உதயேந்திர வர்மன்.. அத்தியாயம் 7

உதயேந்திர வர்மன்.. அத்தியாயம் 7


உதயேந்திர வர்மன்

அத்தியாயம் 7

செவ்வண்ண மலையடிவாரம்..

கீழ்திசையில் தோன்றும் கதிரவனானது மலையின் உச்சிமேட்டில் ஜொலித்துக் கொண்டிருந்த மதிய வேளையில், தனது வெண்ணிற புரவியின் மீது அமர்ந்திருந்த உதயேந்திரன் அதனை வட்டங்களாகவும், சர்ப்பம் போன்று வளைந்து நெளிந்தும் செலுத்திக் கொண்டிருக்க, அவனுக்கருகே தனது செம்மண் நிறத்துப் புரவியில் அமர்ந்திருந்த சந்திர நந்தனோ நடப்பது எதையுமே அறியாதது போல் ஆழ்ந்த சிந்தனைகளுடன் மௌனமே மொழியாகத் தனது புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

பசுமை மாறா செவ்வண்ண மலையை மூழ்கடித்திருப்பது போன்று ஊசி இலைகளைக் கொண்ட சவுக்கு மரங்களும், அதற்குக் கீழ் அடுக்கடுக்காகப் பரந்து விரிந்திருக்கும் பச்சைப் படுகைப் போல் செழித்து விளைந்திருக்கும் புற்களும், மரஞ்செடிகளின் சிறுசெறிவினால் ஆங்காங்கு உருவாகியிருந்த குத்துச்செடிகளும் செவ்வண்ண மலையையே விசிறிச் செல்லும் காற்றில் மென்மையாய் அசைந்து ஆட, அதனைக் காண்போரின் கண்களுக்கு நாட்டியத் தாரகை ஒருத்தியின் தழும்பி சிலும்பும் கேசத்தை ஒத்து இருந்தது அக்காட்சி.

முதுவேனில் காலங்களில் சிவப்புக் கம்பளங்களை விரித்திருப்பது போல் மலர்ந்து நிற்கும் சிவப்பு செண்பக மரங்கள் செந்நிற காரிகையை ஒத்திருக்க, வெண்மையும் மஞ்சள் நிறமும் கலந்த வெளிர்மஞ்சள் நிறத்தில் மலர்ந்து மணம் வீசும் மகிழம்பூ மரங்களும், அதனுடன் இணைந்திருக்கும் புன்னை மரத்து வெண்ணிற பூக்களும் அத்தாரகையின் கால்களில் அணிவிக்கப்பட்டிருக்கும் கொலுசுகளை ஒத்திருக்க,

நூற்றுக்கனக்கில் ஆடி நின்ற மரங்களையும், மயக்கும் நறுமணம் வீசும் மலர்களையும் தீவிர சிந்தனைகளில் உழன்றிருந்த நந்த ராஜ்யத்தின் இளவரசன், விழித்தூக்கிப் பார்த்தானில்லை.

ஏறக்குறைய இரு நாழிகை நேரம் தங்களது புரவிகளைச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் மீண்டும் மீண்டும் அதே வட்ட வடிவில் அவைகளை விரட்டிக் கொண்டிருக்க, நண்பனின் மௌனத்தைக் கலைக்கும் விதமாகத் தனது புரவியின் பக்கங்களில் கால்களை இறுக்கமாக அழுத்திய உதயேந்திரன் சேணத்தின் மீது நிமிர்ந்து அமரவும்,

நண்பனின் செய்கையில் அவனது நோக்கத்தை உணர்ந்து கொண்ட பைரவனும் ‘நான் தயார்’ என்பது போல் கனைக்க, புரவியின் கடிவாள வாரை இடது கரத்தின் விரல்களின் மேல் சுழற்றிச் சுற்றிய உதயேந்திரன் சந்திர நந்தனை ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவாறே வாரை சரெட்டென்று இழுத்த இழுப்பில், சூராவளியையும் வென்றுவிடும் வேகத்தில் பறக்கத் துவங்கியது பைரவன்.

திடுமென உதயேந்திரனின் புரவி வேகம் எடுக்கவும் மூழ்கிக் கொண்டிருந்த குழப்பச் சிந்தனைகளில் இருந்து வெளிப்போந்த சந்திர நந்தன் நண்பனின் நோக்கத்தைத் தானும் புரிந்துக் கொண்டவனாக மெல்லிய நகையை உதடுகளில் படரவிட்டவாறே, அது வரை நிதானமாகத் தன் கரத்தை சுற்றிச் சுழற்றுவதும் பின் உருவுவதுமாக இருந்த கடிவாளக் கயிறை தானும் வெடுக்கென்று இழுத்த வேகத்தில், வஜ்ரன் என்ற நாமத்தைக் கொண்ட அவனது செம்மண் நிறப் புரவியும் பைரவனைத் தோற்கடிக்கும் நோக்கில், புயலென அதனைத் துரத்திக் கொண்டு ஓடியது.

தன்னைப் போன்றே களைப்பென்பதே அறியாத பைரவனின் வேகத்தில், தோள் வரை தொங்கிக் கொண்டிருக்கும் கருங்குழல் காற்றில் விசிறிக் கொண்டு பறக்க, புரவியின் முன் பகுதியை நோக்கி லேசாகக் குனிந்தவாறே முன்னுச்சி முடிக்கற்றைகள் சிலும்பப் பறந்து கொண்டிருக்கும் உதயேந்திரனுக்கு இணையாகச் சந்திர நந்தனும் வந்து கொண்டிருக்க, இரு புரவிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளப் போவது போல் அதிவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில், சடாரென்று கடிவாள வாரை இறுக்கப் பிடித்து இழுத்து, தன் புரவியை நிறுத்தினான் உதயேந்திரன்.

ஒளியின் வேகத்தில் நான்கு கால்கள் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்த புரவியை அவன் திடீரென்று நிறுத்த முற்பட்டதில் புழுதிப் படலம் நாலாப்பக்கங்களிலும் விசிறியடிக்க, உதயேந்திரனின் புரவி தன் வேகத்தைக் குறைக்காது அதீத வேகத்தில் வழுக்கிக் கொண்டு சென்று பின் சரேலென நின்றதில் சட்டென்று திரும்பிப் பார்த்த சந்திர நந்தன், குழப்பத்துடன் புருவங்கள் சுருங்க தானும் தன் புரவியின் வேகத்தைக் குறைத்தவன் அரைவட்டமடித்து உதயேந்திரனை நோக்கி வர, அவன் தன்னை நெருங்கியதும்,

“ம்ம்ம், இப்பொழுது விரிவாகக் கூறு சந்திரா..” என்றான் அழுத்தமான குரலில்.

ஆழ் மனத்தில் இருந்து வந்த அழுத்தமும், புத்தியை ஆக்கிரமித்திருந்த குழப்பங்களும், வெகு நேரம் போட்டிப் போட்டுக் கொண்டு புரவியைச் செலுத்திக் கொண்டிருந்ததில் நீங்கிப் போயிருக்க, உதயேந்திரனைக் கண்டு மனத்திற்குள் பூட்டி புதைத்து வைத்திருந்த சஞ்சலங்களை வெளியிடுவது போல் ஆழப் பெருமூச்செறிந்த சந்திர நந்தன், தனது உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் விவரங்களைப் பகிரத் துவங்கினான்.

“உதயா.. கடந்த சில மாதங்களாக எனது தந்தை உடல் நலமில்லாது இருக்கின்றார் என்பது உனக்குத் தெரியுமென்று நினைக்கின்றேன்.. அவர் அரியாசனத்தில் அமர்ந்து வெகு நாட்களாகிவிட்டது.. இந்நாள் வரை ராஜ்யக் காரியங்கள், நந்த ராஜ்யத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் காரியங்கள், ராஜ்யத்தின் பிரஜைகளின் நலன்களுக்கான திட்டங்கள், போர்கால நியமனங்கள் என்று அனைத்தும் எனது தந்தையின் வழிகாட்டுதல் படி தான் நடந்து கொண்டிருந்தன..
“ஆனால் அவரது உடல்நிலை மோசமடையத் துவங்கியதுமே எங்களது ராஜ்யத்தின் மீது அந்நிய நாட்டவர்களின் கண்களும், நமது தங்கேதி தேசத்தைச் சேர்ந்த பிற ராஜ்யத்தினரின் பார்வைகளும் விழத் துவங்கும் என்பதை உணர்ந்திருந்த நான், அதற்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யத் துவங்கியிருந்தேன்.. அதன் விளைவாக எனது ஒற்றர்கள் மூலம் உஜ்வால அரசனின் கொடிய திட்டங்களையும், போர் திட்டங்களையும் அறிந்து கொண்டேன்.. ஆகையால் தான் உனது உதவியை நாடி வந்தேன்…”

ஹர்யன்கா உஜ்வாலாவை எதிர்க்கும் அனைத்து திறன்களும் சாதுர்யமும், அவனை எதிர்த்து எளிதாக வெற்றி பெற போதுமான சைனியமும், பராக்கிரமசாலிகளான போர் வீரர்களும் நந்த இளவரசனிடம் இருக்கின்றார்கள் என்பது உதயேந்திரனுக்குத் தெரியும்.

