உதயேந்திர வர்மன் அத்தியாயம் 8

உதயேந்திர வர்மன் அத்தியாயம் 8


உதயேந்திர வர்மன்

அத்தியாயம் 8

விஜயநகரம்.. நந்த ராஜ்யத்தின் தலைநகரம்..

பண்டைய காலத்தில் “ரத்தினங்களின் அரசன்” என்றழைப்பட்ட, இளஞ்சிவப்பு மற்றும் அடர்சிவப்பு நிறத்திலுள்ள படிகக்கல்லான மாணிக்கக் கற்களைக் கடவுள்களுக்குத் தானமாகக் கொடுத்தால் மறுபிறவியில் உயர்ந்த ஸ்தானத்தில் பிறப்போம் என்ற நம்பிக்கையும், இதனை உடலின் இடது புறத்தில் (இதயத்தின் அருகில்) அணிந்து கொண்டால் மாயப் பண்புகள் தங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையும், கட்டிடங்களின் அஸ்திவாரங்களில் பதிக்கப்பட்டால் வளங்கள் உறுதிப்படும் என்ற நம்பிக்கையும் இருந்ததால், இம்மாணிக்கக் கற்களுக்குப் பிரமிக்கத்தக்க அளவில் மக்கள் மத்தியிலும், ராஜபுதனங்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பும் பேரார்வமும் இருந்தது.

இம்மாணிக்கக் கற்களை உடலில் மெல்லிய தோலுக்குப் பின்னால் பதித்துக் கொண்டால், அதன் பிரகாசமான ஒளியின் பிரதிபலிப்பானது எதிரி நாட்டு படைவீர்களின் கண்களில் இருந்து தங்களை மறைத்துவிடும் என்று போர்களத்திற்குச் செல்லும் படை வீரர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள் என்று சரித்திரம் கூறுகின்றது.

அது மட்டும் அல்லாது அதன் கடினத்தன்மை மற்றும் அடர்த்தியாலும், சிவந்த நிறத்தில் பிரகாசிப்பதாலும், மாணிக்கங்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு உள்ள மதிப்புகளாலும், இந்தியா சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற அரச குடும்பத்தினர் தங்களது தலைக் கிரீடங்கள், அலங்கார கவசங்கள், பெண்கள் அணியும் அணிகலன்கள் பட்டாடைகள் மற்றும் துப்பட்டாக்கள், பிரபுக்களின் கவசங்கள் பேழைகள் அணிமணிப்பூண்கள் ஆகியவற்றில் பதிப்பதற்கு இம்மாணிக்கக் கற்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த மாணிக்கக் கற்கள் கிடைக்கும் சுரங்கங்கள் இயற்கையின் வரப்பிரசாதமாகத் தங்கேதி தேசத்தின் விஜயநகரப் பகுதியில் அதிகப்படியாக அமையப் பெற்றிருந்ததாலோ என்னவோ, பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்நகரத்தின் அழகிற்கு ஈடாய் போட்டிப் போட இயலாத்தால் நாணமுற்ற வெங்கதிரோன் தன் சிரசை மலைகளுக்கு இடையில் மறைத்துக் கொண்டிருக்கும், இன்பமாய் வெளிக்காட்ட துவங்கிய இரவு வேளை.

நீர் தடாகங்களும் வாவிகளும் மலர்ச்சோலைகளும் நிறைந்திருந்த அந்தச் சிற்றரசுத் தலைநகரத்தின் அந்தி வேளையில், பூக்களுக்குப் பூக்கள் தாவி கொண்டிருக்கும் வண்டுகளின் ரீங்காரம் கவிபாடும் புலவனின் இசையை ஒத்த தோற்றத்தை தோற்றுவிக்க, மரங்களுக்கு மரம் தாவி செல்லும் பூந்தென்றலானது தழைகளை மெல்ல விசிறிச் சென்றதில் அம்மாநகரத்தை சில்லென்ற குளுமை ஆக்கிரமித்திருக்க, இப்பூலகிலேயே சிறந்த நகரம் போல் காட்சியளித்த விஜய நகரத்தினுள் களைப்பென்பதே அறியாதது போல் போட்டிப் போட்டுக் கொண்டு, இருளைக் கிழித்துக் கொண்டு வெளிபோந்தும் ஒளியின் வேகத்தையும் தோற்கடிக்கும் விதத்தில் அதிரடியாகப் புகுந்தன, வெண்ணிற புரவியும் செம்மண் நிறத்து புரவியும்.

முதன் முறை விஜய நகருக்குள் அடி எடுத்து வைத்திருக்கும் உதயேந்திரன், அதன் மகோன்னத அழகில் பிரமித்து இலயிப்பில் ஆழ்ந்தவன், தனக்கு வெகு அருகில் வந்து கொண்டிருக்கும் சந்திர நந்தனைத் திரும்பியும் பாராது,

“என்ன அழகான ஊர் இது? கண்டதுமே காதல் கொள்ளச் செய்யும் எழிலும், மனதை கவர்ந்து இழுத்துச் செய்யும் செழிப்பும் வளமும் நிறந்திருக்கும் பூஞ்சோலைப் போன்ற உங்களது தலை நகரம், என் மனதை மயக்கிவிட்டது சந்திரா..” எனவும்,

நண்பனின் கூற்றில் அவனைத் திரும்பிப் பார்த்த சந்திர நந்தனின் முகத்திலும் தனது இராஜ்யத்தின் வளமையை நினைத்து பெருமையின் பூரிப்பு வழிந்தது.

“ஆம் உதயா..” என்று எதுவோ கூற வாயெடுத்தவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்தது, அகன்ற அப்பிரதான சாலையின் இரு புரங்களிலும் எரிந்து கொண்டிருந்த பெரும் விளக்குகளின் ஒளியில், தங்களின் இளவரசனைக் கண்டு கொண்ட காவலர்கள் சிலரின் தலை வணங்குதலும் வாழ்த்தொலிகளும் வரவேற்புக் குரல்களும்.

ஆங்காங்கு நின்று கொண்டிருந்த வீரர்களுக்கு மத்தியில் வெகு சிலரே இளவரசனின் வருகையைப் பார்த்திருந்ததால் அவர்களும் தங்களது வாட்களை உயர்த்தி வணக்கம் செலுத்த, அவர்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்ட சந்திர நந்தன், தனது புரவியை வேகமாகச் செல்ல முடுக்கியவன் பிரதான சாலையில் இருந்து குறுக்கால் கிளைப்போல் பிரிந்து சென்ற வேற்றுப்பாதை ஒன்றில் திருப்பினான்.

“ஏன் சந்திரா இந்த அவசரம்?”

“எங்களது கோட்டைக்கு மூன்று பிரதான வாயில்கள் இருக்கின்றன உதயா.. அவற்றைத் தவிர இரு சிறு வாயில்களும் உள்ளன.. முதன் முறை எங்களது ராஜ்யத்திற்கு விஜயம் செய்யும் வர்ம இளவரசனைப் பிரதான வாயிலின் வழியே அழைத்து வருவது தான் மரியாதை.. ஆனால் இன்று நான் இருக்கும் சூழலில் உன்னை அவ்வாறு அழைத்து வருவது நல்லதல்ல.. ஆகவே தான் சிறிய வாயிலின் வழியாக அழைத்து வந்தேன்.. இங்கு வழக்கமாக இத்தனை வீரர்கள் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் எனது சாதகமற்ற காலத்தின் விளைவு நான் நினைத்ததை விடச் சற்று அதிகமாகவெ வீரர்களும் காவலர்களும் இருக்கின்றார்கள்..”

“நீ என்னை அச்சிறிய வாயிலின் வழியே அழைத்து வரும்பொழுதே நான் கேட்க வேண்டும் என்று இருந்தேன்.. ஏன் இத்தனை எச்சரிக்கை உணர்வு சந்திரா?”

“நாம் பிரதான நுழைவாயிலின் வழியே நுழைந்தாலோ அல்லது பிரதான சாலைகளில் சென்றாலோ, போர் மூளக் காத்திருக்கும் இச்சூழ்நிலையில் வேற்று ராஜ்யத்தின் இளவரசனான உனது வருகை மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும்.. நந்த இராஜ்யத்தின் பிரஜைகளுடன் பிரஜைகளாகப் பகை நாட்டைச் சேர்ந்த ஒற்றர்களும் கலந்து இருக்கலாம்.. அவர்களின் ஐயுறவிற்கு நாமே இடம் அளிக்கக் கூடாது.. அது மட்டுமல்ல, அத்தகைய ஒற்றர்களில் உஜ்வாலா அரசின் ஒற்றர்களும் மறைந்து இருக்கும் வாய்ப்பு இருக்கின்றது.. வர்ம இராஜ்யம் எங்களுக்கு உதவ முன் வருவதை ஹர்யன்கா உஜ்வாலா தற்போது அறியாமல் இருப்பதே நலம்.. இந்தப் பாதை எங்களது அரண்மனைக்குச் செல்லும் குறுக்குப் பாதை உதயா.. ஆகையால் தான் உன்னை இவ்வாறு அழைத்துச் செல்கிறேன்.. என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதே.” என்றான்.

தனது கூற்றிற்குப் பதிலளிக்காது அமைதியாகப் புரவியைச் செலுத்திக் கொண்டிருந்த உதயேந்திரனின் மௌனத்தில், தனது தோழன் தன்னைத் தவறாக நினைத்துவிட்டானோ என்று கலக்கம் அடைந்த சந்திர நந்தன் உதயேந்திரனின் புரவியை நெருங்கியவாறே அவனது தோள் பற்றினான்.

அவனது செய்கையில் நிதானமாகத் திரும்பிப் பார்த்த உதயேந்திரன் மெல்லிய முறுவலை உதடுகளில் படரச் செய்தவாறே கனிவுடன்,

“எனது நண்பன் என்று உன்னை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு உன்னை என்னால் தவறாக நினைக்க முடியாது சந்திரா..” என்றான், தோழனின் இந்தத் தொடுகைக்குப் பின் இருக்கும் அர்த்தத்தை அவன் வார்த்தைகளால் கூறாமலேயே புரிந்துக் கொண்டவனாக.

“அப்படி என்றால் ஏன் இந்த மௌனம்?”

