உதயேந்திர வர்மன் – அத்தியாயம் 13

உதயேந்திர வர்மன் – அத்தியாயம் 13


உதயேந்திர வர்மன்

அத்தியாயம் 13

எதற்கும் தளராது மீண்டும் தன் மீது வாளை வீசுவதற்குத் துணிந்தவளை அரை விநாடிக்கும் கீழான நேரத்தில் தடுத்தவனுக்கு, தனது வேகத்தின் வீரியத்திற்கு முன் அவள் தடுமாறிப் போவாள் என்றோ, கீழே விழவிருக்கும் வேளையில் அம்மூவருமே எதிர்ப்பாராத வகையில் சந்திர நந்தனின் கைகளில் பதமாய் அவள் சரிவாள் என்றோ சற்றும் நினைத்திராத உதயேந்திரனுக்கு, தன் கண்முன் நிற்பவர்களின் தோற்றம் பெரும் அதிர்ச்சியையே கொடுத்தது.

அதிலும் காரிகையின் வெற்றிடையைச் சந்திர நந்தனின் வலது கரம் வளைத்துப் பிடித்திருக்க, தனது இடது கையால் அவனது கழுத்தை சுற்றிப் பிடித்திருந்தவள் மேலும் நெகிழத் துவங்கும் முன், அவள் கீழே விழுந்துவிடாதிருக்கத் தன் இடது கரத்தை அவளின் வயிற்றைச் சுற்றி கொணர்ந்தவாறே இறுக்கிப் பிடித்த சந்திர நந்தனின் பார்வை, பெண்ணவளின் விழிகளின் மீது ஆழ்ந்துப் படிந்து பின் உதயேந்திரனை ஏறிட்டது.

ஏனெனில் சிறு குறுவாளைக் கொண்டே, அவனது வலிமையான கரத்தால் தளிர் மேனியவளின் வாளை அதிரடியாகத் தடுத்திருந்தவனின் திடத்தைத் தாங்க இயலாது அவள் கீழே விழப் போனாலும், எதிர்பாராத விதமாகவே தான் அவளை ஏந்தியிருந்தாலும், எனது முகத்தை ஏறிட்டும் பார்க்காது தன்னைத் தள்ளியவனின் மீதே கலக்கமும் அச்சமும் துலங்கும் விழிகளைப் பதித்திருந்தவளைக் கண்ட சந்திர நந்தனின் உள்ளத்திற்குள் பெரும் வியப்பே மேலிட்டது.

அவனைத் தாக்க முனைவது போல் வாளை வீசியிருக்கிறாள்..

பெண்ணென்றும் பாராது அதி வேகத்துடன் அதனைத் தடுத்தவன் அவள் கீழே விழும் போதும் அவளைப் பிடிக்க முனையாது அசையாது நின்றிருக்கின்றான்..

ஆயினும் அவன் மீது சீற்றமும் சினமும் பொங்கும் பார்வையை வீசாது, சலனத்தையும் சஞ்சலத்தையும் சுமந்திருக்கும் விழிகளை வீசுகிறாளே! ஏன்?

அச்சில விநாடிகளுக்குள்ளேயே பற்பல வினாக்களைத் தனக்குள் தொடுத்துக் கொண்ட நந்த இளவரசன், உதயேந்திரனை ஏறிட்டுப் பார்க்க, அப்பொழுதும் அவளைப் பிடிக்க முயற்சி செய்யாது பாறையை ஒத்த முகத்துடன் நிமிர்ந்து நின்றிருப்பவனைக் கண்டு, ‘பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்று கூறுவார்கள்.. பேய்களுக்கும் பூதங்களிற்கும் கூட அவ்வப்பொழுது இரக்கம் தோன்றும் போல் இருக்கிறது.. ஆனால் தன்னை எதிர்த்து வாளை வீசும் எவரையும் விட்டு வைக்காத இவன், பெண்ணென்றால் மட்டும் இறங்கிவிடுவானா?’ என்று உள்ளத்திற்குள் முணுமுணுத்தவாறே மெல்ல மகிழ்வதனியைப் பிடித்து நேராக நிமிர்த்தினான்.

“என்ன உதயா? ஏன் இந்த முரட்டுத்தனம்? எதிரில் இருப்பவர் எவராயிருந்தாலும் சற்றும் யோசிக்காது இவ்வாறு தான் உன் வேகத்தையும் வலிமையையும் காட்டுவாயா?”

அதுவரை காந்தம் போன்ற கண்களோடு உள்ளத்தையும் கவர்ந்து நின்றவாறே இமைக்கொட்டாது தன்னையே பார்த்திருப்பவளின் கருவிழிகளில் இருந்து விடுபட இயலாதவனாய் ஆய்ந்து ஆராயும் நோக்குடனும், தன் விழிகளின் முன்னே சந்திர நந்தனின் அணைப்பில் நின்றிருந்தவளைக் கண்டதில் சீற்றத்தின் பார்வையுடனும் பாவையவளின் மீதே பார்வையைப் படரச் செய்திருந்த உதயேந்திரன், சந்திர நந்தனின் கேள்விகளில் அவனை மெள்ளத் திரும்பிப் பார்த்தவன்,

“முரட்டுத்தனமா? என் எதிரில் இருப்பவர் எவராயிருந்தாலும் அவர்களிடம் எனது வலிமையை நான் காட்டுகின்றேனா? சந்திரா! இவள் என்னெதிரே செயலற்று நிற்கவில்லை.. என்னைக் கொலை செய்வதற்கு முயன்று இருக்கின்றாள்.. என் உயிரை பறிக்க நினைப்பவளை நான் என்ன கொஞ்ச வேண்டும் என்கிறாயா?” என்றான் இகழ்ச்சி தொனிக்கும் குரலில்.

சில விநாடிகளுக்குள் இவை அனைத்துமே நடந்துவிட்டிருந்ததில் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் மூழ்கியிருந்த மகிழ்வதனியின் செவிகளில் உதயேந்திரனது ‘நான் என்ன கொஞ்ச வேண்டும் என்கிறாயா’ என்ற வார்த்தைகள் விழுந்ததுமே, மீண்டும் சீற்றத்துடன் கொதித்தெழுந்தவள் ஏதோ பேச முற்படுவதற்குள், அவளின் முன் கரம் நீட்டித் தடுத்தான் சந்திர நந்தன்.

“தனது உயிரை பறிப்பதெற்கென்று வாளை வீசுபவர்களுக்கும், வெறும் எச்சரிக்கை செய்வதற்கென்று வாளை வீசுபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாதவனல்ல என் நண்பன்.. உங்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் இங்கு வரும் பொழுதே நீங்கள் இருவரும் சமரசமான நிலையில் இல்லை.. இருவருக்குள்ளும் ஏற்கனவே ஏதோ பிரச்சனைகள் நடந்திருக்கின்றன.. உங்கள் இருவருக்கும் இடையில் சமரசப்படுத்த நான் முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தொடுத்த வினாவிற்குத் தான் இவன் விடையளித்துக் கொண்டிருந்தான்.. வெறுமனே பேசிக் கொண்டிருப்பவனின் மீது மீண்டும் வாளை வீசியது நீங்கள் தான், அதனால் வந்த கோபமே அவனது…” என்றான் நந்த இளவரசன், எக்காரணம் கொண்டும் எச்சூழ்நிலையிலும் நான் என் நண்பனை எவருக்காகாவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பது போல்.

“பேசிக் கொண்டிருப்பவர் மீது வாள் வீசினேனா?.. அவர் பேசியதன் பொருளை உணர்ந்ததால் தான் இளவரசே அவரை நோக்கி என் வாள் பாய்ந்தது..”

வெற்றிவாகைச் சூடி நான் படைகளுடன் விஜய நகரத்திற்குள் நுழைந்த பொழுது, சந்திர நந்தனுக்கு அருகில் புரவியில் பயணித்துக் கொண்டிருந்த என்னை நன்றாகவே பார்த்திருந்தவள், மக்களின் கோஷங்கள் மூலமாகவும் வீரர்களின் வாழ்த்தொலிகள் வழியாகவும் நான் வர்ம ராஜ்யத்தின் இளவரசன் என்றும் அதி நிச்சயமாக அறிந்திருந்தவள்..

ஆகையால் தான் என் கழுத்தில் அவளது கூரிய வாளை பதித்தும் விநாடிகளுக்குள் அவளைக் கட்டுக்குள் கொணர்ந்து என்னைக் காயப்படுத்தாது விட்டவள்.

ஆயினும் என்னைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாது எனது கேள்விகளுக்கு அதிகாரமாகவும் திமிராகவும் பதிலளித்துக் கொண்டிருப்பவள், சந்திர நந்தனிடம் மட்டும் சகலமும் அடங்கியது போல் பணிந்துப் பேசுகின்றாள் என்றால்?

மனத்திற்குள்ளே கேள்வியைக் கேட்டுக் கொண்ட உதயேந்திரனுக்கு கிடைக்கப் பெற்ற பதில் தான், இனிமையாய் இல்லை..

