அதற்குத் தன் சேனாதிபதியையே பணித்தார் என்றும் தெள்ளெனப் புரிந்துப் போயிற்று.

தன் மகளின் வயதை ஒத்திருக்கும் இவளை எங்கனம் விக்கிரம்ம சிம்மரையும், அழகுவேலையும் நம்பி அனுப்பி வைப்பது? இவளுடன் திலகாவையும் அல்லவா வரப் பணித்திருக்கிறார்கள் அந்தப் பெண் பித்தர்கள்.

அதிர்ந்து திகைத்துப் போனவராக உள்ளுக்குள் கலங்கிப் போய் நிற்க, தன்னைக் கண்டது முதல் இமைக்க மறந்தது போல் பார்த்து நிற்பவரின் மனதிற்குள் நிழலாக ஆடிக்கொண்டிருக்கும் எண்ணங்களைப் புரிந்து கொண்ட மகிழ்வதனி,

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! என்னால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள், பிரச்சனைகள்.. நான் அரசரின் கட்டளைப்படி அரண்மனைக்குச் சென்றே ஆக வேண்டும்.. பிழைப்புத் தேடி வந்தவள் அரசரின் உத்தரவுகளை மதியாது இருப்பது நன்றன்று.. ஆனால் என்னுடன் திலகாவும் வர வேண்டிய அவசியம் இல்லை.. சேனாதிபதியாரோ, ஏன் அரசரோ என்னிடம் விசாரித்தாலும் அவள் உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுகின்றேன்.. நான் வருகின்றேன்.." என்று விடைப்பெற்று வாயிலை நோக்கி நடக்கவும், அடுத்து செங்கோடனின் வாயிலிருந்து உதிர்த்த கணீர் சொற்கள் மகிழ்வதனியை அசையவொட்டாது செய்தது.

"பிழைப்புக்காக இந்நகரத்தை அண்டி வந்திருக்கின்றாய்.. அரசரின் குணம் தெரியாது அவரைத் தேடி செல்கிறாய், அங்கு உனக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?"

"ஐயா! உங்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்.. என்னால் என்னைத் தற்காத்துக் கொள்ள இயலும்.."

"உன் துணிவை நான் மெச்சுகிறேன்.. ஆனாலும் என் மகளைப் போன்று இருக்கும் உன்னை எதிர்பார்த்துப் பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருந்தும் என்னால் தனித்து அனுப்புவது இயலாது.."

செங்கோடனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தமும், கட்டளையும் தன்னையும் அறியாது மகிழ்வதனிக்கு அவளின் தந்தையின் முகத்தைத் கண்களின் முன் படரச் செய்தது.

"அப்படி என்றால் அரசரின் கட்டளையை மீறச் சொல்கிறீர்களா?"

"இல்லை.. நானும் உன்னுடன் வருகின்றேன்..."

வேறு வழியின்றிச் சரி என்று ஒத்துக்கொண்டவள் திலகவதியிடமும் வடிவம்மையிடமும் பார்வையால் விடை பெற்றுவிட்டு செல்ல, செங்கோடனுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவளின் பார்வை தனது விழிகளுக்குட்பட்ட வேணி மாநகரத்தின் அனைத்து பக்கங்களையும், சாலைகளையும், தெருக்களையும் பருந்தை ஒத்திருக்கும் பார்வையோடு துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

"உங்கள் அரசரின் சிறப்பிற்கும் அவரின் ஆட்சியின் வல்லமைக்கும் உங்கள் ஊரின் வளமையே சாட்சி போல் தோன்றுகிறது ஐயா.. அங்கனம் இருக்க, அவரின் குணத்தைப் பற்றி அவதூறாக நீங்கள் பேச வேண்டிய அவசியம்?"

மகிழ்வதனியின் கேள்வியில் அவளைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த செங்கோடன், விநாடிகள் சில மௌனம் காத்தவர் பின் பெருமூச்செறிந்தவராக,

"விக்கிரம்ம சிம்மர் திறமையற்றவர் அல்ல என்றோ, சாதுர்யமற்றவர் என்றோ நான் கூறவில்லையே.. அவரின் புத்திசாலித்தனத்துடன் இயற்கையிலேயே நல்ல வளம் மிகுந்திருக்கும் எங்களது இராஜ்யமும் இணைந்ததில், எங்களது நகரங்கள் சிறப்பாக இருக்கின்றன.. அது மட்டும் அல்ல, பண்ணாட்டு வர்த்தகங்களையும், உள்நாட்டு வணிகங்களையும் ஏகத்துக்கும் பெருக்கி அளவற்ற பண வருவாயை எங்களது இராஜ்யத்திற்குள் புரளச் செய்திருப்பதும் எங்களது அரசர் தான்.. இந்தத் தங்கேதி தேசம் முழுவதுமே எங்களது அரசின் சிறப்பையும் அள்ள அள்ளக் குறையாது வழிந்து கொண்டிருக்கும் எங்கள் கஜானாவையும் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்திருப்பதற்குக் காரணகர்த்தாவே எங்கள் விக்கிரம்ம சிம்மரே, ஆயினும்.." என்று நிறுத்தியவர் ஏனோ அதற்கு மேல் பேச மனம் ஒப்பவில்லை என்பது போல் மௌனமாகிவிட்டார்.

"ஆயினும்??"

செங்கோடன் விட்ட இடத்தில் இருந்து துவங்குவதற்கு அவரை ஊக்குவிப்பது போல் பேசிய மகிழ்வதனியை சொற்களையே மறந்தது போல் உறுத்துப் பார்த்திருந்தவர் மீண்டும் நடக்கத் துவங்க, அவர் கூற வருவது என்னவென்பது ஏற்கனவெ புரிந்திருந்ததால் அவருடன் தானும் இணைந்து நடக்கத் துவங்கிய மகிழ்வதனியின் கால்கள் விசையை அழுத்தியது போல் நின்றது, தனது விழிகளுக்கெதிரே பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்த அவ்வரண்மனையைக் கண்ட விநாடி.

"ஐயா! இது தான் உங்கள் அரசரின் அரண்மனையா?"

"ஆம், இது தான் வஞ்சிக்கொடி.. நானும் உன்னுடன் வருகின்றேன்.. வா, செல்லலாம்.."

தன் முகத்தைப் பார்த்துப் கூறும் செங்கோடனின் முகத்தை ஏறிட்டும் பார்க்காது அரண்மனையை நோக்கி நிதானமாக நடந்து வந்து கொண்டிருப்பவளின் அமைதியும், அச்சமோ அதிர்ச்சியோ எதுவுமே அல்லாத சாந்தத்தை மட்டுமே சுமந்திருக்கும் முகமும் செங்கோடனின் நினைவுகளை வெகு வருடங்களுக்கு முன் கொண்டு சென்றது..

எதனையோ உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவராகப் பெருமூச்சுவிட்டவர் அவள் முன்னர்க் கேட்ட கேள்விக்குத் தான் பதில் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது போல்,

"இந்த அரண்மனைக்குள் தான் எனது பணி, ஆனால் நான் பணி செய்யும் எனது அறையைத் தவிர எனக்கு வேறு இடத்திற்குள் செல்ல அனுமதியில்லை.. ஆகவே நீ தனியாகத் தான் அரசரையும் சேனாதிபதியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.. என்னால் இதற்கு மேல் உனக்குத் துணையிருத்தல் ஆகாது.. எந்த வித ஆபத்து உனக்கு நேர்ந்தாலும் உன்னைக் காத்துக் கொள்ள நீ அனைத்து முயற்சிகளையும் செய்து அரண்மனையை விட்டு வெளியேறிவிடு.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இந்தக் கோட்டையை விட்டு நீ ஆபத்தில்லாது தப்பித்துச் செல்வதற்கு எத்தகைய உதவியையும் செய்ய நான் தயாராக இருப்பேன் என்பதை எந்நாளும் மறந்துவிடாதே வஞ்சிக்கொடி.." என்றார், திக்கித்திருக்கும் தனது உள்ளத்தை இந்தச் சிறு பெண்ணிடம் வெளிப்படுத்தக் கூடாது என்பது போல் வலுக்கட்டாயமாகத் துணிவையும் திடத்தையும் வரவழைத்த தொனியில்.

அவரின் கூற்றை ஆமோதிப்பது போல் மெல்ல தலையசைத்தவள் தொடர்ந்து நடக்க, அரண்மனையின் பிரதான வாயிலை அடைந்தவர்களைச் சட்டெனத் தடுத்து நிறுத்தினர் வாயிலின் இரு பக்கங்களிலும் நின்றிருந்த காவலர்கள்..

"இவள் பெயர் வஞ்சிக்கொடி.. அரசர் அழைத்துத் தான் வந்திருக்கின்றாள்.."

"மன்னிக்கவும்.. இவர்களுடன் உங்களது மகளும் வருவார் என்றும், அவர் வரவில்லையென்றால் இவர்களை மட்டும் தனித்து உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் எங்களுக்கு உத்தரவு வந்திருக்கின்றது.. சேனாதிபதியாரின் கட்டளையை எங்களால் மீற இயலாது என்பது உங்களுக்குத் தெரியும்.."