சந்திர நந்தனின் கேள்வியில் அதுவரை இதழ்களில் படிந்திருந்த முறுவலை சுத்தமாகத் துடைத்தெடுத்தவன், தன் அழகிய வதனத்தில் சிந்தனைகள் சூழ்ந்த ரேகையையும், விழிகளில் கூரியப் பார்வையையும் கொணர்ந்தவாறே,

“எனக்குத் தெரிந்தவரை இந்தச் சந்திர நந்தனுக்கு ஆபத்து என்றால் மிகவும் பிடிக்கும் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.. அதுவும் ஆபத்து நிறைந்த சவால் என்றால் அதில் நீ எத்தனை இன்பம் காண்பாய் என்றும் அறிந்திருக்கின்றேன்.. அது உண்மை என்றால், ஹர்யன்காவை மறைந்திருந்து அழிப்பதை விட, அவனை அழிப்பதற்கு இரு ராஜ்யங்கள் வந்து கொண்டிருக்கின்றன, சைனியங்களைப் போர்களத்திற்கு நடத்தி வருபவர்கள், இரு ராஜ்யங்களின் இளவரசர்களான சந்திர நந்தனும், உதயேந்திர வர்மனும் என்பதை அவன் அறிய வேண்டும்.. அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தயாராக இரு என்று முன்கூட்டியே அறைகூவல் விடுத்துப் பின் நாம் அவனைத் தாக்க வேண்டும்.. அந்த இனிமை நிறைந்த சுகத்தை இவ்வாறு மறைத்து ஏன் கெடுக்க வேண்டும் சந்திரா?” எனும் பொழுது, தனது வழக்கமான பாணியில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவாறே இடது நெற்றியில் பதிந்திருந்த வடுவை ஒரு முறை அழுந்த தேய்த்துவிட்டான் உதயேந்திரன்.

“போர்.. சவால்.. ஆபத்து… அறைகூவல்.. இனிமையிலும் இனிமையான வார்த்தைகள்..”

நன்றாக உதடுகளைப் பிரித்துச் சிரித்த சந்திர நந்தன் சடாரென்று தனது புரவியை அடுத்து வந்து வீதியில் திருப்ப, அவனைத் தொடர்ந்து தானும் விரைந்த உதயேந்திரனின் இதழ்களும் புன்னகைப் பூக்கும் வகையில் விரிந்தன, அவர்கள் சென்றெடைந்த பெரும் அங்காடிகள் நிறைந்த பிரதான கடைவீதியைக் கண்டதும்.

இரவு பொழுதேறியும், வாணிபத்தின் காரணமாக விற்பனையாளர்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் கூச்சல்கள் செவிகளைக் கிழிக்க, அங்காடிகளில் விற்கப்படும் மாணிக்கங்கள், மரகதங்கள், முத்து, கோமேதேகம், வைரங்கள், பட்டு ஆடைகள் போன்ற விலை மதிக்க முடியாத பொருட்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களுடன் நின்றுக் கொண்டும், நடந்தவாறு இருக்கும் காவலர்களின் குரல்களும், அங்காடிகளை நோக்கி அலையலையாய் வந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் சலசலப்பும், விஜய நகரத்தின் முக்கியப் பகுதியே இந்தக் கடைவீதி தான் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

தனது புரவியின் கடிவாளக் கயிற்றை இடது கரத்தின் விரல்களின் மீது சுழற்றி சுற்றிய உதயேந்திரன் சரேலெனக் கூட்டத்துக்குள் புகவும், அவனைத் தொடர்ந்து வாய்விட்டு சிரித்தவாறே தனது புரவியையும் செலுத்திய சந்திர நந்தனைக் கண்டு அத்தனை மக்கள் கூட்டமும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆரவாரிக்க, இரு இளவசரர்களும் எதிர்பார்த்தது போலவே, நந்தன் இராஜ்யத்திற்குள் பிரவேசித்திருக்கும் உதயேந்திர வர்மனின் வருகையைப் பற்றிய அறிவிப்பு, சிறிதும் பிசிரற்றுக் காலத் தாமதம் செய்யாது ஹர்யன்கா உஜ்வாலாவின் செவிகளைச் சென்று செவ்வனே சேர்ந்தது.

********************************************************************

ஆயாத்யா நகரம்..

கருங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துச் சுண்ணம் கொண்டு பூசப்பட்டுச் செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்கோட்டையின் நடுவில் அமைந்திருந்த ஆயாத்யா நகரமே, உஜ்வாலா ராஜ்யத்தின் தலைநகரம்.

தலைநகரத்தின் மத்திய பகுதியில் நிலத்தில் இருந்து பல அடிகள் உயரத்தில், அகலமான நீண்ட படிகட்டுகளுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் அவ்வரண்மைனையின் மூன்று மூலைகளிலிலும் மாளிகையின் அளவில் பெருங்கூண்டுகளும், அக்கூண்டுகளின் மேல்பாகங்கள் கோவில்களின் கோபுரங்களை ஒத்த வடிவமைப்பிலும், மூன்று கூண்டுகளுக்கும் நடுவே மூடிய மண்டபம் போன்றதொரு தோற்றத்துடன், எகிப்திய பிரமிடுகளின் வடிவமைப்பில் அரண்மனையின் மேற்புறம் அமைக்கப்பட்டிருக்க, அரண்மனை முழுவதுமே பல நூறு தூண்களால் தாங்கப்பட்டு இருந்ததில், காண்பதற்கு ஆயிரங்கால் ஜந்துவைப் போன்றே காட்சியளித்தது, உஜ்வாலா அரசனின் அரண்மனை.

பண்பாட்டுத் தொடர்புகளுக்காகவும், வணிக வர்த்தகத்திற்காகவும் தூரத் தேசத்தில் இருந்து வந்திருந்த தூதுவர்கள் மற்றும் வணிகர்களுடன் நன்கு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட உஜ்வாலா ராஜ்யத்தை ஆட்சி செய்த முன்னால் மன்னர்கள், அவர்களின் நாடுகளிற்குப் பயணம் செய்த பொழுது கற்றுக்கொண்ட வேற்று நாட்டவர்களின் கலைத்திறன்களோடு, தங்கேதி தேசத்தின் சிறப்புகளையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டிருந்த அவ்வரண்மனையின் அரசவையில், தனது அரியாசனத்தில் அமர்ந்திருந்த ஹர்யன்காவின் உள்ளம் தீராத சினத்தினாலும் அடங்காத ஆவேசத்தினாலும் கொந்தளித்துக் போயிருந்தது.

நிலத்தில் ஒரு கால் பதிந்திருக்க மறுகாலை அரியாசனத்தின், பாதம் வைக்கும் தாங்கியில் லேசாக உயர்த்தி வைத்தவாறே தலை கவிழ்ந்து தனது வலது கரத்தின் விரல்களால் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசனைக் கண்டவாறே, அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த அரசவைக்குள் நுழைந்தனர், பேரமைச்சரும் சேனாதிபதியும் தளபதிகளும்.

“தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் அரசே.. முக்கியக் கூட்டமென்றும் உடனே அரச மண்டபத்திற்கு வருமாறும் காவலன் வந்து கூறினான்.. உடனே வர இயலாத வகையில் நாங்கள் ஈடுப்பட்டிருந்த பணி எங்களைத் தடுத்துவி..”

சேனாதிபதி கூறி முடிக்கவில்லை, எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன், மீசை ரோமங்கள் துடிக்க நிமிர்ந்துப் பார்த்த ஹர்யன்காவின் விழிகள் உதிரத்தின் நிறத்தை விடச் சிவந்து போயிருப்பதைக் கண்டு, சட்டென வாயை இறுக மூடிக் கொண்டான் அந்த இளம் சேனாதிபதி.

“அவசரக் காரியம் என்று அழைக்கும் அரசனை சந்திக்க வருவதை விடச் சேனாதிபதியாருக்கு முக்கியமான காரியம் வேறு ஒன்று இருக்கின்றதோ?”

இகழ்ச்சியுடன் கூடிய ஏளன குரலில் கூறுபவனின் முகத்தைக் காண இயலாது தளபதிகள் தலை கவிழ, அவனைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் வேறு வழியின்றி முன் வந்து “அரசே…” என்று பேச்செடுத்த பேரமைச்சரை மேற்கொண்டு பேசாது இருக்குமாறு ஒரு கரத்தை உயர்த்தித் தடை செய்தவன், அவர்கள் அனைவரின் மீதும் தனது அனல்பொறி கக்கும் பார்வையைச் சுழலவிட, சொல்லி வைத்தார் போன்று காவலன் ஒருவன் அரசவைக்குள் நுழைய அனுமதி கோரினான்.

அவனைத் தனது ஒற்றை விரல் அசைவினாலேயே உள்ளே வரப் பணித்த ஹர்யன்காவைக் கண்டு தலை தாழ்த்திய காவலன், “அரசே… விஜய நகரத்தில் இருந்து நமது ஒற்றன் வந்திருக்கின்றான்..” என்று கூறவும், ஒற்றனை வர பணித்தவன் நிதானமாகப் பேரமைச்சரைத் திரும்பிப் பார்த்தவாறே, “சரியான நேரத்தில் தான் நானும் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறேன்…” என்றான்.

தலை குனிந்து விடைப்பெற்று வெளியே சென்ற காவலன் ஒற்றனை அழைத்து வரவும், ஏற்கனவே அரசனின் முகத்தில் தெறித்துக் கொண்டிருக்கும் அகங்காரத்தையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சிய ஒற்றன், ‘ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் இவர் இப்பொழுது நான் கூற வருவதைக் கேட்டாரென்றால் வெகுண்டெழுந்து எனது உடலை இரு துண்டங்களாக வெட்டினாலும் ஒருவரும் ஆச்சரியப்படுவதற்கில்லை..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவனாகச் சிரம் தாழ்த்தியவாறே மெல்லிய குரலில் தான் விஜய நகரத்தில் கேள்விப்பட்ட, பார்த்த விஷயங்களைப் பகிரத் துவங்கினான்.

அவன் கூற கூற ஹர்யன்காவின் கடினத்தைத் தழுவியிருந்த முகம், வேட்டையாடத் துடிக்கும் சிங்கத்தின் ரூபத்தைப் போல மாற அகோரமாய்த் துவங்கியது.

தனது அரியாசனத்திற்கு அருகில் இருக்கும் மேடையின் மீது வைக்கப்பட்டிருந்த மது நிரம்பிய குவளையைச் சட்டெனக் கரத்தில் எடுத்தவன் அதனை வெகுவாக உயர்த்திப் பல அடிகள் தொலைவில் வீசி எரிந்ததில், முன்னதாகவே அரசனின் கோபாவேசத்தில் அரண்டு போயிருந்த ஒற்றன் தன்னையும் அறியாது சில அடிகள் தள்ளிப் போய் நின்றான்.