உள்ளுக்குள் எரிச்சலும் கோபமும் படர, மனம் உணர்ந்ததை விழிகளிலும் படரச் செய்தவன் அவளை எரித்துவிடுவது போல் பார்க்கவும், இருவரின் பார்வை பரிமாற்றங்களைக் கண்ட சந்திர நந்தன் நிலைமையைச் சமாளிக்க எண்ணி, அவர்கள் இருவரின் பேச்சின் போக்கை மாற்றினான்.

சற்று முன்னதாக உப சேனாதிபதி, ஒரு பெண் தங்களுடன் இணைந்து பகைநாட்டுப் படையினரை துவம்சம் செய்ததாகக் கூறியது ஏனோ அவனது எண்ணத்தில் அப்பொழுது உதயமாகவும், அவளின் கரங்களில் இன்னமும் பிடிப்பட்டிருக்கும் வாளைக் கூர்ந்துப் பார்த்தவாறே,

“சரி, இந்நேரத்தில் தர்க்கம் வேண்டாம்.. நீங்கள் யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் கூறுங்கள்..” என்றான் அமைதியாகவும் நிதானமாகவும்.

“மன்னிக்க வேண்டும் இளவரசே.. இப்பொழுது என்னால் என்னைப் பற்றிக் கூற இயலாது.. ஆனால் நாளை நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.. நீங்கள் என்னைச் சந்திக்க அனுமதித்தால் நான் யாரென்ற விவரங்களை அப்பொழுது உங்களுக்கு மட்டும் கூறுகின்றேன்..”

வேண்டுமென்றே ‘மட்டும்’ என்ற வார்த்தையில் வெகுவாய் அழுத்தத்தைக் கொடுத்தும், அவ்வாறு கூறும் பொழுது ஒரே ஒரு முறை தனது முகத்தையும் பார்த்துப் பின் சந்திர நந்தனின் புறம் திரும்பியவளின் எகத்தாளத்தில், எள்ளலில் உதயேந்திரனின் சீற்றம் வெகு வேகத்தில் ஆகாயத்தைத் தொட்டுவிட முயற்சித்துக் கொண்டிருந்தது.

இதற்கு மேல் இவ்விடத்தில் இருப்பதற்கு வர்ம இளவரசன் முட்டாளல்ல என்று தோன்றிய மறு விநாடியே சரேலெனத் திரும்பியவன் சோலையின் இருளுக்குள் பார்வையைப் பதித்தவாறே, “பைரவாஆஆஆ..” என்று உரத்தக் குரலில் அழைக்கவும்,

அது வரை அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளையும் தன் நண்பனின் சீற்றத்தைக் கிளறிக் கொண்டிருப்பவளின் அகங்காரத்தையும் பார்த்து தானும் வெகுண்டிருந்ததில், நண்பனின் குரலைக் கேட்ட அக்கணமே இருளைக் கிழித்துக் கொண்டு சரேலென வெண்மை நிறத்தில் விரைந்து வந்த புரவியைக் கண்ட மகிழ்வதனியின் உள்ளத்தில் சஞ்சலம் தோன்றியது.

தனது வார்த்தைகளைக் கேட்ட ஆத்திரத்தில் தான் இவன் இவ்வாறு சத்தமாகப் புரவியை அழைத்திருக்கின்றான் என்பதை உணர்ந்துக் கொண்டவளாக, உள்ளுக்குள் ‘இவரின் புரவி கூட இவரைப் போன்று தான் இருக்க வேண்டுமா? சத்தமிடாது அமைதியாக இருளில் மறைந்திருக்கும் சாமர்த்தியத்திலும், பின் எஜமானனின் அழைப்பைக் கேட்ட அக்கணமே சிறிதும் தாமதிக்காது விருட்டென்று பாய்ந்து வரும் வேகத்திலும், இருவருமே சமம் தான் போல் இருக்கின்றது?’ என்று எண்ணியவாறே எள்ளல் நகையை இதழ்களில் பரவச் செய்தவள், சந்திர நந்தனின் புறம் திரும்பி,

“இளவரசே! என்னைச் சந்திப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்..” என்று அவள் கூறி முடிக்கவில்லை..

“இல்லை இல்லை.. உங்களைச் சந்திப்பதில் ஆட்சேபனையே இல்லை.. நாம் எங்கு எப்பொழுதுச் சந்திக்கலாம் என்பதை எனது பணியாளன் மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்..”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த பொறாமைத் தீயினை மேலும் எரியூட்டுவதற்கு எண்ணெய் விடுவது போல், அவள் பேசுவதற்குக் கூட நேரமளிக்காது படபடவென்று பேசும் நண்பனைக் கண்ட உதயேந்திரனின் இதயம் மென்மேலும் கொந்தளித்தெழ, தனது ஆத்திரத்தை முகத்தில் காட்டாது புரவியின் கடிவாளக் கயிறை பிடித்து இழுத்ததில் அவன் காட்டவும், அதன் சத்தத்தில் சட்டென்று அவனை நோக்கித் திரும்பினாள் மகிழ்வதனி.

வழக்கம் போல் அங்கவடியில் கூடக் கால் பதிக்காது, சரேலென ஒரே எட்டில் புரவியின் மீது சிறிதும் தடுமாறாது நிமிர்ந்து அமர்ந்தவனின் வேகத்தில், அவனது திடத்தில் மிதமிஞ்சிய பிரமிப்பில் ஆழ்ந்துப் போனாள் அந்த இளம் பேதை..

அவள் தன்னையே விழிகளை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும், சிறிதும் அசட்டை செய்யாது சந்திர நந்தனை நோக்கித் திரும்பிய உதயேந்திரன்,

“சந்திரா! இரவின் மூன்றாம் சாமம் துவங்கிவிட்டது.. நமக்குத் தெரிந்தவரையில் போரில் மாளாத பாண்டிய உஜ்வாலா படையினர் அனைவருமே சிறைப் பிடிக்கப்பட்டுவிட்டனர்.. ஆயினும் இங்கும் எவராவது மறைந்திருக்கலாம்.. இவ்வளவு நேரம் நாம் இங்கு இருந்ததே தவறு.. இதற்கு மேல் இங்குத் தனித்து இருப்பது எவருக்குமே பாதுகாப்பல்ல.. போகலாம் வா..” என்றவாறே வெடுக்கென்று புரவியை முடுக்க, மறு விநாடியே நாணில் இருந்து சர்ரென்று கிளம்பும் அம்பு போல் சோலையின் காரிருளுக்குள் புகுந்து சடுதியில் மறைந்தும் போனான் பைரவன்..

“கோபமும் கடினமும் அழுத்தமும் கொண்ட வர்ம இளவரசன், உதயேந்திர வர்மன், ஆயினும் உதவி என்று வேண்டி நிற்பவர்களுக்குத் தனது உயிரையும் மதியாது உதவிக் கரம் நீட்டுபவன்.. என் உயிரை காத்த எனது நண்பன்.. அவனைப் பற்றித் தவறாக எண்ணாதீர்கள்..”

உதயேந்திரனின் புரவி சென்று மறைந்த இருளடைந்த பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மென்மையைக் கலந்த சாரீரித்தில் வார்த்தைகளை உதிர்க்கும் சந்திர நந்தனின் குரல் தணிவைக் கொணர, அவனைத் திரும்பிப் பார்த்தவள் மெல்லிய புன்னகையைப் பூத்தவளாக, “இன்பா..” என்ற தனது புரவியை அழைக்க, மறு நிமிடமே அக்கறுப்பு நிறப் புரவி தனது எஜமானியை நெருங்கி வந்து நின்றதில், சட்டென்று தானும் அதன் மீது தாவி ஏறி அமர்ந்தாள் மகிழ்வதனி.

அவளின் வேகத்தினைக் கண்டு ‘இவளும் வர்ம இளவரசனுக்குச் சளைத்தவள் இல்லை போல்’ என்று எண்ணிக் கொண்டவனாகச் சிறிய முறுவலை உதடுகளுக்குக் கொணர்ந்த சந்திர நந்தன் தானும் தன் புரவியில் ஏறியவன் சோலையை விட்டு வெளியேற, சந்திர நந்தனைத் தொடர்ந்து கோட்டையின் திட்டி வாசலை நோக்கி தனது புரவியைச் செலுத்திக் கொண்டிருந்த மகிழ்வதனியின் உள்ளம் முழுவதையுமே, சில மணித்துளிகளுக்கு முன் நடந்து முடிந்த நிகழ்வுகள் காட்சிகளாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

நீர் தடாகத்தின் அருகில் தான் அமர்ந்திருந்த நேரம் தனக்குப் பின் அரவமேதும் செய்யாது வந்து நின்ற உதயேந்திரனின் கழுத்தில் தான் திடுமென வாளை பதித்திருந்தாலும், சிறிதும் திகைக்காது கூரிய விழிப் பார்வையுடன் தன் இதயத்தையே அவனது கண்கள் துளைத்தெடுத்ததையும்,

தனது விழிகளில் திரண்டிருக்கும் நீர் துளிகளைக் கண்டும் இளகாது, வாளைப் பிடித்திருக்கும் தனது கரத்தை சுழற்றியவாறே தன்னை அவனது வெற்று மார்புக்குள் அடக்கியதை நினைத்தவளின், இந்நாள் வரை தான் உணர்ந்திராத புது உணர்வுகளை தனது உடலின் ஒவ்வொரு அணுக்களுக்கும் உணர்த்தியவனை எண்ணியவளின் பூவுடல், தன்னையும் அறியாது சிறிதே அதிர்ந்ததில், சற்றென்று நெஞ்சுக்குள் சுழன்று அடித்த உணர்ச்சிகளின் வேகத்தில் திணறிப் போனாள் அப்பேதை.

