உதயேந்திர வர்மன்.. முன்னுரை!

உதயேந்திர வர்மன்..

இவன் சரித்திரத்தில் இல்லாதிருக்கக் கூடும், அல்லது காலத்தால் மறக்கடிக்கப்படக் கூடும், ஆயினும் இவனது நீண்ட கூரிய வாள் தீமையை வெட்டி வீழ்த்தும்!

He may not be in the History, or may be forgotten by time, yet his long sword will triumph over evil!

 

முன்னுரை…

 

வழக்கமாகச் சரித்திர நாவல்களை எழுதும் ஆசிரியர்கள், சரித்திரத்தில் இருந்து ஒரு பகுதியையோ அல்லது பல பகுதிகளையோ ஒன்று சேர்த்து, அதனூடே சில கற்பனை கதாப்பாத்திரங்களைப் புகுத்தி நாவல்களைப் படைப்பார்கள்.. ஆனால் நான் புனைந்திருக்கும் இந்த ‘உதயேந்திர வர்மன்’ என்ற நாவல் முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனையே.. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் மட்டும் அல்ல, இடங்கள் நிகழ்வுகள் போர்கள் அனைத்துமே எனது கற்பனையில் இருந்து உருவாக்கப்பட்டவைகளே..

தங்கேதி தேசம்..

இத்தேசத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தான் கதையாகப் புனைந்திருக்கிறேன்.. இப்படி ஒரு தேசம் இருக்கிறதா அல்லது இருந்ததா என்று தயவு செய்து உலக வரைப்படத்தில் தேடாதீர்கள்.. இத்தேசமே எனது கற்பனை தான்!

தங்கேதி தேசத்தின் வட பகுதியை ஆண்டு வருபவன் ஷாஸ்ரஸாத் மாயி.. கொடுங்கோலன்.. எந்த அளவிற்கு அவன் கொடூரமானவன் என்றால், தன் மனைவியையும், தன் உடலில் உள்ள குறையை கண்டறிந்த வைத்தியரையும் கொன்ற, ஈவு இரக்கமற்ற கொடூரன்..

தான் சந்தித்த பெண்களிலேயே பேரழகியான அத்வதாவை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்டவன்.. திருமணமாகி பல வருடங்கள் சென்ற பிறகும் குழந்தை பேரில்லாதுப் போக, வைத்தியரை அழைத்து மனைவியைப் பரிசோதிக்கச் செய்யச் சொன்னான் மாயி. அவளைப் பரிசோதித்து முடித்த வைத்தியர் இரகசியமாக அரசனை சந்தித்தவர், குழந்தைப் பெற இயலாத குறை அவனுடைய மனைவிக்கு இல்லை என்று தெரியப்படுத்தினார். பின் அரசனுக்கும் பரிசோதனை செய்வதாகக் கூறியவர் இறுதியில் அவனுக்கு வாரிசு என்பதே இருக்காது என்று உறுதியாகக் கூற, தனது உடல் நிலை மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று அவரை இரகசியமாகக் கொலை செய்தான் அரசன்.

ஆயினும் இந்த இரகசியம் அவனது மனைவிக்குத் தெரிந்துப் போக, கணவன் பால் இருந்த அவளது அன்பு குறைந்தது மட்டுமல்லாது, அவளின் நடவடிக்கைகளும் நாளடைவில் மாறத் துவங்கியது.. இதனால் மனம் வெறுப்புற்ற ஷாஸ்ரஸாத் மாயி, மனைவியின் நிராகரிப்பையும், தகாத செய்கைகளையும் தாங்க இயலாதவனாக அவளையும் ஒருவரும் அறியாத வகையில் கொன்று போட்டான்..

பின்னர், அவளின் மீது உள்ள சீற்றத்தின் காரணமாகப் பெண்ணினத்தையே வெறுத்த அரசன் பெண்கள் அனைவருமே தீயவர்கள், ஆண்களைத் தங்களுக்குள் வசப்படுத்தி வேண்டியதை சாதித்துக்கொள்வர் என்று முடிவெடுத்தவன், ஏற்கனவே கொடியவனாக இருந்தவன், ஒரு அரக்கனாகவே மாறிப்போனான்.