சஞ்சலத்துடன் கூறும் வீரனின் முகத்தைச் சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்த மகிழ்வதனி, மெல்ல செங்கோடனை திரும்பிப் பார்த்தவள்,

"நீங்கள் செல்லுங்கள்.. நான் அரசரை பார்த்துவிட்டுப் பின் உங்களைச் சந்திக்கின்றேன்.." என்றாள், அதுவரை முகத்தில் படர்ந்திருந்த சாந்தத்தைச் சற்றே நெகிழவிட்டு, அதற்கு ஈடாக ஆழ்ந்த பார்வையை விழிகளிலும், அழுத்தத்தைக் குரலிலும், உறுதியை தனது எழில் முகத்திலும் தவழவிட்டவளாக.

இன்னமும் அச்சமும் திகைப்பும் விலகாத முகத்துடன் மகிழ்வதனியைப் பார்த்துக் கொண்டிருந்த செங்கோடனை திடுக்கிட்டு திரும்பி நோக்க செய்தது, வெகு அருகில் கேட்ட சிரிப்பொலி.

"உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் தனியாக அல்ல.. உன்னுடன் திலகாவும் வருவாள் என்று நினைத்திருந்தேன்.."

காரை படிந்த பற்களை வெளிக்காட்டியவாறே பேசிக் கொண்டே வாயிலை நெருங்கிய அழகுவேல் மகிழ்வதனிக்கு அருகில் நிற்கும் செங்கோடனின் மீதும் பார்வையை ஒரு முறை படியச் செய்ய,

"திலகாவிற்கு உடல் நிலை சரியில்லை.. ஆகையால் தான் அவளால் வர இயலாது போய்விட்டது.." என்று செங்கோடன் முடிக்கவில்லை..

"கவலைப்படாதீர்கள் பண்டகச்சாலை மேலாளரே... இன்று உடல் நலம் சரியில்லாவிட்டால் நாளை சரியாகி விடப் போகின்றது.. அப்பொழுது அவளை அனுப்பி வையுங்கள்.. இப்பொழுது நீங்கள் செல்லலாம்.."

ஓநாயின் பார்வையுடன், அருவருக்கத் தகுந்த சிரிப்புடன் நின்றிருந்த சேனாதிபதியைக் கண்டு, 'என் மகளை அனுப்பச் சொல்வதற்கு இவன் யார்?' என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள இயலாத தன் அவல நிலையை நினைத்து வெறுப்புடன் அழகுவேலையே பார்த்திருந்த செங்கோடனைப் பார்த்தவாறே தனது இடது கரத்தை நீட்டிய அழகுவேல், அரண்மனையின் மறுபுறத்தைக் காட்டி,

"உங்கள் பணியிடத்திற்கு நீங்கள் செல்லலாம் என்றேன்.." என்றான், வார்த்தைகளில் வெகுவாகக் கடினத்தைக் கூட்டி.

வேறுவழியின்றித் திரும்பிச் செல்ல முனைந்தவர் ஒரு முறை மகிழ்வதனியை நோக்க, அவரைக் கண்டு இதழ்களை விரிக்காது மெல்லிய நகையைச் சிந்தியவள், அவர் செல்ல அனுமதிப்பது போல் கண்களை மூடித் திறக்க, அவளைத் திசை திருப்பியது திடுமெனத் தனக்கு வெகு அருகில் உஷ்ணமான ஸ்வாசக்காற்று படர பேசிய அழகுவேலின் வார்த்தைகள்.

"அரசரிடம் அழைத்துச் செல்கிறேன், வா வஞ்சிக்கொடி.."

சட்டென இரு அடிகள் தள்ளி நின்றவள் அவன் செல்லத் துவங்கியதும் அவனைப் பின் தொடர, வழி நெடுக்க அழகுவேலைக் கண்டு தலை வணங்கியவாறே காவலர்கள் நின்று கொண்டிருக்க, அரண்மனையைச் சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் மதில்சுவரின் மீதும் வீரர்கள் நீண்ட வாட்களுடன் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்க, அனைவரையும் கடந்து மகிழ்வதனியை திரும்பியும் பாராது அவளை அழைத்துச் சென்ற அழகுவேல் நின்ற இடத்தின் துவக்கத்தில், அழகுற அமைந்திருந்தது அரண்மனையின் அந்தப்புர நந்தவனம்.

தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் அழகிய நீலம் மற்றும் வெண்மை நிறத்து கருவிளை மலர்களும், இதமான வாசத்தைச் சுமந்து தென்றலுடன் கலந்து மனதை மயக்கும் நீள சம்பங்கி பூக்களும், அடர்ந்த மரங்களுக்கு இடையில் ஆங்கிங்கு பூத்துக் குலுங்கிக் கொண்டுருக்கும் மகிழம்பூவின் நறுமணமும், இரு புறமும் அடர்த்தியான கொடிகளுக்கு உள்ளும் புறமும் செழித்துக் கொண்டிருக்கும் ஜாதி முல்லையின் வாசனையும் மகிழ்வதனியின் உள்ளத்தைக் கவர்ந்திழுக்க,

வெகு நிதானமாக நடந்து கொண்டிருந்தவளின் அழகிய நீள் விழிகளில் சுற்றுப் புறம் முழுவதிலும் உருண்டோடிக் கொண்டிருக்கும் கரு மணிகள், சட்டென்று நின்றுத் திரும்பிப் பார்த்த அழகுவேலின் ஆசை கொண்ட இதயத்தை அடியோடு கொள்ளைக் கொண்டு போனது.

'அந்த விக்கிரம்ம சிம்மனின் விழிகளில் மட்டும் இவள் படாதிருந்தால், எனது பார்வையில் முதலில் விழுந்திருந்தால், இந்நேரம் இவளை எனக்கு உரிமையுள்ளவளாகக் கொண்டிருப்பேனே.."

மனதிற்குள் புழுங்கிக் கொண்டவனாகக் கண்களில் சற்றே எரிச்சலைக் கொணர்ந்தவன் நின்ற இடத்தில் இருந்தவாறே அவளைக் கூர்ந்துப் பார்க்க, அவன் தன்னை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும், அசராது, சிறிதும் சளைக்காது மெல்ல நிதானமாக மரங்களின் அழகையும், மலர்களின் நறுமணத்தையும் இரசித்தவாறே அடி மேல் அடி எடுத்து வைத்து வந்து கொண்டிருப்பவளைக் கண்ட அழகுவேல் வியந்து போனான்.

'பிழைப்பிற்காக அசலூருக்கு வந்திருக்கிறாள்.. கேட்டால் தான் ஒருவருமற்ற அனாதை என்று கூறுகின்றாள்.. இன்று வரை அறியாவிட்டாலும் இப்பொழுது திலகாவுடன் இவளை அனுப்பாது செங்கோடனே துணைக்கு வருகின்றான் என்றால், நிச்சயம் அரசனைப் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ இவளிடம் கூறியிருக்க வாய்ப்பிருக்கின்றது... அப்படி என்றால் அரசனின் பெண் பித்துத் தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கும்.. அரண்மனைக்கு அழைத்துச் செல்லாது நந்தவனம் வழியாக அழைத்துச் செல்கிறேன்.. இன்னும் சிறிது நேரத்தில் அரசனின் கேளிக்கை மாளிகைக்குள் நுழையப் போகிறாள்.. அங்கு இவளின் கதி என்னவோ? இவற்றைப் பற்றி எல்லாம் சிறிதும் கலக்கமில்லாது அண்ணம் போல் நடை நடந்து வருபவளை என்னவென்று சொல்வது? உண்மையில் இவள் ஒன்றும் அறியாத பேதையா அல்லது அனைத்துமே தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கும் அதி புத்திசாலியா?'

மகிழ்வதனி தன்னை நெருங்குவதற்குள் இவை அனைத்தையும் சடசடவென அழகுவேலின் உள்ளம் அலசத் துவங்க, அவனருகில் வரும் வரையிலும் வார்த்தைகளை உதிர்க்காது விழிகளையும் அவன் மீது நிலைநாட்டாது இருந்தவள், சட்டென்று அவன் புறம் திரும்பி,

"ஐயா! என்னுடைய அன்றாடத் தொழிலே நந்தவனத்தில் இருந்து மலர்களைக் கொய்து அதனைத் தொடுத்து விற்பனை செய்வது தான்.. அரசர் இதனை அறிந்ததால் தான் என்னை நந்தவனத்தின் வழியாக அழைத்து வரப் பணித்திருக்கின்றாரா? அரசர் விக்கிரம்ம சிம்மர் மிகுந்த புத்திசாலி என்று இப்பொழுது தான் செங்கோடன் ஐயா கூறிக் கொண்டிருந்தார்.. அதனை நிரூபணம் செய்துவிட்டார் உங்கள் அரசர்.. எத்தனை எத்தனை அழகான மலர்கள்.. மனதை மயக்கும் வாசனையும் கூட.. எனது கரங்கள் இப்பொழுதே இப்பூக்களைப் பறித்துத் தொடுக்கப் பரபரக்கின்றன.." என்றாள் மழலையின் மனம் தவழ, சிறு குழந்தையின் அக்களிப்புடன்.

'ஆக, இவள் விவரம் ஒன்று அறியாதவள் தான்.. எதற்கு இவ்வழியாக அழைத்து வருகின்றேன் என்பதனை கூடப் புரிந்து கொள்ள இயலாத அப்பாவி பெண் போலத் தான் இருக்கின்றது.. செங்கோடனும் அரசனின் மீதுள்ள அச்சத்தில் அவரைப் பற்றி அவதூறாக எதுவும் கூறவில்லை என்பது போலும் தெரிகின்றது..'