யார் இவர்?

இப்பிரஞ்சத்தில் ஜனித்த அக்கணத்தில் இருந்தே அபாயங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வந்தவள் நான்..

எவ்வேளையிலும் எவர் மூலமேனும் ஆபத்துகள் வரலாம் என்று சிறுமியாக இருந்த பொழுதில் இருந்தே, பலவகை நுண்கலைகளையும் யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், விற்போர் முதலிய போர் கலைகளையும், யுத்த படைக்கலப் பயிற்சியையும், வளரி, எறிவாள், ஈட்டி, வேல் ஆகிய பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தவும் பயிற்றுவிக்கப் பட்டிருப்பவள் நான்..

பூலோகத்தில் பிறந்திருக்கும் வீரமும் வலிமையும் மிக்க ஆண்களே நினைத்துப் பார்க்கவும் அஞ்சும் காரியத்தை, துணிவையும் தீரத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு ஒற்றையாளாகச் செய்து முடிக்க அறுதியிட்டு இருப்பவள்..

அவ்வாறு இருக்க, வாழ்க்கையில் முதன்முறை என்னைச் சந்தித்து இருப்பவர், அவரது சின்னஞ்சிறிய குறுவாளுக்கு முன் எனது வாளின் பலம் ஒன்றுமில்லாது போனதன் மாயம் என்ன?

இரக்கம் இளக்கம் இச்சை நாட்டம் ஆசை விருப்பம் என்ற எவ்வகை உணர்ச்சிகளுக்கும் அடிமையாகக் கூடாது என்று விவரம் தெரிந்த நாளில் இருந்தே போதிக்கப் பட்டிருக்கும், கற்பாறையைப் போன்று கடினமாக உருமாறியிருக்கும் எனது இதயத்திற்குள், இவரைக் கண்டதும் மட்டும் செல்லொண்ணா இப்புதிய உணர்வு ஏன்?

குழப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மகிழ்வதனியின் மனமும் புத்தியும் இடம் கொடுத்திருக்க, வார்த்தைகளையே மறந்தது போல் மௌனமாகப் புரவியின் மீது அமர்ந்து வந்தவள்,

தனக்கு முன் புரவியில் சென்று கொண்டிருந்த நந்த இளவரசன் தனது நிசப்தத்தைக் கவனித்துச் சட்டென்று நிதானித்துத் தனக்கு அருகில் புரவியை மெள்ள செலுத்தியவாறே தன்னையே இமைகள் தட்டாது பார்த்து வருவதைச் சிறிதும் உணரவில்லை.

அரண்மனைத் திட்டி வாசலை நெருங்கியதும் சிரம் தாழ்த்தி வணங்கியவாறே கதவைத் திறந்துவிட்ட காவலனைக் கண்டு தலையசைத்த சந்திர நந்தன் உள்ளே நுழைந்தவன், அப்பொழுதும் மௌனமே மொழியாகத் தனக்கு முன் செல்பவளை வியப்புடன் பார்த்தவாறே,

“உங்களுக்கு இவ்வழி ஏற்கனவே பரிச்சயம் போல் இருக்கின்றது..” என்றான்.

அவனது சாரீரித்தில் சுய நினைவு அடைந்தவள் போன்று சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்த மகிழ்வதனி அப்பொழுதும் பதிலளிக்காது ‘ஆம்’ என்பது போல் தலையை மட்டும் அசைக்க, இளநகைப் பூத்தவனாக அரச மாளிகையின் வாயிலுக்குள் அவள் நுழையும் வரை காத்திருந்த சந்திர நந்தன், அவளது தலை மறையும் முன், “அழகான பெயர்.. அழைப்பதற்கு இனிமையாகவும் இருக்கின்றது..” என்றான் சிறிது உரத்தக் குரலில்.

இரகசியத் தொனியில் கூறினாலும் தனக்கும் கேட்கும் விதமாகச் சற்றே அழுத்தமான குரலில் கூறுபவனின் கூற்றில் திகைத்தவள், உள்ளுக்குள் ‘என்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினார், ஆனால் எனது பெயர் அழகாக இருக்கின்றது என்கிறாரே?’ என்று குழம்பியவளாக அவனைத் திரும்பிப் பார்க்க,

“இன்பா.. புரவியின் பெயரைக் கூறினேன்.. உங்களது பெயர் அதனை விடவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்..” என்றான் முத்துப்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவாறே..

என்ன அழகான முகம், அதனில் எத்தனை அழகான புன்சிரிப்பு.. அவரும் இருக்கின்றாரே, கருங்கற்களால் ஆன சிலை கூட அவரது முகத்தை விட மென்மையாக இருக்கும்..

கற்றாழைச் செடியிலும் கூட அழகான மலர்கள் மலரும், ஆனால் அவரிடம் முற்களைத் தவிர வேறு என்ன இருக்கக் கூடும்?

மனதிற்குள்ளே உதயேந்திரனை தன்னால் இயன்றவரை ஏசிக் கொண்டவள், சந்திர நந்தனின் பேச்சிற்குப் பதிலளிக்காது மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அரச மாளிகைக்குள் நுழைய,

தன்னையும் அறியாது மனம் அவள் பால் இளகி சாய்ந்ததில் சிலையனெ விநாடிகள் சில நின்ற சந்திர நந்தன், மாளிகையின் வளாகத்திற்குள் மறைந்தவளின் நினைவுகளிலே மூழ்கிப் போக, நண்பனின் அசையாத தோரணையை உணர்ந்து கொண்ட வஜ்ரன் சிறிதே கனைத்ததில் நிகழ்காலத்திற்கு வந்தவன் போல், ஒரு முறை தனது தோள்களைக் குலுக்கிய சந்திர நந்தனும் தனது மாளிகையை நோக்கி புரவியைச் செலுத்தினான்.

இலாயத்தை அடைந்ததுமே புரவியை அதன் கூடத்தில் விட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றவன் பஞ்சணையில் படுக்க, சந்திர நந்தனின் உறக்கம் அவனை அண்டாது விளையாட்டுக் காட்டியது என்றால்,

பண்டையக் காலங்களில் பொன்னிற்கும் அதிகமான மதிப்பினைப் பெற்ற, சீனர்களின் உருவாக்கத்தில் நெய்யப்பட்டிருந்த பட்டுத் துணிகளில், நெசவுத் தொழில்களில் ஈடுப்பட்டிருக்கும் கைவினைஞர்களைக் கொண்டு பற்பல அழகிய வடிவங்களில், ஒரே வண்ணத்திலேயோ அல்லது பல வண்ணங்களின் கலவையையோ இணைத்து பளபளப்பும் மென்மையுமாய் இணைத்து வடிவமைக்கப்பட்ட சீனப் பட்டினால் வேயப்பட்டிருந்த பஞ்சணையில் படுத்திருந்தாலும், தன்னை நெருங்க மறுத்த நித்திரா தேவியுடன் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்தான் உதயேந்திரன்.

பிறை நுதலுக்கு மேல் வகிடு எடுத்து அதனில் அணிந்திருந்த நெற்றிச்சுட்டி மின்ன, மலர்கள் சூடியிருக்காத கருங்குழல், நிலத்தில் படர அமர்ந்திருந்தவளின் கவர்ச்சிகரமான தோற்றத்திலேயே தனது மனதை பறிக் கொடுத்திருந்த உதயேந்திரன், மரக்கூட்டம் சிறிது விலகியிருந்த இடமாதலால் ஊடுருவி வந்த சந்திரனின் கிரணங்கள் பேதையவளின் மீது பட்டதால் சிலையொன்று உயிர்பெற்றுப் பருவமெய்து வந்தது போல் நின்றிருந்தவளின் மேனியை, உச்சியில் இருந்து பாத நுணிவரை பஞ்சனையில் படுத்தவாறே அலசி ஆராயத் துவங்கினான் வர்ம இளவரசன்.

சினம் நிரம்பிய கரு விழிகளில் கனல் கக்கினாலும் தந்தத்தின் நிறத்தில் பிரகாசித்த பெண்ணவளின் சுந்தர முகமும், வழவழத்த கன்னங்கள் கோபத்தில் சிவந்துவிட்டதால் அதிக மெருகேறிப் பளபளத்திருக்க, வெண்சங்கு கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முத்துமாலையை விழிகளின் முன் கொணர்ந்த வர்ம இளவரசனின் நினைவலைகள் பெண்ணவளின் கழுத்திற்கும் கீழ் இறங்கியதில் தன்னிலை இழந்தான் அம்மாவீரன்.