அதாவது அவனது கொடூரத்திற்கு எல்லையே இல்லாத அளவிற்கான செய்கைகளில் ஈடுபடத் துவங்கினான்.

அவற்றில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிப்பெண்ணைச் சிறைப்பிடிக்க இரகசிய உத்தரவிட்டவன், அன்று இரவு தனது பள்ளியறையில் அவளின் கன்னித்தன்மையை அழித்துவிட்டு, பின் பொழுது புலரும் முன்பே அவளைக் கொலை செய்துவிடுவான்..

இவ்வாறு அவனது இச்சைக்குப் பலியாகி உயிர் துறந்த பெண்கள் ஏராளம்!

அத்தகைய கொடூரன் வட தங்கேதியை மட்டும் ஆட்சி செய்தால் பற்றாது, தங்கேதி தேசம் முழுவதையும் தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையுடன், ஒவ்வொரு சிற்றசின் மீதும் போர் தொடுத்து அவர்களைத் தனது மாயி ராஜ்யத்திற்குக் கீழ் பணியச் செய்தான்…

அவனுக்குத் துணைப் புரிய தயாராக இருந்தான், தெற்கு தேசத்தின் ஒரு பகுதியான சிம்ம ராஜ்யத்தை ஆண்டு வந்த விக்கிரம்ம சிம்மன் என்ற சிற்றரசன்..

ஏறக்குறைய பாதித் தேசத்தை வளைத்துப் பிடித்த ஷாஸ்ரஸாத் மாயியினால், தெற்கு தங்கேதியை மட்டும் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வர இயலவில்லை..

அதற்குக் காரணம் தெற்கு தங்கேதியின் மற்றுமொரு பகுதியை ஆண்டு வந்த வர்ம ராஜ்யத்தின் அரசன் விஜயேந்திர வர்மனின் ஒரே புதல்வன், இளவரசன் உதயேந்திர வர்மன்..

மனித ரூபத்தில் இருக்கும் அரக்கன் என்று பெயர் பெற்ற ஷாஸ்ரஸாத் மாயியிடம் இருந்தும், நரியின் கள்ளத்தனம் கொண்ட விக்கிரம்ம சிம்மனிடம் இருந்தும், தங்கேதி தேசத்தை எவ்வாறு இளவரசன் காத்தான் என்பது தான் “உதயேந்திர வர்மன்” கதையின் கரு.

இக்கற்பனைக் கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பேரழகு பதுமையான மகிழ்வதனி என்ற கதாப்பாத்திரத்தை, உதயேந்திர வர்மனின் காதலியாகக் கொணர்ந்திருக்கின்றேன்..

எவருக்கும் அடிபணியாத, பெற்றோரைத் தவிர ஒருவருக்கும் தலைவணங்காத, கர்வம் ஆளுமை அகங்காரம் என்ற அனைத்திற்கும் மொத்த உருவமும் நானே என்பது போல் வலம் வரும் வர்ம இளவரசனை, தனது ஒரே பார்வையில் அடிபணிய வைத்த பெருமை இந்த அழகுப் பாவையையே சேரும்..

ஒர் இரவு நேரத்தில் கானகத்தில் புகுந்தவன் ஒருவன், என்றும் காணாத ஒரு புத்தம் புது மலரைக் கண்டு விட்டால் எந்த நிலையை அடைவானோ, அந்த நிலையை வர்ம இளவரசன் அடைந்திருக்கும் தருணத்தில், அவனது எஃக்கு இதயத்தை தன் விழிகளின் மலர்கணைகளால் பிளக்கிறாள் மகிழ்வதனி..

நல்லவளா தீயவளா என்று ஊகிக்க முடியாத பெரும் புதிராகத் திகழ்பவள், கண்ட விநாடியே ஆடவனது சித்தத்துக்குள் நுழைந்து, அவனது மனதை பறித்தெடுக்கும், பதினேழு பிராயமே ஆன பேரழகு பைங்கிளி இவள்..