மீண்டும் எண்ணிக்கொண்ட அழகுவேல் தனக்கு முன் செல்லுமாறு கையசைத்துச் சைகை செய்தவன் அவள் அடிகள் எடுத்து வைக்கவும் பின் தொடர, சற்றுத் தொலைவில் நந்தவனத்திற்கு அப்பால் தெரிந்த ஒரு பெரிய மாளிகையைக் கண்டவள் அகன்ற விழிகளை மேலும் அகல விரித்தவாறே அழகுவேலைப் பார்த்தாள்.

"அங்குத் தான் அரசர் இருக்கின்றார்.."

மெல்லிய நகையுடன் பதிலளித்தவனைக் கண்டு, "ஓ! இது தான் அரசர் தங்கும் மாளிகையா?" என்றாள், அழகுவேலின் செய்கைகளும் திட்டங்களும் புரியாத தோரணையில்.

"ஆம்.. இங்குத் தான் இருக்கின்றார்.. வா..."

மாளிகை முகப்பை அடைந்ததும் அங்குக் காவலர்கள் எவரும் இருக்கின்றார்களா என்பது போல் சுற்றும் முற்றும் துருவியவள் மெல்லிய இதழ்களில் அழகுவேலிற்குத் தெரியாது சன்னமாக முறுவலை பரவவிட்டுப் பின் அவனைத் தொடர்ந்தாள்.

தட்டிய சில மணித்துளிகளில் கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்த மகிழ்வதனி மாளிகையின் தோற்றத்தைக் கண்டு முதலில் பிரமித்தவள், பின் பேரதிர்ச்சி ஆட்கொண்டதில் நின்ற இடத்திலேயே வேரோடிப் போனதைப் போன்று சிலையென ஸ்தம்பித்துப் போனாள்.

*********************************************************************************

மாளிகையின் உட்புறம் முழுவதிலும் எழுப்பப்பட்டிருக்கும் தூண்களில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களின், மாளிகையின் தாழ்வாரக் கூரையின் மீது தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின், ஜாஜ்வல்லியமாக எரிந்து கொண்டிருக்கும் பெரிய விளக்குகளின் மரத்தண்டுகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின், மாளிகையின் சுவற்றில் ஆங்கிங்கு மாட்டப்பட்டிருக்கும் ஓவியப்பலகைகளில் தோன்றிக் கொண்டிருக்கும் படங்கள் அனைத்தின் உட்கருத்துக்களும், உள்ளார்ந்த பொருளும் ஒன்றே ஒன்றைச் சார்ந்தே இருந்தன.

அவை கலவி.. புணர்ச்சி.. சிற்றின்ப காட்சிகள்..

ஒவ்வொரு தூண்களிலும் விதவிதமாகப் பல்வகை வண்ணச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன..

அவைகளில், நீராட்டம் செய்திருந்ததால் மார்பு கச்சையற்று நனைந்த குழலை கச்சையாய் போர்த்தியிருந்தவாறே பெண்கள் நின்றிருப்பது போலும், அமர்ந்திருப்பது போலவும் வரையப்பட்ட ஓவியங்களும், மாளிகையின் தரையில் பூஞ்சோலைகளுக்கு நடுவில் நீர்தடாகத்தின் அருகே மலர்களையும், இலை தழைகளையுமே ஆடையாகப் போர்த்தியிருக்கும் கன்னியொருத்தி ஒருக்கனித்துப் படுத்திருப்பது போலவும், அவளது மேனி முழுவதிலும் ஆங்கிங்கு வெளிப்போந்திருக்கும் மறைக்கப்பட வேண்டிய பெண்களின் உடல் கூறுகள், காணும் நல்லொழுக்கக் குணமுடைய எவரையுமே நாணத்தில் வெட்கி கூச செய்வது போலவும் இருந்தது.

ஓவியங்கள் அனைத்திலும் தோன்றிக் கொண்டிருக்கும் பெண்கள் அனைவரும் தன்னையே உறுத்துப் பார்த்திருப்பது போல் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தவளின் விழிகள் தன்னையும் அறியாது மாளிகையின் கூரையை ஏறிட்டுப் பார்க்க, அதனில் அடர்ந்த ஆலமரத்திற்கடியில் ஏறக்குறைய விக்கிரம்ம சிம்மனின் உருவத்தில் அரசன் ஒருவன் அமர்ந்திருப்பது போலவும், அவனைப் பலவித தோற்றங்களிலும் தோரணைகளிலும் ஆடையற்று நிர்வாணமாய்ப் பெண்கள் சூழ்ந்திருப்பது போலவும் வரையப்பட்டிருக்க, மேலிருந்து விக்கிரம்ம சிம்மனே தன்னை ஆழ்ந்து பார்ப்பது போன்று தோன்றியதில், தானும் அப்பெண்களைப் போன்று ஆடையற்று நிற்பது போல் உணர்ந்ததில் மகிழ்வதனியின் உள்ளம் அதிர்ந்து எழுந்தது.

'எத்தனை அருவெறுக்கத்தக்க, அசூசை மிகுந்த வகையில் ஓவியங்களைத் தீட்ட வைத்திருக்கின்றான் இந்த விக்கிரம்ம சிம்மன்..'

மகிழ்வதனியின் கண்கள் மாளிகையின் ஒவ்வொரு அங்கத்திலும் படிந்து பின் மறு இடத்திற்குத் தாவிக் கொண்டிருப்பதைக் கண்ட அழகுவேல் புன்னகை புரிந்தவனாக அவளை நெருங்க எத்தனிக்க, ஓர் அடி எடுத்து வைத்தவனின் ஆசையைத் தடை செய்வது போல் கணீர் என்று ஒலித்தது ஒரு குரல்..

"நமது தங்கேதி தேசத்தில் இருந்து மட்டும் அல்ல, மற்ற தேசங்களில் இருந்தும் அதி திறமையான ஓவியர்களை வரவழைத்துத் தீட்டப்பட்ட ஓவியங்கள் இவை.. தேசம் முழுவதிலும் அலசினாலும் என் மாளிகையின் ஓவியங்களுக்கோ, சிற்பங்களுக்கோ ஈடு இணைக்கிடையாது.. அப்படித் தான் நேற்று வரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் எனது எண்ணங்கள் தவறு என்பதை நீ உறுதிப்படுத்திவிட்டாய், ஏனெனில் இவை அனைத்துமே உனது அழகிற்கு முன் போட்டிப் போட முடியாது வஞ்சிக்கொடி.."

நிசப்தம் மட்டுமே நிரம்பி வழிந்து கொண்டிருந்த அம்மாளிகைக்குள் அமைதியை கிழித்தெறிவது போல் திடுமெனக் கேட்ட குரலில், வார்த்தைகள் ஒலிக்கும் திசையைச் சரேலெனத் திரும்பிப் பார்த்த மகிழ்வதனியின் உள்ளம், ஓவியங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உள்ளார்ந்த பொருளுக்கும் ஆழ்ந்த விளங்கங்களுக்கும் அர்த்தமே நான் தான் என்பது போல், அங்குத் தன் வலிய உதடுகளை அகல விரித்துச் சிரித்தவாறே நின்றிருந்த விக்கிரம்ம சிம்மனைக் கண்டதும், அக்னி மலையாய் பொங்கத் துவங்கியது.

'சிற்றின்பத்திற்கு மட்டுமே படைக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற அதீத கேவலமான எண்ணம் கொண்ட இவன், இந்தச் சிம்ம ராஜ்யத்தை ஆளுவதா?'

வெறுப்பில் அதிர்ச்சியில் இதயம் பலவிதமான அகால ஓசைகளை எழுப்பினாலும், உணர்ச்சிகளை மறைக்கும் வித்தையை விவரம் தெரிந்த நாளில் இருந்தே பழகிக் கொண்டிருந்தவள் போன்று சலனமற்ற வதனத்துடனும், சஞ்சலம் புலப்படாத விழிகளுடனும் அரசனை நிமிர்ந்துப் பார்த்தவள், தானும் புன்னகைப் புரிந்தவளாக,

"ஓவியங்களில் ஒளிரும் வசீகரமும் சிற்பங்களில் தெரியும் நேர்த்தியும் அவற்றை வடிவமைத்தவர்கள் அதி திறமைசாலிகளாக இருக்கவேண்டும் என்பதைப் பறைசாற்றியது மட்டுமல்ல அரசே, இவைகளுக்கு மாதிரி வகுத்திருப்பவரும், வரிவடிவம் கொடுத்திருப்பவரும் வாட்போரிலும், விற்போரிலும், மற்போரிலும் மட்டும் அல்ல, கலைகளின் மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர் என்பதையும் மெய்பிக்கிறதே..." என்றாள் முத்துப்பற்களுக்கு இடையில் அழுத்தமாக வெளி வரத் துடித்த வார்த்தைகளுக்குச் சரச முலாம் பூசியவாறே.