இருப்பது பொய்யோ என்பது போல் நாழிகை அளக்கும் கருவியை (Hourglass) ஒத்திருக்கும் கொடியிடையும், இடைக்கு மேலே கோபுரங்களையும் தோற்கடித்துவிடும் விதத்தில் நன்றாகவே எழுந்து நின்ற தின்னிய கொங்கைகளின் பரிமாணமும், நெகிழ்ந்துக் கிடந்த சேலையின் உபகாரத்தால் வெளிப்போந்த ஆலிலை வயிறும்,

வடிவான சித்திரம் ஒன்றினைத் தீட்டிய ஓவியனே அதனில் காதல் கொள்ளும் கவர்ச்சிகரமான வடிவழகும், வர்ம இளவரசனின் முன் தத்ரூபமாகத் தோன்றியதில் உடல் ரோமங்கள் சிலிர்த்து எழ,

தன்னால் சுழற்றப்பட்டவளின் பின்னழகு மொத்தமும் தனது வெற்று மார்பில் புதைந்து போயிருந்த வேளையில் அன்று வரை அனுபவிக்காத உணர்ச்சிகள் ஆண்மகனின் வலிய உடலில் ஊடுருவி சென்றிருக்க, தனது இரும்புப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடியவளின் மேனியின் மென்மையான ஸ்பரிசத்தை இந் நிமிடமும் உணர்ந்து கொண்ட உதயேந்திரனின் மனதில் எண்ணங்கள் ஏதோ எழுந்ததாலும், உணர்ச்சிகள் பலபடி சுழன்றதாலும் சரேலெனப் படுக்கையில் இருந்து எழுந்த அமர்ந்தான் வர்ம இளவரசன்.

‘யார் இவள்? சந்திர நந்தனிடம் மட்டுமே தன்னைப் பற்றிக் கூறப் போவதாகக் கூறினாளே.. இவளை பற்றி நான் எங்கனம் அறிவது?’

விடாது யோசித்துக் கொண்டிருந்த உதயேந்திரனின் இதயத்தில் சட்டென்று தோன்றின, பேரமைச்சர் கூறிய இரு விஷயங்கள்..

“ஒருவேளை பேரமைச்சர் கூறிய பெண் இவள் தானோ?”

சன்னமான குரலில் முணுமுணுத்தவாறே பஞ்சணையில் இருந்து எழுந்தவன் அவ்வறை முழுவதையுமே அளந்துவிடுவது போல் அங்கும் இங்கும் நடைப்பயில, தன்னால் புறந்தள்ளப்பட்டுக் கீழே விழவிருந்தவளை தாங்கிப் பிடித்த சந்திர நந்தனின் பார்வையும், பேரமைச்சர் அவனது திருமணத்தைப் பற்றிய பேச்சும், ஒருவேளை அரசர் பூபால நந்தன் தனது மைந்தனுக்கு மணமுடிக்க விரும்பும் பெண் இவளாக இருந்து, சந்திர நந்தனும் அவள் மீது கண்டதும் காதல் கொண்டிருந்தால் என்று அடுக்கடுக்காக வினாக்கள் சூழ்ந்த அக்கணமே, உதயேந்திரனின் இதயம் அவனது அனுமதியில்லாமலேயே முடிவு ஒன்றை எடுத்தது..

அவள் இது வரை யாராக இருந்தாலும் அதனைப் பற்றி இந்த உதயேந்திரனுக்குக் கவலை இல்லை… அவளை யாருக்கு மணமுடிப்பது என்று அரசர் பூபால நந்தன் முடிவெடுத்திருந்தாலும் எனக்கு அச்சம் இல்லை..

எவர் தடுத்தாலும், அவளே விரும்பாவிடினும், அவள் இனி இந்த உதயேந்திர வர்மனுக்கு மட்டுமே!!!

***************************************************************************

உஜ்வாலா கோட்டையின் மீது போர் தொடுத்து வெற்றிப் பெற்று இன்றோடு ஒன்பது தினங்கள் கடந்திருந்த வேளையில், தங்களது இராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலையைச் சந்திர நந்தனுக்கு எடுத்துரைக்க அவனை அனுகிய உதயேந்திரன் நண்பனிடம் பேசத் துவங்குவதற்கு முன் வாயில் கதவு தட்டப்பட்டது.

சந்திர நந்தனின் உத்தரவைக் கேட்டு உள்ளே நுழைந்த அரண்மனை பணியாளன் ஒருவன் உதயேந்திரனுக்கும் வணக்கம் செலுத்தியவன்,

“இளவரசர்களுக்கு இந்த அடியேனின் வணக்கம்.. விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், வர்ம இளவரசரும் அவ்விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசரின் விருப்பம், அதனைத் தெரிவிக்கவே நான் வந்தேன்..” என்றான் சிரசை சிறிதே தாழ்த்தியவாறே பணிவான குரலில்.

“நான் இன்றே எங்களது ராஜ்யத்திற்குக் கிளம்ப வேண்டும், அதற்கான விவரங்களைச் சந்திராவிற்குப் பகிரவே நான் வந்தேன்..”

உதயேந்திரனின் மறுப்பைக் கேட்டு அதுவரை தாழ்த்தியிருந்த தனது சிரசை மெள்ள நிமிர்த்திய அப்பணியாளன்,

“அரசரின் விருப்பத்தை முழுமையாகக் கூறாதது என் தவறு தான், அதற்காக என்னை மன்னிக்க வேண்டும் வர்ம இளவரசே… போரில் வெற்றி பெற்றமைக்கும், எங்களது நந்த இராஜ்யத்திற்கு மிகவும் அத்தியாவசியமான இக்கட்டான நேரத்தில் பேருதவி புரிந்தமைக்கும் நன்றி பகிரும் வகையில், அரசர் இன்று மதியம் உங்களுக்கு விருந்தளிக்க விரும்புவதாகத் தெரிவிக்கக் கூறினார்.. ஆகையால் விருந்தினர் அறையில் மதியம் உங்களை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்..” என்றான், அரசரின் விண்ணப்பத்தை மறுக்க உங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பது போல் உறுதியான குரலில்.

நந்த அரசரின் தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டால், இனி நந்த இராஜ்யத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்புத் தனக்குக் கிடைக்கப் பெறும் பொழுது அவர் உயிருடன் இருப்பாரா என்ற சந்தேகமும் அக்கணம் தோன்றியதில், வேறு வழியின்றி விருந்தில் பங்கேற்பதற்குச் சம்மதம் தெரிவித்தான் வர்ம இளவரசன்.

போரில் காயம்பட்ட நந்த வீரர்களை வைத்தியர்களின் முழுக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற அரசரின் கட்டளைப்படி அவர்கள் அனைவரும் பர்ணசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்க, அன்றைய முற்பகல் முழுவதையும் அவர்களைச் சந்திப்பதற்கும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிரி நாட்டு வீரர்களை விசாரிப்பதற்கும் செலவழிக்க வேண்டியிருந்ததால், மதியம் அரசர் குறிப்பிட்டு இருந்த நேரத்தை விடச் சற்றுக் காலம் தாழ்த்தியே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறைக்குச் சென்றனர் இளவரசர்கள் இருவரும்.

அரசருக்கு வணக்கம் தெரிவித்தவாறே அறைக்குள் நுழைந்த உதயேந்திரனைக் கண்டு சிறிதே புன்னகைப் பூத்த பூபால நந்தன் மெள்ள எழுந்திருப்பதற்கு முயல, ஓடிச் சென்று அவரைத் தடுத்த உதயேந்திரனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவாறே அமர்ந்த அரசர்,

“மன்னிக்க வேண்டும் உதயேந்திரா.. எனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது என்பது உனக்கும் தெரியுமல்லவா? எனது நோய்க்குத் தீர்வு என்று ஒன்றிருப்பதாக வைத்தியர்களுக்கும் புலப்படவில்லை.. நோயின் தீவிரத்தால் எனக்கு நியாபக மறதியும் அதிகமடைந்திருக்கின்றது.. நீ எங்களது கோட்டைக்கு வந்த மறு தினமே உனக்கு விருந்தொன்று வைக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டதையே மறந்துவிட்டேன் என்றால், என் நிலையை எண்ணிப்பார்… ஆனால் கடவுளின் அருளால் நீ உங்களது கோட்டைக்குத் திரும்புவதற்கு முன்னரே எனக்கு நியாபகம் வந்துவிட்டது, அக்கணமே எனது பணியாளனை அனுப்பி உன்னை இங்கு வரவழைக்குமாறு உத்தரவு இட்டுவிட்டேன்.. எனது மகனின் உயிரைக் காப்பாற்றிய உனக்கு, எங்களது ராஜ்யத்தைக் காப்பாற்ற அவனுக்கு உதவி செய்த வர்ம இளவரசனுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தாது விடைக்கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.. ஆகையால் உன்னைச் சிறப்பித்து அனுப்புவதற்காகவே இந்த விருந்தினை ஏற்பாடு செய்தேன்..” என்று இன்னமும் ஸ்வாசிப்பதற்குச் சிரமப்பட்டவாறே மிக நீளமாகப் பேசி முடித்தார்.