அவனது பயத்தில் கோழைத்தனத்தையே கண்ட ஹர்யன்கா ஆவேசத்துடன் தனது வாளை உருவியவன் ஒற்றனின் கழுத்தை நோக்கி வீசப் போக, ஒற்றனின் பின்னால் நின்று கொண்டிருந்த காலாட்படையின் தளபதி, சட்டென்று ஒற்றனின் முதுகைப் பற்றி மறுபக்கம் இழுக்கவும், அரசனின் அராஜக செய்கையில் சிலிர்த்தெழுந்தான் சேனாதிபதி.

“ஒற்றனை அழித்துவிடலாம்.. ஆனால் அவன் கொண்டு வந்திருக்கும் தகவல்களுக்குப் பின்னிருக்கும் நிதர்சனத்தை அழிக்க முடியாது அரசே..” என்றான் அமைதியாகவும் வெகு நிதானத்துடனும், ஆனால் அதீத கோபத்தைக் கொண்ட தொனியில் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை அழுத்தி உதிர்த்தவாறே..

சேனாதிபதியின் சொற்களில் பிடித்திருந்த உடைவாளின் கைப்பிடியில் மேலும் அழுத்தத்தைக் கூட்டிய ஹர்யன்கா அவனை அந்நிமிடமே அழித்துவிடும் தீப்பார்வைப் பார்க்க, அரசனின் எரித்துவிடும் விழிகளுக்குச் சிறிதும் அஞ்சாமல் நேர் பார்வை பார்த்திருந்தவனை மேலும் நெருங்கிய ஹர்யன்கா, கொந்தளிக்கும் கோபத்துடன் ஏளனத்தையும் திமிறையும் கலந்து,

“தூது வந்தவனையும் என்னால் அழிக்க முடியும், அவன் கொண்டு வந்த தகவலின் சாராம்சமான என் எதிரியையும் என்னால் அழிக்க முடியும்..” என்றான்.

ஒற்றனின் தகவலில் தாங்களும் பேரதிர்ச்சி அடைந்திருந்தாலும், அரசனின் குணத்தையும், கோபம் வந்தால் எவரையும் அவமதிக்கும் அவனது கர்வத்தையும் அறிந்த மற்றவர்கள் வாய் திறவாது அமைதியாக நின்றிருக்க, உடல் நடுங்க தலை வணங்கிய ஒற்றன் பேரமைச்சரின் தலையசைப்பில் விட்டால் போதுமென்று வெளியேற, அவனது முதுகின் மீதே சில விநாடிகள் பார்வையைச் செலுத்திய ஹர்யன்கா, அடிப்பட்ட புலி போல் தனது கூரிய பார்வையை அமைச்சரின் புறம் திருப்பினான்.

“நான் நந்த இராஜ்யத்தை மட்டுமல்ல, வர்ம ராஜ்யத்தையும் முற்றுகையிடப் போகிறேன் என்பது இந்நேரம் விஜயேந்திர வர்மனுக்குத் தெரியாமல் இருக்க வாயிப்பில்லை.. அங்கனம் இருந்தும் தனது இராஜ்யத்தைப் பாதுகாக்காது, சந்திர நந்தனுக்குத் துணையாகத் தனது மைந்தனையே அவன் அனுப்பியிருக்கின்றான் என்றால், எனது போர் திறமையையும், வீரத்தையும், எனது சைனியத்தையும் சாமான்யமாக எடைப் போட்டுவிட்டானா, அந்த விஜயேந்திர வர்மன்?”

பற்களை நறநறவென்று கடித்தவாறே வார்த்தைகளை அழுத்தத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் அரசனின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், உதடுகளுக்கு இடையில் திரவ வச்சிரம் பூசி அடைத்தது போல் அவனுக்குப் பதிலளிக்காது அமைதியாக நின்றார்கள்.

வார்த்தைகளையே மறந்தது போல் சிலையென நிற்கும் அவர்களின் மௌனத்தில் மேலும் மேலும் எரிச்சலுற்ற அரசன்,

“உங்களது மௌனம் என்னை வெறியனாக மாற்றிக் கொண்டிருக்கிறது பேரமைச்சரே.. வாய் திறந்து ஏதாவது சொல்லும்..” என்றான் சாரீரத்தில் வெறுப்பும் எரிச்சலும் நிரம்பியிருக்க.

படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கும் சர்ப்பத்தைப் போன்று தங்களின் கண்ணெதிரே ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் அரசனைக் கண்டு, அவனது கோபத்தை மட்டுப்படுத்தும் விதமாக மெல்ல பேசத் துவங்கினார் பேரமைச்சர், தணிவான குரலில்.

“அரசே… சிறிதே பொறுமையாய் இருங்கள்.. என்னவென்று தீர விசாரிக்கலாம்.. பிறகு கலந்தாலோசிக்கலாம்..”

“பொறுமையாக விசாரிக்கலாமா? இதற்கு மேலும் விசாரிக்க என்ன இருக்கின்றது பேரமைச்சரே?”

என்ன தான் அவன் தங்களுக்கெல்லாம் வேந்தனாக இருந்தாலும், அவன் செய்யவிருக்கும் முட்டாள்தனமான காரியத்தில் உயிரையும் மானத்தையும் இழக்கப் போவது தங்களது ைராஜ்யத்தைச் சேர்ந்த வீரர்களும் பிரஜைகளும் தானே என்ற கலக்கத்தில் அவனது ஆத்திரத்தை அசட்டை செய்யாது,

“நிறைய இருக்கின்றது அரசே.. பூபால நந்தனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவனது ராஜ்யத்தை உங்களது கைக்குள் கொணற நீங்கள் நினைத்தீர்கள்.. அவ்வாறு நந்த ராஜ்யத்தை எதிர்த்து நீங்கள் படைகளை அனுப்பினால் பேரரசரான ஷாஸ்ரஸாத் மாயியினால் நமது உஜ்வால இராஜ்யத்திற்குத் தொல்லை வரும் என்று உத்தேசித்துத் தான், அவர் நம் தேசத்தில் இல்லாத நேரமாகப் பார்த்துப் பாண்டிய படைகளுடன் இணைந்து வர்ம ராஜ்யத்தையும், இன்னும் பிற ராஜ்யங்களையும் கையகப்படுத்த திட்டமிட்டீர்கள்.. இப்போரில் நீங்கள் வெற்றி பெற்ற பின், மாயி அரசையும் எதிர்த்து போரிட்டு அவர்களையும் உங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், இத்தங்கேதி தேசம் முழுவதையுமே உஜ்வாலா அரசின் கீழ் அகப்படுத்தலாம் என்பதும் உங்கள் திட்டமே.. உங்களது இத்திட்டங்களுக்கு நான் முழுமனதுடன் சம்மதிக்கவில்லையென்றாலும், அரசனாகிய உங்களது முடிவே இறுதியான முடிவென்பதாலும், எந்தத் தேசத்திலும் இருக்கும் சிற்றரசர்கள், தங்களது இராஜ்ய விஸ்தரிப்பிற்காகப் பிற இராஜ்யங்களைக் கைப்பற்றுவது வழக்கம் தான் என்பதாலும் நான் ஒப்புக்கொண்டேன்.. ஆனால் இப்பொழுது?” என்று தயங்கியவாறே நிறுத்தினார்.

அங்குப் பெரும் நிசப்தமே நிலவ, அதனில் மேலும் எரிச்சலுற்று பேரமைச்சரை நெருங்கிய ஹர்யன்கா, “இப்பொழுது என்ன?” என்றான் தடித்த குரலில்.

ஆசுவாசப் பெருமூச்சை இழுத்துவிட்டவாறே சில விநாடிகள் நிதானித்த பேரமைச்சர், கவலையைச் சுமந்த குரலில் சஞ்சலத்தையும் சரிசமமாகக் கலந்து,

“இப்பொழுது உங்களது திட்டத்திற்கு இடையூறாக வந்திருப்பது உதயேந்திரன்.. உதயேந்திர வர்மன்..” என்றார் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவாறே.

பேரமைச்சரின் சொற்களைக் கேட்டதில் ஹர்யன்காவின் செவிகளும் அகங்காரத்தில் தகிக்க, முகத்தில் வெறியும் கோபமும் தாண்டவமாட, ‘மேலும் கூறுங்கள்’ என்பது போல் வெகு இலேசாகத் தலையை அசைத்துச் சைகை செய்தான்.

“உதயேந்திர வர்மன்… தங்கேதி தேசத்தின் மாவீரன்… தனது பதின்ம வயதினிலேயே வர்ம ராஜ்யத்தைக் கைப்பற்ற நடந்த மாபெரும் போர்களில் பங்கேற்று வெற்றி வாகை சூடியவன்.. அவனை எதிர்த்து எதிரில் நிற்கும் வீரர்களின் நரம்புகள் முழுவதிலும் பயம் என்ற பேருணர்ச்சி ஊடுருவி செல்லும்.. அச்சத்தால் ஏற்படும் அந்த உணர்ச்சி, உதயேந்திரனின் வீரத்தை, தேசமே வியந்து நிற்கும் அவனது வெற்றிகளையே பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.. அவனுடன் வாட்போர் செய்யும் எவருடைய வாளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆகாயத்தில் பறக்கச் செய்யும் அவனது பராக்கிரமத்தைக் காண, தோல்வியுற்றாலும் ஒரு முறையேனும் மாபெரும் வீரனுடன் போரிட்டேன் என்ற பெருமைக்காக அளவிலடங்காத வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவனது வீரத் தீரத்தையும், பராக்கிராமங்களையும் வெற்றிகளையும் நமது பேரரசர் ஷாஸ்ரஸாத் மாயி மட்டுமல்ல, மற்ற நாடுகளின் சக்கரவர்த்திகளும் பொறாமையுடனும் எச்சரிக்கையுடனும் கண்காணித்துக் கொண்டு வருகின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அரசே…”

பேரமைச்சர் முடித்த நொடியே கோபத்தால் புருவங்களும் உதடுகளும் துடிக்க, ஏற்கனவே சிவந்திருக்கும் அவனது முகம் செந்தனலாய் மாற, உக்கிர சொரூபத்துடன் நின்றிருந்த ஹர்யன்கா,

“பாராட்டு மழையை ஏன் நிறுத்திவிட்டீர்கள் பேரமைச்சரே? இன்னும் அரசனாக முடி சூடப்படாத, அரியாசனத்தில் அமராத என் எதிரி இராஜ்யத்தின் இளவரசனுக்கு, காளைப் பருவத்தைக் கூடத் தாண்டாத ஒரு இளைஞனுக்கு நீங்கள் சூட்டிக் கொண்டிருக்கும் புகழ் மாலையைக் கேட்டு நான் மெய்மறந்துவிட்டேன்…” என்றான் உதடுகளில் ஏளனப் புன்னகை வழிய.