பெண்ணவளின் சொற்களுக்குப் பின் புதைந்துக் கிடக்கும் புகழாரத்தையும், தன்னை மறைமுகமாகப் பாராட்டுபவளின் சாரீரத்தில் வெளிப்படையாக ஒளிரும் சரசத்தையும் இரசித்தவனாக மகிழ்வதனியை மேலும் நெருங்கிய விக்கிரம்ம சிம்மன், அவளின் முதுகு புறம் தொட்டுவிடும் தொலைவில் நிற்கும் அழகுவேலைக் கண்டு 'நீ போகலாம்' என்பது போல் தலையசைத்துச் சைகை செய்ய, விக்கிரம்ம சிம்மனை தான் சந்தித்த காலத்தில் இருந்தே தனக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அவமதிப்பு தான் இதென்றாலும், அரசனின் விழிவட்டத்திற்குள் விழும் பெண்களை அழைத்து வரும் கீழ்தரமான வேலைகளை நாள்தோறும் செய்து வந்தாலும், முதன் முறை வாழ்க்கையில் காணக்கிடக்காத பேரழகு பதுமையைக் கண்ட விநாடியில் இருந்து தன்னை மறந்து நின்றிருக்கும் அழகுவேலிற்கு, இது தாளமுடியாது ஏமாற்றமாகவும் அவமானமாகவும் தோன்றியது.

இருந்தும் அரசனின் உத்தரவை மீள முடியாதவன் சிரம் தாழ்த்தி விடைப்பெற, முகத்தைச் சிறிதும் திருப்பாது விழிகளை மட்டும் ஓரத்திற்குக் கொண்டு வந்த மகிழ்வதனி அழகுவேல் விடைப்பெற்றதையும், பின் வெளியேறியதையும் கண்டு இதழ்களில் வெளிப்படுத்தாத மறைமுக இளநகையோடு நிற்க, சூடான ஸ்வாசக்காற்று பட்டுத்தெறிக்கும் அளவிற்குப் பெண்ணவளை நெருங்கி நின்றான் விக்கிரம்ம சிம்மன்.

"எத்தகைய அழகிற்கு முன் மயங்காதவரும், பேரழகிற்கு முன் கிறங்காத எம்மனிதனும், உனது பிரமிக்க வைக்கும் கவர்ச்சியான எழிலிற்கு அடிமையாகிவிடுவர் வஞ்சிக்கொடி.. அங்கனம் இருக்க, சேனாதிபதியின் நிலையைப் பற்றியும் விளக்கவும் வேண்டுமா என்ன? பிரம்மையில் ஆழ்ந்திருந்ததால் தன்னை மறந்திருந்தவர் எனது விதிகளை மறந்துவிட்டார்.."

சொற்களை உதிர்த்தவாறே தனது வலது கரத்தை மகிழ்வதனியின் தோளில் அழுந்த பதித்தான் விக்கிரம்ம சிம்மன்..

ஏறக்குறைய நாற்பது வயதைத் தொட்டிருந்தாலும், திருமணம் என்ற பந்தத்தில் தன்னைப் புகுத்திக்கொள்ளாது தனித்து வாழும் விக்கிரம்ம சிம்மன் பார்ப்பதற்கு அழகனாகவே இருந்தான்..

அதிகம் உயரமுமோ பருமனோ இல்லாதிருந்தாலும் அவன் தேகம் நல்ல உறுதியுள்ளதென்பதை தனது தோளில் அழுந்த பதிந்திருக்கும் அவனது இரும்பைப் போன்ற கரங்களே மகிழ்வதனிக்கு நிரூபிக்கச் செய்தன..

இக்காலை வேளையிலேயே, தனது அந்தரங்க மாளிகைக்குள்ளேயே அவனது இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளானது அதிக நீளமில்லையென்றாலும், அவனது எதிரிகள் எவரும் அவனை எளிதில் அண்ட முடியாது என்பதைப் பறைசாற்றும் வகையில் அகலமாகவும் கூர்மையாகவும் இருந்ததைக் கண்ட மகிழ்வதனிக்கு, விக்கிரம்ம சிம்மன் எந்நேரமும் மிகுந்த எச்சரிக்கையுடனும், ஆபத்துக்களை எதிர்பார்த்து கவனத்துடனும் இருப்பவன் என்பது தெள்ளெனப் புரிந்தது.

அவனது மூச்சுக்காற்றானது பெண்ணவளின் முகத்தில் பட்டு மென் வதனத்தையே சூடாக்கும் அளவிற்குக் குனிந்து நின்றவன் அவளை அளவெடுப்பதைப் போல் துளைத்தெடுக்கும் கண்களுடன் பார்த்திருக்க, தன்னை வேட்டையாடக் வேட்கையுடன் அரிமா ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்திருந்தும் அதன் குகைக்குள் தன்னந்தனியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் புள்ளி மானாகிய தனக்கு ஏற்பட்டுவிட்டது என்பதைப் புரிந்துக் கொண்டவளாக, உணர்ச்சிகளை உள்ளடக்கிய முகத்துடன் விக்கிரம்ம சிம்மனை ஏறிட்டு நோக்கினாள் மகிழ்வதனி.

"நீ என்ன பொற்சிலையா அல்ல மனித உருவில் தோன்றியிருக்கும் அப்ஸரஸா?"

வார்த்தைகளை நிதானமாக வெளியிட்ட விக்கிரம்ம சிம்மனின் கண்களுக்குள் தனது விழிகளை ஊடுருவவிட்டவளின் இதயத்திற்குள், ஊழிக்காலப் பிரளயம் போல் இடி புயல் மழை சூறாவளி அனைத்தும் சேர்ந்து அடிக்கத் துவங்கின.

ஆயினும் இந்தப் பதினேழு பிராயத்திற்குள்ளாகவே அசாதாரணச் சந்தர்ப்பங்களையும் மிகப்பெரிய சிக்கல்களையும் அபாயகரமான நிலைமைகளையும் சந்தித்திருந்தவளிற்கு, எச்சூழ்நிலையிலும் தன்னைக் கட்டுக்குள் வைத்துப் பழக்கியிருந்தவளிற்கு, எப்பேற்பட்ட வீரனானாலும் பெண் பித்தர்களின் பலவீனங்களை நன்கு ஆராய்ந்து வந்திருந்தவளிற்கு, இந்நிமிடம் விக்கிரம்ம சிம்மனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது அப்படி ஒன்றும் கடினமாயில்லை.

அவனது புகழ்சிக்கு தான் மயங்கியது போன்ற சாயலை அகன்று நீண்ட விழிகளில் கொணர்ந்தவள், கரங்களில் ஒன்றை சற்று மேலேறி நுதழில் கலைந்துக் படிந்திருக்கும் முடிக்குழலை வசீகரிக்கும் மெல்லிய முறுவலோடு சரிப்படுத்த,

மங்கையவளின் முல்லை மலரை ஒத்திருக்கும் பிஞ்சு விரல்களையும், கறுத்த குழல் விலகியதால் கருநிற வானில் அடர்ந்து கிடக்கும் மேகத்தை மின்னலொன்று கிழித்துக் கொண்டு வெளிவருவது போன்றிருந்த கமல முகத்தையும்,

செந்நிற பூமொட்டுகளைச் சுமந்ததைப் போன்று சொக்க வைக்கும் அழகுடன் முறுவலில் விரிந்திருக்கும் பங்கய மலர் அதரங்களையும், செம்பட்டு போர்வையைப் போர்த்தியிருப்பதைப் போன்று மிணுக்கும் கன்னங்களும், இருக்கத் தொடுத்த கரு மணிகள் வளைந்துக் கிடந்த செக்கசெவேலென்ற கழுத்தும் விக்கிரம்ம சிம்மனின் தாபத்தைத் தட்டி எழுப்பத் துவங்கியது.

அவளது பளிங்குக் கழுத்திற்கும் கீழ் தனது மோகப்பார்வையைக் கொண்டு சென்றவனின் கண்களில், நன்றாக மேலெழும்பி பின் கீழறிங்கியிருக்கும் இளையவளின் கொங்கைகளும், இவற்றைத் தாங்கும் சக்தியை உனக்கு யார் கொடுத்தது என்று இமைகளைப் படபடக்க வைக்கும் சிறுத்த கொடி இடையும், அதற்கும் கீழ் அணிந்திருக்கும் சேலையையும் மீறி வரிவடிவங்களாகத் தெரியும் பருத்த தொடைகளும், நிலத்தில் ஊன்றியிருக்கிறதா இல்லையா என்பது போல் ஐயுறவை உருவாக்கும் செக்கச் சிவந்த மலர் பாதங்களும் அவளை அக்கணமே தனது பள்ளியறைக்கு ஏந்தி செல்லும் விரச வேட்கையை அரசனின் இதயத்தில் வீறு கொண்டு எழச் செய்தன..

"தங்கேதி தேசத்தில் எங்குப் பார்க்கினும் இத்தகைய அழகு பாவையைக் காண முடியாது.. அப்பேற்பட்ட அழகு இன்று எனது கைகளுக்கு எட்டும் தூரத்தில் விரிந்து கிடக்கின்றது.. எனது உதவியை நாடி ஓடி வந்திருக்கின்றது.. உனது பேரழகிற்கு முன் நான் உனது அடிமை.. சொல் வஞ்சிக்கொடி, என்னால் உனக்கு ஆக வேண்டியது என்ன?"