“மன்னிக்க வேண்டும் என்ற பெரிய வார்த்தைகளுக்கு நான் தகுதியற்றவன் அரசே, அது மட்டுமல்லாது சந்திரா என் உயிர் தோழன்.. அவனது உயிரைக் காப்பாற்றியதற்கு நீங்கள் நன்றி கூற வேண்டாம், அது எனது கடமை..”

“அது உனது அடக்கத்தைக் காட்டுகின்றது உதயேந்திரா..”

அரசரின் பதிலில் உதடுகளை விரிக்காது கீற்று போல் மெல்லிய நகையைப் படரவிட்டவாறே,

“அரசே! ஆதி நல்லூரை விட்டு நான் வந்து வெகு நாட்களாகிவிட்டது.. என் அன்னையும் என்னை எதிர்பார்த்திருப்பார்.. தந்தையும் ராஜ்ய அலுவல்களுக்கு உதவ நான் இல்லாது சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்.. ஆகவே நான் இன்றே கிளம்புவதற்கு எனக்கு அனுமதியளிக்க வேண்டும்..” என்றான்.

சில விநாடிகள் அமைதிக் காத்த பூபால நந்தன் உதயேந்திரனின் கூற்றில் இருக்கும் நிதர்சனத்தை ஆமோதிப்பது போல் தலையை அசைத்தவர், தனக்கு இடது புறமாகச் சந்திர நந்தனையும், தனக்கு எதிராக உதயேந்திரனையும் அமரப் பணித்தவர், அவர்கள் அமர்ந்ததும் சந்திர நந்தனை ஒரு முறை ஏறிட்டு,

“உதயேந்திரன் கிளம்புவதற்கு முன் நான் உங்கள் இருவரிடமும் சில விஷயங்களைப் பேசியே ஆக வேண்டும்..” என்றதில் சட்டென்று உதயேந்திரனின் ஒற்றைப் புருவம் மேலெழும்பியது.

“என்னிடமுமா அரசே?”

“ஆம் உதயேந்திரா, உங்கள் இருவரிடமும் தான்..”

“என்னது அப்பா?”

மைந்தனின் கேள்வியில் தங்களுக்கு உணவுப் பரிமாற ஆயத்தமாகிக் காத்துக் கொண்டிருந்த பணிப் பெண்ணைத் தன்னருகே அழைத்த அரசர் அவளது செவிகளில் ஏதோ கிசுகிசுக்கவும், சரி என்பது போல் தலையசைத்த பணிப்பெண் வெளியேறிய சில மணித்துளிகளில் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் வரும் வரை வார்த்தைகள் ஒன்றையும் உதிர்க்காது அவரவர் போக்கில் சிந்தனைகளில் ஆழ்ந்து கொண்டிருந்த இளவரசர்கள் இருவரில், பணிப் பெண்ணைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த பெண்ணைக் கண்ட சந்திர நந்தன் தன்னையும் அறியாது ஆசனத்திலே இருந்து எழுந்திருந்தான் என்றால்,

நிமிர்ந்த நடையுடன் தீட்சண்யமான பார்வையுடன் சீரான வேகத்துடன் சிறிதே இதழ்களில் முறுவல் புரள உள்ளே நுழைந்த மகிழ்வதனியையும், அவளைக் கண்ட மாத்திரத்தில் விருட்டென்று எழுந்து நின்ற சந்திர நந்தனையும் கண்ட உதயேந்திரனின் கண்களில் சட்டென்று கூர்மை ஏறியதே ஒழிய, அவன் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு அங்குலமளவும் அசைந்தான் இல்லை.

அரசனைக் கண்டும், அவருக்கு வெகு அருகில் அமர்ந்திருக்கும் அரச குமாரர்களில் சந்திர நந்தனைப் பார்த்தும் கரங்களைக் குவித்துத் தலை தாழ்த்தி வணங்கிய மகிழ்வதனி, தனது முகத்தையே ஈட்டி போல் குத்திக் கிழிக்கும் பார்வையுடன் பார்த்திருந்த உதயேந்திரனை நோக்கவும், மூன்று நாட்களுக்கு முன்னர் விஜய நகரத்தை அடைந்த இரவு நடந்தேறியிருந்த நிகழ்வுகள் அனைத்துமே சடசடவென ஒன்றன் பின் ஒன்றாகப் பெண்ணவளின் நினைவலைகளில் தோன்றத் துவங்கியது.

கண் சிமிட்டும் நேரத்திற்குள் தன்னைச் சுழற்றி அவனது கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவனின் அடுத்துத் தொடர்ந்த வரம்பு மீறியச் செயல்களும், தனது வெற்று வயிற்றின் மீது அழுந்த பதிந்த அவனது கரங்கள் நந்த இளவரசனின் வருகையால் தடைப்படாவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ என்ற கேள்வியும், தனது ஆடை நெகிழ்ந்துக் கிடந்த பொழுது அவனது பார்வையாலேயே தன்னைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தவனின் திமிறும் ஆணவமும் கலந்த வார்த்தைகளும், பெண்ணவளின் மனதிற்குள் காட்சி போல் விரியத் துவங்கின.

நந்த ராஜ்யத்தை முற்றுகையிட்ட பகைநாட்டு வீரர்களில் பாதி வீரர்களைத் தனது வாளினால் வீழ்த்திக் கொன்றுப் போட்டிருப்பவளுக்கு, அன்று பார்த்திருந்த அதே துளைத்தெடுக்கும் பார்வையுடன் இன்றும் தனக்கு முன் அமர்ந்திருக்கும் வர்ம இளவரசனைக் கண்டதில், தன்னையும் அறியாத வகையில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் சொல்லொண்ணா அளவு அதிர்ச்சியும் திகைப்பும் உருவாகியதில் திடுக்கிட்டு திகைத்துப் போனாள் பேதையவள்.

ஆயினும் பிடிவாதமாய் உதயேந்திரனுக்கு மட்டும் வணக்கம் செலுத்தாது அவனுக்கு நேரெதிரில் நின்றவாறே தன்னையே வைத்த கண் வாங்காது பார்த்திருக்கும் அரசரையும், அவருக்கு அருகில் தன்னைக் கண்டதும் எழுந்து நிற்கும் நந்த இளவரசனையும் கருத்தில் கொண்டவளாகச் சில கணங்களுக்குள் தன்னை இழுத்துப் பிடித்தவள், உதயேந்திரனின் மீதிருந்த தன் விழிகளை அரசரின் புறம் நகர்த்தினாள்.

“வணக்கம் அரசே!”

“வா மகிழ்வதனி.. இங்கு வந்து என்னருகில் அமர்ந்துக் கொள்… உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறோம்..” என்ற பூபால நந்தன், புதல்வனின் புறம் திரும்பியவர்,

“உங்கள் இருவருக்கும் இது முதல் சந்திப்பல்ல என்று புரிகிறது சந்திரா? எங்குச் சந்தித்தீர்கள்? என்னிடம் நீ எதுவும் கூறவில்லையே…” என்று மெல்லிய குரலில் வினவினார்.

“ஆம் அப்பா.. ஆயாத்யாவில் இருந்து திரும்பிய அன்றிரவு இவரை நான் நம் சோலையில் சந்தித்தேன்.. மறு நாள் என்னிடம் தனிமையில் பேச வேண்டும் என்று கூறினார்.. ஆயினும் யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அளிக்க வேண்டிய வைத்திய பணிகளிலும், மாண்டு போன படை வீரர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டிய அலுவல்களிலும் ஈடுபட வேண்டியிருந்ததால், இவரைச் சந்திக்க எனக்கு அவகாசம் கிடைக்காது போயிற்று..”

தந்தைக்குப் பதிலளித்துக் கொண்டே தன் ஆசனத்தில் மீண்டும் அமர்ந்த நந்த இளவரசனைக் கண்டு புன்சிரிப்பு உகுத்தவளாகப் பூபால நந்தனை நோக்கியவள்,

“அரசே! விருந்தினருக்கு உணவளிக்கும் வேலையில் நான் எதற்கு? எதற்காக என்னை வரப் பணித்தீர்கள் என்று மட்டும் கூறினால் தங்களுக்குத் தேவையானவற்றைச் செய்துவிட்டு, நான் என் அறைக்குத் திரும்புகிறேன்..” என்றாள் தயங்கியவளாக.

“நீயும் எனது விருந்தினள் தான் மகிழ்வதனி, மறந்துவிடாதே.. வா, வந்து உட்கார்..” என்றவராகப் பணிப் பெண்களை அழைத்து உணவு பதார்த்தங்களைப் பரிமாறுமாறு கட்டளையிட, அவரது வார்த்தைகளை மறுக்க இயலாது அவருக்கு வலது புறமாகவும், உதயேந்திரனுக்கு நேர் எதிராகவும் அமர்ந்தவளை ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்த அரசர், மைந்தனின் புறம் திரும்பியவர்,

“சந்திரா.. இவளைப் பற்றிப் பேசத் தான் நான் அன்று முயற்சித்தேன்.. ஆனால் அதற்கு எனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.. பிறகு எனக்கும் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பும் அமையவில்லை..” என்றதுமே அரச குமாரர்கள் இருவருக்குமே புரிந்து போனது, பேரமைச்சர் கூறிய வீரப் பெண் இவள் தான் என்று..