இருந்தும் தனது உதவியை நாடி அவன் வந்திருப்பதன் காரணம் என்னவென்று விநாடிகள் நேரம் யோசித்த உதயேந்திரன் ஏதோ புரிவதைப் போல் உணர்ந்து கொண்ட கணமே சட்டென்று அக்கேள்வியைத் தொடுத்தான்.

“ஹர்யன்காவிற்குப் பக்கபலமாகத் துணை நிற்பது யார்?”

தான் விளக்காமலேயே ஹர்யன்காவின் சதித்திட்டங்களைச் சில விநாடிகளுக்குள்ளாகவே புரிந்து கொண்ட உதயேந்திரனின் புத்திக் கூர்மையைக் கண்டு மிதமிஞ்சிய பிரமிப்பில் ஆழ்ந்துப் போன சந்திர நந்தன், தனது புரவியை உதயேந்திரனுடைய புரவிக்கு அருகில் கொணர்ந்தவன், அடுத்து கூறிய பதிலில் உதயேந்திரனின் விழிகள் இடுங்கியதில் நெற்றியின் இடது புரத்தில் இருக்கும் அவனது சிறிய வடுவும் சுருங்கியது.

“பாண்டிய படைகள்..”

“இதனை நான் எதிர்ப்பார்த்தது தான் சந்திரா.. நந்த ராஜ்யத்தை எதிர்த்துத் தனியாகப் போர் தொடுக்கும் துணிவோ, அதற்கான வியூகங்களையும் தந்திரங்களையும் தீட்டுவதற்கான பெரும் புத்திசாலித்தனமோ ஹர்யன்காவிற்குக் கிடையாது.. உன்னுடன் போரிடும் திறமையும், அதற்கு இணையான படைபலமும் அவனது சைனியத்தில் இல்லை.. ஆகையால் அந்நிய நாட்டவரின் உதவியை நாடி இருக்கின்றான், தங்கேதி தேசத்திற்கே இழுக்கையும் பெரும் அவமதிப்பையும் வரவழைத்துக் கொண்டிருக்கும் அக்கோழை..”

“ஆம், அதில் தான் பெரும் சிக்கல் அடங்கியிருக்கின்றது உதயா.. இப்பொழுது தந்தையின் உடல்நிலை இருக்கும் சூழ்நிலையில் அவரால் இனி அரியாசனத்தில் அமர இயலுமா என்ற சந்தேகம் அவருக்கே எழுந்ததன் பெயரில், எங்களது ராஜ்யத்தின் அரசனாக எனக்கு முடி சூட்டுவதைப் பற்றி அவர் சிந்திக்கத் துவங்கிவிட்டார்.. இவ்வேளையில் எங்களது ராஜ்யத்தைப் போர் மேகம் சூழும் அபாயம் நேர்ந்திருக்கின்றது.. நான் அரியனை ஏறும் நேரம், உஜ்வாலா அரசனை வென்றிருக்க வேண்டும்..”

சிறிது நேரம் தனது பைரவனை அங்கும் இங்கும் நடமாடவிட்ட உதயேந்திரன் மீண்டும் சந்திர நந்தனை நெருங்கியவன்,

“சந்திரா, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன் நீ என்னை முதன் முதலில் சந்திக்க வந்த அன்று, எங்கள் அரசவையில் நடந்த விவாதங்கள் உனக்கு நியாபகம் இருக்கின்றதா? அப்பொழுது எங்களது ஒற்றன் ஒருவன் தெரிவித்த விஷயமும் உனக்கு மறந்திருக்காது என்று நினைக்கின்றேன்.. அன்று இதே செவ்வண்ணமலைக் காட்டில் நான் சந்தித்த ஐவரையும், எங்களது ஒற்றன் கூறியதையும் இணைத்து பார்த்ததில், ஹர்யன்கா எங்களது வர்ம ராஜ்யத்தின் மீதும் குறி வைத்திருக்கின்றான் என்பது எனக்கு எப்பொழுதோ புரிந்துவிட்டது.. ஆகையால் எனது வீரர்களைப் பல இடங்களுக்கு ஒற்றர்களாக வேவு பார்க்க நான் அனுப்பியிருந்தேன்… அவர்கள் தெரிவித்த விஷயங்கள் படி, அவன் வர்ம இராஜ்யத்தின் மீது மட்டும் படையெடுக்க முடிவு செய்யவில்லை, இந்தத் தங்கேதி தேசத்தின் இன்னும் பிற ராஜ்யங்களையும் சிற்றரசுகளையும் தனது உஜ்வாலா அரசின் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வர சதி திட்டங்கள் தீட்டியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.. அதற்கு அதி நிச்சயமாக அந்நிய நாட்டினரிடம் ஹர்யன்கா உதவி கோருவான் என்றும், ஏற்கனவே இத்தகைய அறிய வாய்ப்பு ஒன்று தங்களுக்குக் கிட்டாதா என்று காத்துக் கொண்டிருக்கும் வேற்று நாட்டவர் அவனுக்குத் துணை நிற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்.. நரி தனது புத்தியைக் காட்டிவிட்டது..”

“ஆகையால் தான் உங்களை நாடி நான் வந்திருக்கின்றேன்.. வேற்று நாட்டினரிடம் உதவியை யாசகம் செய்திருப்பவனை அவன் முன்னேறுவதற்குள் நாம் அழித்துவிடவேண்டும்.. பாண்டிய படைகள் நம் தங்கேதி தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முன் நாம் உஜ்வாலா ராஜ்யத்தை நமது கைகளுக்குள் கொண்டு வர வேண்டும்.. அதற்கு உனது உதவி எனக்கு மிகவும் அவசியம் உதயா..”

வெகு நேரம் இருவரும் ஆலோசனைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களை நோக்கி தனது புரவியில் அதிவேகமாக வந்த வீரன் ஒருவன் உதயேந்திரனின் ஒற்றர்கள் இருவர் வந்திருக்கும் தகவலை தெரிவிக்கவும், தன் புரவியின் மீதிருந்து சிறிதாகச் சாய்ந்த உதயேந்திரன் சந்திர நந்தனின் தோளில் கரத்தை வைத்தவன்,

“சந்திரா.. வெற்றி நம் பக்கம் இருக்கின்றதென்றல் வந்திருக்கும் ஒற்றன் நமக்குத் தேவையான தகவல்களை நிச்சயமாகத் தெரிவிப்பான்..” என்றான், தன் வலிய உதடுகளில் மென்னகை சிந்தி, நண்பனுக்குத் தைரியத்தையும் திடத்தையும் ஊட்டும் விதமாக.

ஒற்றர்களை வரப் பணித்த உதயேந்திரன் அவர்கள் வந்ததும் தனது விசாரணைகளைத் துவங்க, ஹர்யன்காவின் திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் கூறவும் உதயேந்திரனின் வதனத்தில் அந்தச் சில மணித்துளிகளில் தோன்றி மறைந்த பல் வேறு உணர்ச்சிகளையும், இறுதியாக அவன் உயர்த்திய நெற்றியின் அடையாளமாக அவனது இடது புறத்தில் இருந்த சின்னஞ்சிறு வடுவும் மெள்ள உயர்ந்ததையும், அவன் தனது இடது கரத்தால் வடுவை அழுத்துத் தடவியதையும் கண்டதுமே ஒற்றர்களுக்குப் புரிந்து போனது..

இவன் தனது திட்டத்தை அதற்குள்ளாகவே தீட்டிவிட்டான் என்றும், போர் என்ற எண்ணம் அவன் இதயத்தில் உதயமான கணமே அவனது வழக்கமான உடல் மொழியாக அவன் தன் வடுவைத் தடவியதில் மிகப்பெரிய யுத்தத்திற்குதயாராகிவிட்டான் என்றும்..

ஹர்யன்காவின் தற்பொழுதைய நோக்கமும் திட்டமும் தெளிவாகத் தெரியாத பட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது இயலாது என்பதால், ஒற்றர்களைச் செல்லுமாறு தலையை மட்டும் அசைத்த உதயேந்திரன் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் சந்திர நந்தனின் முகம் நோக்கி திரும்பினான்.

“சந்திரா, நான் நினைப்பது சரியென்றால் தெற்கு தங்கேதி தேசத்தில் மிகப்பெரிய ராஜ்யங்களான வர்ம ராஜ்யத்தையும் நந்த ராஜ்யத்தையும் தான் முதலில் அழிக்க ஹர்யன்கா திட்டங்கள் தீட்டியிருப்பான். அதுவும் எனது எண்ணத்தின் படி அவன் நம் இரு ராஜ்யங்களையும் எதிர்த்து ஒரே நாளில் போர் தொடுக்கவும் முயற்சி செய்யக் கூடும்.. அப்படி என்றால் நிச்சயம் பாண்டிய படைகள் நமது தங்கேதி தேசத்திற்குள் நுழையும் வரை அவன் தனது கோட்டையை விட்டு வெளியே வர மாட்டான்.. ஆகையால், எங்களது ராஜ்யத்தைப் படையெடுக்க அவனது சேனாதிபதி அல்லது தளபதிகள் எவர் தலைமையிலேனும் தனது படைவீரர்களையும் அனுப்பக்கூடும்.. எங்கள் ராஜ்யத்திற்கு எதிரி நாட்டு வீரர்கள் நுழைவதை தடுக்க எனது தந்தை இங்கு இருந்தே ஆகவேண்டும்.. நாம் இருவரும் முடிவெடுத்தது போல் பாண்டிய படை நமது தங்கேதி தேசத்தை ஊடுருவதற்கு முன் நமது திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.. இனி காலம் தாழ்த்தக் கூடாது… நாளை அதிகாலையே நமது பயணத்தைத் துவங்க வேண்டி வரும்… நீ அதற்குள் சற்று ஓய்வெடுத்துக்கொள்..”

உதயேந்திரனின் திட்டத்தை ஆமோதிப்பது போல் சற்றே தலையசைத்து விடைப்பெற்ற சந்திர நந்தன் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் அறைக்குச் செல்ல, சிறிது நேரம் மலையடிவாரத்தில் புரவியை உலவவிட்டுக் கொண்டிருந்த உதயேந்திரனின் எண்ணங்கள் முழுவதிலும் உஜ்வாலா அரசனை எதிர்ப்பதிலும், அவனது திட்டங்களை முறியடிப்பதிலும், பாண்டிய படைகள் தங்கேதி தேசத்தினுள் ஊடுருவுவதைத் தடுப்பதிலுமே ஆக்கிரமிக்க, நெடு நேரம் உலவிக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் பெரும் அபாயகரமான போர் திட்டம் உருவாகியதற்கு அறிகுறியாக, அவனது அதரங்களில் இளம் கீற்று போல் மெல்லிய முறுவல் படர்ந்தது.

குனிந்து புரவியை நோக்கியவன் அதன் பிடறி மயிறை தடவியவாறே,

“பைரவா, நாளை நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.. நாம் மீண்டும் ஆதிநல்லூர் வருவதற்குச் சிறிது காலம் ஆகலாம்.. ஆகையால் இன்று இரவு நீ நன்கு ஓய்வெடுத்துக் கொள்..” என்றதுமே நண்பனின் திட்டங்களைத் தானும் உணர்ந்தது போல் கனைத்தவாறே தலையசைத்தது அப்புரவி.

மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னரே தனது பெற்றோரிடம் ஆசிர் பெற்ற உதயேந்திரன், சந்திர நந்தனுடன் நந்த ராஜ்யத்தின் தலை நகரமான விஜயநகரை நோக்கி விரைந்தான்..

பெரும் புயல் ஒன்றை இளம் பெண்ணின் ரூபத்தில் நந்த ராஜ்யத்தில் தான் சந்திக்கப் போவதை சற்றும் அறியாமலேயே!

***************************************************************

உஜ்வாலா ராஜ்யத்தின் தலை நகரம்… ஆயாத்யா மாநாகரம்…

இரவின் முதல் ஜாமம் முடிந்து கொண்டிருந்தாலும் உறக்கம் வராதது போல் பஞ்சணையில் அமர்ந்தபடியே தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த ஹர்யன்கா உஜ்வாலாவின் சிந்தனைகளைத் திசை திருப்பியது, கதவை தட்டிவிட்டு அவன் அனுமதியுடன் உள்ளே நுழைந்த சேனாதிபதியும் பேரமைச்சரும் தன்முன் தலைவணங்கி நின்ற தோற்றம்.

“இந்த அகால வேளையில் உம்மைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் அரசே..”

“இருக்கட்டும், தாங்கள் வந்த காரியம்?”

“அரசே! பாண்டிய மன்னன் கஜவீர பாண்டியனிடம் இருந்து ஓலை வந்திருக்கின்றது…”

பஞ்சணையில் இருந்து எழாமலேயே கரத்தை நீட்டிய ஹர்யன்காவின் கரத்தில் ஓலையை வைத்த பேரமைச்சர் அவனது முகத்தையே கூர்ந்துப் பார்த்தவாறு நிற்க, ஓலையில் எழுதியிருக்கும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை ஆழ்ந்துப் படித்த ஹர்யன்கா மஞ்சத்தில் இருந்து எழுந்து அங்குமிங்கும் உலவியவன், பின் அறைக்கோடியிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தனக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் பேரமைச்சரையும், சேனாதிபதியையும் அமரச் சொன்னதுமே சம்பாஷணைகளைத் துவங்கினான்.

“கஜவீர பாண்டியன் தன் படைகளை நமக்கு உதவுவதற்கு அனுப்ப சம்மதித்திருக்கின்றான்.. ஆனால் அதற்கு அவன் விடுத்திருக்கும் நிபந்தனைகள் சற்று அதிகமாகவே படுகின்றது..”

தன்னெதிரில் அமர்ந்திருக்கும் சேனாதிபதியின் மீதும், பேரமைச்சரின் மீதும் யோசனை நிறைந்த கண்களை நாட்டியவாறே பேசியவனின் பார்வையில் இருந்தே, பாண்டிய அரசனின் கட்டளைகள் எவ்விதமாக இருக்கும் என்பதைப் புரிந்துக் கொண்டவர்கள் அவன் வாயில் இருந்தே விஷயங்களைப் பெற வேண்டும் என்பது போல் அமைதியாக அமர்ந்திருக்க, மேலும் தொடர்ந்தான் ஹர்யன்கா.

“கஜவீர பாண்டியன் நமது தங்கேதி தேசத்திற்கு அருகில் இருக்கும் இலங்கையின் மீது படையெடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், அப்பொழுது அவனுக்கு நாம் உதவுவதாக இருந்தால், இப்பொழுது நமது தேவைகளுக்கேற்ப அவனது படைகளை நமக்கு உதவுவதற்கு அனுப்புகிறேன் என்று தெரிவித்திருக்கின்றான்.. இலங்கையை எதிர்ப்பதற்கு நாம் மட்டுமல்ல, இன்னும் சில இராஜ்யங்களின் அரசர்களும் அவனுக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்திருக்கின்றார்களாம்.. அவர்களுடன் நமது படைகளும் இணைய வேண்டுமாம்..”

கூறிய ஹர்யன்கா மணித்துளிகள் சில யோசனையில் ஆழ்ந்தவன் பேரமைச்சரின் முகம் நோக்கி திரும்பி, “இதற்கு உடன்பட நான் முடிவு செய்துவிட்டேன் பேரமைச்சரே.. உங்களது கருத்து என்ன?” என்றான்.

நிமிடங்கள் சில தலைகவிழ்ந்து புருவங்கள் முடிச்சிட நெற்றியை அழுந்த தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்த பேரமைச்சர் மீண்டும் நிமிர்ந்தவர், தன்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்விளம் சேனாதிபதியைக் கண்டு விழிகளை இடுக்கியவாறே,

“சேனாதிபதியின் முடிவு என்னவோ?” என்றார்.

“பாண்டிய அரசனின் உதவி இல்லாது நம்மால் தங்கேதி தேசத்தை நமது கட்டுக்குள் கொணற முடியாது பேரமைச்சரே.. ஒவ்வொரு இராஜ்யமாக அழித்ததற்குப் பின்னர்த் தான் நமது பேரரசனான ஷாஸ்ரஸாத் மாயியை எதிர்க்க முடியும்.. அதற்கு முதலில் தெற்கு தேசத்தைப் பெருமளவு ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜ்யங்களில் அளவிலும் ஆதிக்கத்திலும் பெரும் உயரத்தில் இருக்கும் வர்ம ராஜ்யத்தையும் அவர்களுக்கு அடுத்து இருக்கும் மற்ற இராஜ்யங்களையும் அழிக்க வேண்டும்..”

சேனாதிபதியின் பதிலில் அதிருப்தியைக் கொண்ட பேரமைச்சர்,

“நமது தேசத்தின் பெரும் பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் ஷாஸ்ரஸாத் மாயியை அழிப்பது அத்தனை சுலபமல்ல என்பதை நமது சேனாதிபதியாருக்கு நான் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்..” என்றார் நக்கலும் வழியும் குரலில், இகழ்ச்சி தொனிக்க.

“ஷாஸ்ரஸாத் மாயியை அழிப்பது சுலபம் என்று நான் எப்பொழுது கூறினேன்..”

வெடுக்கென்று பதிலளித்த சேனாதிபதியை நோக்கி தனது வலது கரத்தை உயர்த்திய ஹர்யன்கா, அவனைப் பேச வேண்டாம் என்பது போல் தடுத்தவன் பேரமைச்சரை ஏறெடுத்து நோக்கித் திரும்பியவனாக,

“பேரமைச்சரே, பேரரசர் ஷாஸ்ரஸாத் மாயியை அழிப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான்.. ஆகையால் தான் இந்தத் தங்கேதி அரசின் சிற்றரசுகளை எனது உஜ்வாலா இராஜ்யத்தின் கீழ் கொணர வேண்டும் என்று திட்டம் தீட்டினேன்.. அதுவே நான் அடியெடுத்து வைக்கும் முதல் படியும் கூட.. அத்தகைய சிற்றரசுகளில் சேனாதிபதி கூறுவது போல் இப்பொழுது பெரும்புகழுடனும், வளத்துடனும், பெரும்படையுடனும் இருப்பது வர்ம ராஜ்யமும் நந்த ராஜ்யமும் தான்.. ஆகையால் தான் இவர்களை முதலில் நமது கரங்களுக்குக் கீழ கொண்டு வர திட்டங்கள் தீட்டியுள்ளேன்.. அவர்களை அழித்துவிட்டால் பின்னர் மற்ற சிற்றரசுகளை அழிப்பதில் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை.. அதற்கான சந்தர்ப்பமும் இதுவே..” என்றான் கட்டளைத் தொனிக்கும் குரலில், தன் முடிவே இறுதியான முடிவென்பது போல் வெகு அதிகாரமான தோரணையுடன்..

“நந்த ராஜ்யத்தின் வளத்திற்கும் புகழுக்கும் அடுத்து இருப்பது சிம்ம ராஜ்யம்.. அதனை ஆட்சி செய்து கொண்டிருப்பது விக்கிரம்ம சிம்மன்.. அவனை நீங்…”

பேரமைச்சரின் பேச்சுக்களைச் சட்டென்று இடைமறித்துத் தடுத்த ஹர்யன்கா,

“விக்கிரம்ம சிம்மனைப் பற்றிய கவலை இப்பொழுது வேண்டாம் பேரமைச்சரே.. அவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. அவன் பூபால நந்தனைப் போன்றோ அல்லது விஜயேந்திர வர்மனைப் போன்றோ நம் தேசத்தின் வளர்ச்சியின் மீது பெரும் பற்றுக் கொண்டவனல்ல… அவனை அழிப்பதும் பெரும் விஷயமுமல்ல.. இப்பொழுது நாம் தொடுக்கப் போகும் போரில் வர்ம ராஜ்யமும் நந்த ராஜ்யமும் நமது ஆட்சிக்குக் கீழ் வந்துவிட்டால், பிறகு நமது படைபலமும் பெருகும், அப்பொழுது சிம்ம ராஜ்யத்தை நமது கைக்குள் அகப்படுத்துவது எளிது..” என்று முடித்தான்.

விக்கிரம்ம சிம்மனை எளிதாக எடைப் போட்டதில் இருந்தே தங்களது அரசனின் திட்டம் வலுவற்றது என்பதைத் தெள்ளென உணர்ந்து கொண்டார் பேரமைச்சர்.

இவனை எதிர்ப்பதென்பதோ தடுப்பதென்பதோ இப்பொழுது நடவாத காரியம் என்று புரிந்துக் கொண்டவராகச் சிம்ம அரசனைப் பற்றிய விவாதங்களை விடுத்து,

“சரி, அவ்வாறென்றால் நம் பேரரசரின் விஷயத்திற்கு வருகிறேன்.. உங்களது திட்டத்தின் படி ஷாஸ்ரஸாத் மாயி நமது தேசத்தில் இல்லாத இத்தருணத்தைத் தக்கவிதமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றீர்கள்.. ஆனால் அரசர் இங்கில்லாவிடினும் நமது திட்டங்கள் அவரது செவியைச் சென்று சேர்ந்ததுமே நம்மீது அவரது படைகளை ஏவுவதற்கு அவர் தங்கேதி தேசத்தில் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே அரசே…” என்றார் தனது விருப்பமின்மையைக் காட்டும் விதத்தில் அசிரத்தையான குரலில்.

“அதாவது தெரிந்தே எரிந்து கொண்டிருக்கும் அக்னியில் குதிப்பது போன்று என்று கூறுகிறீர்கள், அப்படித் தானே பேரமைச்சரே?”

அவனது கேள்வியிலேயே குதர்க்கம் ஒளிந்திருப்பதையும், கேட்டுக்கொண்டே புருவங்களை உயர்த்தித் தன்னை இகழ்ச்சிப் பார்வைப் பார்ப்பதையும் கண்ட பேரமைச்சருக்கு, அவனது வினாவிற்கு ஆமாம் என்றாலும் பிரச்சனை, இல்லை என்றாலும் சிக்கல் என்று தோன்றவே, தனக்கருகில் அமர்ந்திருக்கும் சேனாதிபதியைத் திரும்பிப் பார்த்தார்.

வயதிலும் அறிவிலும் மூத்த அறிஞரான உங்களையே மதியாத அரசன் எனது விருப்பத்தையும் ஆலோசனைகளையுமா செவிமடுத்துக் கேட்கப் போகிறான் என்பது போல் சேனாதிபதியும் பேசாது இருந்துவிட,

“உங்கள் இருவரது அமைதியே எனது திட்டங்களிற்கான சம்மதத்தைத் தெரிவித்துவிட்டதாக நான் எடுத்துக் கொள்கிறேன்.. நந்த ராஜ்யத்தையும், வர்ம ராஜ்யத்தையும் அழிப்பதற்கான போர் திட்டங்கள் மற்றும் வியூகங்களுடன் என்னைச் சந்திக்க வாருங்கள்.. இப்பொழுது நீங்கள் இருவரும் செல்லலாம்…” என்றவன் வாயிலை நோக்கி தன் இடது கரத்தை லேசாக உயர்த்திக் காட்ட, அரசனின் பேச்சிலும், தங்களை வெளியெறச் செய்யும் அவனது அசைவிலும் உள்ளுக்குள் எரிச்சலுற்றாலும் வேறு வழியின்றி வெளிப்போந்தனர், அரசனை விடப் பல பிராயங்கள் மூத்தவரான பேரமைச்சரும், அவ்விளம் சேனாதிபதியும்.

பேரரசன் ஹாஸ்ரஸாத் மாயி, தங்கேதி தேசத்தின் அண்டை நாடான இலங்கைக்குச் சென்றிருக்கும் இந்நேரத்தை தங்களின் சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கு உபயோகப்படுத்தத் துவங்கினான் ஹர்யன்கா உஜ்வாலா..

ஆனால் தனது படைத் தளபதிகளுடனும், அமைச்சர்களுடனும் ஒன்று கூடும் இந்நேரத்தில், தங்களது படை உஜ்வாலா தேசத்தை விட்டு வெளியேறும் முன்பே, அவனது ராஜ்யத்தை அழிப்பதற்கு இளங்காளை ஒருவன் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான் என்பதும், அவன் தனது கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் அறியாமலேயே…

************************************************************************

சிம்ம ராஜ்யம்.. வேணி மாநகரம்..

நாட்கள் அதன் போக்கில் நகர, விக்கிரம்ம சிம்மனுக்கும் மகிழ்வதனிக்கும் விவாகம் நடப்பதற்கு இன்னும் இரு வாரங்களே இருந்த நிலையில், வெட்கத்தால் முகம் சிவந்து தலைகவிழ்ந்து நிற்கும் இளம் பெண்டிரைப் போன்று செக்கச்சிவந்திருந்த மாலை கதிரவன் ஆழ்கடலுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்ட அந்தி சாய்ந்த நேரத்தில், தனது பள்ளியறை பஞ்சணையில் படுத்திருந்த மகிழ்வதனிக்கு, பஞ்சும் நொந்ததோ என்பது போல் மேனியும் உள்ளமும் வேதனையில் நொந்துப் போயிருந்தன.

நெடு நேரம் வரை புரண்டு கொண்டே படுத்திருந்தவளின் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்திருக்க, மெல்ல எழுந்தவள் கலைந்திருந்த மார்பு கச்சையைச் சரிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் கூட இல்லாது, அவ்வறையில் ஒரு பக்கச் சுவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சாளரத்தை நோக்கி நடந்தாள்.

தொலைவில் தெரிந்த ஆகாயத்தில், மணவாளனை எதிர்நோக்கி கன்னங்கள் இரண்டும் கூச்சத்திலும் நாணத்திலும் வெட்கி சிவந்திருக்கும் மடந்தை பருவத்தினரைப் போன்று மேற்கு திசையில் வெங்கதிரோன் வைத்துச் சென்ற மிச்சமீதி சிவப்பு மறைந்து கருமைப் படரத் துவங்கிய வேளையில்,

பருவத்தை அடையாமல் பருவத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெதும்பை, மங்கை பருவப் பெண்களைப் போல், ஆங்கிங்கு சிறிதே தலை நீட்டிக் கொண்டிருக்கும் விண்மீன்களைக் கண்டவளின் நினைவுகள் பின்னோக்கி நகரத் துவங்கின.

மரங்கள் அடர்ந்து நிற்கும் கானகத்தின் நடுவே முளைத்திருந்த மணல் மேட்டின் முகட்டில் அமர்ந்திருந்த இரவுகளில், இதனைப் போன்றே சூரியன் மறையும் நேரத்தில் தோன்றக் கூடிய நட்சத்திரங்களை எனது பிஞ்சு விரலை நீட்டி எண்ணத் துவங்கியிருந்த நான் முடிக்க முடியாது சலித்துப் போயிருக்கும் வேளையில், தோல்வி என்ற வார்த்தையின் பொருளைக் கூட எனது வாழ்க்கையில் நான் அறியக்கூடாது என்று நான் விட்ட இடத்தில் இருந்து நட்சத்திரங்களைத் தான் எண்ணியிருக்கின்றார் எனது தந்தை.

படுத்திருக்கும் பஞ்சணையும் உஷ்ணத்தைக் கக்கும் அனல் போல் தகித்திருக்கும் இத்தருணத்தில், சாளரத்தின் ஊடே வீசும் தென்றல் காற்றும் அத்தகிப்பை தனிக்காது வெப்பத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தந்தையின் கரங்கள் காட்டுவித்த பாதையில் பயணிக்கத் துவங்கியிருக்கும் எனது பயணத்தின் முடிவை அறியாது, தனிமையில் ஆதரவற்ற நிலையில் நிற்கிறேன்.

எனது பயணம் கொண்டு செல்லும் பாதையின் இறுதிக்கட்டம் வெற்றியா? இல்லை தோல்வியா?

வெற்றியின் பலனாக நான் பெறப்போவது அரியாசனமா அல்லது தோல்வியின் முடிவாக நாம் அடையப்போவது மரணமா?

மாளிகையின் வெளியே புரவிகளின் மீது அமர்ந்தும், வாட்களை இறுக்கப் பிடித்தப்படியே நடந்தவாறும் காவல் புரிந்துக்கொண்டிருக்கும் வீரர்களின் மீதே தனது கூரிய விழிகளைப் படரச் செய்திருந்தவாறே நெடு நேரம் சிந்தித்துக் கொண்டிருக்க, நடுச்சாமம் துவங்க இன்னும் அரை நாழிகை இருக்கும் நேரத்தில் திடுமெனத் தன் அனுமதியின்றித் திறக்கப்பட்ட அறைக்கதவின் சப்தத்தில் சரேலெனத் திரும்பிப் பார்க்க, வலிய உதடுகளை விரித்தவாறே பற்கள் அனைத்தையும் வெளிக்காட்டும் வகையில் அருவருக்கத்தகுந்த முறையில் சிரித்துக் கொண்டு நின்றான் விக்கிரம்ம சிம்மன்.

“உனது அனுமதியின்றி உன்னைச் சந்திக்க வந்ததற்கு நீ கோபம் கொள்ள மாட்டாய் என்று நினைக்கின்றேன் வஞ்சிக்கொடி..”

இன்னும் இரு வாரங்களில் மனைவியாகப் போகிறவளாக இருந்தாலும், ஒரு பெண்ணின் அறைக்கு இச்சாமவேளையில் அவளது அனுமதியின்றித் திடுதிப்பென்று நுழைவது அரசனானாலும் அது எப்பேற்பட்ட கீழ்தரமான செயல் என்பது தெரியாமல் இருக்க விக்கிரம்ம சிம்மன் என்ன முட்டாளா?

இருந்தும் இவ்வாறு உள்ளே நுழைபவனின் நோக்கம் நிச்சயமாக உன்னதமான தூய்மையான நோக்கமாக இருக்கப் போவதில்லை.

தன்னை விவாகம் புரியும்வரை தன்னை நெருங்கவோ தீண்டவோ கூடாது என்று மகிழ்வதனிக் கட்டளையிட்டிருந்ததால், காரிகைகளைத் தன் கண்கள் தீண்டிய நிமிடமே அவர்களின் பூவுடல்களைக் கபளீகரம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தவன், ஏனோ மகிழ்வதனியை மட்டும் அவ்வாறு வலுக்கட்டாயமாக அடைய விருப்பம் இன்றி இருந்தான்.

அது மட்டுமல்லாது ஒரு நாள் மட்டுமே என் பள்ளியறை பஞ்சணையை அலங்கரிக்கும் வெகு சாதாரண அழகு இவளது கிடையாது, வாழ்நாள் முழுமையிலும் தாபமும் வேட்கையும் எழும் தருணங்களில் எல்லாம் எனது கரங்களுக்குள் புரள வேண்டிய பேரழகு இவளது என்ற காதல் மயக்கத்தில் அவளை விட்டு தள்ளியே இருந்த விக்கிரம்ம சிம்மனுக்கு, திருமண நாள் நெருங்க நெருங்க, தனக்கு முழு உரிமையாகப் போகிறவள் தானே, அவளைத் தீண்டினால் என்ன என்ற ஆவல் ஆழ்கடல் அலைகளெனப் பேரிரைச்சலோடு எழத் துவங்கியிருந்தது.

அவளை ஒரே விநாடியில் தன் கட்டுக்குள் பலவந்தமாகக் கொணர்வது வீரத்திலும் பெயர் பெற்றிருந்த விக்கிரம்ம சிம்மனுக்குப் பெரிய காரியமல்ல..

ஆனால், என்று மகிழ்வதனி தன்னை மணந்து கொள்ளுமாறு விண்ணப்பித்திருந்தாளோ அன்றிலிருந்து அவளது அழகு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, மகிழ்வதனியின் ஒரு பார்வைக்கே அவளது கால்களில் விழத் துடித்திருக்கும் பெண்ணாசைக்காரனான பித்தனுக்கு, ஒருவேளை இதனைக் காரணம் கொண்டு அவள் தன்னை மணக்க விருப்பமில்லை என்று கூறினால் என்ற அச்சமும் எழும்பியிருந்தது.

ஆகையால் பகலில் தானே என்னை நெருங்க விட மறுக்கிறாள், இந்நேரம் துயில் கொண்டிருப்பாள்.. இப்பொழுது அவள் அறியாது அவளது அறைக்குள் நுழைந்தேனாகில், அவளைத் தீண்ட இயலாவிட்டாலும், அவள் துயில் கொண்டிருக்கும் அழகையாவது இரசிக்க முடியுமே என்று அசூசை நிறைந்த எண்ணத்துடன் உள்ளே வந்திருந்தவன், அவள் விழித்திருப்பதைக் கண்டு ஒரு வினாடியே திகைத்தாலும், சட்டென்று தன்னைச் சமாளித்தவாறே கூறிய சொற்கள் தான்,

“உனது அனுமதியின்றி உன்னைச் சந்திக்க வந்ததற்கு நீ கோபம் கொள்ள மாட்டாய் என்று நினைக்கின்றேன் வஞ்சிக்கொடி..” என்பன.

“அனுமதியின்றி என் அறைக்குள் நுழைவது தவறுதான்.. ஆனால் இன்னும் இரு வாரங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகும் நாம் இருவரும் அத்தகைய கட்டுத்திட்டங்களுக்கு உட்பட வேண்டிய அவசியம் இனி இல்லை என்று நினைக்கின்றேன் அரசே..”

முதன் முறை தன்னுடன் தணிந்துப் பேசும் மகிழ்வதனியைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த விக்கிரம்ம சிம்மன், விடுவிடுவென்று அவளை நோக்கி நடந்தவன் அவளை இடித்துவிடும் அளவிற்கு நெருங்க, சட்டென்று இரு அடிகள் பின்னோக்கி எடுத்து வைத்தவள், அவனது நகக்கண்கள் கூடத் தன் மீது படாதளவிற்கு நின்றவாறே,

“என்னைச் சந்திக்க நீங்கள் என் அறைக்கு வர வேண்டிய அவசியம் இல்லையே அரசே.. நீங்கள் தகவல் அணுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே.. இந்நேரத்தில் என்னைக் காண வருவதற்குக் காரணம் என்னவோ?” என்றாள் கண்களில் அளவுக்கதிகமாகவே சரசத்தையும் ஆவலையும் நெளியவிட்டு, மோகனப் புன்னகையுடன்.

தான் அவளை நெருங்க முற்படும் நேரமெல்லாம் தன்னை விட்டு விலகுவதிலேயே குறியாக இருந்தவள், இன்று தாபம் பொங்கி வழியும் கிசுகிசுப்பான மெல்லிய குரலில் பேசுவதைக் கண்டு தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பெரும்பாடுப்பட்டுப் போனான் சிம்ம அரசன்.

அவளது தாடையில் தன் ஒற்றை விரலை பதித்துத் தன்னை நோக்கி அவளது முகத்தை உயர்த்தியவாறே,

“நமது விவாகத்திற்கு இன்னும் இரு வாரங்கள் இருக்கின்றன.. ஒவ்வொரு மணித்துளியையும் பெரும் யுகத்தைப் போன்று கழித்துக்கொண்டிருக்கும் எனக்கு, இன்னும் இரு வாரங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தப் பரிதாபக்காரனால் இயலவில்லையே வஞ்சிக்கொடி…” என்றவனின் பார்வை பஞ்சணையில் இருந்து அசிரத்தையுடன் எழுந்ததில் சரிப்படுத்தாது விலகியிருந்த பெண்ணவளின் மார்பு கச்சையின் மீது சட்டென்று பதிந்தது.

அவனது விரல் தன்னைத் தீண்டிக் கொண்டிருப்பதிலேயே கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தூக்கிப் போடப்பட்ட விட்டில் பூச்சி போல் உள்ளுக்குள் எரிந்து கருகி துடிதுடித்துக் கொண்டிருந்த மகிழ்வதனிக்கு, இப்பொழுது அரசனது பார்வை நிலைக்குத்தி இருக்கும் இடத்தைக் கண்டு மேனி முழுவதும் கூசத் துவங்க, மெல்ல அவனது விரலை தன் முகத்தில் இருந்து நீக்கியவளாக,

“கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகப் போகிறது அரசே.. நான் உங்களுக்குத் தான்.. எனது இம்மேனி உங்களுக்கு மட்டுமே சொந்தம்.. ஆனால் அதற்கு முன் நான் ஏற்கனவே கூறியது போல் உங்களது மாங்கல்யம் எனது கழுத்தை அலங்கரிக்க வேண்டும்.. அதன் பிறகு தான் இல்லற வாழ்கையில் நாம் இருவரும் அடியெடுத்து வைக்க வேண்டும்..” என்றாள் திடமான குரலுடன்..

மையலையும் காமத்தையும் கலந்து வீசும் விழிவீச்சில் அந்நொடி அடிமையாகிப் போயிருந்த விக்கிரம்ம சிம்மனின் கவனத்தை இழுக்காதவண்ணம், அவள் சேலை தலைப்பை இழுத்து மார்பை மூடியவாறே.

கடந்த இரண்டரை மாதங்களாகப் பல்வேறு தருணங்களில் விக்கிரம்ம சிம்மன் மகிழ்வதனியை நெருங்க முயலும் பொழுதெல்லாம், தனது புத்திக் கூர்மையாலும் சாமர்த்தியத்தாலும் அவனை விலக்கி வைத்திருந்தவளுக்கு, இனியும் இவனை இவ்வாறு புறந்தள்ளுவது எளிதல்ல என்று தோன்ற, இன்றிரவே இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று வெகு உறுதியாகத் தீர்மானித்தவள் போல் கொட்டாவிவிட்டவாறே,

“மன்னிக்க வேண்டும் அரசே.. திருமணத்திற்கு வேண்டிய புத்தாடைகள், அணிகலன்களை எல்லாம் வடிவமைத்திருக்கும் நமது வடிவமைப்பாளர்களும், கலைஞர்களும் விவாக உடைகளுடனும் அணிமணிகளுடனும் நாளை வரவிருக்கின்றார்கள்.. அவர்களைச் சந்திக்க நான் பொழுது புலரும் முன்பாகவே எழுந்து நீராடி ஆயத்தமாக இருக்க வேண்டும், அதற்கு நான் இன்னும் சில மணித்துளிகளாவது உறங்கி பின் எழ வேண்டும்.. சிறிது நேரமாவது துயில் கொண்டால் தான் என்னால் கவனத்துடன் அவற்றை அணிந்துப் பார்த்துப் பின் தேர்வு செய்ய முடியும்..” என்றாள்.

திருமண நாளை நினைத்தவுடனேயே சிம்ம அரசனின் உள்ளம் அக்களிப்பில் துள்ள துவங்க, வேறு வழியின்றி ஏக்கத்துடனும், அடங்காத இச்சையுடனும் அவளின் உச்சி முதல் பாதம் வரை துளைத்தெடுக்கும் பார்வையை வீசியவன் சூடான மூச்சுக் காற்று ஒன்றை வெளியேறவிட்டவாறே அறையைவிட்டு வெளியேற, அவன் தலை மறைந்ததுமே கதவை சாத்திய மகிழ்வதனி விடுவிடுவென்று தனது திட்டத்தின் அடுத்தப் படியை செயல்படுத்த துவங்கினாள்.

நன்றாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டவள், விலையுயர்ந்த சேலையையும் அணிந்து, இடைப்பகுதியில் மறைவாகத் தனது குறுவாளையும் கத்தியையும் சொருகியவள் அறையைத் திறக்க, இந்நேரத்தில் அவள் வெளிவருவதைக் கண்டு வியப்பில் கண்களை அகல விரித்து விழித்தனர் காவலர்கள்.

அவர்களில் ஒருவனை நெருங்கியவள் சன்னமான, ஆனால் சிறிதே உத்தரவிடும் குரலில்,

“இப்பொழுது அரசர் இங்கு வந்துவிட்டது சென்றது என்னை அவரது அறைக்கு அழைக்கவே.. காவலன் ஒருவனிடம் சொல்லி அனுப்பியிருக்கலாமே என்று நான் கேட்டதற்கு, எனது அறைக்கு இந்நேரத்தில் ஒருவரையும் அனுப்ப அவர் விரும்பவில்லை என்றும், அதற்காக அவரே வந்து என்னை அழைத்ததாகவும் கூறினார்.. நான் இப்பொழுது அவரது அறைக்கு அவரைச் சந்திக்கச் செல்கிறேன்.. இவ்வேளையில் என்னைச் சந்திக்க ஒருவரும் வரப்போவதில்லை, ஆயினும் எவராது என்னைத் தேடினாலும், அல்லது என்னைச் சந்திக்க விரும்புமாறு கூறினாலும் நான் அரசரின் அறைக்குச் சென்றிருப்பதையோ, அவருடன் தனித்திருப்பதையே தெரிவிக்க வேண்டாம்.. இதுவும் அரசரின் கட்டளையே…” என்றாள்.

ஒரு காலத்தில் போரில் வெற்றிவாகை சூடி ராஜ்யத்திற்குத் திரும்பி வரும் அரசர்கள் எதிரி நாட்டு ராஜ்யஸ்திரிகளைத் தங்களது வெற்றியின் பரிசாகச் சிறைப்பிடித்து, அவர்கள் தங்குவதற்கென்று கட்டப்பட்டிருந்த மாளிகையே, இப்பொழுது மகிழ்வதனி தங்கியிருக்கும் இந்த அந்தரங்க மாளிகை..

ஆனால், பெண்களைச் சிறை செய்யும் இந்தக் கொடிய வழக்கத்தை அடியோடு மாற்றியமைத்தது, சிம்ம ராஜ்யத்தைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டு வந்த மாறவர்ம சிம்மரே.. இராஜ்யசிம்மனின் பூட்டன், அதாவது பாட்டனின் தந்தை.

அவருக்குப் பிறகு சிம்ம ராஜ்யத்தை விஜயம் செய்யும் அரசர்கள் மற்றும் விருந்தினர்களுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு என்று இம்மாளிகை பயன்படுத்தப்பட, திடீரென்று அசம்பாவிதங்கள் ஏற்படும் தருணத்திலேயோ, அல்லது போர்காலங்களிலோ இப்பெண்கள் தப்பித்துச் செல்வதற்கென்று இம்மாளிகையில் மறைந்துக் கொள்வதற்காக ஏதுவாக, சுவரோடு சுவராக இரும்புக் குழிகள் அமைக்கப்பட்டிருந்தன..

அதனுடன் எவருடைய கண்களுக்கும் தென்படாதவகையில் ஐந்திற்கும் மேற்பட்ட இரகசிய அறைகளும், அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு ஏதுவாகச் சுரங்கப் பாதைகளும் கட்டப்பட்டிருந்தன.

இவ்வறைகள் பற்றியும், சுரங்க பாதைகள் பற்றியும் அரச குடும்பத்தினருக்கும், நம்பிக்கைக்குப் பாத்திரமான சேனாதிபதிகளுக்கும், பேரமைச்சர்களுக்கும் மட்டும் தெரியுமே தவிர, வேறு எவருமே அறிந்திராத வகையில் இராஜ இரகசியங்களாக இவை அனைத்துமே பாதுகாக்கப்பட்டிருந்தன..

ஆனால் இரகசியமாகப் போற்றப்பட்டிருந்த இவ்விஷயங்களைப் பற்றித் தெரிந்திருந்த மகிழ்வதனியோ, நெருக்கடியிலோ அவசரகார நிலைமையிலோ தான் சிக்க நேரும் பொழுது மட்டுமே இப்பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திலகவதியை சந்திக்கச் செல்வதற்குக் கூட மறந்தும் இப்பாதைகளை அவள் தேர்ந்தெடுத்தாள் இல்லை.

ஆனால் இன்று அவ்வறைகள் வழியே அவள் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் பிறந்துவிட்டது.

தனது கட்டளைக்குப் பணிந்து சரி என்பது போல் தலையசைத்த காவலனைக் கண்டு புன்னகைப் பூத்தவள், சிறிது தூரம் சென்றதும் சுவரில் சொருகி வைக்கப்பட்டிருந்த எரி பந்தம் ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் அம்மாளிகையின் பலக்கட்டுக்களைத் தாண்டி வடக்கே அமைந்திருக்கும் இரகசிய அறை ஒன்றை நோக்கி நடக்க, அறைக்குள் நுழைந்தவளின் துலாவி கொண்டிருந்த விழிகளுக்குள் அறையின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தூண் ஒன்று தென்பட்டது.

அதன் மீது பற்பல விதங்களில் சித்திரங்கள் தத்ரூபமாய்த் தீட்டப்பட்டிருக்க, அதனை நெருங்கியவள் கரத்தில் பிடித்திருக்கும் பந்தத்தின் நெருப்பு வெளிச்சத்தில் தூண் முழுவதையும் அலச, ஏதோ புரிப்பட்டது போல் மெல்லிய நகையை இதழ்களில் படரவிட்டவாறே அச்சித்திரங்களில் தோன்றிய பெண்ணொருத்தியின் கரத்தின் மேல் தன் கரத்தைப் பதித்து அதனை இலேசாக அழுத்தவும், மகிழ்வதனியே வியக்கும் வகையில் அத்தூண் இரண்டாக மெள்ள விரிவடைந்தது.

அதனுள் சுமார் நான்கடிகள் அகலத்தில் துவங்கிய சுரங்கப் பாதையானது படிகட்டுகளுடன் கீழிறங்க, எவராலும் கன்னம் வைக்கப்படாத இரகசிய சுரங்கப் பாதையானது போகப் போகச் சற்றே குறுகலாக மாற, தன்னருகில் எவர் நின்றாலும் அவரது முகம் கூடத் தெரியாத அளவிற்கான அடர் இருட்டில், விஷப்பூச்சிகளும், நஞ்சை சுமந்திருக்கும் ஜந்துக்களும் தன்னை அண்டாத வகையில் கையில் பிடித்திருக்கும் பந்தத்தை அங்கும் இங்கும் அசைத்தவாறே நடக்க, நீண்ட நெடிய நேரம் சென்று கொண்டிருந்த அச்சுரங்க பாதை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

பாதையின் இறுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு கதவின் முன் சில விநாடிகள் நின்றவள் மெள்ள கதவைத் திறக்க முயல, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாதிருந்த அக்கதவின் தாழ் மிகவும் இறுகிப் போயிருந்தது.

கரத்திம் சுமந்திருந்த பந்தத்தை ஒரு பக்க சுவரில் சொருகியவள், தன் ஒட்டுமொத்த வலுவனைத்தையும் ஒருங்கே திரட்டி இரு கரங்களுக்கும் கொடுத்து தாழை திருப்ப, சில மணித்துளிகளிலேயே படக்கென்ற சப்தத்துடன் அத்தாழ் திறந்தது.

விக்கிரம்ம சிம்மனை மணக்க மகிழ்வதனி விருப்பம் தெரிவித்தது அவனிடம் இருந்து தன் கற்பை சில காலங்களுக்குக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமல்லவே, இதே மாளிகையில் தங்கி சிம்ம அரசனின் அரண்மனையில் புதைந்திருக்கும் இரகசியங்களையும் ஒருவராலும் கண்டறிய முடியாது அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த விவரங்களையும் தெரிந்துக் கொள்ளவும் தானே, அவள் இத்தகைய பேராபத்துச் சூழ்ந்திருக்கும் திட்டத்தைக் கையில் எடுத்தது.

ஆகவே தனது துப்பு அறியும் சாதுர்யத்தாலும் அஞ்சா நெஞ்சத்தின் துணிவினாலும் ஏற்கனவே இச்சுரங்கப்பாதைகளைக் கண்டுப்பிடித்திருந்தவள், அது எங்குச் சென்று முடிவடையும் என்பதையும் தெரிந்து வைத்திருந்ததால் மெள்ள தலையை வெளியே எட்டிப் பார்த்தவளுக்குத் தான் கிரகித்திருந்தது சரி என்று தோன்றவும், விடுவிடுவென்று நடக்கத் துவங்கியவள் தான் ஏற்கனவே சந்தித்திருக்கும், சிம்ம ராஜ்யத்தை முன் ஆண்டு வந்த ராஜ்யசிம்மனின் ஆஸ்தான பணியாளர், நம்பிக்கைக்குரிய காவலர் அதிகுணனின் வீட்டை அடைந்தாள்.

சங்கேத குறியீடு போல் இரண்டிரண்டு முறைகளாக மெல்ல கதவைத் தட்ட, தான் திருமணத்திற்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதை அவ்வீட்டில் இருப்பவருக்கு ஏற்கனவே இரகசியமாகத் தெரிவித்திருந்தும், நிமிடங்கள் கடந்தும் திறக்கப்படாதிருந்த கதவை கூர்ந்துப் பார்த்திருந்தவள் மீண்டும் அதே சங்கேத குறியீட்டில் தட்ட, மெள்ள பாதித் திறந்த கதவின் வழியாக மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் புகுந்தாள்.

“நான் வருவேன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களோ என்று எண்ணி ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன் ஐயா…”

“எப்படி மறக்க முடியும் மகளே? உனக்காக நான் காத்திருந்தது ஒரு நாளா இல்லை இரு நாட்களா? பல வருடங்கள் அம்மா… நேரம் கனிந்து வரும் வேளையில் உன்னை எதிர்பாராது இருப்பேனா? வஞ்சகன் ஆளும் ராஜ்யத்தில் எத்தனை தான் எச்சரிக்கையாக இருந்தாலும், வஞ்சகமே நம்மைச் சூழ்ந்துக்கொள்ளும் என்பதால் மிகுந்த கவனத்துடனேயே இருக்க வேண்டியிருந்தது.. ஆகையால் தான் நீ மீண்டும் கதவை தட்டும் வரை காத்திருந்தேன்…”

“நன்றி ஐயா.. நான் கூறிய அவ்வேளை வந்துவிட்டது..”

“தெரியும் மகளே… திருமணத்திற்கு இன்னும் இருவாரங்களே இருக்க, நீ எந்நேரம் வேண்டுமானாலும் வரலாம் என்று அறிந்திருந்ததால் தான் உனக்காகக் காத்திருந்தேன்..”

“நான் கூறியது போன்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா?”

“அனைத்தும் செய்தாகிவிட்டது.. நீ பயணிப்பதற்குப் புரவியும் காத்திருக்கின்றது.. செங்கோடனிடமும் முத்தையாவிடமும் உன்னை எப்பொழுதும் எதிர்ப்பார்த்தே இருக்குமாறு தெரிவித்துவிட்டேன்.. அவர்கள் இந்தக் கோட்டையில் இருந்து நீ வெளியேற உதவி செய்வார்கள்..”

“மிக்க நன்றி… நான் செல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கு எனது வரவைத் தெரிவித்துவிட்டீர்களா?”

“கவலைக்கொள்ளாதே மகளே.. நீ வருவாய் என்று தெரிவிக்க வேண்டியவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.. உனக்கு வேண்டிய அனைத்து உதவிகளுமே அங்குக் கிடைக்கும்.. பத்திரமாகச் சென்று வா.. நீ வரும் வரை இந்தக் கிழவனின் உயிர் தங்குமா என்பது சந்தேகம் தான்.. ஆனால் நீ விரும்பியது போல் அனைத்துமே நடக்கும்.. அந்த ஆண்டவனின் துணையும் உனது பெற்றோர்களின் ஆசிரும் உன் பக்கம் இருப்பதால், வெற்றியும் உன்னையே வந்து சேரும்..”

“உங்கள் உதவிக்கு நான் எவ்வகையில் நன்றி செலுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை ஐயா..”

“நீ நன்றி செலுத்தும் விதம் உனக்கு நன்றாகவே தெரியும், அதற்கான காலமும் நேரமும் வந்துவிட்டது.. விடிவதற்குள் நீ செல்ல வேண்டும்.. சென்று வா…”

************************************

செங்கோடனின் இல்லம்..

இரண்டாம் சாம வேளையில் திடுமெனக் கதவு தட்டப்படும் ஓசையில் விழித்த திலகவதியின் அன்னை வடிவம்மை விடுவிடுவென்று வந்தவர் முன் வாயில் கதவைத் திறக்க, புன்னகையோடு நின்றிருந்த மகிழ்வதனியைக் கண்டு குழப்பங்களும் யோசனைகளும் சூழத் துவங்க,

“என்ன வஞ்சிக்கொடி, இந்நேரத்தில் வந்திருக்கின்றாய்.. ஏதேனும் பிரச்சனையா?” என்றார் கலக்கத்துடன்.

“அம்மா, இந்நேரத்தில உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும், நான் திலகாவின் தந்தையை உடனே சந்திக்க வேண்டும்.. ஆகையால் காலம் தாழ்த்த இயலாது வந்துவிட்டேன்..”

இந்நேரத்தில் எதற்குத் திலகவதியின் தந்தையை இவள் சந்திக்க வேண்டும்?

புரியாது குழப்பத்தில் ஆழ்ந்தவருக்கு மகிழ்வதனியின் வதனத்தில் படர்ந்திருக்கும் கலக்கமும் சஞ்சலமும் ஏனோ நடக்கக் கூடாதது ஒன்று நடந்துவிட்டது போன்ற அச்சத்தைக் கொடுக்க, சட்டென்று தன் தயக்கத்தை உதறியவர் அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர செய்தப் பிறகு தன் கணவரை அழைத்து வர, அவள் இந்த அகால வேளையில் வந்திருப்பதில் இருந்தே புரிந்து கொண்ட செங்கோடன் அவளை அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவர், இரகசியம் பேசும் குரலில்,

“அதிகுணனின் கட்டளைப்படி எல்லாம் தயாராக இருக்கின்றது… உங்கள் திருமணம் வரையிலும் இரவுக்காவல் பார்க்கும் வேலையைத் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டதால் கோட்டையின் மாற்று வாயிலில் முத்தையாவே காவல் இருப்பான்.. நானும் உங்களுடன் வருகின்றேன்.. நமது சமிஞை கிடைத்ததும், தன்னுடன் காவல் புரிந்துக் கொண்டிருப்பவர்களை முத்தையா அப்புறப்படுத்திவிடுவான்.. அதன் பிறகு நீங்கள் கோட்டையில் இருந்து வெளியில் செல்லலாம்..” என்றார் தீவிர யோசனை துலங்கும் முகப்பாவத்துடன்.

இழுத்து நெடு மூச்செறிந்த மகிழ்வதனி,

“என்னைப் பற்றியோ, எனக்கு நீங்கள் அனைவரும் உதவிக் கொண்டிருப்பதைப் பற்றியோ தெரிந்தால் உங்கள் மூவரது உயிரும் அந்நேரமே விக்கிரம்ம சிம்மனின் வாளுக்கு இறையாகிவிடும் என்பது தெரிந்தும், எனக்கு உதவி செய்யும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்..” என்றாள்.

“நீங்கள் எங்களுக்கு நன்றி செலுத்துவதா? அதுமட்டும் அல்லாது இது உதவியல்ல.. எங்களது கடமை..”

நெகிழ்ச்சியுடன் கூறியவர், அடுத்த நிமிடமே தனது மனைவியிடம் மகிழ்வதனி இங்கு வந்து சென்றதை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் வெளியேற,

அவர்களின் திட்டப்படி முத்தையாவும் மற்ற காவல் வீரர்களை அப்புறப்படுத்தியவர், கோட்டையின் மறுப்பக்கம் இருக்கும் சிறிய வாசலை சத்தமின்றி மெள்ளத் திறந்துவிட, அச்சமும் கலக்கமும் துலங்கிய முகத்துடன் தனக்கு மரியாதை செய்யும்வண்ணம் தலை வணங்கி தனக்கு விடைக் கொடுப்பவர்களைக் கண்டு புன்னகைத்தவாறே, ‘இன்பா’ எனும் நாமத்தைக் கொண்ட கருப்பு நிற புரவியின் மீது ஒரே தாவில் ஏறி அமர்ந்த மகிழ்வதனி தனது பயணத்தைத் தொடர்ந்தாள்.

முதியவர் அதிகுணன் பழங்கதையாகக் கூறிய கொடூரமான சம்பவங்கள் என்ன?

பொய்யுறைத்து சிம்ம ராஜ்யத்திற்குள் தன் காலடிகளை எடுத்து வைத்தவள் இப்பொழுது யாரை சந்திக்க எந்த ராஜ்யத்தை நோக்கி இந்த அகால வேளையில், இருளோடு இருளாகக் கலந்தது போல் காட்சியளிக்கும் கருப்பு வண்ணப் புரவியில் விரைந்துக் கொண்டிருக்கிறாள்?

இவ்வினாக்களுக்கு இத்தருணத்தில் மகிழ்வதனி அறிந்திருக்கும் விடைகள் நாம் அறியாதவை.

ஆயினும் தனது இரையை வேட்டையாட ஆவேசத்துடன் அவள் துவங்கியிருக்கும் இப்பயணத்தின் இடையில் அவள் சந்திக்கவிருப்பது யார் என்பதையும், அந்த இளம் காளையால் தன் வாழ்வில் வீசப்போகும் காதல் என்ற சூராவளியையும் அவள் அறியாவிட்டாலும் நாம் அறிந்திருக்கிறோமே..

தொடரும்…

References:
saddle – சேணம்

ராஜ்யங்கள் – நகரங்கள் – கதாப்பாத்திரங்கள்:

சிம்ம ராஜ்யம் – வேணி மாநகரம் – விக்கிரம்ம சிம்மன், அழகுவேல், மகிழ்வதனி/வஞ்சிக்கொடி
மாயி ராஜ்யம் – ஷாஸ்ரஸாத் மாயி
உஜ்வாலா ராஜ்யம் – ஆயாத்யா நகரம் – ஹர்யன்கா உஜ்வாலா
வர்ம ராஜ்யம் – ஆதிநல்லூர் மாநகரம் – விஜயேந்திர வர்மன், உதயேந்திர வர்மன், நீலவல்லி
நந்த ராஜ்யம் – விஜய நகரம் – சந்திர நந்தன், பூபால நந்தன்

Time:
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம் [ஒரு முகூர்த்தம் என்பது 1 1/2 மணி நேரம்]
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

Distance:
ஒரு காதம் என்பது 4 x 56 x 4 x 18 = 16128 அடிகளாகும், அதாவது கிட்டதட்ட 3 மைல் (16128/5280= 3.054)
ஒரு யோசனை தூரம் என்பது 12 மைல் (3X4) அல்லது 19.2 கி மீ

_______________________________________________________________________________

உங்கள் கருத்துக்களைப் பதிவிட:

https://jlineartsandsilks.com/community/index.php?threads/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7.46/

_____________________________________________________________________________

எனது புத்தகங்களை வாங்குவதற்கான இணைப்பு:

கணவனே கண்கண்ட எதிரி
https://jlineartsandsilks.com/…/kanavane-kankanda-ethiri-jb/

காதலா கர்வமா
https://jlineartsandsilks.com/product/kaathalaaa-karvama/

மலரினும் மெல்லியவள்
https://jlineartsandsilks.com/product/malarinum-meliyaval/

உங்கள் 

ஜேபி

JLine Arts and Silks (JLine Exotic Arts)
JLine Infotech (IT Consultancy)
JLine Publications

 

Share this post

Comments (6)

 • Kathija Hajara Reply

  sis peramaichar apdi solratha vida muthan manthiri enbathu innum archaic term accept this if you are convinced

  August 21, 2019 at 8:45 am
  • jb tamil Reply

   இரண்டுமே சரியானது தான்பா. இரண்டுமே ஒத்ததுப் போன்ற பதவிகள் தான்.. 🙂 Minister can be called as அமைச்சர் or மந்திரி 🙂

   August 24, 2019 at 7:11 pm
 • ugina Reply

  INTERESTING UD SIS

  August 21, 2019 at 12:25 pm
  • jb tamil Reply

   Thanks dear 🙂

   August 24, 2019 at 7:09 pm
 • pshasha Reply

  அருயைாக எழதியிருக்கிங்க

  August 21, 2019 at 6:35 pm
  • jb tamil Reply

   நன்றிமா 🙂

   August 24, 2019 at 7:09 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Loading...