சொற்களிலும் சாரீரத்திலும் கண்களிலும் மகிழ்வதனியை எத்தகைய விதத்திலாவது கபளீகரம் செய்ய வேண்டும் என்ற காம உணர்ச்சியே மிகுந்துக் கிடக்க, உதடுகளை விரித்துச் சிரித்தவாறே பேசிக் கொண்டிருப்பவனின் உள்நோக்கம் புரிந்தும், தான் வந்திருக்கும் காரியத்தை நிறைவேற்ற இவன் வழிக்கு தான் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்துக் கொண்டவளாக மெல்லிய குரலில் பேசத் துவங்கினாள் மகிழ்வதனி.

"வேந்தே! சேனாதிபதியாரிடம் என்னைப் பற்றி நேற்று மாலையே நான் தெரிவித்துவிட்டேன்.. அவரும் இந்நேரம் உங்களிடம் என்னைப் பற்றி அறிவித்திருப்பார்.. தந்தை இல்லாத, உற்றார் உறவினர் ஒருவரும் அல்லாத பெண் நான்.. எனக்கென்று ஓர் உறவாக இருந்து வந்த எனது அன்னையையும் சில நாட்களுக்கு முன் பறிகொடுத்துவிட்டேன்.. அவர் இருந்த ஊரில் என்னால் இனி தனித்து வாழ இயலாது.. அவரின் நினைவுகள் அவ்வூரில் எங்கும் மிதந்து கிடக்கின்றன, அவை என்னை வாட்டி வதைக்கின்றன.. ஆகையால் தான் பிழைப்பு தேடி இவ்வூருக்கு வந்தேன்.. உங்களது நந்தவனத்தின் வழியாகத் தான் சேனாதிபதியார் என்னை இம்மாளிகைக்கு அழைத்து வந்தார்.. இங்கு இருக்கும் மலர்களைக் கொய்து மாலைகளாகத் தொடுத்து கோவில்களுக்கும், வீட்டில் பூஜைகளுக்கும், பெண்டிர் தலையில் சூடுவதற்கும் விற்பனை செய்து நான் பிழைத்துக் கொள்வேன்.. அதற்கு எனக்கு ஒரு வழி வகுத்துக் கொடுத்தால் நான் மரணிக்கும் வரையிலும் உங்களை மறக்கமாட்டேன்.."

குழலிசைக் குரலில் தேனை சொட்டும் தொனியில் பேசுபவளை பிரம்மைத் தட்டிய இதயத்துடன் பார்த்திருந்த விக்கிரம்ம சிம்மன்,

"வஞ்சிக்கொடி, சேனாதிபதி உனது நிலையையும், எதிர்பார்ப்புகளையும் எனக்குத் தெரிவித்துவிட்டார் தான்... ஆனாலும் உன்னை இவ்வூரில் தனித்து இருக்க அனுமதிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை.. ஏனெனில் உனது அழகு, மிகுந்த அபாயகரமான அழகு.. எனது ராஜ்யத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு உண்டு தான்.. ஆனால் எந்நேரமும் உன்னைக் காக்க உன்னால் இயலாது.. என் மாளிகையிலேயே..." என்று முடிக்கவில்லை.

"உங்களது வார்த்தைகளை மறுப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் அரசே.. என்னால் எந்த நேரமும் என்னைக் காத்துக்கொள்ள இயலும்.. என்னுடைய பிழைப்புக்கு வழி வகுத்துத் தாருங்கள்.. நான் அறிந்தவரை வேணி மாநகரத்தில் அமைந்திருக்கும் கோவில்களிலும் பூந்தோட்டங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.. ஆகையால் நான் மாளிகைக்கு வெளியில் தங்கியிருந்தால் அத்தோட்டங்களுக்கும் சென்று வர எனக்கு எளிதாக இருக்கும்.. அவ்வப்பொழுது உங்களது அந்தப்புர நந்தவனத்திலும் பூக்களைப் பறிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்குங்கள்.. இது தான் என்னுடைய இப்பொழுதைய தேவை.."

"வஞ்சிக்கொடி, மீண்டும் வற்புறுத்துகிறேன் என்று எண்ணாதே.. உனது அழகிற்கு நீ மலர் வியாபாரம் செய்துதான் பிழைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. ஆகையால் நீ இந்த மாளிகையிலேயே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்கிறேன்.."

"இல்லை அரசே.. அது தவறாகிவிடும்.."

மீண்டும் மீண்டும் தனது விண்ணப்பதை மறுப்பவளைக் கண்டு உள்ளூர எரிச்சலும் சீற்றமும் ஆக்கிரமிக்கத் துவங்கினாலும் 'எட்டாத கனி ஒன்று தானாகத் தனது கரங்களில் விழுந்திருக்கும் பொழுது அதனைக் கடித்துச் சுவைக்காது விட்டுவிட முடியுமா' என்று நினைத்துக் கொண்டவனாக, தன் பொறுமை எல்லையைக் கடக்காது அடக்கியவன்,

"வஞ்சிக்கொடி.. நான் விக்கிரம்ம சிம்மன்.. இந்தச் சிம்ம ராஜ்யத்தின் மன்னன்.. எனக்குக் கீழ் பணி புரியும் உன்னைத் தவறாக நினைக்கும் துணிவு இங்கு ஒருவருக்கும் கிடையாது..." என்றான் அதிகாரமும் ஆளுமையையும் கலந்த குரலில் நிமிர்ந்து நின்றவனாக..

ஆயினும் இந்த மாளிகையில் இவனது பார்வை வட்டத்திற்குள்ளேயே இருப்பது அறிந்தே சிதையில் குதிப்பது போன்று என்பதை நன்றாக உணர்ந்துக் கொண்டவளாக,

"மன்னிக்க வேண்டும் அரசே.. எனது பிழைப்பிற்கு ஏதேனும் உங்களால் உதவி புரிய முடிந்தால் செய்யுங்கள்.. இல்லையேல் நான் இன்றே புறப்படுகின்றேன்.." என்றவாறே மாளிகையின் வாயிலை நோக்கி நடக்க, மகிழ்வதனியின் அழகில் மதிமயங்கி கிடந்த விக்கிரம்ம சிம்மனிற்கு அத்தனை எளிதில் அவளை விட்டுக்கொடுக்க இயலவில்லை..

வேறு வழியின்றிச் சம்மதித்தவன் அவள் தங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதிக்கொடுக்க, மெல்ல தன் மீது புரண்டு கொண்டிருக்கும் அவனது கரத்தை விலக்கியவள் உதடுகளில் நகையை நெளியவிட்டவாறே வெளியேற, அரசனாகிய தனது கரங்களை அவள் புறந்தள்ளியதில் உள்ளத்திற்குள் மீண்டும் வெகுண்டெழுந்தாலும், சட்டென்று அவள் திரும்பிய போதும், மெல்ல அடிகள் எடுத்து வைத்து நடந்த போதும் அசைந்து கொண்டிருந்த அவளது பின்னழகை கண்டு இன்ப உலகிற்குச் சென்று கொண்டிருந்த விக்கிரம்ம சிம்மனின் உள்ளத்தில் அவளை அடையும் நாளை எண்ணிய வேட்கை தீவிரமாக உதயமாகிக் கொண்டிருந்தது.

ஆனால் மகிழ்வதனின் நல்ல நேரமோ அல்லது விக்கிரம்ம சிம்மனின் போதாத காலமோ, மறுநாளே அவன் தங்கேதி தேசத்தை விட்டு அரசியல் காரணமாக, வெகு தொலைவு செல்ல நேர்ந்தது.

******************************************************************************************ஆதிநல்லூர் மாநகரம்..

விஜயேந்திர வர்மரின் அரண்மனையின் பின் புறம் அமைந்திருந்த, இளவரசன் உதயேந்திர வர்மனின் தனி மாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குதிரை இலாயம்.

"நீ என்ன நினைக்கின்றாய் என்று எனக்குப் புரிகின்றது பைரவா? நமது கணிப்பு எப்பொழுது தவறியிருக்கின்றது இப்பொழுது தவறுவதற்கு? அரசரின் கட்டளைகளையும் இந்த இராஜ்யத்தின் விதிகளையும் நாம் மீற கூடாது, ஆனால் மீறியே ஆக வேண்டும் எனும் பட்சத்தில் அதற்குப் பின் நடப்பதைப் பற்றிக் கவலைக்கொள்வது நம்மிருவருக்கும் அழகா என்ன, சொல்? அரசர் அனுப்பியிருந்த ஒற்றர்கள் நம் எதிரிகளை வேவுப் பார்த்து வந்து பின் நடக்கவிருப்பதைக் கூறும் வரை நாம் காத்திருந்தால், பிறகு நம் இராஜ்யம் ஒற்றர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டுமே.. இந்த உதயேந்திர வர்மன் இருக்கும் வரை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு நம் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டாலும் அவர்களால் ஒரு அடி கூட நமது இராஜ்யத்திற்குள் எடுத்து வைக்க முடியாது.. பாத அடி என்ன, மனதால் கூட நம்மை அடக்கி ஆள அவர்களை விடமாட்டேன்.."

தனது பிடரி மயிறை கோதிவிட்டவாறே அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த உதயேந்திரனின் வெண்ணிற புரவி 'ஆம்' என்பது போல் தலையசைக்க, மெல்லிய புன்சிரிப்பை தனது வலிய உதடுகளில் சிந்தியவன், அதன் முதுகை தடவவும் நண்பனின் செய்கையில் உடல் சிலிர்த்த பைரவன் அவனது தோளில் நட்பின் அடையாளமாய்த் தனது தலையை வைத்துப் புரட்டியது..

புரவியின் நேசத்தில் வாய்விட்டுச் சிரித்துக் கொண்ட உதயேந்திரன் அதன் கடிவாளத்தைப் பிடித்து அதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த செயற்கை சுனையில் இறக்கி, நீரை வாரி இறைத்து அதன் நான்கு கால்களையும் முதுகையும் தேய்த்துக் கழுவினான்..

வலிமையான உதயேந்திரனின் இரும்பை ஒத்தக் கரங்கள் உடல் முழுவதும் அழுந்திப் பட்டதால் ஆனந்தமாய் நீராடிக் கொண்டிருந்த புரவியின் முகத்தை நோக்கி நிமிர்ந்துப் பார்த்தவன், அதன் கழுத்திலும் இடுப்பிலும் தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டுப் பகுதிகளிலும் ஒரே இலயத்தில் தனது கரம் கொண்டு தேய்த்துக் கொண்டிருக்க,

"இடையூறுக்கு மன்னிக்கவும் இளவரசே.." என்ற குரலில் நண்பர்களின் உணர்வுகளும் ஒருங்கே ஒரே பாதையில் பயணித்தது போல் இருவருக்குமே சடாரென்று கோபம் சிலிர்த்து எழுந்தது.

மனதிற்குள் பொங்கிய சீற்றத்தை பைரவனின் மேனியைத் தேய்த்துக் கொண்டிருந்த உதயேந்திரனின் கரங்கள் திடுமெனத் தனது வேலையைத் தொடராது நிறுத்தியதன் வழியாகப் பறைசாற்ற,

தனது பற்களை வெளிகாட்டி விழிகளின் வெள்ளை பகுதியை அப்பட்டமாக வெளியே தெரியச் செய்து, காதுகளின் மடல்களையும் பின்புறம் திருப்பியவாறே தனது செறிவூட்டுதலையும் சினத்தையும் வந்திருக்கும் அவ்வீரனிற்குத் தெரியப்படுத்தியது புரவி.

ஏனெனில் உதயேந்திரனிற்கும் பைரவனிற்கும் இடையில் இருக்கும் நட்பைப் பற்றியும், அவர்கள் இருவரும் தனித்திருக்கும் சமயங்களில் எவர் குறுக்கிட்டாலும் உதயேந்திர வர்மனின் கோபத்திற்கும், கடுமையான தண்டனைகளிற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்பதனையும் அறிந்திருந்த வர்ம ராஜ்யத்தின் வீரர்களும், காவலர்களும், அரண்மனை பணியாளர்களும், நகரப் பிரஜைகளும் பைரவனை நெருங்கும் துணிவை என்றோ கைவிட்டிருந்தனர்.

அதிலும் எவ்வேலையில் தான் ஈடுப்பட்டிருந்தாலும் தன் புரவியை நீராட வைப்பதில் இருந்து அதற்குத் தாணியமும் வைக்கோலும் அளிப்பது வரையிலும் தனது கரங்களாலேயே செய்வதில் தான் உதயேந்திரனுக்குத் திருப்தி..

அவனில்லாத சமயங்களில் பைரவனுக்கு உணவளிக்கும் பணியின் காரணமாக அதனை நெருங்கும் தைரியமும், அதற்கான அனுமதியும் ஒருவனுக்கே உரித்தானது.

அது உதயேந்திரனின் ஆஸ்தான பணியாள், 'ஆரா' என உதயேந்திரனால் அழைக்கப்படும் ஆராவமுதன்.

எத்தகைய தருணங்களிலும் தனக்கு மட்டுமே கட்டுப்படும், எதிர்பார்த்தது, எதிர்பாராதது என்று சம்பவிக்கும் அனைத்து அசந்தர்ப்பமான சூழ்நிலைகளிலும் தனக்குப் பெரும் உற்ற துணையாக நிற்கும் பைரவனுக்கு, அதுவும் நேற்றைய ஆக்ரோஷமான இரவிற்குப் பிறகு சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில், திடுமென வந்து நின்ற வீரனின் மன்னிப்பு வழக்கம் போல் வர்ம இளவரசனின் உள்ளத்தைச் சிறிதும் கரைக்கவில்லை.

"தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறவனுக்கு மன்னிப்பு யாசிக்கும் தகுதியில்லை.."

அவன் குதிரையைத் தேய்ப்பதை நிறுத்தியதைக் கண்டதுமே நடுநடுங்கிப் போய் உதறெலெடுத்து நின்று கொண்டிருந்த வீரனிற்கு இளவரசனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளும், வெகு அழுத்தமும் கடுமையுமாக வெளிவந்த அதன் தொனியும் இதயத்தையே படபடவெனத் துடிக்கச் செய்ததில் முதுகு தண்டுவடத்தின் முழு நீளத்திற்கும் குளிர் பரவ,

"மீ.. மீண்டும் ம.. மன்னிக்க வேண்டும் இளவரசே... உங்களை உடனடியாக அழைத்து வர அரசரின் கட்டளை.. அரசரின் கட்டளையை மீறும் துணிவு எ.. எவருக்கு இங்கு இருக்கின்றது?" என்றான், திகிலையும் கலக்கத்தையும் வதனத்தில் ஒருங்கே கொணர்ந்து சாரீரமும் சரீரமும் தடுமாறியவாறே.

"அரசரின் கட்டளையை மீறத் துணிவில்லாதவனுக்கு இளவரசரின் கட்டளையை மீறும் தைரியும் வந்துவிட்டதோ?"

அது வரை தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த வீரனின் முகத்தையும் திரும்பிப் பார்க்காது, புரவியின் கூரிய கோபம் கொண்ட கண்களுடன் தனது சீற்றமும் எரிச்சலும் படர்ந்திருக்கும் அகங்காரப் பார்வையைக் கலந்திருந்த உதயேந்திரன் வினாவைத் தொடுத்தவாறே மெதுவாகவும் நிதானமாகவும் திரும்பிப் பார்க்க, இளவரசனின் முகம் அக்னி மலையெனச் சினத்தில் சிவந்திருந்ததைக் கண்ட அவ்வீரனின் தடித்த உதடுகள் கூட வெடவெடவென நடுங்கத் துவங்கின.

இளவரசனின் பார்வையில் வீசும் உஷ்ணத்தைத் தாங்க இயலாதவனாய் தன் உடல் முழுவதையும் வளைத்து குனிந்து வணங்கியவாறே,

"இல்லை இளவரசே.. நிச்சயமாக இல்லை.. துணிவை சுமந்துக்கொண்டு நான் இங்கு வரவில்லை.. உங்களுடன் பேச வேண்டும் என்ற அரசரின் உத்தரவிற்குப் பின்னால், புறந்தள்ள முடியாத அதி முக்கியமான காரணம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த இந்த ராஜ்யத்தின் ஒரு பிரஜையாக, வர்ம ராஜ்யத்தின் மீதான பற்றைச் சுமந்து கொண்டே நான் இங்கு வந்தேன்.. உங்களுக்கும் பைரவனிற்கும் இடையான நட்பான நேரத்தில் எவரும் நுழையக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.. அதற்கான தண்டனையையும் நான் எதிர்பார்த்தே உங்கள் முன் தோன்றியிருக்கிறேன்.." என்றான்.

நிலத்தைத் தொட்டுவிடுவது போல் அவன் குன்றி குறுகி வளைந்து நிற்கும் தோற்றத்திலும் தோரணையிலும் அதுவரை உள்ளத்திற்குள் குமுறிக் கொண்டிருந்த கோபத்தைச் சற்றே தொலைத்த உதயேந்திரன் குறுஞ்சிரிப்பை உதிர்த்தவன் வீரனின் நாட்டுப்பற்றை அவனது சொற்களின் மூலமே உணர்ந்ததில் உள்ளுக்குள் சிலிர்த்தவாறே,

"சரி, இன்னும் சிறிது நேரத்தில் தந்தையை வந்து சந்திக்கிறேன் என்று அவரிடம் சொல்.." என்றுவிட்டு மீண்டும் புரவியின் பக்கம் திரும்ப, இளவரசனின் முகம் மறு புறம் திரும்பிய அடுத்தக் கணமே அவ்வீரன் அவ்விடத்தில் இருந்து மாயமாய் மறைந்து போயிருந்தான்.

********************************************************************************

வர்ம ராஜ்யத்தின் வேந்தன் விஜயேந்திர வர்மரின் பள்ளியறை...

அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த வீரர்கள் தங்களது இளவரசனின் வரவைக் கண்டு தலை தாழ்த்தி வணங்கி அறைக்கதவை திறக்க, விலை உயர்ந்த கட்டிலும் பஞ்சணையும், அறையின் ஒவ்வொரு மூலையிலும் வெண்கல தண்டுகளின் மேல் ஜாஜ்வல்லியமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விளக்குகளும், மனதை மயக்கும் சித்திரங்களும் சிற்பங்களுமாக மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரசரின் தனி அறைக்குள் நுழைந்த மகனைக் கண்டு கோபப்பார்வை உதிர்த்தார், அவனது அன்னை, விஜயேந்திர வர்மரின் பட்டத்து அரசி அமிழ்தவல்லி தேவி.

விழிகளில் சினம் துலங்கினாலும், உன் மீது கோபம் கொள்ள என்னால் இயலுமா என்ற பாவமே படர்ந்திருக்கும் வதனத்துடன் தன்னையே பார்த்திருப்பவரைக் கண்டு விஷமமாகச் சிரித்த உதயேந்திரன்,

"அன்னையாரின் கோபத்திற்கான காரணம் என்னவோ?" என்றான், அவரின் சினத்திற்குப் பின் மறைந்திருக்கும் காரணத்தை நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தாலும் தெரியாதது போன்ற ஒரு தோரணையுடன்.

"இன்று அரசவையில் உன் வாய் உதிர்த்துக் கொண்டிருந்த சொற்களையும், அதற்குண்டான விளக்கங்களையும் நானும் கேட்டேன் என்பதே அதற்கான காரணம் உதயா.."

"எனது வார்த்தைகளில் என்ன தவறு இருக்கிறது என்று கூறுங்கள் அம்மா!"

"தவறா? இல்லை அடங்காததனமா?"

"எவருக்கு, என்று, எப்பொழுது நான் அடங்கியிருக்கிறேன் அம்மா? இன்று அடங்குவதற்கு.."

"உதயா! நீ பிறந்ததில் இருந்து ஒருவருக்கும், ஏன் உன் தந்தைக்கும் கூட நீ அடங்கி நடந்ததில்லை என்பதை அறியாத அன்னியர் அல்ல நான்.. உன்னைப் பெற்றவள்.. ஆனால் எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது.. இவ்வாறு உன் தந்தைக்கும் தெரியாது நீ அபாயகரமான காரியங்களில் ஈடுபடும் பொழுது உனக்கு ஆபத்து நேரிட்டால் அவை ஒருவருக்கும் தெரியாமலேயே போகக்கூடும் என்பதை நீ என்று தான் உணரப் போகிறாய்?"

அன்னையின் வார்த்தைகள் சினத்தில் வெளி வருவதுப்போல் தோன்றினாலும் அவை அனைத்தும் தன் மீது உள்ள அக்கறையினால் தான் என்பதைப் புரிந்துக் கொண்டவனாக அவரை நெருங்கியவன், அன்னையின் கரங்கள் இரண்டையும் தனது வலியக் கைகளால் இறுக்கப் பற்றி,

"அம்மா.. நான் என்ன பாலகனா? எனக்கு இருபத்தி நான்கு வயதாகிவிட்டது என்பதை மறந்துவிட்டீர்களா இல்லை எனது பதினாறு வயதிலேயே நான் போர்களத்தில் பலரைக் கொன்று குவித்திருக்கிறேன் என்பது உங்கள் நியாபகத்தில் இல்லையா? என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் அம்மா.." என்றான் கனிவொழுக.

"உதயா.. என் மகன் கோழையல்ல என்பதை அவனது பதினாறு வயதில் அல்ல, அவன் பாலகனாக இருக்கும் பொழுதே புரிந்து கொண்டேன்.. நமது கோவிலில் மதம் பிடித்து ஓடிக் கொண்டிருந்த யானையின் முன் சிறிய ஈட்டியுடன் சென்று அவன் நிற்க முனைந்த அன்றே, எதற்கும் அஞ்சாத வேங்கையைத் தான் நான் ஈன்றெடுத்திருக்கின்றேன் என்பதை நான் மட்டுமல்ல, இந்த வர்ம தேசமே அறிந்து கொண்டது.. பதினாறு வயதினிலே முகத்தில் இதோ இந்தக் காயத்துடன் போர்களத்தில் இருந்து திரும்பி வந்த பொழுது, எனது கலக்கத்தைக் கண்ட உன் தந்தை உன் முகத்தில் ஏற்பட்டிருப்பது சிறு காயம் தான், ஆனால் இவனால் இன்று போர்களத்தில் மாண்ட வீரர்கள் மட்டுமல்ல, காயங்கள் பட்டு உடலின் பாகங்கள் துண்டுப்பட்ட எதிரிகள் பலர் இன்னமும் போர் களத்தில் கிடக்கின்றார்கள். ஆகையால் உன் மைந்தனைப் பற்றிய கவலைகளை இனி தூரத் தள்ளிவிடு என்று கூறிய அன்றே உனது அசாத்திய வீரத்தையும், அபாயகரமான துணிவையும் நான் புரிந்து கொண்டேன்.. ஆயினும் அவை யாவும் எங்களில் ஒருவர் அறிந்தே நடந்தவை.. ஆனால் நேற்று செவ்வண்ண மலையில் நடந்த விபரீதம் எங்கள் எவருக்குமே தெரியாது ஒன்று.. நீ உன் தந்தையிடமும் கூடத் தெரிவித்திராத ஒன்று.. இது எனக்குள் பெரும் அச்சத்தை விளைவித்திருக்கின்றது. என்னை அதீத கவலையில் ஆழ்த்திவிட்டது."

பிடித்திருந்த அன்னையின் கரங்களில் அழுத்தத்தைக் கூட்டியவன் அவரது உள்ளுணர்வில் தோன்றியிருக்கும் தன்னைப் பற்றிய வேதனையைப் புரிந்துக் கொண்டவனாக,

"அம்மா.. மீண்டும் மீண்டும் நான் இதனை வலியுறுத்துவதாக எண்ண வேண்டாம்.. நான் இந்த இராஜ்யத்தின் இளவரசன்.. பிற்காலத்தில் வர்ம அரசனாக மூடிசூட்டிக் கொள்ளப்பட வேண்டியவன்.. என் வாழ்நாளில் இதனைப் போன்ற பெரும் ஆபத்து நிறைந்த தருணங்களை நான் ஏகத்துக்கும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும்.. ஆகையால் நம்ஈராஜ்யத்தைப் பாதுகாக்க நான் எங்கு எப்பொழுது செல்வேன் என்றோ, அல்லது யாரை எதிர்த்து எவரை அழிப்பேன் என்றோ எனக்கே தெரியாதபட்சத்தில், உங்களிடமோ தந்தையிடமோ அனுமதி பெற்றுச் செல்வதற்கு இயலாது.. ஆகையால் இனி என்னைப் பற்றி நீங்கள் கவலைக்கொள்வது மட்டுமல்ல, இதனைப் பற்றி இனி பேசுவதற்கும் ஒன்றுமில்லை.." என்று கூறியவாறே திரும்பியவனின் கண்கள், அருகில் பஞ்சணையில் இலேசாகத் தலைகவிழ்ந்து அமர்ந்தவாறே தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கும் தந்தையைக் கண்டு சட்டென இடுங்கின.

அன்னையின் கரங்களை விடுவித்தவன் தந்தைக்கு அருகில் சென்று,

"இந்நேரத்தில் நீங்கள் என்னை அழைத்திருக்கின்றீர்கள் என்றால் பிரச்சனை சாதாரணமானது அல்ல என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. ஆனால் உங்கள் முகத்தில் துலங்கும் யோசனையைக் கண்டால் நான் நினைத்ததை விடச் சிக்கல் சாமான்யமானது அல்ல போலவே.." என்றான் ஆழ்ந்த குரலில்.

மைந்தனின் கம்பீரக் தொனியில் சடாரென்று நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்த விஜயேந்திர வர்மனிற்கு, அவன் அறைக்குள்ளே நுழைந்ததையோ, இந்நிமிடம் வரை அவனது அன்னையிடம் பேசிக் கொண்டிருந்ததையோ தான் கவனியாது யோசனையில் ஆழ்ந்திருப்பதைத் தான் குறிப்பால் உணர்த்துகிறான் என்பது புரிந்துக் கொண்டவராக எழுந்தவர் மகனை நெருங்கினார்.

"பிரச்சனைகளுக்காக உன்னை அழைக்கவில்லை உதயேந்திரா... இன்று ஒற்றன் தெரிவித்த தகவல்களையும், நேற்று நீ கொன்று போட்டிருந்த ஐவரில் ஒருத்தி உஜ்வாலா ராஜ்யஸ்திரி என்பதையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, உஜ்வாலா ராஜ்யத்தின் அரசன் ஹர்யன்கா உஜ்வாலா ஏதோ மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறான் என்பது புலப்படுகின்றது.. அவனது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கும் பொருட்டு அதற்குத் தகுந்தார் போன்று ஒற்றர்களையும் வீரர்களையும் உஜ்வாலா ராஜ்யத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்.. நமது ராஜ்யத்தின் பாதுகாப்பையும் அதிகப்படுத்து.."

அரசரின் கட்டளைகளுக்குப் பணிவது போல் 'ஆம்' என்று தலையை மட்டும் அசைத்து வெளியேற முனைந்தவனைச் சட்டென்று தடுத்து நிறுத்தியது மேற்கொண்டு வெளிவந்த தந்தையின் சொற்கள்.

உதயேந்திரனை மேலும் நெருங்கிய விஜயேந்திர வர்மன் அவனது தோளைத் தொட்டு புதல்வனின் பருந்து விழிகளுக்குள் தனது ஆழ்ந்த பார்வை செலுத்தியவன்,

"ஒற்றர்கள் தகவல் தெரிவிக்கும் முன்னரே எதிரி வீரர்கள் நம் வர்ம கோட்டைக்குள் புக முற்படுகின்றார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும் என்று, முட்டாள்தனமாக நான் கேட்கமாட்டேன்.. ஆயினும் இதனை நான் உன்னிடம் கூறியே ஆக வேண்டும்.. உன் தந்தையாக அல்ல, இந்த ராஜ்யத்தின் அரசனாக.. நேற்று இரவு நடந்தது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது உதயேந்திரா.." என்றார், வார்த்தைகளை நிதானமாக உதிர்த்தாலும், கட்டளையிடும் தொனியில்.

அதுவரை தந்தையின் உத்தரவுகளைக் கூர்ந்துக் கவனித்து வந்த உதயேந்திரனின் விழிகளிலோ அதுவரை தவழ்ந்து வந்த கூர்மை குறைந்து, அவ்விடத்தை விஷமம் வியாபித்துக் கொள்ள, மெல்லிய நகையைக் குறும்பாய் இதழ்களில் படரவிட்டவன் ஒன்றும் பேசாது தலை வணங்கி விடைப்பெற,

"இவனை அடக்குவதென்பது ஒருவராலும் இயலாத ஒன்று.. அது இவனது தந்தையானாலும் சரி, அரசனானாலும் சரி.." என்று தந்தை முணுமுணுப்பது மைந்தனின் செவிகளைச் சேராது இல்லை..

தனது பரந்த முதுகை பெற்றோருக்கு காட்டியவாறே அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த உதயேந்திரனின் உதடுகளில் அது வரை விரிந்திருந்த சிரிப்பு மறைந்து சரேலென இறுக்கம் படர, தன்னையும் அறியாது அவனது இடது கை இடைக்கச்சையில் சொருகியிருந்த குறுவாளை அழுத்திப் பிடிக்க, மைந்தனது அளவிலடங்காத துணிவினாலும், இந்த இருபத்தி நான்கு வயதிலேயே அஞ்சா நெஞ்சம் படைத்த அவன் நடத்திக் கொண்டிருக்கும் அபாயகரமான ஆட்டங்களினாலும் ஏற்கனவே அரண்டு போயிருந்த அவனது அன்னை அமிழ்தவல்லி தேவி, வெடுக்கென்று கணவனைத் திரும்பிப் பார்த்ததில், விஜயேந்திர வர்மனின் தீட்சண்யமான விழிகளில் தெரிவது கடினமா, பெருமையா, பூரிப்பா என்று புரியாது குழம்பிப் போனார் வர்ம இளவரசனை பெற்றவள்.

வனத்தின் இருளில், சிங்கத்தின் அருகில் தனியாக அகப்பட்டுக் கொண்ட ஒரு மனதனின் இதயம் எவ்வாறு துடிக்க மறந்து உறைந்துப் போகுமோ, தன்னை நோக்கி அது எடுத்து வைக்கும் ஒரே காலடி எப்படி அவனை அதிர்ச்சியில் உறையச் செய்யுமோ, அந்த உணர்வுகளைத் தன் எதிரிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு ஏற்படுத்தும் விக்கிரம்ம சிம்மனின் கோட்டைக்குள்ளே தன்னந்தனியாக நுழைந்திருக்கும் பதினேழு பிராயமே ஆன காரிகையும்,

தீயெனச் சுடரொளி போல் பளபளப்புடன் துலங்கும் கண்களாலேயே என்னை நெருங்குவது உனக்கு உசிதமல்ல என்று தன்னை எதிர்க்கும் பகைவர்களுக்குச் சந்தேகமற நிரூபித்துக் கொண்டிருப்பவன், கோழைகள் போல் மறைமுகமாகச் சதித்திட்டம் தீட்டி தன் ராஜ்யத்தை அழிக்க முனையும் எதிரிகளைத் தனது ஆக்ரோஷமான ஆவேசமான வேட்டையால் வீழ்த்தி வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கும் இருபத்தி நான்கு பிராயமே ஆன வேங்கையும், வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டால்?

சந்திக்கும் அத்தருணத்தில் இருந்தே இரு துருவங்கள் போன்று ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டால், தீராத வெறுப்பை இளம் உள்ளங்களில் சுமந்து பகைமை பாராட்டிக் கொண்டால், விளைவது விபரீதமா விரோதமா அல்லது விவாகமா?

தொடரும்...
 
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

நீங்கள் அனைவரும் மிக ஆர்வமாய் உதயாவை எதிர்ப்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகின்றது.. ஆயினும் இந்தக் கதையில் ஏறக்குறைய நாயகனுக்கு இருக்கும் முக்கியத்துவம் நாயகிக்கும் கொடுத்திருக்கிறேன்.. ஆகையால் தற்போது இருவரும் சரி சமமாகக் கதையில் வலம் வருவார்கள்.. இன்னும் சில அத்தியாயங்களில் உதயேந்திர வர்மனும் மகிழ்வதனியும் சந்தித்துக் கொள்வார்கள்.. அதுவரை சிறிதே பொறுங்கள் ப்ளீஸ்..
உதயேந்திர வர்மனின் அத்தியாயம் 4 பதிவு செய்திருக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கணவனே கண்கண்ட எதிரி

https://jlineartsandsilks.com/…/kanavane-kankanda-ethiri-jb/

காதலா கர்வமா
https://jlineartsandsilks.com/product/kaathalaaa-karvama/

மலரினும் மெல்லியவள்
https://jlineartsandsilks.com/product/malarinum-meliyaval/

உங்கள்
ஜேபி [JB]

Jline Arts and Silks (Jline Exotic Arts)
Jline Infotech (IT Consultancy)
Jline Publications

https://www.facebook.com/photo.php?fbid=477831973049391&set=a.154619982037260&type=3&eid=ARBkkB4v_4bCFXYhZbs2C0pUVoKINzMxGEkF69H_C04_zdLGNC11K30zYPNBVchke68uslT67tfGETCI
 
Chitra Balaji

New member
Super Super Super mam.. Semma semma episode... Sengodan ah மதிவதனி ah அரண்மனை ku kutikitu vanraara.. Avaruku அவரோட velai செய்யும் இடத்தை விட்டு அரண்மனை kula vera engayum போக அனும‌தி இல்ல ah... Entha பிரச்சனை வந்தாலும் avala வேணி nagarathula இருந்து வெளியேற உதவி panranu solli irukaaru.... Athukula அழகு வேல் vanthutaan... Romba romba உஷாரா ஒரு ஒரு அடி yum எடுத்து veikiran avangalluku santhegam varaatha maari romba innocent maari avala avanga kita kaamchikira.. அந்த புறம் avanodaya மோசமான charater ah எடுத்து kaamikiraa மாறியே vadivamachi irukaan avanodaya அந்த புறம் வர்ணனை semma.... எப்படியோ அவன் kita semma உஷாரா பேசி அவன் kita அனுமதி vaangitu அங்க இருந்து kalambita semma சாமர்த்தியம்.... இங்க udhay yum avanoda பைரவன் yum semma close friends போல avangaloda Time la யாரும் ulla vara kudaatha அரசர் kuptaaru solla வந்தவன் oda குரல் keta ஒடனே rendu perukum என்ன கோவம்..... Avanoda அம்மா vuku ஒரே கவலை இவன் yaarukum sollamal தனியா போய் அந்த suzhnilai ah kai aadathu avanuku எதாவது aaidumo nu... But அவன் என்ன veram pa பதினாறு வயசுலயே போர் ku poittu வந்தவன் ah... உஜ்வாலா நாட்டு enna திட்டம் திட்டி irukaanganu theriyala pathikkaappu பலம் படுத்த solli irukaaru.... Udhay.. மதிவதனி rendu பேர் yum meet பண்ணினா.... Eagerly waiting for next episode mam... Semma semma lively ah irunthu episode super Super Super mam
 
KaniRamesh

New member
Wowwww akka ena oru narration itha solli enaku bore adichitu...pakka vikaraman oda anthapuram atha pathina varnanai den avanoda charactr anga irukura paintings laiye theriya paduthuna vitham super ka...vathani epadiyo avana samalichita oruvelai antha rajjiyam vathani appa odatha😱😱... Nxt en Athu so cute bairava n athu oda frndshp n avangaloda kovam chanceless ka...rendu perum ore mathiri thnk panranga...En athu avanga amma kita pesinathu n vijayendar kita pesina thoranai,appa solratha kekura mathiri buildup bt kannula kurumbu so sweet of him....en athu vum vathani yum santhicha epadi irukum therinjika waitng
 
Suhana

Member
Semma ka 💐... Vadhani... Brilliant move to vikraman... 🤣🤣🤣...intha alahuvel irukanaee 😬😬😬😬... Avanum avan moonchi yum 😡😡😡Udhai nd bairava frdship... 😍 😍 😍 😍 Bairava kuda moraikarathu.. 🙂🙂.. Paya pulla..appa kitta Avalo bammitu... Velila porappa.. Srikuthu 🤣🤣.. Udhai darling... U rock dr 😘😘😘
 
vidhya

New member
Hai JB ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்..அடுத்து என்ன என்று படிக்க ஆர்வமாகவும் உள்ளது..
மகிழ்வதனி எதற்கு அந்த கோட்டைக்கு வந்தாள், அப்புறம் என்ன ஆகும், உதயேந்திர வர்மன் வந்து மீட்பாரா?
 
Sumathi mathi

New member
W
View attachment 104

Wow awesome
 
Top