வாட்போரையும், காதல் போரையும் இணைத்து ராஜதந்திரங்களையும் போர் வியூகங்களையும் கலந்து இக்கதையை நான் உருவாக்கியிருக்கிறேன்.

என் கற்பனைக்கு உட்பட்ட அளவு வர்ணனைகளையும், கதையின் சுவைக்கு மெருகூட்டும் வகையில் மனதிற்கு உவகை அளிக்கும் காதலையும் தாராளமாக இணைத்து எழுதியிருக்கிறேன். எனது கதைகளில் எப்பொழுதும் உள்ள காதல் ரசம் சொட்டும் கட்டங்கள், காட்சிகள் உதயேந்திர வர்மனிலும் இருக்கும்..

கதையின் அஸ்திவார அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்துவிட்டேன்.

கதை எப்படி இருக்கின்றது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது வாசகர்களாகிய உங்களது பொறுப்பு.. சரித்திர (சரித்திரத்தில் அல்லாத) கதையை நான் எழுதுவது இதுவே முதன் முறை..

ஆகையால் ஏதாவது பிழைகளோ குறைகளோ இருப்பின், உங்களது பண்பட்ட கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்..

உதயேந்திர வர்மன் வழக்கம் போல் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவான்…

முதல் அத்தியாயம் ஆகஸ்ட் 7, புதன்கிழமை, அதற்கு முன் ஒரு குட்டி டீசர்

 

*****************************************************

 

டீஸர்:

 

எனக்கு வேண்டியது நான் இவ்விடத்தை விட்டு வெளியேறும் வரையில் இவனது கழுகுக் கண்ணில் நான் இப்பொழுது இருக்கும் அலங்கோலம் படக்கூடாது என்று மட்டும் எண்ணியவளாக, சிறிதும் யோசிக்காது,

“எனது பரிசை நான் கேட்டது போல், உங்களது பரிசையும் நீங்களே கூறிவிடுங்கள் இளவரசே..” என்றாள்

“உன்னிடம் இருக்கும் ஒன்றை நான் எடுத்துக் கொள்வேன்.. அதனை எனக்கு உரிமையாக்கிக் கொள்வேன்..”

திடுக்கிட்டவளாக, “என்னது அது?” என்றாள்.

“அதனை நான் வெற்றிப்பெற்ற பின்புக் கூறுகிறேன்..”

ஏதோ வில்லங்கமாக அவன் கேட்டுவிட்டால் என்று ஒரு நொடி தோன்றினாலும், தனது ஆடைக் கிழிந்திருக்கும் இந்நிலையில் தற்போது அவனது கண்கட்டை அவிழ்க்காது இருக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் உணர்ந்துக் கொண்டவளாக, அவனது நிபந்தனைக்கு ஆமோதித்தாள்..

ஆனால் வர்ம இளவரசன் கேட்கவிருக்கும் பரிசு எத்தனை விபரீதமானது என்பதை அறியாத பேதையாக.

அவள் சரி என்ற மறுவிநாடியே அதுவரை மெதுவாக வாளை சுழற்றிக் கொண்டிருந்த அவனது கரங்கள் திடீரெனெ வேகத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் மகிழ்வதனியின் வாளைத் தாக்கத் துவங்கியது.

அவனது அதிகப்படியான வேகத்தில் அரண்டுப் போனவளாக ஒரு வேளை அவன் வெற்றிப் பெற்றுவிட்டால் என்று பெண்ணவளின் புத்தி அலறியதில் அவனது கழுத்தை நோக்கி வாளை வீச, சடாரென்று குனிந்து மறுபுறம் நகரந்தவனின் தலையின் பின் பகுதி மகிழ்வதனியில் இடது கரத்தில் பட்டதில், அவளையும் அறியாது அவளது விரல்களில் சிக்கிய உதயேந்திரனின் கண்கட்டு, தானாக அவிழ்ந்து போனது.