சடாரென்று தன்னை ஏறிட்டுப் பார்த்த சந்திர நந்தனின் முகத்தில் தெரிந்த பிரமிப்பையும், தனக்கு எதிராக நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் உதயேந்திரனின் பார்வை இன்னமும் அரசரின் மீது பதிந்திருப்பதில் அவனது கர்வத்தையும் கண்டு, ‘இருவருக்கும் எத்தனை வேற்றுமை.. நல்ல வேளை நான் தேடி வந்த இளவரசர் இவரல்ல..’ என்று நூறாவது முறையாக எண்ணியவளாக மீண்டும் அரசரை நோக்க, தன் பேச்சை மெள்ள தொடர்ந்தார் பூபால நந்தன்.

“சந்திரா.. மகிழ்வதனியைப் பற்றி நான் கூறுவதை விட இவளே அவள் வாயால் தான் யாரென்றும், எதற்கு என்னைச் சந்திக்க வந்திருக்கின்றாள் என்றும் கூறுவது தான் சிறந்தது.. இப்பொழுதைக்கு நான் கூற வேண்டியது இவளுக்கு மிகவும் அவசியமாக நமது உதவி தேவைப்படுகின்றது.. அதனை மறுக்காது நீ செய்ய வேண்டும்.. இது உனது தந்தையின் வேண்டுகோள் மட்டுமல்ல, அரசரின் கட்டளையும் கூட..”

“நிச்சயமாக அப்பா! இவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்யக் காத்திருக்கின்றேன்..”

அரசரின் வார்த்தைகள் முடிந்த மறு விநாடியே சிறிதும் யோசிக்காது, அரசரே ஆனாலும் அவரிடும் கட்டளையின் பின்னனி என்ன, இவள் யார், என்ன விதமான உபகாரத்தை எதிர்பார்த்து வந்திருக்கின்றாள், அவள் யாசிக்கும் உதவிக்குப் பின் மறைந்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்று எதனையும் ஆராயாது உறுதிக் கொடுக்கும் சந்திர நந்தனைக் கண்ட உதயேந்திரன் வியப்பை அடைந்தாலும், இது தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் விவாதம், இதில் வேற்றாளாகிய நான் தலையிடுவது கண்ணியமல்ல என்பது போல் அமைதியாக உணவருந்துவதில் தனது கவனத்தைச் செலுத்தத் துவங்கினான்.

சந்திர நந்தனின் வார்த்தைகளில் தனது இலட்சியம் அதி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற எண்ணம் பிறந்ததில் நிம்மதி அடைந்த மகிழ்வதனி தன்னையும் அறியாது வெளியிட்ட பெரு மூச்சைக் கேட்டு, உணவருந்தியவாறே மெள்ள நிமிர்ந்துப் பார்த்த உதயேந்திரனின் வலிய உதடுகளில் இகழ்ச்சி நகைப் பூக்க, அவனது புன்னகையையும் அதற்கான பொருளையும் உணர்ந்து கொண்ட பூபால நந்தன்,

“சந்திராவின் பதிலில் உனக்குத் திருப்தி இல்லை போல் தெரிகின்றதே உதயேந்திரா..” என்றார் குழப்பமும் ஆழ்ந்த யோசனைகளும் சூழ்ந்திருக்கும் தொனியுடன்.

அரசரின் கேள்வியில் சட்டென்று மகிழ்வதனியிடம் இருந்து தனது பார்வையை நகர்த்திய உதயேந்திரன்,

“மன்னிக்க வேண்டும் அரசே.. இது உங்களுக்கும் உங்கள் மைந்தனுக்கும் இடையில் நடைபெறும் விஷயம், இதில் தலையிட எனக்கு உரிமையில்லை தான், ஆனால் ஒரு நண்பனாக என்னால் சந்திராவின் பதிலை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..” என்றான் வெகு நிதானமாக, ஆயினும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அழுத்தத்தைக் கொடுத்து.

“அதற்குத் தகுந்த காரணம்?”

“இருக்கின்றது அரசே! உங்களை எதிர்த்துப் பேசுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. இப்பெண்ணை நாங்கள் இருவருமே ஒன்றாகத் தான் முதன் முதலாகச் சந்தித்தோம்.. அதுவும் நாங்கள் உஜ்வாலா கோட்டையை முற்றுகையிடச் செல்லும் முதல் நாள் முன்னிரவு.. அதற்குப் பிறகு இவளை அவ்வப்பொழுது நாங்கள் பார்த்திருந்தாலும் இக்கணம் வரை இவள் யாரென்று சந்திராவுக்குத் தெரியாது… இவளது பெயர் கூட மகிழ்வதனி என்று நீங்கள் அழைத்ததன் பின் தான் தெரியும்.. அங்கனம் இருக்க, இவளுக்கு உதவி செய்யுமாறு கட்டளையிடுவது தந்தையாக, ஏன் அரசராகவே இருந்தாலும், செய்யப் போகும் உதவி என்னவென்பதையோ அல்லது இப்பெண் யாரென்பதையோ தெரிந்துக் கொள்ளாது உறுதிக் கொடுப்பது, பட்டத்து இளவரசனுக்கு, பின்னாளில் இந்த ராஜ்யத்தையே ஆளப் போகும் அரசனுக்கு உகந்தது அல்ல..”

ஒரு இளவரசன் இதற்கு முன் அறிந்திராத ஒருவருக்கு விசாரணைகள் ஏதுமின்றி, முன் பின் யோசிக்காது உதவி செய்வதாக உறுதி அளிப்பது தவறென்று தானும் ஒரு ராஜ்யத்தின் இளவரசன் என்று முறையில் தான் உதயேந்திரன் கூறுகின்றானே ஒழிய, அவனுக்கு இப்பெண்ணின் மீது கோபமோ நம்பிக்கையின்மையோ கிடையாது என்று அரசரான பூபால நந்தனுக்குப் புரிந்து தான் இருந்தது..

அதனைப் போன்றே பதினேழு பிராயமே ஆனாலும் மடந்தைப் பருவத்தைக் கூடக் கடந்திராத இளம் பெண்ணானாலும், வர்ம இளவரசனின் வார்த்தைகளில் இருந்த பொருளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கான அனுபவங்களையும் சாதுர்யத்தையும் பெற்றிருந்தவளே மகிழ்வதனியும்.

ஆயினும் அரசருக்கு முன்னும், தனக்கு உதவி செய்ய எவ்வித நிபந்தனைகளோ தடைகளோ இன்றி முன் வந்திருக்கும் நந்த இளவரசருக்கு முன்னும், தன்னை அவமதிப்பது போல் பேசிய உதயேந்திரனின் கூற்றில், தான் ஒரு நம்பத்தகாத பெண் என்று சித்திரிக்கும் வர்ம இளவரசனின் அவநம்பிக்கையான பேச்சில், அதுவரை அடக்கி வைத்திருந்தவளின் நிதானம் மெள்ள விலகி, அவ்விடத்தைச் சீற்றம் ஆட்கொள்ளத் துவங்கியது.

“அரசே.. என்னைப் பற்றியும், நான் யாசிக்கும் உதவியைப் பற்றியும் உங்களிடமும் உங்கள் மைந்தரிடமும் தெரிவிப்பது எனது கடமை. இளவரசரிடமும் உங்களிடமும் தனிமையில் பேசுவதையே நான் விரும்புகிறேன், மூன்றாம் ஆளிற்கு முன் எனது தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை..”

வெடுக்கென்று கூறியவளின் கூற்றில் உதயேந்திரனின் ஆத்திரம் விருந்தினர் மாளிகையின் விதானத்தைப் பிளந்து ஆகாயத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.

உணவருந்துவதைப் பாதியிலேயே நிறுத்தியவன் அவன் அமர்ந்திருக்கும் பட்டுத்துணியைக் கொண்டு வேயப்பட்டிருக்கும் மரத்தால் ஆன ஆசனமே அதிர்ந்து ஆடி நடுங்கும் வகையில் விருட்டென்று எழுந்தவாறே,

“அரசே! நான் உங்களை அவமதிப்பதாக நினைய வேண்டாம்… அதே சமயம் மூன்றாம் ஆளாக இங்கு அமர்ந்திருப்பதற்கும் எனக்கு உடன்பாடில்லை.. இப்பெண்ணின் பிரச்சனைகளைக் கேட்பதை விட எங்களது கோட்டையில் என்னை எதிர்பார்த்து பல காரியங்கள் காத்துக் கொண்டு நிற்கின்றன.. அவற்றை நான் உடனே முடிக்க வேண்டும்.. நீங்கள் மூவரும் பேசி முடித்த பின் கூறுங்கள், பிறகு நான் வருகின்றேன்.. இல்லையென்றால் இப்பொழுதே எனக்கு விடை கொடுங்கள்..” என்றான் புருவங்களுக்கு இடையில் சிக்கிட்ட முடிச்சுடனும், அந்நிமிடமே சுட்டு எரித்துவிடும் பார்வையுடனும் மகிழ்வதனியைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு.

உதயேந்திரனின் செய்கையில் அதிர்ச்சியும் சீற்றமும் கலந்த உணர்ச்சிகளால் ஊடுருவப்பட்ட மகிழ்வதனி தனது வேல் விழிகளை உதயேந்திரனின் கூரிய விழிகளுடன் கலக்க, வேல்களுடன் வேல்கள் உராய்ந்தது போன்ற இருவர் பார்வையும் ஒன்றையொன்று சில விநாடிகள் கவ்வி நின்றதில், தீப்பொறி ஒன்று பறக்காதது தான் அங்குப் பெரும் குறையாகத் தெரிந்தது மற்றவர்களுக்கு.

வர்ம இளவரசனின் வீரத்தையும் புத்திசாலித்தனத்தையும் மட்டும் அல்லாது, அவனது கோபத்தையும், அகங்காரத்தையும் ஆணவத்தையுமே கேள்விப்பட்டிருந்த பூபால நந்தனுக்கு, அவனது தற்போதைய கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தது.

ஆயினும் சந்திர நந்தன் தனக்களித்த உறுதியில் உதயேந்திரனுக்கு உடன்பாடில்லை என்பதை அவன் உணர்த்திய விதத்தில், தன் மறைவுக்குப் பின் தனது புதல்வனுக்கு உற்ற நண்பனாகவும் துணையனாகவும், தேவைப்பட்டால் பாதுகாவலனாகவும் இருக்கத் தகுதியானவன் இவன் ஒருவனே என்ற உண்மையை, மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் அரசனாக, தந்தையாக உணர்ந்தவர் வர்ம இளவரசனை சாந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

“உதயேந்திரா.. நான் கூறுவதைச் சற்றுப் பொறுமையாகக் கேள்.. சந்திராவின் மீது உனக்குள்ள பற்று என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது.. நீ ஒரு நல்ல நண்பனாக மட்டும் அல்ல, அவனுக்கு அனைத்து விதங்களிலும் உறுதுணையாகவும் இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு வலுத்துக் கொண்டே இருக்கின்றது.. அதே போல் மகிழ்வதனிக் கூறுவதைக் கேட்டு அவளின் மீதும் கோபங்கொள்ளாதே.. அவளது இடத்தில் எவர் இருந்தாலும் இதனைப் போன்று தான் பேசுவார்கள் என்பதில் சந்தேகமும் கொள்ளாதே.. அதிலும் சிறு பெண்.. அவள் மூன்றாம் ஆள் என்று கூறியதையும் பெரிதுப்படுத்தாதே.. உட்கார், முதலில் விருந்தை அருந்தி முடி.. இன்று இரவு மட்டும் இங்குத் தங்கி ஓய்வெடுத்துவிட்டு நாளை நீ உங்கள் கோட்டைக்குக் கிளம்பலாம்..”

வேறு வழியின்றி அவரது விருப்பத்திற்கு ஒத்துழைக்க முடிவெடுத்த உதயேந்திரன் மீண்டும் அமர்ந்து வேண்டா வெறுப்பாக உணவருந்த துவங்கவும், மணித்துளிகள் சில வெகு நிசப்தமாகக் கடக்க, உணவருந்தியவாறே மகிழ்வதனியின் புறம் திரும்பிய சந்திர நந்தன்,

“எங்களது கோட்டையை முற்றுகையிட்ட உஜ்வாலா படையினரில் பலர் தலையை ஒரு பெண் தன் வாள் வீச்சினால் கொய்து தரையில் உருளச் செய்ததாகக் கூறினார் பேரமைச்சர்.. அது நீங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..” என்ற விநாடியே சந்திர நந்தனை அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள் மகிழ்வதனி.

சிறிதே புன்னகைத்தவள் ஒரு விநாடி தனது விழிகளை உதயேந்திரன் மீது செலுத்திவிட்டுப் பின் சந்திர நந்தனை நோக்கியவளாகப் பதில் கூற முற்படும் முன், அவளை நிமிர்ந்தும் பாராமலேயே அவளின் செய்கைகளை உணர்ந்து கொண்ட வர்ம இளவரசன் குனிந்தவாறே உள்ளார்ந்த சிரிப்பில் கண்கள் பளபளக்க, ஏளனப் புன்முறுவல் உதட்டோரம் துடிக்க,

“சந்திரா! எதிரி வீரர்கள் பலரின் தலைகளை உருளச் செய்த பெண், நிச்சயம் அடுத்தவர் உதவியை அண்டி வரமாட்டாள்.. அப்படி வருபவள் நிச்சயம் வீரம் மிகுந்தவளாக இருக்க முடியாது…” என்று கூறியதில், மகிழ்வதனியின் தொண்டை வரை சென்ற மிருதுவான உணவு திடுமெனத் தன் மென்மையைக் கைவிட்டு கல்லாக மாறியதைப் போன்று தோன்றியதில், அதற்கு மேல் இறங்க மறுத்தது.

“நான் கேட்க வந்த உதவி என்னவென்று கூட அறியாதபட்சத்தில் நீங்கள் என்னை அவதூறாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை… அதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை வர்ம இளவரசே… இருந்தும் நீங்கள் பேசியதற்கு நான் பதிலையும் கூறி விடுகின்றேன்.. ஆம், பேரமைச்சர் கூறிய பெண் நான் தான்.. ஆனால் எனது வீரத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அரவமின்றி ஒருவரின் பின்னால் இருளோடு இருளாக மறைந்திருந்து தாக்குபவர்களே வீரர்கள் என்றால், நான் வீரமகள் அல்ல..”

நிமிர்ந்து அமர்ந்தவளாகத் தன்னை ஆழம் பார்ப்பது போல் வேல் விழிகளுடன் பிசிரற்றக் குரலில் கூறுபவளைக் கண்டவன், அன்றிரவு சோலையில் தான் அரவமேதும் செய்யாது அவளது பின்னால் நின்றருந்ததைத் தான் கூறுகிறாள் என்பதை உணர்ந்தவனாக, “வாய்பேச்சு வீரமாகாது..” என்றான், இளக்காரமும் கடினமும் ஒருங்கிணைந்த அதிகாரத் தொனியில்.

“செயலில் காட்டவும் நான் தயார்..”

“என்னிடமா?”

“எவரிடம் வேண்டுமானாலும்..”

“எதிரியின் பலம் தெரியாது சண்டைக்கு அறைக்கூவல் விடுப்பது அழகல்ல பெண்ணே?”

“எதிரியின் பலத்தைத் தான், நான் அன்றே பார்த்துவிட்டேனே.. நேருக்கு நேராகப் போரிட்டால் ஒரு வேளை தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்திலும் கலக்கத்திலும் தானே மறைவாய் நின்று போரிட முயன்றார், நீங்கள் சொல்லும் என் எதிரி? என்னுடன் நேரிடையாகப் போரிடும் தைரியமும் வீரமும் எனது எதிரிக்கு இருந்தால், எத்தகைய போருக்கும் நான் தயார்..”

இளையவர்கள் இருவரின் பேச்சுக்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பூபால நந்தனிற்கு, இப்பேச்சின் முடிவு தெள்ளெனப் புரிந்துப் போக அதனைத் தடை செய்வது போல்,

“உணவு அருந்தும் வேளையில் எதற்கு இந்தப் பேச்சு? முதலில் உணவினை உண்டு முடியுங்கள், மற்றவைகளைப் பிறகு பேசிக் கொள்ளலாம்..” எனவும்,

அவரின் முகத்தைச் சரேலெனத் திரும்பிப் பார்த்த மகிழ்வதனி,

“மன்னிக்க வேண்டும் அரசே.. உதவிக் கேட்டு வந்தவளென்பதால் என்னை இளக்காரமாகப் பேசும் ஒருவரிடம் எனது வீரத்தை பணிய வைக்க என்னால் இயலாது..” என்றாள் பிடிவாத நிமிர்வுடன்.

அவளின் நிமிர்தலைக் கூட எள்ளலுடன் நோக்கிய உதயேந்திரன் ஏனோதானோ என்று கொறித்து முடித்திருந்த உணவினை தட்டுடன் தள்ளி நகர்த்த, இளவரசனின் செய்கையின் குறிப்பை உணர்ந்து கொண்ட பணிப்பெண் அவனது கைகளை அலம்ப நீர் நிரம்பிய பாத்திரத்தை கொணர்ந்தாள்.

தன்னிடம் இருந்து இப்படி ஒரு தீ மழையை எதிர்பார்த்திராத மகிழ்வதனியின் முகம் ஆத்திரமும் அவமானமுமாய்க் கன்றிச் சிவந்திருந்ததைக் கண்டவன், அவளின் மீதே தனது பருந்துப் பார்வையைப் பதித்தவாறே பணிப்பெண் கொடுத்த நீரில் கைகளை அலம்ப, இருவரின் பார்வை பரிமாற்றங்களைக் கண்ட நந்த இளவரசனுக்கு மிதமிஞ்சிய வியப்பாகவே இருந்தது.

காணும் நேரெமல்லாம் இவ்வாறு கீரியும் பாம்புமாய்ச் சண்டையிடும் இவர்களை என்ன செய்வது என்று குழம்பிப் போனவனாய்ப் பார்த்திருக்க, அரசரிடம் வணங்கி விடைப்பெற்ற உதயேந்திரன் நண்பனைக் கண்டு வெறும் தலையை மட்டும் அசைத்தவனாய் வெளியேறும் முன் சடாரென்று நின்றவன், அறைக் கதவை தனது இடது கையால் இறுக்கப் பற்றியவாறே, ஒரே ஒரு விநாடி நின்று மகிழ்வதனியை திரும்பி நோக்கினான்.

அவனது வீரத்தையும் துணிவையும் தான் எகத்தாளமாகப் பேசியதன் விளைவால் கடினமாக மாறியிருக்கும் அவனது முகத்தில், புயலையும் சூராவளியையும் உள்ளுக்குள் அடக்கியிருக்கும் கறுத்த மேகங்களைப் போல் என்னவென்றே பகுத்தறிய இயலாத உணர்வு தென்பட, தன்னையே பார்த்திருப்பவனின் கண்களில் தோன்றியிருக்கும் கடுமை மட்டும் பெண்ணவளின் உள்ளத்திற்குள், வாழ்க்கையின் முதன் முறை அறிந்திராத அளவிற்கான அச்சத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படச் செய்தது.

அவனது வதனத்தையே கண்களை இமைக்காது, மாறாக அகல விரித்து விநாடிகள் சில பார்த்தவளின் விழிகள் சட்டென்று அறைக் கதவை பற்றியிருக்கும் அவனது கரத்தின் மீது பதிந்தது.

அவனது இடது கரத்தின் புஜத்தில் கட்டப்பட்டிருக்கும் தங்கக் கங்கணம் கூட வெடித்துச் சிதறிவிடும் அளவிற்கு இறுக்கப் பற்றியிருந்தவனின் அழுத்தத்தில், உணர்ச்சிகளை அடக்குவதற்காகக் கருங்கற்களால் ஆன சிலையைப் போன்று தனது முகத்தை மாற்றிக் கொண்டிருப்பவனின் உள்ளத்திற்குள் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் எரிமலையின் சீற்றம் புரிந்ததில், தன்னையும் அறியாது அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்து சட்டென எழுந்தாள் மகிழ்வதனி.

உணவருந்துவதையும் நிறுத்திவிட்டு திடுமென எழுந்து நின்றவளின் செய்கையில், சீற்றத்தை மட்டுமே சுமந்திருந்தவனின் உள்ளத்தில் பூத்த இகழ்ச்சியின் எதிரொளியினால் அவனது வலிய உதடுகளிலும் முறுவல் படர, மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் மகிழ்வதனிக்கு மட்டும் புரியுமான வகையில் வெகு இலேசாகச் சிரிப்பினை உகுத்தவனாக,

“நான் நாளை எங்களது கோட்டைக்குத் திரும்ப வேண்டும், ஆகையால் உனது வீரத்தை, அதாவது வீரம் இருப்பதாக நீ பறைசாற்றிக் கொண்டிருக்கும் உன் வித்தையை என்னிடம் காட்ட விரும்புவதென்றால், இன்று மாலை சந்திக்கலாம்..” என்றவன் சடாரென்று வெளியேறினான்.

உதயேந்திரனின் பார்வையையும் கிண்டலான பேச்சும், அதற்கு அதிர்ச்சியடைந்தார் போன்று எழுந்து நின்ற மகிழ்வதனியையும் கண்ட சந்திர நந்தனுக்கு, சோலையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட அன்றைய இரவில் உதயேந்திரனின் முரட்டுத்தனமும், பேச்சும் போக்கும் இவளுக்கு அவன் மீது அச்சத்தையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றது என்று மட்டுமே தோன்றியதில்,

“அன்றே உதயேந்திரனைப் பற்றி உங்களிடம் தெரிவித்திருந்தேன்.. வர்ம இளவரசன் மாவீரன்.. இந்தத் தங்கேதி தேசம் மட்டுமல்ல, இப்பிரஞ்சத்தில் எங்குத் தேடினும் இவனைப் போன்ற பராக்கிரமசாலியை கண்டறிவது கடினம்… அங்கனம் இருக்க, அவனது வீரத்தை தவறாக எடைப் போடுபவர்களின் மீது அவன் கோபம் கொள்வதிலும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. ஆயினும் என் நண்பனைக் கண்டு நீங்கள் இந்தளவிற்கு அஞ்சத் தேவையும் அல்ல…” என்றான் கனிவும் தனிவுமான குரலில்.

அறையை விட்டு வர்ம இளவரசன் வெளியேறி சில கணங்கள் ஆனப் போதும் அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தவாறே நின்றிருந்தவளுக்குச் சந்திர நந்தனின் குரல் சற்றே ஆறுதல் அளித்ததில் மீண்டும் ஆசனத்தில் அமர்ந்தாலும்,

அறையைவிட்டுச் செல்லும் முன்னர் உதயேந்திரனின் உதடுகளில் சிறிதே விரிந்த ஏளனப் புன்னகையும், தனது வீரத்தை கேவலமாகப் பேசும் அவனது வார்த்தைகளும், தீக்கோலால் சூடு இழுத்தது போல் பெண்ணவளின் இதயத்தில் சுலீரென்று வலிக்கச் செய்தது.

‘என் வாழ்க்கையில் இந்தச் சில மாதங்களுக்குள் எத்தனை விதமான மனிதர்களைச் சந்தித்திருக்கின்றேன், அவர்களில் பலரை எளிதாக மறக்க முடிந்த என்னால், சிலரை எனது எண்ணங்களில் இருந்து வேண்டுமென்றே அழிக்க முடிந்த எனது திடத்தால், இவர் ஒருவரை மட்டும் அவ்வாறு மறக்கவோ அல்லது அழிக்கவோ இயலாதது போல் தோன்றுவது ஏன்? முன் பின் அறியாத இவரது கோபமும் எள்ளலும் சீற்றமும், என் இதயத்தை வேதனையில் ஆழ்த்தச் செய்வது ஏன்.. இவரின் ஒவ்வொரு சொற்களும் பார்வையும் அசைவுகளும் என்னை வேரோடு பிடுங்கி எறிவதைப் போல் உணருகின்றேனே, அது ஏன்?’

மடந்தையவளின் உள்ளத்தைப் பல்வேறு வினாக்கள் மீண்டும் மீண்டும் முட்டி மோதியதில் அசதியும் களைப்புமே ஆட்கொள்ள, ஆயினும் இவரது கோபம் என்னைப் பாதிக்கின்றது என்பதை மட்டும் தெள்ளெத்தெளிவாக உணர்ந்தவளுக்கு, ஏனோ உதயேந்திரனிடம் சலனம் ஏற்பட்டதே ஒழிய, இத்தருணத்தில் அவனை விட்டு விலக வேண்டும் என்று எண்ணம் மட்டும் கடுகளவும் தோன்றவில்லை..

“சந்திரா கூறியது போல் இது தான் உதயேந்திரனின் குணம்.. எவருக்குமே அடங்காதவன் அவன், அவனைப் பெற்றவர் ஒரு ராஜ்யத்திற்கே மன்னனாக இருந்தாலும் அவருக்கும் அடிபணியேன் என்ற ஆளுமை நிறைந்த அவனது குணத்தை, அவனை முதல் முறை சந்தித்த நாளிலேயே கண்டு கொண்டதாகச் சந்திரா என்னிடம் கூறினான், நானும் இப்பொழுது தான் அதனைக் கண் கூடாகப் பார்க்கிறேன்.. ஆயினும் அவனைக் கெட்டவனாக என்னால் எண்ண முடியாது, அதே போல் நீயும் தவறாக எண்ணாதே மகிழ்வதனி.. வா..”

அரசரின் குரலில் தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டவள் தான் சந்திர நந்தனிடம் தனிமையில் பேச விரும்புவதாக விண்ணிப்பிக்க, மாலை உதயேந்திரனுடன் வாட் போரிடுவதற்குத் தனது பயிற்சிக் கூடத்திற்கு வருமாறும், தான் அவளை அங்குச் சந்திப்பதாகவும் அவன் உறுதியளிக்க, தலையசைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்து அவர்களிடம் விடைப்பெறவும், அடுத்து சந்திர நந்தனின் திருமணத்தைப் பற்றிப் பேசத் துவங்கினார் பூபால நந்தன்.

அந்நாள் வரை திருமணம் என்ற பேச்சைத் துவங்குவதற்கு முன்னரே அதனைத் தடுத்த மைந்தன், இன்று உடனே சம்மதம் தெரிவிக்கவும் வியந்துப் போன பூபால நந்தனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் சந்திர நந்தன்,

கர்வம் சினம் என்று வேற்றுமறை உணர்சிகளால், இரு நாட்களுக்கு முன்னரே தோன்றியிருக்கும் உண்மையான உணர்வுகளை மறைத்துக் கொண்டிருக்கும் இரு இதயங்களுக்குள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் மௌன யுத்தத்தை அறியாதவனாக.

தொடரும்..

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Latest Best seller Tamil Novels @ Best Offer now!! All India & International shipping . Cash on delivery within India. Call/Whatsapp: +91-9080991804Check Now..!
Loading...