ஒரு அரசன் தன் அரசவைக்குப் பேரமைச்சரையும், அமைச்சர்களையும், சேனாதிபதியையும், படைகளின் தளபதிகளையும் ஒன்று கூட்டுவது அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்பதற்குத் தானே..

ஆனால் சிறு பிள்ளைக்கு எடுத்து சொல்வது போல் நாற்பது வயதை கடந்திருக்கும் அரசனிற்கு நிதர்சனத்தை விளக்கிக் கொண்டிருக்கும் பேரமைச்சரின் வயதிற்கும் அனுபவத்திற்கும், அவரது ஞானத்திற்கும் மதிப்பளிக்காது, இகழ்ச்சியுடன் இறுமாப்பும் கலந்து பேசும் அரசனைக் கண்ட சேனாதிபதி மற்றும் தளபதியின் உள்ளங்களுக்குள்ளும், சீற்றமும் சினமும் ஆகாயத்தின் அளவிற்கு உயர்ந்து எழு துவங்கியது.

“உதயேந்திர வர்மனின் பராக்கிரமங்களை நான் கூறுவது அவனைப் புகழ்வதற்கு அல்ல அரசே.. தங்களுடைய எதிரியின் பலத்தை அறியாது போர்களத்திற்குச் செல்லும் அரசர்கள் எவரும் வெற்றிப் பெற்றதாய் சரித்திரமே இல்லை.. மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு, துல்லியமாகத் தகவல் சேகரித்து, எதிரியின் பலம் உணர்ந்து காய்களை நகர்த்தித் தனது காரியத்தைச் சாதிப்பவன் தான் புத்திசாலி…” என்று பிடிவாதமாகப் பேரமைச்சர் உரைத்தது ஹர்யன்காவின் ஆத்திரத்தையும், வெறுப்பையும் அரண்மனைக் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகச் செய்தது.

“அப்படி என்றால் நான் முட்டாள் என்று கூறுகிறீர்களா?”

“முட்டாள் என்று கூறுவதற்கும், திட்டங்களை அமைக்கும் பொழுது நமது புத்திசாலித்தனத்தைக் காட்டவேண்டும் என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது அரசே..”

“எனது திட்டங்களில் என்ன குறை கண்டீர்?

“உங்களது திட்டங்களில் நேற்று வரை குறை இல்லை… ஆனால் இன்று?

“இன்று?”

“எதிரியின் பலம் அதிகரித்துவிட்டதே..”

“உதயேந்திர வர்மன் சந்திர நந்தனுடன் சேர்ந்ததுமே எதிரியின் பலம் அதிகரித்துவிட்டதாய் எண்ணாதீர்கள்..”

அதுவரை பேரமைச்சரின் கூற்றுகளுக்கு அரசன் அளித்துக் கொண்டிருக்கும் பதில்களைக் கேட்டுக் கோபத்தில் இறுகியிருந்த உதடுகளில் இகழ்ச்சியையும், சீற்றம் படர்ந்திருந்த முகத்தில் ஏளனத்தையும் கொண்டு வந்த சேனாதிபதி சட்டென்று இடைமறித்து,

“ஒரு ஆயனத்திற்கு முன் நம் வீரர்கள் ஐவரை ஒற்றை ஆளாக நள்ளிரவில் உடல்கள் வேறு தலைகள் வேறாக அவன் கொன்றுப் போட்டிருந்ததை அதற்குள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன் அரசே.. அந்த ஐவரில் உங்கள் மனம் விரும்பிய ஒருவரும் அடக்கம்…” என்றான் இகழ்ச்சி நகை மாறாது.

அவனது கூற்றில் கடைசி வரியைக் கூறும் பொழுது தனது சுயநிலையை மொத்தமாகத் தொலைத்துவிட்ட ஹர்யன்காவைக் கண்டு நெடுமூச்சு விட்ட பேரமைச்சர்,

“அரசே! இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டோ கடிந்துக் கொண்டோ இருந்தோமாகில், நமது கோட்டைக்குள் எதிரி நுழைவது எளிதாகிவிடும்.. ஆகையால் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்..” என்றார்.

அவர் கூறியதில் இருந்த உண்மையை ஒரு அரசனாக உணர்ந்துக் கொண்டவன் ஓரளவிற்குச் சமாதானமடையவும், சேனாதிபதியுடனும் தளபதிகளுடனும் இணைந்து தாங்கள் முன்னதாகவே தீட்டியிருந்த திட்டங்களைப் பற்றி அரசனுக்கு விளக்கத் துவங்கியவர், இதனில் எதிர்பாராத விதமாகப் புதிய பிரச்சனையாக உதயேந்திரனும் இப்போரில் ஈடுபடுவதால், தங்களது திட்டத்தை முழுவதிலுமாக மாற்றி அமைப்பதற்குமான வழிகளையும், வகைகளையும் அரசனுடன் சேர்ந்து அலசத் துவங்கினார்..

பல மணி நேரங்கள் நீடித்த அக்கூட்டத்தினில் தாங்கள் எதிர்க்க போகும் எதிரிகளின் பலம் உணர்ந்து வெகு துல்லியமாகவும், சாதுர்யத்தோடும் மிகவும் தெளிவாகப் புதியதொரு போர் முறைகளையும், வியூகங்களையும் கொண்டு திட்டங்களைத் தீட்டியவர்கள் ஒப்புதல் பெற அரசனின் முகத்தைப் பார்க்க, மணித்துளிகள் சில போர் திட்டங்கள் வரைந்திருக்கும் வரைப்படங்களையும், மாதிரி படிவங்களையும் கூர்ந்துப் பார்த்தவன், தனது யோசனைகளையும் ஆலோசனைகளையும் கூறத் துவங்கினான்.

ஒரு வழியாகத் திட்டங்களையும் யுத்த தந்திரங்களையும் வரையறுத்து முடித்த ஹர்யன்கா தூதுவர்கள் இருவரை அழைத்தவன், உஜ்வாலா ராஜ்யத்தின் கீழ் அடிபணியுமாறும், அவ்வாறு அவர்கள் அடிபணிய மறுத்தால் வர்ம ராஜ்யத்தின் மீதும், நந்த ராஜ்யத்தின் மீது போர் தொடுப்பதற்கான நாளை குறித்துவிட்டதாகவும், தங்களது அபாயகரமான சைனியத்தை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் விஜயேந்திர வர்மனுக்கும், பூபால நந்தனுக்கும் ஓலைகள் எழுதியவன், தூதுவர்களிடம் எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அதனைச் சேர்ப்பிக்குமாறு வலுயுறுத்தி ஓலைகளைக் கொடுத்தனுப்பினான்.

அவர்கள் இருவரும் வெளியேறியதும் மற்றவர்களுக்கும் விடை கொடுத்தவன், எவ்வழியில் சென்றாலும் உதயேந்திர வர்மனையும், விஜயேந்திர வர்மனையும், சந்திர நந்தனையும் அழித்து, அவர்களின் ராஜ்யங்களைக் கைப்பற்றும் அற்புதமான ஒரு திட்டத்தை வகுத்துவிட்ட அதீத திருப்தியிலும், மகிழ்ச்சியிலும் தனது பள்ளியறையை நோக்கி செல்ல, நடந்து கொண்டிருந்தவனின் இதழ்களில் அதற்குள் வெற்றிப் புன்னகை தவழத் துவங்கியது.

ஆனால் அப்புன்னகையின் ஆயுள் வெகு குறைவு, அதனை முற்றிலுமாகத் துடைத்தெடுக்கும் சக்திப் படைத்தவனை, பேரமைச்சர் கூறியும் தான் தவறாகவும் குறைவாகவும் எடைப் போட்டுவிட்ட வலிமைப் படைத்த பெரும் வீரன் ஒருவனைக் கூடிய விரையில் சந்திக்கப் போகிறோம் என்பதனையும், தனது அழிவிற்கான நாளை குறிக்கப்போகும் காலனே அவன் என்பதையுமே அன்று உஜ்வாலா அரசன் அறிந்திருக்கவில்லை.

********************************************************

நந்த ராஜ்யம்..

சந்திர நந்தனுடன் உதயேந்திரன் விஜய நகரத்திற்கு விஜயம் செய்து இன்றோடு மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் நான்காவது நாள் காலை வேளை..

ஆயாத்யாவில் இருந்து தூதுவன் ஒருவன் வந்திருப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து, பூபால நந்தன் அழைத்தன்படி அரசனின் பள்ளியறைக்குள் நுழைந்த இளவரசர்களைத் தனக்கு அடுத்திருக்கும் ஆசனங்களில் அமரச் சொன்ன பூபாலன், காவலனை அழைத்து ஆயாத்யாவில் இருந்து வந்திருக்கும் தூதுவனிடம் இருந்து ஓலையைப் பெற்று வரச் செய்தான்.

ஓலையை முதலில் படித்த பூபால நந்தனின் முகத்தில் அதீத கலக்கம் தோன்றியிருக்க, தந்தையின் கரத்தில் இருக்கும் ஓலையைப் பெற்ற சந்திர நந்தன் அதனை உதயேந்திரனுக்கும் கேட்கும் விதமாகச் சிறிது உரத்தக் குரலில் படிக்கத் துவங்கினான்.

அதனில் தனக்குக் கீழ் அடிபணியுமாறு அறைக்கூவல் விடுத்திருந்த ஹர்யன்காவின் வார்த்தைகளையும், அவனது சவாலில் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்த அவமதிப்பையும் கண்டு பொங்கி வெடுக்கென்று இருக்கையில் இருந்து எழுந்த நந்த இளவரசனின் கரத்தை பற்றி இழுத்து, மீண்டும் அமரச் செய்தான் உதயேந்திரன்.

“ஹர்யன்காவின் ஆட்சிக்குக் கீழ் நந்த ராஜ்யத்தை அடிபணியுமாறும், அடிபணியாவிட்டால் கோட்டைகள் தகர்த்தெறியப்படும் என்று போருக்கு அறைக்கூவல் விடுப்பதாக எழுதியிருப்பான்.. அப்படித்தானே.. இது நாம் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே சந்திரா? பின் எதற்கு இவ்வளவு ஆவேசம்?”

சிறிதும் கலக்கமோ அச்சமோ அல்லாத பிசிரற்ற குரலில் கூறுபவனைக் கண்டு இன்னமும் ஆத்திரமும் கடும்வெறுப்பும் தணியாத தொனியில்,

“அவன் அதை மட்டும் எழுதவில்லை உதயா.. நீ எதிர்பார்த்தது போல் எங்களது தேசத்திற்கு விஜயம் செய்திருக்கும் உன் வரவைப் பற்றிய தகவலும் ஹர்யன்காவிடம் தவறாது சென்றடைந்திருக்கின்றது… ஆகையால் உங்களது ராஜ்யத்தையும் நோக்கி தன் படைகளை அனுப்பப் போவதாகவும், அதுவும் எங்களது கோட்டைக்குள் அவர்களது படைகள் நுழையும் அதே நேரத்தில் வர்ம ராஜ்யத்தின் கோட்டைக்குள்ளும் நுழையும் என்றும் சவால் விடுத்திருக்கின்றான்.. ஹர்யன்காவிடம் இப்பொழுது இருக்கும் படைகளின் கணக்கெடுப்பின் படி அவனால் எங்களது ராஜ்யத்தின் வீரர்களையே சமாளிக்க முடியாது உதயா.. இதில் கஜவீர பாண்டியனது துணையும் ஆதரவும் தானே நம்மை இவ்வளவு எளிதாக அவனை எடைப்போட வைத்திருக்கின்றது?” என்றான்.

“சந்திரா.. எவனொருத்தன் தன் மீது நம்பிக்கையை இழக்கிறானோ அவனே அடுத்தவனின் துணைக் கிடைக்கும் பொழுது இவ்வாறு வீண் தம்பட்டம் அடித்துக் கொள்வான்.. ஹர்யன்காவின் புத்தி இப்பொழுது நல்ல நிலையில் இல்லை.. பாண்டியர்களைப் பற்றியும், அவர்கள் கொடுக்கும் ஆதரவிற்குப் பின் புதைந்திருக்கும் இரகசியங்களைப் பற்றியும், அதற்கு ஈடாகப் பாண்டியர்கள் அவனிடம் எதிர்பார்க்கும் உபகாரங்களுக்குப் பின் மறைந்திருக்கும் விபரீதங்களைப் பற்றியும் இப்பொழுது யார் எடுத்துக் கூறினாலும், பேராசையினால் மூழ்கிப் போயிருக்கும் ஹர்யன்காவின் புத்திக்கு அது எட்டாது.. ஆகையால் வாய் வார்த்தைகளால் அவனுக்குப் புரிய வைக்க இயலாது…”

உதயேந்திரனின் கூற்றில் இருக்கும் உண்மை நந்த அரசன் பூபால நந்தனிற்குப் புரியாமல் இல்லை…

இருந்தும் தான் தற்போது இருக்கும் நிலையில் இத்தகைய பெரும் யுத்தத்தைச் சமாளிக்க இயலுமா என்ற அதீத கவலையில் தொய்ந்தவராக அமைதிக் காக்க, ஏற்கனவே உடல் உபாதைகளினால் வெளிரிப் போயிருந்த அவரது முகம் மேலும் வதங்கியதில் இரக்கமுற்றவனாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த உதயேந்திரன், பூபால நந்தனிடம் சென்றவன் அவரது கரங்களை இறுக்கப் பற்றி,

“உங்களது மைந்தனின் மீதும் என் மீதும் நம்பிக்கை வையுங்கள் அரசே.. நந்த ராஜ்யத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணருவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஹர்யன்கா உஜ்வாலாவை அழித்து, உஜ்வாலா ராஜ்யத்தை உங்களது இராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எங்களது கடமை..” என்றான் கனிவோடு.

ஆழ இழுத்து நெடு மூச்சுவிட்ட பூபால நந்தன்,

“என்னை விட நான் உங்கள் இருவரின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் உதயேந்திரா.. கடந்த மூன்று நாட்களாக நீங்கள் ஏதோ திட்டமிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று அமைச்சர் கூறினார்.. உங்களது திட்டத்தை எனக்குத் தெளிவுப்படுத்த இயலுமா?” என்றார், உடல் நிலை சரியில்லாத இவ்வேளையில் தனது ராஜ்யத்திற்கு இத்தனை பெரிய கேடு வந்து கொண்டிருக்கின்றதே என்று கலங்கி தவித்துப் போனவராய்.

“நிச்சயமாய்.. ஆனால் அதற்கு முன் நீங்கள் ஒரு ஓலை எழுத வேண்டும்..”

“யாருக்கு உதயேந்திரா?”

“ஹர்யன்காவிற்கு..”

சரி என்றவர் காவலனை கைத்தட்டி அழைத்து ஒரு ஓலையையும் எழுத்தாணியையும் கொண்டு வரப் பணிக்க, அவன் கொணர்ந்ததும் உதயேந்திரன் கூறிய வார்த்தைகளை எழுதத் துவங்கியவர், அதிர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

“உதயேந்திரா.. இது எங்கனம் நடக்கும்?”

“உங்களுக்கு அனைத்தையும் விளக்கமாகச் சொல்கிறேன் அரசே… நீங்கள் ஓலையை எழுதி முடித்து, ஹர்யன்காவின் தூதுவனிடமே கொடுத்துவிடுங்கள்..”

வேறு வழியின்றித் தலையசைத்தவர் ஓலையைக் காவலனிடம் கொடுத்துத் தூதுவனிடம் சேர்ப்பிக்குமாறு கூற, காவலன் அகன்றதும் அறைக்கதவை மூடிய உதயேந்திரன், சந்திர நந்தனைப் பார்க்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவன் தங்களது திட்டத்தையும் யுத்த முறைகளையும் தந்தைக்கு விலாவரியாக விவரிக்கத் துவங்கினான்.

அவன் சொல்லச் சொல்ல அரண்டு பேரதிர்ச்சியில் ஆழ்ந்துப் போன பூபால நந்தன், “கஜவீர பாண்டியனது படை பெரும் படையாயிற்றே சந்திரா?” என்றார் குரலிலும் சிறு நடுக்கம் தோன்றியதோ என்று சந்தேகிக்கும் அளவிற்குத் திடுக்கிடலுடன்.

“தெரியும் அப்பா… ஆயினும் வேறு வழியில்லை.. நமது பகைவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் நாம் அவனை முந்திக் கொள்வது அவசியம்…”

“ஆனால் நீங்கள் ஓலையில் எழுதக் கூறியதற்கும், இப்பொழுது கூறிய திட்டங்களிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவே..”

பூபால நந்தனின் கேள்வியில் அவரருகில் மஞ்சத்தில் அமர்ந்த உதயேந்திரன்,

“அரசே.. போர் என்பது ஒரு வீரனின் இறுதி ஆயுதமாக இருக்க வேண்டும்.. ஏனெனில் போரில் பொருள் சேதமும், உயிர் சேதமும் நேருகின்றது.. அதே போன்று நாம் எப்பொழுது அமைதியாகப் பின் வாங்க வேண்டும், எப்பொழுது மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு அறிவு வேண்டும்.. தாக்க வேண்டிய சூழல் வந்தால் எதிரிகளை எதிர்கொள்ளத் தைரியம் வேண்டும்.. இந்த மூன்று சூழ்நிலைகளையும் சரியாகக் கணிக்க நமக்கு ஞானம் வேண்டும்.. இவை அனைத்தும் ஹர்யன்காவைப் பொறுத்தவரை கோழைத்தனம்.. ஆகையால் தான் போரினால் எற்படும் இழப்புகளை மறந்து, மனிதனின் உடல் பலம் மட்டுமல்ல, மூளை பலமும் ஒரு யுத்தத்திற்கு முக்கியம் என்பதையும் உணராது இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கின்றான்.. தேவைப்பட்டால் எங்கள் போர் முறைகளையும் வியூகங்களையும் மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மட்டும் எங்களுக்கு அனுமதி கொடுக்கங்கள்.. மற்றவைகளை நாங்க இருவரும் பார்த்துக் கொள்வோம்..” என்றான் அமர்த்தலான கணீரென்ற கம்பீரக் குரலில்..

பதினாறு வயதினிலேயே பெரும் போர்களங்களில் குதித்து வெற்றி வாகை சூடியிருக்கும் உதயேந்திரனைப் பற்றி நன்கு அறிந்தவராகையால், தனது இராஜ்யம் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இவன் ஒருவனே எத்தகைய இக்கட்டுகளில் இருந்தும் தங்களைக் காக்கும் சக்திப் பெற்றவன் என்பதை உணர்ந்திருந்ததாலும், அவனது பதிலில் சிறிதே தெம்புப் பெற்ற பூபால நந்தன்,

“சந்திராவின் அருகில் நீ இருக்கும் வரை எங்களது ராஜ்யத்திற்கு மட்டும் அல்ல, என் மகனுக்கும் எந்த வித கேட்டையும் எப்பேற்பட்ட சக்தி பெற்றவனானாலும் அளிக்க முடியாது என்பதை நான் ஏற்கனவே புரிந்து கொண்டதினால் தான், உன்னிடம் உதவி பெறுமாறு நான் இவனை உங்கள் ராஜ்யத்திற்கே அனுப்பி வைத்தேன்.. ஆகையால் அந்த ஹர்யன்காவை மட்டும் அல்ல, எத்தகைய பேரரசனானாலும், பல இலட்ச வீரர்களைக் கொண்ட பெரும் சைனியமானாலும் உங்கள் இருவரால் நிச்சயம் அவர்களை ஒன்றும் இல்லாது செய்து விட முடியும்.. அந்த நம்பிக்கை உங்கள் மேல் எனக்குப் பூரணமாக இருக்கின்றது உதயேந்திரா.. சரி, எப்பொழுது நீங்கள் கிளம்புவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?” என்றார்.

“நாளை காலையே…”

இரு இளவரசர்களும் ஒரே குரலில் அசாதாரணத் துணிவுடன் கர்ஜிக்கும் தொனியில் அமர்த்தலாகக் கூறினர்.

************************************************************

பூபால நந்தனின் பள்ளியறையை விட்டு வெளியே வந்த இளவரசர்கள் இருவரும், படைத்தலைவர்களையும் தளபதிகளையும் சேனாதிபதியையும், மற்றும் பிற முக்கிய அமைச்சர்களையும் அழைத்தவர்கள் தங்களது போர் திட்டங்களை அவர்களுக்கும் விவரிக்க, இளையவர்களின் மகத்தான திட்டங்களையும் வியூகங்களையும் கண்டு பிரமித்தவர்கள் சந்திர நந்தனின் கட்டளைப்படி, படை வீரர்களை அரண்மனை சதுக்கத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தனர்.

மணித்துளிகள் சில கடந்து தங்களது புரவிகளின் மீது ஆரோகணித்திருந்த உதயேந்திரனும், சந்திர நந்தனும் அரண்மனையை விட்டு வெளியே வர, உத்தரவிட்ட சில நிமிடங்களிலேயே படைகளில் ஒரு பெரும் பகுதியை சதுக்கத்தில் சேனாதிபதி இளம்பிறையனும் தளபதிகளும் கூட்டியிருக்க, வீரர்களின் அணிவகுப்பையும், அவர்களது ராஜ்யப்பற்றையும் மிதமிஞ்சிய பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தனர், தங்களது புரவிகளைச் செலுத்தியவாறே இருவரும்.

மூன்றே நாட்களில் இரு இளவரசர்களும் கோட்டை முழுவதையுமே தங்களது கட்டுக்குள் கொணர்ந்திருப்பதைக் கண்ட படை வீரர்களுக்கும் மக்களுக்கும் அவர்களின் மீது பெரும் நம்பிக்கை வர, தங்களைக் கண்டு பிரம்மையில் ஆழ்ந்திருந்தாலும் தங்களின் புரவிகள் அவர்களைக் கடந்து போகையில் சிரங்களைத் தாழ்த்தி வணங்கிய மக்களைக் கண்டு தலையசைத்த இருவரும் படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடத் துவங்கினர்..

“சந்திரா! நாம் திட்டமிட்டது போல் காலாட்படைகளையும் புரவிப்படைகளையும் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கச்சொல்..”

உதயேந்திரனின் கூற்றுப்படி உத்தரவுகளைப் பகிர்ந்தான் சந்திர நந்தன்,

பிரிக்கப்பட்ட ஆறு குழுக்களையும் ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட உதயேந்திரன்,

“சந்திரா! இந்த ஆறு பிரிவுகளில் ஒரு பிரிவை மட்டும் தேர்வு செய்து, அதனை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கச் சொல்.. மற்றவர்களைச் சற்றுத் தொலைவில் நிற்கச் சொல்..”

அவன் கூறியது போல் ஆறு பிரிவுகளில் ஒரு பகுதியைப் பிரித்த தளபதிகள், அந்த ஒரு பிரிவையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நிற்கச் செய்தார்கள்..

மற்றவர்களைச் சந்திர நந்தனின் கட்டளைப்படி மறுபுறம் சென்று நிற்கப் பணித்தார்கள்.

ஐந்து பிரிவாகப் பிரிந்திருக்கும் அந்த ஒரு பகுதியை பார்வையிட்ட இளவரசர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, இருவரின் முகத்தையே பார்த்திருந்த படைவீரர்களுக்கு அவர்கள் பேசுவது செவிகளில் விழாவிட்டாலும், இவர்களின் திட்டங்களைப் பார்க்கையில், உஜ்வாலா அரசனின் படைகள் தங்களது ராஜ்யத்தை நெருங்கும் முன்பே இவர்கள் இருவரும் அவர்களின் படைகளை அழிக்க முனைகிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

அசையாது அணிவகுத்து நின்றவர்களின் படைத்தலைவரை அனுகிய சந்திர நந்தன்,

“படைத்தலைவரே! ஐந்தாகப் பிரிந்து நிற்கும் இவர்களில் நான்கு பிரிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குள் சரிசமமாக விற்படைகளும், வாட்படைகளும், புரவிப்படைகளும் இருக்குமாறு அமைத்து, நமது கோட்டையின் வாயில்கள் நான்கிலும் காவலுக்கு அனுப்பிவிடுங்கள்.. மீதம் இருக்கும் ஒரு படையில் ஐநூறு வீரர்கள் கொண்ட காலாட்படையும், ஐநூறு வீரர்கள் கொண்ட புரவிப்படையை மட்டும் வீதிகளைக் காவல் செய்ய உத்தரவிடுங்கள்.. மீதம் இருப்பவர்களை வடக்கு வாயில் மதில்களிலும், மேற்கு வாயில் மதில்களின் மீதும் நிற்க ஏற்பாடு செய்யுங்கள்.. ஆக, ஐந்தாகப் பிரிந்திருக்கும் இந்தப் படை நமது வாயில்களையும், மதில்களையும், வீதிகளையும் என்று கோட்டை முழுவதையும் காவல் காக்க வேண்டும்..” என்றான் கணீரென்ற தொனியில்.

ஒவ்வொரு பிரிவிலும் புரவிப்படைகளும், காலாட்படையில் விற்கள் மற்றும் வாட்போரில் சிறந்தவர்களைச் சரிசமமாகப் பிரித்து அனுப்பச் செய்த படைத்தலைவரைக் கண்ட உதயேந்திரன்,

“நாளை எங்களது வர்ம ராஜ்யத்தில் இருந்தும் இங்குப் படைகள் வந்து சேரும்.. அவர்களில் ஒரு பகுதியை இங்குக் கோட்டைக் காவலுக்குப் பிரித்தெடுத்து அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்..” என்றான்.

ஒரு பகுதியை இங்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றதுமே வியப்புடன் சரேலென உதயேந்திரனைத் திரும்பிப் பார்த்த சந்திர நந்தன்,

“ஆறு பிரிவுகளில், ஒரு பிரிவு (ஐந்தாகப் பிரிந்து) கோட்டையின் பாதுகாப்பிற்கு இங்குத் தங்கிவிட்டால், மீதம் இருக்கும் ஐந்து பிரிவுகளுடன் சேர்ந்து, உனது படைகள் முழுவதுமே நம்முடன் வரப் போவதாகத் தானே நாம் திட்டமிட்டோம்.. இப்பொழுது அவர்களிலும் ஒரு பகுதியை இங்கு விட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்றால், ஹர்யன்காவின் படைகளோடு பாண்டியனின் படைகளும் இணைந்த பின் அவர்களது சைனியம் பெரும் சைனியமாக உருவாகிவிடுமே, அப்பொழுது அவர்களை எதிர்க்க நம்மிடம் போதுமான அளவிற்கு வீரர்கள் இருக்க மாட்டார்களே உதயா?” என்றான் சஞ்சலத்தையும் குழப்பதையும் சுமந்த முகத்துடன்.

“நமக்கு அவ்வளவு வீரர்கள் தேவையில்லை சந்திரா?”

“ஏன், அப்படி என்றால் பாண்டிய படைகளை நாம் எவ்வாறு முறியடிப்பது? நிச்சயமாக நமக்கு வீரர்கள் பற்றார்குறை ஏற்படும் உதயா?”

நண்பனின் வினாவில் அவனைத் திரும்பியும் பாராது, ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தான் உதயேந்திரன்..

அங்குச் சில கணங்கள் வீரர்களின் காலடி ஓசைகளும், புரவிகள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததில் அவைகளின் குளம்பொலிகளும், வீரர்களைப் பிரித்து வரிசைப்படுத்திக் காவல் புரிய வேண்டிய பகுதிகளுக்கு அவர்களை அனுப்ப ஏவிக்கொண்டிருக்கும் தளபதிகள் மற்றும் படைத்தலைவர்களின் பேச்சுக் குரல்களும் மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததே தவிர, இளவரசர்கள் இருவரும் வார்த்தைகள் அற்றது போல் மௌனமாகவே இருந்தனர்.

இன்னமும் தனது திட்டத்தைக் கேட்ட அதிர்ச்சியில் வியப்பும் குழப்பமுமாய்த் தன்னையே பார்த்திருக்கிறான் சந்திர நந்தன் என்பதை உணர்ந்து அவனது முகம் நோக்கி திரும்பிய உதயேந்திரன், மெல்லிய நகையை உதிர்த்தவாறே,

“நமது திட்டங்களில் நம் விருப்பப்படி மாற்றங்களைச் செய்து கொள்ளலாம் என்று உனது தந்தை சம்மதித்திருப்பதை அதற்குள் மறந்துவிட்டாயா சந்திரா?” என்றான் மலர்ச்சி மாறாத முகத்துடன்.

நண்பனின் புன்சிரிப்பில் தானும் கலந்துக் கொண்டவன் போல் மெல்ல உதடுகளுக்கு முறுவலைக் கொணர்ந்த சந்திர நந்தன், தனது புரவியை உதயேந்திரனின் புரவியுடன் உரசும் அளவிற்குக் கொண்டு சென்றவாறே,

“நான் மறக்கவில்லை.. ஆனால் அதற்குள் நீ திட்டத்தை மாற்றிவிட்டாய் போலிருக்கின்றதே..” என்றான்.

“அதனைப் பற்றி நேரம் வரும் பொழுது உனக்குச் சொல்கிறேன் சந்திரா! முதலில் படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிடுவோம்… பிறகு ஓய்வெடுப்போம்.. உன்னிடம் நான் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டியிருக்கின்றது..” என்றான், சட்டென்று உதடுகளில் மலர்ந்திருந்த முறுவலை துடைத்தெறிந்து.

அரண்மனை சதுக்கத்தில் வீரர்களின் அணிவகுப்பு நடக்க, ஒவ்வொரு பிரிவையும் ஆழ்ந்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்திர நந்தனும், உதயேந்திரனும் அவர்களுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருக்க, ஏறக்குறைய இரண்டு முகூர்த்தங்கள் நடந்து கொண்டிருந்த படையணி திரட்டும், அணிவகுப்பும் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது.

நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே கிளம்ப வேண்டும் என்று படைவீரர்களுக்கு அறிவித்தவர்கள் ஓய்வெடுக்கத் தங்களின் அறைகளுக்குத் திரும்ப, உதயேந்திரனை நோக்கிய சந்திர நந்தன்,

“உதயா, என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்றாயா?” என்றான்.

“ஆம்.. நீ சற்றும் நேரம் ஓய்வெடுத்துவிட்டு வா… கதிரவனுன் உஷ்ணம் சிறிது குறையட்டும், மீண்டும் மாலை சந்திப்போம்.. அப்பொழுது பேசிக் கொள்ளலாம்..”

சரி என்று தலையசைத்த சந்திர நந்தன் தனது அறைக்குச் செல்ல, உதயேந்திரன் மட்டும் தன் அறைக்குச் செல்லாது தனது புரவியுடன் நந்தவனத்திற்குள் புகுந்தான்.

வெகு நேரம் வரை அரண்மனை பூங்காவிற்குள் உலவி கொண்டிருந்த உதயேந்திரனின் மனதிற்குள் ஹர்யன்காவையும் பாண்டிய படைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது, எண்னிக்கையில் அவர்களை விட மிகச் சிறியதனவாக இருக்கும் தங்களுடைய சிறு படையை வைத்து, மாபெரும் படையான கஜவீர பாண்டியனது படையைத் தோற்கடிக்க இயலுமா என்று சிந்தனைகள் அலையலையாய் எழும்பிக் கொண்டிருக்க, கதிரவனும் தனது கதிர்களை முதலில் மலைகளுக்குள்ளும், நெடிய மரங்களுக்குள்ளும் மறைக்கத் துவங்கியவன், பின் தானும் மேற்கு திசையில் இருந்த இடம் தெரியாதது போல் புதைந்து போனான்.

தேவையான ஓய்வெடுத்ததற்குப் பின் அந்தி சாயும் நேரம் உதயேந்திரனைத் தேடி வந்த சந்திர நந்தனைக் கண்டதும், அவனது புரவியில் தன்னுடன் வருமாறு அழைப்பு விடுத்தவன் கோட்டையை விட்டு வெளியே செல்ல, நெடுந்தூரம் மௌனமாகவே சென்று கொண்டிருந்த தோழர்களில், சந்திர நந்தனே முதலில் உரையாடலைத் துவங்கினான்.

“தயக்கம் சலனம் சஞ்சலம் என்று எதனையுமே அறிந்திராத உதயேந்திர வர்னுக்கு, ஏன் திடுமென இத்தனை தடுமாற்றம்? என்னிடம் என்ன கேட்க வேண்டுமோ கேள் உதயா?”

சந்திர நந்தனின் பேச்சில் சடாரென்று தனது புரவியை இழுத்துப் பிடித்து நிறுத்திய உதயேந்திரன், ஒரு கணம் அவன் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தவாறே கேட்ட கேள்வியில் புருவங்கள் இடுங்க, இமைகள் சுருங்க, தானும் தனது குதிரையின் கடிவாளக் கயிறை வெடுக்கென்று இழுத்து அதனை நிறுத்தினான் சந்திர நந்தன்..

“எனத் தங்கை நீலவல்லியின் மீது நீ காதல் கொண்டிருக்கிறாயா சந்திரா?”

அதி நிச்சயமாகப் போரைப் பற்றியும் படைகளைப் பற்றியும் தான் பேசப் போகிறான் உதயேந்திரன் என்று எதிர்பார்த்திருந்த சந்திர நந்தனுக்கு இச்சூழ்நிலையில் திடுமென நீலவல்லியைப் பற்றிக் கேட்டதும் குழப்ப மேகம் சூழ்ந்தது.

“எதனை வைத்து நீ அவ்வாறு நினைத்தாய் உதயா? நீ அப்படி நினைக்கும் வகையில் நான் நீலவல்லியிடம் எவ்வேளையிலாவது தவறாக நடந்து கொண்டிருந்தேனா?”

“காதல் கொள்வது தவறென்று நான் கூறவில்லையே சந்திரா?”

“காதல் கொள்வது தவறல்ல, ஆயினும் நீலவல்லியை நான் அக்கண்ணோட்டத்தில் பார்த்தேன் என்று உனக்குத் தோன்றுமளவிற்கு நான் தவறாக நடந்து கொண்டிருந்தேனா என்றே நான் வினவினேன்..”

“நீ தவறாக நடக்கவில்லை சந்திரா.. நீங்கள் இருவரும் உரையாடிக் கொள்வதை வைத்தும், உன்னைக் காணும் பொழுதெல்லாம் எனது தங்கையின் முகத்தில் தோன்றி மறையும் மாறுதல்களையும் புன்சிரிப்பையும் நாணத்தையும் வைத்தும், நான் தான் தவறாகக் கணித்துவிட்டேன்..”

“உதயா… இந்தச் சந்திர நந்தன் எவரிடமும் அத்தனை எளிதில் நட்பு கொள்ள மாட்டான்.. அவ்வாறு கொண்டானாகில், அவன் உயிர் பிரியும் வரை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் ஆக இருப்பான்..”

சந்திர நந்தனை தனது தங்கை நீலவல்லிக்கு மணமுடித்து வைப்பதில் உதயேந்திரனுக்கு விருப்பம் தான்..

சந்திர நந்தனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெட்கி சிவக்கும் அவளது அழகிய எழில் வதனமும், எவரிடமும் எளிதில் பழகாத அவள், சந்திர நந்தனிடம் மட்டும் எதிர் எதிராக நின்று வார்த்தைகளால் விளையாடும் விதமும், நீலவல்லிக்கு சந்திர நந்தன் மீது தோன்றியிருக்கும் காதலை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியிருந்தது..

ஆனால் வழக்கமான துடுக்குத்தனத்துடனும், எப்பொழுதும் போல் விளையாட்டுத்தனத்துடனும் இவன் நீலவல்லியிடம் பேசுவதை அவள் தவறாகத்தான் புரிந்துக் கொண்டிருக்கிறாள் என்பது இப்பொழுது தெளிவாகிவிட, தங்களது அரண்மனைக்குத் திரும்பியதுமே சந்திர நந்தன் மீது அவள் வைத்திருக்கும் காதல் சரியல்ல என்று அவளுக்கு உணர்த்திட வேண்டும் என்று முடிவெடுத்தான் உதயேந்திரன்.

தனது புரவியில் அமர்ந்தவாறே இலேசாகச் சாய்ந்து சந்திர நந்தனின் மீது தன் கரத்தை வைத்தவன்,

“தவறாக எண்ணாதே சந்திரா.. என் மனதில் இருப்பதை உன்னிடம் மறைக்காது பேசிவிட வேண்டும் என்று தான் இவ்வாறு நேரிடையாகவே கேட்டேன்… உன் மனதிலும் நீல்வல்லியின் மீது காதல் இருந்தாலும் முதலில் மகிழ்ச்சி கொள்வதும் நான் தான்.. உன்னை விட வேறு ஒரு மணமகனை அவளுக்கு எங்களால் தேட இயலுமா, சொல்?” என்றான், நீலவல்லிக்கு இவனைவிட ஒரு மணாளன் கிடைக்க வேண்டுமே என்ற வருத்தமும், அதே சமயம் நண்பனின் நல்லொழுக்கத்தைக் கண்ட பூரிப்பிலும், சலனங்கள் துலங்கும் முகத்துடன்..

“எதனையும் வெளிப்படையாகப் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது உதயா.. சரி, இப்பொழுது உனது சந்தேகம் தீர்ந்துவிட்டது அல்லவா? வா, அந்த மலையடிவாரம் வரை சென்று வருவோம்..” என்றவாறே வஜ்ரனை முடுக்கிவிட்டான் நந்த இளவரசன்.

போரைப் பற்றித் தீவிரமாக விவாதித்துக் கொண்டும் அவ்வப்பொழுது சிந்தனைகளில் ஆழ்ந்தும் நேரம் போவதே தெரியாது புரவிகளைச் செலுத்திக் கொண்டிருந்த இளவரசர்கள் இருவரும் மலையடிவாரத்தைத் தொட்டுவிட,

“சந்திரா! நாளை சூரியன் உதிக்கும் முன்பே நாம் படைவீரர்களுடன் கிளம்பியிருக்க வேண்டும்.. மீண்டும் நாம் நிம்மதியாக உறங்குவதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை, ஆகையால் இன்று இரவு நன்றாகத் துயில் கொள்..” என்றவாறே தனது புரவியைக் கோட்டையை நோக்கி உதயேந்திரன் திருப்பிய அதே கணத்தில், மரங்கள் அடர்ந்திருக்கும் அம்மலையினுள் ஓர் ஒலி கேட்டது.

இந்நேரத்தில் புதர்களும், செடிகளும் அடர்ந்த விருட்ஷங்களும் மண்டிக் கிடக்கும் இம்மலையினுள் யார் இருக்க முடியும் என்று தனது செவிகளைக் கூர்மையாக்கி உற்றுக் கேட்கத் துவங்கியவனை நோக்கி, “உதயா!” என்று ஏதோ பேச வாயெடுத்த சந்திர நந்தனை, “உஷ்! பேசாது சற்று உற்றுக் கேள்…” என்றான் உதயேந்திரன் இமைகள் இடுங்க, முன் நெற்றி சுருங்க.

எச்சரிக்கையைச் சுமந்த சந்திர நந்தனின் கண்களும், ஆபத்தை எதிர்நோக்கிய கூர்மையான செவிகளும் புரவியைத் திருப்பாமலேயே உதயேந்திரன் சுட்டிக் காட்டிய திசையில் நிலைக்க, சில விநாடிகளில் அவனது செவிகளிலும் அந்த ஒலி விழவே, மிதமிஞ்சிய வியப்புடன்,

“புரவியின் குளம்பொலி போல் தோன்றுகின்றதே..” என்றான் நந்த இளவரசன்.

மெள்ள தங்களின் புரவிகளைக் கோட்டையை நோக்கி நடத்திச் சென்றவாறே புலன்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி அக்குளம்பொலியிலேயே கவனத்தைச் செலுத்தியிருக்க, சீரான சப்தத்துடன் திடமாகவும் அழுத்தமாகவும் தங்களின் பின்புறம் கேட்டுக் கொண்டிருந்த அப்புரவியின் குளம்பொலி சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாகத் துரிதப்பட்டுவிட்டதை,

திடீரென்று அதிகரித்த அதன் அதீத வேகத்திலும், மலைக் காற்றையும் மரங்களின் சலசலப்பு அசைவுகளையும் மீறிக் கேட்கும் அதன் தடதடவென ஓசையிலும் கண்டு கொண்ட இளவரசர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் எச்சரிக்கை சூழ்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டனர்..

இந்த இரவு வேளையில் மலைக்காட்டுப் பாதையில் புரவியைச் செலுத்த வேண்டுமானால், வந்து கொண்டிருப்பவன் துணிவிற்கும், அஞ்சா நெஞ்சத்திற்கும், அசாத்திய மன உரத்திற்கும் பெயர் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று இளவரசர்கள் இருவராலும் நினையாது இருக்க இயலவில்லை.

தொலைவில் கேட்டுக் கொண்டிருந்த குளம்புகளின் ஒலி சற்று நேரத்திற்கெல்லாம் தங்களை வெகு அருகில் நெருங்கிவிட்டதை உணர்ந்தவர்கள் இதற்கு மேலும் தாமதிப்பது ஆபத்து என்பது போல் சடாரென்று அரைவட்டமடித்துப் புரவிகளைத் திருப்ப, இருளோடு இருளாகக் கலந்து வந்து கொண்டிருந்த கறுப்பு நிறப் புரவியைக் கண்டு பெருங்குழப்பமும், அளவிலடங்கா வியப்பும், எல்லையைக் கடந்த பேராச்சரியத்திலும் மூழ்கிப் போயினர் இரு ராஜகுமாரர்களும்.

புரவியின் ஒவ்வொரு தடத்திற்கும் புழுதி படலங்கள் பாய்களைப் போன்று சுருண்டு பின் விசிறியடிக்க, தூசியும் துகள்களுமாய்க் காய்ந்து கிடந்த சருகுகள் குளம்புகளில் சிக்கி சிதறி நாற்புறங்களிலும் சூராவளியாய் பறந்ததில் இளவரசர்களின் முகத்திலும் சிறிதே பட்டு தெறிக்க, மின்னல் கீற்றின் துரிதத்தையும், ஒளியின் வேகத்தையும், புயலின் ஆக்ரோஷத்தையும் தோற்கடித்துவிடும் அளவிற்கு அதிவேகமாக மலைச்சரிவில் இறங்கி வந்து கொண்டிருந்த புரவியைக் கண்டு, அருகருகே சில அடிகள் இடைவெளிவிட்டு தங்களது புரவிகளை நிறுத்தியிருந்த இளவரசர்கள் இருவரும் பிரமிப்பிலும் வியப்பார்வத்திலும் ஆழ,

“இந்தக் கரும் இருட்டில் நெருப்புப் பொறிப் பறப்பது போல் வேகத்தின் உச்சத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் வந்து கொண்டிருப்பவன் யாராக இருக்கும்?” என்றான் சந்திர நந்தன், மிதமிஞ்சிய விம்மிதத்திலும் தனக்கெதிரே தோன்றிக் கொண்டிருக்கும் மலைப்பூட்டும் காட்சியினால் ஏற்பட்ட அதிசயத்தினாலும், கண்களை அகல விரித்து.

“யாராக இருந்தாலும் வந்து கொண்டிருப்பவன் சாமான்யமானவன் அல்ல சந்திரா..”

சந்திர நந்தனைத் திரும்பியும் பாராது தனது கூரிய கழுகு விழிகளை அக்கறுப்பு நிற புரவியின் மீது படியச் செய்தவாறே இருந்த உதயேந்திரன் என்ன நினைத்தானோ விருட்டென்று தனது புரவியை முடுக்கியவன் எதிரே வந்து கொண்டிருக்கும் கறுப்பு புரவியை நோக்கி அதன் வேகத்தையும் தோற்கடிக்கும் விதத்தில் அதி விரைவாய் பறக்கத் துவங்க, உதயேந்திரனைத் தொடர்ந்து சந்திர நந்தனும் தனது புரவியின் பக்கங்களில் கால்களால் அழுந்த அழுத்தியதில் வஜ்ரனும் சீறிப் பாயத் துவங்கியது.

இரண்டு சூராளவளிகளும், ஒரு சுழல்காற்றும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும் அளவிற்கு எதிரெதிரே அதி வேகமாய் வந்து கொண்டிருக்க, அக்கறுப்பு நிறப் புரவி தங்களை வெகுவேகத்துடன் அண்டியதும் புரவியின் மீது அமர்ந்திருந்த வீரனின் உருவம் தெள்ளத்தெளிவாய் தெரிந்ததில், சடாரென்று தங்களது புரவிகளின் கடிவாளத்தைப் பற்றி இழுத்து நிறுத்தினார்கள் வர்ம ராஜ்யத்தின் இளவரசனும், நந்த ராஜ்யத்தின் இராஜகுமாரனும்..

தனக்கெதிரே இருவர் புரவிகளின் மீது ஆரோகணித்தவாறே தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்திருந்தும், சிறிதும் அசட்டை செய்யாது, அதே வேகத்துடன் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஆறு அடிகளுக்கும் குறைவான சிறு இடைவெளியில் தனது புரவியைச் செலுத்தியவாறே கோட்டையை நோக்கிப் பறக்க, தங்களுக்கு நடுவே கண்ணிமைகளைத் தட்டும் நேரத்திற்குள் உட்புகுந்து பின் தங்களைக் கடந்து செல்லும் புரவியை நோக்கி மீண்டும் தங்களின் புரவிகளை விருட்டென்று திருப்பினர் இளவரசர்கள்.

“இவ்வளவு வேகத்தில் புரவியைச் செலுத்துவது மட்டுமல்லாமல், மிகவும் துணிவுடன் நம் இரு புரவிகளுக்கு இடையில் இருக்கும் சிறு இடைவெளிக்குள் நுழைந்து, நிற்காமல் செல்வது ஒரு பெண்ணா?”

தன்னையும் அறியாது சற்று உரத்தக் குரலில் கூறிய சந்திர நந்தனின் சாரீரம் அதற்குள் பல அடிகள் பறந்துவிட்டிருந்த கறுப்பு நிற புரவியின் எஜமானியின் செவிகளில் விழுந்ததும், சட்டென்று புரவியின் வாரை இழுத்துப் பிடித்து நிறுத்தியவள் வெகு நிதானமாகத் திரும்பிப் பார்க்க,

படோடபமாக உடைகள் அணியாவிட்டாலும் உருவங்களைக் காணும் பொழுதே பெரும் வசதிப்படைத்த குடும்பங்களைச் சார்ந்தவர்களாகத் தான் இவ்விருவரும் இருக்க வேண்டும் என்பது பெண்னவளுக்குப் புரிந்தாலும், அசட்டை செய்யாது கோட்டையை நோக்கி மீண்டும் துகள்பறக்க புரவியைச் செலுத்தினாள், மகிழ்வதனி..

‘யார் இவள்? ஆண்களையே தோற்கடித்துவிடும் வீரத்தையும், பெண்களே பொறாமைப்படக் கூடிய அழகையும் ஒருங்கிணைத்துப் பிறந்திருக்கும் இவள் யார்?’

இளவரசர்கள் இருவரின் மனத்திலும் ஒருங்கே ஒரே நேரத்தில் உதித்த வினாக்களே இது..

நிமிடத்திற்கும் குறைவான நேரமே அவளைப் பார்த்திருந்தாலும், இருளைக் கிழித்துக் கொண்டு வந்திறங்கிய மின்னலெனத் தங்களின் கண்களில் இருந்து அவள் அகன்றிருந்தாலும், நொடி நேரத்தில் தங்களின் மனதை அசையச் செய்திருக்கும் பேரழகு பதுமையிவள், யார்?

சந்திரன் அல்லாத அவ்விரவுப் பொழுதில் விண்மீன்களின் அழகு எங்கும் பரவி பரிமளித்துக் கிடக்கும் இவ்வேளையில், ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களையே தோற்கடித்துவிடும் பளீரென்ற வெண்மை நிறத்தினைக் கொண்டிருக்கும் தேவதையை ஒத்து இருக்கும் இவள் யார்?

மலைகளின் நடுநடுவே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் செங்கொன்றை மலர்களின் நுணிகளில் நட்சத்திரங்களின் ஒளி கூட்டம் கூட்டமாகப் பட்டுத் தெறித்ததில், மலையையே பிரகாசிக்கச் செய்யும் மாணிக்கக் கற்களுடன் போட்டிப்போடும் இளஞ்சிவப்பு நிறத்தினாலான மேனியைக் கொண்டு,
எண்ணங்களை எல்லாம் ஒரே நேரத்தில் அள்ளும் கல்லினும் மயக்கம் தரும் பேரெழிலுடன் காண்பவர்களின் கண்களைச் சடுதியில் பறித்துச் செல்லும் பேதையிவள் யார்?

இருவரின் நெஞ்சுக்குள்ளும் ஒரே விதமான உணர்ச்சிகள் சுழன்றடிக்க, அதற்குள் கோட்டையின் வாயிலை அடைந்திருக்கும் பெண்ணவளை உணர்ச்சிகளின் வேகத்தில் தங்களின் நிலையிழந்து இமைக்கப் பறந்து பார்த்திருக்க, முதலில் தன்னை இழுத்துப் பிடித்துப் புலன்களைத் தன் வசம் கொண்டு வந்தது உதயேந்திரன் தான்.

“அவள் யார் சந்திரா? கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கோட்டையை அடைந்துவிட்டாள்.. இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறாள்?”

உதயேந்திரனின் கேள்விகள் செவிகளில் விழுந்தாலும், நொடி நேரத்தில் வர்ண ஜாலங்கள் அனைத்தையும் அள்ளித் தெளித்து, தனது இதயத்தை அவள் வந்த அதே வேகத்திலேயே இழுத்துச் சென்றிருக்கும் பெண்ணின் மீதே பார்வையைப் பதித்திருந்த சந்திர நந்தன், நண்பனைத் திரும்பியும் பாராமலேயே,

“மலைக்கு அடியில் புதைந்திருக்கும் எங்களது மாணிக்கச் சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மாணிக்கமோ?” என்றதில், தனது எண்ணத்தை ஒத்தே தோழனும் அவளை மாணிக்கக் கற்களாக நினைத்திருப்பதை அறிந்ததில், சரேலென அவன் புறம் திரும்பினான் உதயேந்திரன்.

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா..
என் மனதில் உந்தன் ஆதிக்கமா…
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா..
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா….

References:
செவ்வக வடிவம் – Rectangle
மாணிக்கம் – Ruby
திரவ வச்சிரம் – Liquid glue

ராஜ்யங்கள் – நகரங்கள் – கதாப்பாத்திரங்கள்:

சிம்ம ராஜ்யம் – வேணி மாநகரம் – விக்கிரம்ம சிம்மன், அழகுவேல், மகிழ்வதனி/வஞ்சிக்கொடி
மாயி ராஜ்யம் – ஷாஸ்ரஸாத் மாயி
உஜ்வாலா ராஜ்யம் – ஆயாத்யா நகரம் – ஹர்யன்கா உஜ்வாலா
வர்ம ராஜ்யம் – ஆதிநல்லூர் மாநகரம் – விஜயேந்திர வர்மன், உதயேந்திர வர்மன், நீலவல்லி
நந்த ராஜ்யம் – விஜய நகரம் – சந்திர நந்தன், பூபால நந்தன்

Time:
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம் [ஒரு முகூர்த்தம் என்பது 1 1/2 மணி நேரம்]
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

Distance:
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
ஒரு காதம் என்பது 4 x 56 x 4 x 18 = 16128 அடிகளாகும், அதாவது கிட்டதட்ட 3 மைல் (16128/5280= 3.054)
ஒரு யோசனை தூரம் என்பது 12 மைல் (3X4) அல்லது 19.2 கி மீ

தொடரும்..

 

உங்கள்
ஜேபி [JB]

Jline Arts and Silks (Jline Exotic Arts)
Jline Infotech (IT Consultancy)
Jline Publications

கணவனே கண்கண்ட எதிரி
https://jlineartsandsilks.com/…/kanavane-kankanda-ethiri-jb/

காதலா கர்வமா
https://jlineartsandsilks.com/product/kaathalaaa-karvama/

மலரினும் மெல்லியவள்
https://jlineartsandsilks.com/product/malarinum-meliyaval/

Share this post

Comments (2)

 • ugina Reply

  wowwwww superrrrrrrrrrrrrrr

  August 24, 2019 at 7:47 am
  • jb tamil Reply

   Thank you dear 🙂

   August 24, 2019 at 7:09 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Loading...