அனைத்துமே விநாடிகள் சிலவற்றுக்குள் நடந்தேறிவிட, மெதுவாகப் பறந்த அத்துணி நிலத்தில் விழுந்ததுமே திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகளை விஷமமும் தாபமும் வழிந்தோடும் பார்வையோடு பார்த்திருந்த இளவரசனின் பார்வை, அடுத்து தாவிய இடத்தைக் கண்டு நாணத்தில் துடிதுடித்துப் போனாள் உதயேந்திரனின் மனம் கவர்ந்த அவனவள்.

வெட்கமும் கூச்சமும் அதனுடன் சரிசமமாகக் கலந்திருக்கும் திகிலுமாகத் தடுமாறியவளின் உணர்வுகளை உணர்ந்து கொண்ட உதயேந்திரனின் வாள், இது தான் சரியான சமயம் என்பது போல் அவளது வாளை ஓங்கி அடிக்க, பல அடிகள் தூரம் போய் விழுந்த வாளைக் கூடத் திரும்பிப் பார்க்காது, சட்டென்று தனது இரு கரங்களால் மார்பை மூடிக் கொண்டவள் அவனுக்கு முதுகுக் காட்டி திரும்பியவாறே நின்றாள்.

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க தத்தளித்து நின்றிருந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சிறிது நேரம் கொடுத்த உதயேந்திர வர்மன், தனது வாளை அருகில் இருந்த மேடையின் மீது வைத்தவன் கண்களில் குறும்புத் துலங்க உதடுகளில் இளநகைப் படர்ந்திருக்க அவளை மேலும் நெருங்கியவாறே பெண்ணவளின் செவியின் ஓரம் குனிந்து,

“வெற்றிப் பெற்றவனின் பரிசை நான் இப்பொழுது கேட்கலாமா?” என்றான் கரகரக்கும் குரலில்.

அவனைத் திரும்பிப் பார்க்க இயலாதவளாக, “இ… இல்லை, நீ.. நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்.. உங்களது கண்கட்டை நீங்கள் போட்டியின் முடிவு தெரியும் வரை அவிழ்த்திருக்கக் கூடாது.. நீங்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல..” என்றாள் தவித்துத் தத்தளிக்கும் மனத்துடன், தடுமாறும் குரலுடன்..

“ஏமாற்றினேனா.. நானா? நானாக எனது கட்டை அவிழ்க்க மாட்டேன் என்று தான் கூறியிருந்தேன் மகிழ்வதனி.. அதே போல் கட்டை அவிழ்த்தது நானல்ல என்றும் உனக்குத் தெரியும்.. அப்படி என்றால் வெற்றிப்பெற்றதும் நான் தானே..”

தனது கழுத்திற்கருகே சூடான மூச்சுக்காற்றுப் படக் கிசுகிசுப்பாகக் கேட்பவனின் அருகாமையில் மங்கையவளின் பூவுடல் வெளிப்படையாக நடுங்கத் துவங்க, இவன் கேட்கப் போகும் பரிசு நிச்சயம் என்னால் கொடுக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும் என்பது புரிந்து அதிர்ந்ததில், மலர் மேனியவளின் முகத்திலும் பொட்டுப்பொட்டாக வியர்வைத் துளிகள் படரத் துவங்க, சட்டென்று அவனை விட்டு நகரப் போனவளின் கரத்தைப் பற்றி இழுத்தவனின் வேகத்தில் பொத்தென்று அவனது அகன்ற மார்பின் மீதே விழுந்தாள் மகிழ்வதனி.

திடுமெனத் தன்னை இழுத்தவனைக் கண்டு அதிர்ந்திருந்தாலும் ஏனோ அந்நிமிடத்தில் அவனது முகத்தையோ, அதனில் தன்னை வண்டு போல் பருகத் துடித்திருக்கும் கூரிய விழிகளையோ பார்க்கத் தைரியமற்று அவன் மீது துவண்டுக் கிடந்தவளின் புத்தி, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தேடத் துவங்கியது.

ஆனால் அவளின் அந்தத் திடீர் மௌனம் தன்னிடம் இருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேட அவள் எடுத்துக் கொண்டிருக்கும் அவகாசமே என்பதைப் புரிந்து கொண்ட உதயேந்திரன், விநாடி நேரத்தைக் கூட வீணடிக்க விரும்பாதவன் போல் தனது மார்பில் புதைந்துப் போயிருந்தவளின் முகத்தைத் தன்னை நோக்கி வெடுக்கென்று நிமிர்த்த, மறு விநாடி அவள் மூச்சுக் கூட விட முடியாதளவற்கு அவனது வலிய உதடுகளுக்குள் பேதையவளது மெல்லிய உதடுகள், இருக்கும் இடமே தெரியாதது போல் ஆழப்புதைந்து போனது.

பல மணித்துளிகள் நீடித்துக் கொண்டிருக்கும் அந்த இதழ் யுத்தத்தில் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தனது உதடுகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளப் போராடியவளின் போராட்டங்களை, வெகு இலகுவாக அடக்கியிருந்தான் வர்ம இளவரசன்.

உன்னை விட என் மனம் இடங்கொடுக்கவில்லையேடி என்பது போல் மென்மேலும் அவளுக்குள் மூழ்கத் துவங்க, அவனது வலிய உதடுகளினால் வெகு நேரம் கவ்வப்பட்டிருந்ததால், பெண்ணவளின் மெல்லிய அதரங்களில் சிறு துளியாக அரும்பிய உதிரத்தின் சுவையை உணர்ந்து கொண்ட பின்பே, அவளை மெல்ல விடுவித்தது இளவரசனின் கடினமான உதடுகள்.

மூச்சு விடக்கூட உன்னை அனுமதிக்க மாட்டேன் என்பது போல் வெகு நேரம் அவளது ஸ்வாசத்தைத் தடை செய்திருந்தவன், அவனது முரட்டு முத்தத்தின் விளைவால் பற்கள் பதிந்து பேதையவளின் செவ்வதரங்களில் குருதி வரச் செய்திருப்பவன்…

தற்போது ஒருவருமற்ற கூடமாக இருந்தாலும் ஒரு வேளை எவரேனும் திடுமென வந்திருந்தால், தாங்கள் இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை எள்ளளவும் யோசிக்காது, உடும்புப் பிடியாகத் தனது இதழ்களைக் கடித்திருந்தவன்..

இவனை என்ன செய்வது?

சிந்தனைகளில் புத்தி மூழ்கடிக்கப்பட்டிருக்க, திரண்டிருந்த விழி நீர் மணிகளுடன் கலக்கமும் அதிர்ச்சியும் சுமந்திருந்த முகத்துடன் அவனையே பார்த்திருந்தவள், அப்பொழுது தான் கவனித்தாள்.. அவனைப் புறம் தள்ள முயற்சித்துக் கொண்டிருந்ததில் ஒரு கரம் அவனது விரிந்த மார்பின் மீதும், மறுபுறம் கங்கணம் அணிந்திருந்த அவனது இடது கரப் புஜத்தின் மீதுமே இருந்ததே ஒழிய, தன்னை மறைக்க அவள் மீண்டும் மறந்துப் போனதை..

திடுமெனச் சுயநினைவு பெற்றவள் போல் தன்னை மறைத்துக் கொண்டவளாக அவனை விட்டு அகன்றவள் பயிற்சிக் கூடத்தின் வாயிலை நோக்கி ஓட,

“உரியவன் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக உன்னை மறைத்துக் கொண்டு ஓடுகின்றாய் மகிழ்வதனி.. ஆனால் இக்கூடத்தை நீ தாண்டினால், உனது புரவியில் துவங்கி வழியில் தென்படுவோர் அனைவரின் கண்களும் உன் மீது தான் இருக்கும் என்பதை மறந்துவிட்டாயோ..” என்றான் கணீரென்ற கம்பீரமான குரலில், அப்பயிற்சிக் கூடமே அதிர்ந்து எதிரொலிக்கும் வகையில்.

உங்கள்
ஜேபி (JB)

JLine arts and silks (Jline Exotic Arts)
JLine Info tech (IT Consultancy)
JLine Publications

16 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *